சர்ஃபராஸ் கான் என்ற பெயரை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஒரு கட்டத்தில் கடந்து வந்திருப்போம். 2015-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கெயில், கோலி, டிவில்லியர்ஸ் போன்ற ஜாம்பவன்கள் நிறைந்த பெங்களூர் அணியில் யாரும் எதிர்பார்க்காத ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தான் அந்த 17 வயது சிறுவன்.
அதன் பின்னர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லாத அவரின் ஆட்டத்தால் மக்களின் மனதிலிருந்து நீங்கிப் போன சர்ஃபராஸ் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி தொடரின் மூலம் அனைவரது கவனத்தையும் மீண்டும் ஈர்த்துள்ளார்.

மும்பை புறநகர் பகுதியில் 1997-ம் ஆண்டு பிறந்த சர்ஃபராஸ் கானின் தந்தை நவ்ஷத் கான் ஒரு கிரிக்கெட் பயிற்சியாளர். அவரின் கீழ் சிறு வயது முதலே தீவிரமாக பயிற்சி பெற தொடங்கினார் சர்ஃபராஸ். கிரிக்கெட் பயிற்சிக்காக சுமார் நான்கு ஆண்டுகள் பள்ளிக்கே செல்லாமல் தனி வகுப்புகள் மூலமே கல்வி கற்றார் அவர்.
தன் 12-வது வயதில் ஹரிஸ் ஷீல்டு தொடரில் விளையாடிய சர்ஃபராஸ் ஒரே இன்னிங்ஸில் 439 ரன்கள் விளாசி சச்சினின் 45 வருட சாதனையை முறியடித்தார். இத்தனைக்கும் அதுதான் அவர் ஆடும் முதல் போட்டி. ஆனால் அடுத்த வருடமே அவர் மீது வயது முறைகேடு குறித்தான குற்றசாட்டு வைக்கப்பட கடும் போராட்டத்திற்குப் பிறகு தன்னை நிரூபித்து அதிலிருந்து மீண்டு வந்தார் சர்ஃபராஸ்.

அதன் பின்னர் 2014-ம் ஆண்டு விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணிக்கு விளையாடியது, 2014, 2016 என இரண்டு U19 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டது எனப் பல்வேறு வாய்ப்புகள் சர்ஃபராஸை தேடி வந்தன. இரண்டு உலகக்கோப்பையையும் சேர்த்து சர்ஃபராஸ் அடித்துள்ள 7 அரைசதங்களே U-19 உலக கோப்பை வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிக எண்ணிக்கை. அதேபோல 2014-ம் ஆண்டிலிருந்து மும்பைக்காக ரஞ்சி கிரிக்கெட் தொடரிலும் ஆட தொடங்கினார் சர்ஃபராஸ். ஆனால் அதில் பெரிய அளவில் நிரூபிக்க இயலாமல் போக, அவர் தந்தை அளித்த அறிவுரையின் பெயரில் உத்திரப் பிரதேச அணிக்காக விளையாடச் சென்றார்.
அங்கும் அவரால் சோபிக்க முடியவில்லை. மூன்றாண்டு காலத்தில் வெறும் 11 போட்டிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைக்க 2019-ம் ஆண்டு மீண்டும் மும்பை அணிக்கே திரும்பினார். 2020-ம் ஆண்டு உத்தரபிரதேச அணிக்கு எதிரான போட்டியில் முச்சதம் விளாசி தன் கம்பேக்கை அறிவித்தார். அதுதான் சர்ஃபராஸ் கானின் புதிய அத்தியாயதிற்கான தொடக்கப் புள்ளி!
மும்பை அணிக்காக மீண்டும் விளையாடத் தொடங்கிய பிறகு, இது வரை 16 ரஞ்சி ஆட்டங்களில் விளையாடியுள்ள சர்ஃபராஸ் அதில் 130 என்கிற சராசரியுடன் 1566 ரன்களைக் குவித்துள்ளார். அதில் 2 சதம், 2 இரட்டைச்சதம் மற்றும் ஒரு முச்சதம் அடங்கும். இந்தாண்டு ரஞ்சியில் மூன்றே ஆட்டங்களில் 551 ரன்களை அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
ரெட் பால் ஃபார்மெர்டில் மிக சிறந்த ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தினாலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சொல்லிக்கொள்ளும்படியான ஆட்டத்தை இதுவரை ஆடவில்லை சர்ஃபராஸ். ஆனாலும் ஒவ்வொரு ஆண்டு ஐ.பி.எல் தொடரிலும் ஏதோ ஒரு அணியில் இடம்பெற்றுவிடுகிறார் அவர். அதேபோல இந்தாண்டும் அவரை டெல்லி அணி தொடக்க விலைக்கு எடுத்துள்ளது.
கே.எஸ்.பரத், ரிபல் படேல் போன்ற பல்வேறு வீரர்கள் இவருக்கு போட்டியாக பார்க்கப்பட்டாலும் சர்ஃபராஸின் சமீபத்திய ஃபார்ம் அவருக்கு அணியில் வாய்ப்பை ஏற்படுத்தலாம். அதை சிறந்த முறையில் பயன்படுத்தும்பட்சத்தில் தேசிய அணிக்கான வாய்ப்பும் அவரின் கதவைத் தட்டக்கூடும்!