Published:Updated:

நீயே ஒளி, நீயே வழி: மெல்பர்ன் அரங்கில் உருவெடுத்த பூர்வகுடிகளின் நாயகன் - ஸ்காட் போலண்ட்!

Scott Boland
News
Scott Boland ( AP )

ஸ்காட் போலண்ட் ‘அபாரிஜின்’ என்றழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் பூர்வக்குடி இனத்தை சேர்ந்தவர். ஜேசன் கில்லெஸ்பிக்கு பிறகு சுமார் 25 ஆண்டு காலத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பெறும் முதல் அபாரிஜின வீரர் இவர்.

மூன்று நாட்களுக்கு முன்னர், ஆஸ்திரேலியாவின் 463-வது டெஸ்ட் வீரராக 'பேகி க்ரீன்' தொப்பியை கையில் ஏந்துகிறார் ஸ்காட் போலண்ட். உள்ளூர் ஆட்டங்களில் மிகச் சிறந்த ஆட்டத்தைப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தாலும் தேசிய அணிக்காக அவர் விளையாட 32 வயதுவரை காத்திருக்க வேண்டியிருந்தது. காரணம் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட் ஆகியோர் அடங்கிய ஆஸ்திரேலிய அணியின் மும்முனை கூட்டணி. இவர்கள் எதிரணி பேட்டர்களைத் தாக்கும் ஏவுகணையாய் மட்டுமல்லாமல் உள்ளூர் பௌலர்களுக்கு தாண்ட முடியாத மதிலாகவும் விளங்கிவந்தனர்.

இப்படி இருக்கையில் இத்தனை வருட உழைப்பு அனைத்தும், கிறிஸ்துமஸ் தினத்தன்று தேவதையாய் உருமாறி பரிசொன்றை அளிக்க போலண்ட்டின் கதவுகளை மெல்லத் தட்டுகிறது. உலகக்கோப்பையை காட்டிலும் கௌவரவமான ஆஷஸ் தொடர்; வரலாற்று சிறப்புமிக்க பாக்சிங் தினப் போட்டி; அதுவும் சொந்த மண்ணில் விக்டோரியா மக்களின் ஆரவாரத்திற்கிடையே மெல்பர்ன் மைதானம் என அந்த தேவதை பட்டியலிட்ட (தன் முதல் போட்டிக்கான) சிறப்புகள் அனைத்தையும் மெல்ல கேட்கிறார் போலண்ட். எந்த ஒரு புதிய வீரருக்கும் தன்னை நிரூபிக்க ஓரிரு வாய்ப்புகளாவது வழங்கப்படுவது வழக்கம். ஆனால் போலண்டுக்கு இந்த இடத்தில்தான் காத்திருந்தது சிக்கல்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அணியில் தன் இருப்பை நிரூபிக்க எவ்வளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் அந்த மும்முனை கூட்டணியில் யாரேனும் ஒருவருக்கும் ஓய்வு கிடைக்கும் பொழுதே தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது போலண்டுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அந்தச் சூழ்நிலையிலும் இவருக்குப் போட்டியாக இளம் வீரர்கள் வந்துகொண்டேதான் இருந்தார்கள். அதனால் இத்தனை காலம் தன் உழைப்பினால் கிடைத்த இவ்வாய்ப்பினை தக்கவைத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் வேறொரு மிக முக்கிய காரியத்தை செய்ய நினைத்தார். பல நூற்றாண்டு காலமாகியும் தங்கள் சொந்த நிலத்தில் சிறுபான்மியனராக வாழ்ந்து வரும் தன் இன மக்களுக்கான நம்பிக்கை விதையை மிக ஆழமாக விதைக்க விரும்பினார். அதைத் தற்போது நிகழ்த்தியும் காட்டியுள்ளார்.

Scott Boland
Scott Boland
AP

ஆம், ஸ்காட் போலண்ட் ‘அபாரிஜின்’ என்றழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் பூர்வக்குடி இனத்தை சேர்ந்தவர். ஜேசன் கில்லெஸ்பிக்கு பிறகு சுமார் 25 ஆண்டு காலத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பெறும் முதல் அபாரிஜின வீரர் இவர். பெண்கள் டெஸ்டையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் மொத்த எண்ணிக்கை நான்கு. போலண்ட் டெஸ்ட்டில் அறிமுகமாவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்தின் பூர்வக்குடிகள் நல வாரிய இயக்குனர் ஜஸ்டின் முகமத் இவ்வாறு கூறியிருந்தார். “தடகளத்தில் ஒரு கேதி ஃப்ரீமன்னை போல NBA-வில் ஆடும் பேட்டி மில்ஸ் போல, ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் இம்மண்ணின் இளம் வீரர்கள் படையெடுத்து சாதிக்க ஒரு புதிய நாயகன் தேவை” என்றிருந்தார். அடுத்த இரண்டே நாட்களில் அந்த நாயகனாக உருவெடுத்திருக்கிறார் போலண்ட்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போட்டியின் முதல் இன்னிங்ஸ் போலண்டிற்கு நினைத்த மாதிரி அமையவில்லை. 13 ஓவர்கள் வீசிய அவர் மார்க் வுட்டின் ஒற்றை விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியிருந்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ் இங்கிலாந்தின் மொத்த பேட்டிங் யூனிட்டையும் ஒற்றை ஆளாக நசுக்கி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் ஆட்டத்தில் ஆறு விக்கெட் எடுப்பதெல்லாம் பெரிய விஷயமா என்று நினைகிறீர்களா. ஹமீத், ரூட், பேர்ஸ்டோ, ஜேக் லீச், வுட், ராபின்சன் என அந்த ஆறு விக்கெட்டுகளை வீழ்த்த போலண்ட் எடுத்துக்கொண்ட மொத்த பந்துகள் 24!

இரண்டாவது நாளில் கடைசி இரு ஓவர்களே மீதம் இருக்க, போலண்ட்டை ஒரே ஒரு ஓவர் வீச அழைத்தார் பேட்கம்மின்ஸ். களத்தில் ரூட்டும் ஹமீதும் இருந்தனர். இவர்கள் இருவரும் அசாதாரண முயற்சி ஒன்றை நிகழ்த்தினால், ஆட்டத்தை அவர்கள் பக்கம் திருப்ப மிகச்சிறிய வாய்ப்பு இருந்ததையும் மறுத்துவிட முடியாது. ஆனால் தான் வீசிய முதல் ஐந்து பந்திலேயே இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் ஆஷஸ் வெற்றியை உறுதி செய்தார். வெற்றி என்பது உறுதி ஆகிவிட்டது. ஆனால் உயிரில்லாத ஆட்டத்தை மூன்றாவது நாளுக்கு முடிந்தவரை இழுக்க நினைத்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு முதல் ஓவரிலேயே பதில் சொன்னார் போலண்ட். அவர் வீசிய மூன்றே ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் மிக குறைந்த பந்துகளில் ஆறு விக்கெட் வீழ்த்திய சாதனையையும் படைத்தார் போலண்ட்.

Scott Boland
Scott Boland
AP

ஆனால் இச்சாதனையை விட ஆட்டநாயகனுக்கு பரிசளிக்கப்படும் முல்லாக் பதக்கமே போலண்டை இன்னும் மகிழ்ச்சியாக்கி இருக்கும். காரணம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பூர்வக்குடிகள் நிறைந்த அணியை சேர்ந்த மிகச்சிறந்த வீரர் ஜானி முல்லாக். அவரின் பெயரில் கொடுக்கப்படும் இப்பதக்கத்தை வெல்லும் இரண்டாவது வீரர் போலண்ட்.

இப்பதக்கத்தை போலண்ட் கையில் ஏந்திய தருணம் ஒட்டுமொத்த மெல்பர்ன் மைதானமும் எழுந்து நின்று அம்மண்ணின் மகனை கரகோஷம் செய்து ஆர்பரித்தது. அந்த ஒற்றை நொடி 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டத்தில் முதல் வீராங்கனையாக எல்லை கோட்டினை தாண்டிய கேதி ஃப்ரீமனுக்கு எழுந்த கரகோஷத்திற்கு எந்த வகையில் குறைவில்லாதது.