Published:Updated:

`ஆட்டமெல்லாம் ஷேவாக் ரகம்.. இந்திய வுமன்ஸ் கிரிக்கெட்டின் இளம் ரன் மிஷின்!’- சபாஷ் `வெர்மா’

களத்தில் பயமே கிடையாது, கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி பவுண்டரி விளாசி பந்து வீச்சாளரின் நம்பிக்கையைக் குலைப்பது எனப் பல ஆண்டுகளாக ஷேவாக் இந்திய அணியில் செய்ததை அக்மார்க் அவரது ஸ்டைலிலே செய்து வருகிறார் வெர்மா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``நான் அதிகமாக பாய்ஸ் கூடதான் கிரிக்கெட் ஆடியிருக்கிறேன். ஆரம்பத்தில் தந்தையுடன் கிரிக்கெட் ஆடுவேன். இந்தத் தருணத்தில் அந்தப் பசங்களுக்கும் எனது தந்தைக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்”- ஷஃபாலி வெர்மா, நடப்பு உலகக்கோப்பை டி20 தொடரில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்டநாயகி விருதை வென்ற பின்னர் சொன்னது. இந்திய அணி தற்போது வரை மூன்று ஆட்டங்களில் தான் விளையாடியுள்ளது என்பது கூடுதல் தகவல்!

ஷஃபாலி வெர்மா... மகளிர் உலகக்கோப்பை தொடரில் தற்போது அதிகம் உச்சரிக்கும் பெயராக இருக்கிறது. `இந்தப் பொண்ணுக்கு பயம்னா என்னனே தெரியலனு’ உலக வீராங்கனைகளின் கவனத்தை அறிமுகமான சில நாள்களிலே தன் பக்கம் திருப்பியுள்ளார் வெர்மா.

வெர்மா
வெர்மா

யார் இந்த ஷஃபாலி வெர்மா?

பாய்ஸ் கட்டிங்கில், ஓப்பனிங் இறங்கி பவர்-ப்ளே ஃபீல்டிங் கட்டுப்பாடுகளை மிகச் சரியாகப் பயன்படுத்துவதில் கில்லாடி கேர்ள் இந்த வெர்மா.. எதிரணி பந்துவீச்சாளர்களுக்கும் பெரும் சிம்ம சொப்பனமாக விளங்கும் இவரது வயது 16. இவரை இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கும் அளவுக்குக் கவனம் பெற காரணமாக இருந்தது ஒரு கண்காட்சி போட்டி.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சச்சினின் 30 வருடச் சாதனையை முறியடித்தார் வெர்மா.

2019-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதியில் நடைபெற்ற கண்காட்சிப் போட்டியில் கவனம் பெற்றார் வெர்மா. வேகப்பந்து வீசினாலும் அச்சம் இல்லாமல் க்ரீஸை விட்டு வெளியே வந்து ஆடும் ஷாட், அவரை இந்திய அணிக்குள் கொண்டு வந்தது எனலாம். அதன் பின்னர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் தனது இருப்பை நிலை நிறுத்திக்கொண்டார்.

கடந்த வருடங்களில் மகளிர் அணியில் மந்தானா தொடக்க வீராங்கனையாகக் காட்டிய அதிரடிக்குக் கொஞ்சமும் சளைத்தது கிடையாது வெர்மாவின் அதிரடி ஷாட்கள். இன்னும் சொல்லப் போனால் அதிரடியில் மந்தானாவுக்கு மேல் செல்கிறார் வெர்மா.

வெர்மா
வெர்மா

ஹரியானா மாநிலம் ரோடாக் பகுதியில் பிறந்த வெர்மா சிறுவயது முதலே கிரிக்கெட்டில் பயிற்சி பெற்று வருகிறார். குழந்தையாக அவர் கிரிக்கெட் பயின்றது அவரது தந்தையிடம். அவர், தனது மகளை இந்திய அணியில் காண அதீத விருப்பம் கொண்டிருந்தார். அதற்காக வெர்மாவை 9 வயதில் கிரிக்கெட் அகாடமியில் சேர்த்தார். அவர் சேர்ந்த அகாடமியில் இவருக்கு சவால் அளிக்கக் கூடிய சிறுமிகள் இல்லை. ``கவலை வேண்டாம்.. எனது மகள் பசங்க கூட விளையாடுவா” என்று அகாடமியில் சேர்க்கும் முடிவில் உறுதியாக நின்றார் அவரது தந்தை. இதன் மூலம் வெர்மாவுக்கு அச்சம் இருந்தால், அதுவும் இந்தப் பயிற்சிகளில் களைந்து விடும் என நம்பினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் நம்பியது போலவே அச்சமின்றிக் களத்தில் குதித்தார். அவர் கிரிக்கெட் விளையாடியது 19 வயதுக்குட்பட்டோருக்கான பாய்ஸ் அணியினருடன். கடுமையான பயிற்சியால் அங்கு இருந்த பாய்ஸ்க்குக் கடினமான போட்டியாளராகத் திகழ்ந்தார் வெர்மா. அதன் பின்னர் அவர் கண்காட்சி போட்டி மூலம் இந்திய அணிக்குள் நுழைந்தார். கடந்த ஆண்டு இந்திய அணிக்குத் தேர்வான போது அவருக்குள் இருந்த அடுத்த இலக்கு, டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பது. தனது அதிரடியான விளையாட்டின் மூலம் அதையும் செய்து காட்டினார்.

வெர்மா
வெர்மா

இந்தியா விளையாடிய கிரிக்கெட் போட்டியை தனது 9 -வது வயதில் தந்தையுடன் மைதானத்தில் நேரில் கண்டார். அன்று மைதானமே சச்சின்... சச்சின் என்ற ஒற்றைப் பெயரை உச்சரித்தது. தானும் அப்போது அப்படி கத்தியதாக நினைவுகூருகிறார் வெர்மா. இந்திய அணியில் குறைந்த வயதில் அறிமுகமான இளம் வீராங்கனை வெர்மாதான். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சச்சினின் 30 வருடச் சாதனையை முறியடித்தார் வெர்மா. சச்சினின் முதல் சர்வதேச அரைசதம் அவரது 16 வயதில் அடிக்க, வெர்மா தனது 15 -வது வயதிலே அதை முறியடித்தார்.

அவரது இந்த ஆட்டமே அவரை உலகக் கோப்பைக்கான இந்திய பெண்கள் அணியிலும் கொண்டு வந்தது. உலகக் கோப்பையிலும் அவரது ஆட்ட அணுகுமுறையில் மாற்றம் இருக்குமோ என்றால்... கிடையவே கிடையாது. முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா அணியுடன் மோதியது இந்தியா. அசராமல் பவுண்டரிகளாக விளாசினார் வெர்மா. 15 பந்துகளில் அவர் 29 ரன்கள் எடுத்தார். வங்கதேச அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர் என 39 ரன்கள் குவித்து அமர்களப்படுத்தினார். இந்தப் போட்டியில் அவரது ஸ்டிரைக் ரேட் 229. ஆட்டநாயகி விருதையும் தனதாக்கினார். இன்று நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்திலும் 46 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடக்கம். விளைவு, இந்தியா வெற்றி, மீண்டும் ஆட்டநாயகி விருது. தற்போது வரையிலான உலகக் கோப்பை தொடரில் மூன்று போட்டிகளில் 114 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி ஸ்டிரைக் ரேட் 172.72.

பேட்டிங்கில் அவருக்கு பிடித்தது சச்சின். கீப்பிங்கில் பிடித்தது தோனி. ஆனால் அவரது ஆட்டமெல்லாம் ஷேவாக் ரகம் தான். களத்தில் பயமே கிடையாது, கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி பவுண்டரி விளாசி பந்து வீச்சாளரின் நம்பிக்கையை குலைப்பது என பல ஆண்டுகளாக ஷேவாக் இந்திய அணியில் செய்ததை அக்மார்க் அவரது ஸ்டைலிலே செய்து வருகிறார் வெர்மா. ``அவர் இந்திய மகளிர் அணியின் ஷேவாக் தான்” என்கிறார் அவரது பயிற்சியாளர் அஸ்வினி குமார்.

இவர் தான் அகாடமியில் காடந்த 4 ஆண்டுகளாக வெர்மாவுக்கு பயிற்சி வழங்கியவர். இதனிடையே அவரது போட்டோ ஒன்றை பகிரும் ரசிகர்கள், களத்தில் அவர் நிற்பதும் ஷேவாக் போல் தான் இருக்கிறது என வைரல் ஆக்கி வருகிறார்கள்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணியின் நடுவரிசை சற்று பலவீனமாக இருக்கிறது. தொடக்க வீராங்கனைகள் அதிரடியாக ரன் குவிப்பதால், அதனை பிற்பாதியில் இந்திய நடுவரிசை வீராங்கனைகள் தக்கவைத்தாலே பெரும் ஸ்கோரை எட்டி விடலாம். நடப்பு தொடரின் ரன் மிஷினாக வெர்மா அதிரடி காட்டினாலும் நடுவரிசை பலம் பெறுவது அவசியம். நடுவரிசை குறித்தோ, உலகக்கோப்பை என்ற எண்ணமோ, நடப்பு சாம்பியனுக்கு எதிராக விளையாடுகிறோம் என்ற அச்சமோ வெர்மாவின் கண்களில் இல்லை. அந்த வகையில் அவர் இந்திய பெண்கள் அணியின் ஷேவாக் தான். ஷேவாக் பெற்ற உயரங்கள் தாண்டி வெற்றிகள் பெற ரசிகர்களின் வாழ்த்துகள்!

சச்சினுடன் வெர்மா
சச்சினுடன் வெர்மா

இதுவரை மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி ஒருமுறையும், ஆஸ்திரேலிய அணி 4 முறையும், வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருமுறையும் வென்றுள்ளது. இதுவரையில் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்துக்கு கூட முன்னேறாத இந்திய மகளிர் அணி நடப்புத் தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதனோடு சேர்த்து இந்திய நான்கு முறை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த முறை கோப்பையை வென்று சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு