நான்காண்டுகள் கழித்து டெஸ்ட் களத்தில் கால்பதித்து, கம்பேக் சீசனிலேயே தொடர்நாயகனாக மிடுக்குடன் மிளிர்கிறார், பாகிஸ்தானின் சர்ஃப்ராஸ் அஹ்மத்.
வருடக்கணக்காக முதல் வாய்ப்புக்காகக் காத்திருப்பது ஒருவிதமான வலியென்றால், கையில் கிடைத்த வாய்ப்பின் பிடி கொஞ்சம்கொஞ்சமாக நழுவுவது உயிர் ஊசலாடுவதற்கு ஒப்பான வலி.
அத்தகைய பெரும்வலிதான் ஆண்டுக்கணக்காக பாகிஸ்தானின் சர்ஃப்ராஸை ஆக்கிரமித்திருந்தது. மத்திய வரிசையில் அணியைத் தாங்கிப்பிடித்தவர், எத்தனையோ இக்கட்டான நிலையிலிருந்து வீரராகவும், கேப்டனாகவும் அணியை மீட்டெடுத்தவர் என்பதையெல்லாம் தாண்டி, 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை அணியின் கையிலேந்த வைத்தவர் என்பதால் சகவீரர்கள் மட்டுமல்ல பாகிஸ்தான் ரசிகர்களது இதயங்களிலும் அவருக்கு நிரம்பவே அன்பும் மரியாதையும் உண்டு.

எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருந்தபோது, 2018-க்கு பின்பு காட்சிகள் மாறின. கேப்டன் பதவி பறிபோனது, பிளேயிங் லெவனில் இடம்பெறும் வாய்ப்புகள் கூட குறையத் தொடங்கின. குறிப்பாக ரிஸ்வான் இவரது இடத்துக்கு முன்னேற்றப்பட்டார். 'விக்கெட் கீப்பராக வேண்டாம் பேட்ஸ்மேனாகவாவது அவர் தொடர அனுமதியுங்கள்' என்ற கருத்துகள் எதுவுமே வாரியத்தின் செவிக்குள் நுழையாது காற்றோடே கரைந்தது. ஒருகட்டத்தில் அவரை மொத்தமாக ஓரங்கட்டினர். 2019 ஜனவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அரைசதம் கடந்த போட்டிதான் சர்ஃப்ராஸ் பாகிஸ்தானுக்காக வெள்ளை ஜெர்ஸியில் ஆடிய கடைசிப்போட்டி. அவர் நிரந்தரமாக பெஞ்சில் அமர்த்தப்பட்டார். பாபர் அசாம், சர்ஃப்ராஸைவிட ரிஸ்வான் அணியிலிருப்பதையே விரும்புகிறார் என்ற கருத்து உலவினாலும் அது தவிரவும் திரைமறைவு வேலைகள் பல நடந்தேறின.
இருளும் குழப்பமும் எப்போதுமே சூழ்ந்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் உலகம் கடந்த 4 ஆண்டுகளாக சர்ஃப்ராஸ் விஷயத்தில் கொஞ்சமும் கரிசனமின்றி நடந்து கொண்டிருந்தது. அவரது திறமையை லீக்குகளிலும் டொமெஸ்டிக் அரங்கத்திலும் அவர் நிரூபித்தாலும் அவரைத் திரும்பிப் பார்க்கக்கூட வாரியம் தயாராக இல்லை. இவ்வளவுக்கும் அவர் எங்கேயும் காணாமல் போய்விடவில்லை. ஒவ்வொரு தொடரிலும் அணிக்காகத் தேர்ந்தெடுக்கப்படுவார். களம் கண்டுவிட மாட்டோமா என்ற ஏக்கத்துடனும் வேதனையுடனும் காத்திருப்பார். முன்னதாக இருந்த நிலையைப்பற்றி யோசிக்காது சகவீரர்களுக்கு தண்ணீர் எடுத்துச்சென்று தருவதிலிருந்து அத்தனை அலுவல்களையும் முகம் கோணாமல் செய்வார். இருப்பினும் அவருக்கும் அவரது ரீஎன்ட்ரிக்கும் இடையே ரிஸ்வானும் அவரது மிகச்சிறப்பான ஆட்டத்திறமும் இருந்தது.
சர்ஃப்ராஸின் கிரிக்கெட் பயணம் ஏறக்குறைய அஸ்தமித்து விட்டதாகவே எல்லோரும் எண்ணத் தொடங்கிவிட்டனர். உண்மையில் பாகிஸ்தான் ரசிகர்களில் பலருக்கும் அவர் ஆல்டைம் ஃபேவரைட், அவர் இப்படி நடத்தப்படுவது பலரையும் காயப்படுத்தியது. சமூக ஊடகங்களில் அந்த ஆதங்கத்தை எத்தனையோ முறை முன்னதாக வெளிப்படுத்தியிருந்தார்கள். ஆனால் சர்ஃப்ராஸ் மட்டும் இதுகுறித்து இந்த நான்காண்டுகளில் எப்போதுமே ஒரு வார்த்தைகூடப் பேசியதில்லை.

அவரது நம்பிக்கை கரைந்து விடவில்லை. போராட்டமும் ஒய்ந்து விடவில்லை, ஓய்வறிவிக்கவில்லை. தனக்கான நாள் வருமெனக் காத்திருந்தார்.
மொத்த வாரியமும் சேர்ந்து அவருக்கெதிராக வலைபின்னியது, சகவீரர்களில் சிலர்கூட அதற்கு மறைமுக ஆதரவளித்தனர். ஆனால் சர்ஃப்ராஸ் நான் கம்பேக் கொடுப்பேன் என்று வீறாப்புப் பேசவில்லை, யாரையும் வசைபாடவில்லை, மீடியா முன் தனக்கான நியாயத்துக்காகக் குரல் கொடுக்கவில்லை, அழுது புலம்பவில்லை. மணிக்கணக்கில் பயிற்சி, டொமெஸ்டிக்கில் டன் கணக்கில் ரன்கள், வேர் மண்ணோடு மோதுவது போல் சத்தமின்றி ஒரு போராட்டம். அதை மட்டும் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார்.
உச்சகட்டமாக ரமீஸ் ராஜா கடந்த ஜுனில், "சர்ஃப்ராஸ் பிளேயிங் லெவனிற்குத் திரும்புவதற்கு இனிமேல் வாய்ப்பே இல்லை" என்று கூறியிருந்தார். ஹாரீஸின் நுழைவால் சர்ஃப்ராஸின் கிரிக்கெட் வாய்ப்பு முடிவுக்கு வந்துவிட்டதாக ஆருடம் சொன்னார். அப்போதும் அதுகுறித்த கேள்விக்கு மௌனம் மட்டுமே சர்ஃப்ராஸிடமிருந்து பதிலாக வந்தது. உலகின் எந்த மூலையில் கொண்டு போய் ஒருவருடைய திறமை மறைத்து வைக்கப்பட்டாலும் நேரமும் சூழலும் சேர்ந்து வரும்போது கட்டுப்படுத்த முடியாத அளவு அது பீறிட்டுக் கிளம்பும். அதுவரை அதற்கு தீனிபோட்டு காப்பாற்றி வைத்துக் கொள்ள வேண்டியது மட்டுமே ஒருவர் செய்ய வேண்டியது. சர்ஃப்ராஸ் அதனைச் சரியாகச் செய்து கொண்டிருந்தார். வாளேந்த வேளை வருமென பொறுமையுடன் பெஞ்சில் அமர்ந்து தனது பேட்டிற்கு சாணைப் பிடித்துக் கொண்டிருந்தார்.
தேர்வுக்குழுவில் ரமீஸ் போய் அஃப்ரிடி வந்ததும் காட்சிகள் மாறின. டெஸ்டில் ரிஸ்வானின் ஆட்டத்திறம் சற்றே தொய்வுற, அவரின் வேலைப்பளுவினைக் குறைப்பதாகக் கூறி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சர்ஃப்ராஸ் ஆடவைக்கப்பட்டார். பாகிஸ்தான் மண்ணில் அவர் ஆடிய முதல் டெஸ்ட் தொடரே இதுதான். அதுவும் அவரது சொந்த ஊரான கராச்சியில்! முதல் போட்டியிலேயே இரண்டு பேக் டு பேக் அரைசதங்களோடு ஆச்சர்யப்படுத்தினார் சர்ஃப்ராஸ். மத்திய வரிசையில் இறங்கியவரின் ஆட்டத்தில் எந்த இடத்திலும் தேக்கநிலையே இல்லை. அவுட் ஆஃப் டச் என்ற வாதமெல்லாம் தென்படவே இல்லை.

இரண்டாவது டெஸ்ட்தான் தேக்கி வைத்த திறமைகளை அவர் கொட்டித்தீர்த்த களமானது. இரண்டாவது இன்னிங்ஸில் 77-க்கு நான்கு விக்கெட்டுகள் விழுந்துவிட, தோல்வியைத் தவிர்த்து போட்டியை டிராவாக்க பாகிஸ்தானுக்கு 241 ரன்கள் தேவையென்ற நிலை. தனது வாய்ப்புக்காக வருடக்கணக்கில் போராடியவருக்கு அணிக்காகப் போராடும் வாய்ப்பு இன்னமும் மதிப்புக் கூட்டப்பட்டதாக இருந்தது.
நியூசிலாந்தின் பயமூட்டும் பௌலிங் படை, மறுமுனையில் விழுந்த விக்கெட்டுகள் எதுவும் அவரை தளர விடவில்லை. வாய்ப்புக்காகக் காத்திருந்து அது கிட்டியபோது சூர்யக்குமார் எப்படி அசைக்க முடியாதவராக உருவெடுத்துள்ளாரோ அதே வேட்கையை, வெறியை சர்ஃப்ராஸிடமும் பார்க்க முடிந்தது.
63 ஓவர்கள் தாக்குப்பிடித்து அணியை மோசமான தோல்வியிலிருந்து மீட்டது மட்டுமல்ல தனது தனிப்பட்ட சாதனையாகவும் எட்டு ஆண்டுகள் கழித்து சதத்தை எட்டினார் சர்ஃப்ராஸ்.
சதத்தை எட்டியபோது அவர் கொண்டாடிய விதம் மிகமிக உணர்ச்சிபூர்வமானதாக இருந்தது. கட்டுப்படுத்த முடியாத ஆக்ரோஷத்தோடு தரையில் நான்குமுறை குத்தினார். இது தவறவிட்ட அந்த நான்காண்டுகளுக்கான குறியீடு என போட்டிக்குப் பின்னர் சர்ஃப்ராஸ் தெரிவித்தார். சரிதான்! வார்த்தைகளால் விளக்கமுடியாத காத்திருத்தலின் வலியை வேறெப்படி விவரித்திருக்க முடியும்?
ஒரே தொடரின் நான்கு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்த முதல் விக்கெட்கீப்பர் என்ற சாதனை மட்டுமல்லாது, இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் அதிக ரன்களை எடுத்த விக்கெட்கீப்பர்களுக்கான பட்டியலில் மூன்றாவது இடம் (335 ரன்கள்) என அவரது சாதனைப்பட்டியலும் நீள்கிறது. போட்டிக்குப் பிந்தைய பேட்டியில்கூட சாதித்து விட்டோமென்ற திமிரில்லை, சவடாலாகப் பேசவில்லை ஆத்மதிருப்தி மட்டுமே அவரிடம் நிறைந்திருந்தது.

கேப்டன் பதவி பறிபோனது, பிளேயிங்லெவனில் தொடரமுடியாத நிலை, சுயசந்தேகத்தை எழுப்பும் சூழல், வீழ்த்தநினைக்கும் எதிராளிகள் என அத்தனையையும் சமாளித்து அட்டகாசமாக அரங்கேறியிருக்கிறது சர்ப்ராஸின் கம்பேக். குழிதோண்டி புதைத்தபின் விருட்சமாக வளர்ந்து நிற்கிறார்.
அவரது நீண்டகால ஆசையான ஹானர்ஸ் போர்டும் அவரது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கைக்கான அடையாளமாக அவரது பெயரை தங்க எழுத்துகளால் தாங்கி நிற்கிறது.