உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதிபெறாமல் லீக் சுற்றுடனே வெளியேறியது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் வீரர்களின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. போட்டிக்கு முதல்நாள் இரவு பார்ட்டி, டின்னர் என வீரர்கள் சுற்றியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. கேப்டன் சர்ஃப்ராஸ், மைதானத்தில் கொட்டாவி விட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. லண்டனில் ஒரு ஷாப்பிங் மாலுக்கு செல்லும்போது உருவ கேலிக்கும் அவர் உள்ளானர். உலகக்கோப்பை தோல்விக்குப் பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதேபோல் சர்ஃப்ராஸ் அகமதுவிடமி ருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சர்ஃப்ராஸ் அகமதுவிடமிருந்து கேப்டன் பதவி பறிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக அஸார் அலியும், டி-20 போட்டிகளுக்கு பாபர் அசாமை புதிய கேப்டன்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி-20 போட்டி நவம்பர் 3-ம் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியா தொடரில் சர்ஃப்ராஸ் அகமது அதிரடியாக கழற்றிவிடப்பட்டுள்ளார். இது, அவரது கிரிக்கெட் கேரியரில் மிகப்பெரிய வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.
ஆனால், சர்ஃப்ராஸ் அகமதுவின் மனைவி இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது வீழ்ச்சி இல்லை; எனது கணவர் வலிமையாகத் திரும்ப வருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆங்கில ஊடகத்திடம் பேசியுள்ள அவர், ``எனது கணவர் எதற்காக ஓய்வுபெற வேண்டும். அவருக்கு 32 வயதுதான் ஆகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு என்ன வயதாகிறது... அவர் என்ன 32 வயதில் ஓய்வுபெற்றுவிட்டாரா? என் கணவர் மீண்டும் வலுவாக களத்துக்குத் திரும்புவார். அவர் ஒரு போராளி. கண்டிப்பாக இதிலிருந்து மீண்டு களத்துக்கு வருவார்.

கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவது குறித்து மூன்று நாள்களுக்கு முன்னரே எங்களுக்குத் தெரிவித்துவிட்டார். அவரது பயணத்தில் இது ஒரு முடிவு அல்ல. அவரிடமிருந்து சுமை குறைக்கப்பட்டுள்ளது. இனிமேல் அவர் சுமையில்லாமல் விளையாட முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.