Published:Updated:

உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் ஓய்வுபெற்றுவிட்டார்..! தோனி அல்ல! யார், ஏன்?

Sarah Taylor
Sarah Taylor

``நாம் தவறு செய்யாமல் இருப்பதால் ஒன்றும் நிகழப்போவதில்லை. தவறுகள் செய்தே ஆக வேண்டும். தவறுகளில் இருந்துதான் கற்றுக்கொள்ள முடியும். திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும். இதுவே என் பயணத்தில் நான் கற்ற பாடம்."

ஆண்கள், பெண்கள் என இரண்டு கிரிக்கெட்டையும் ஒன்றாகப் பார்த்தால், தற்போதைய சூழலில் சாரா டெய்லர்தான் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்!
ஆடம் கில்கிறிஸ்ட்

விக்கெட் கீப்பிங்கின் பிதாமகனிடமிருந்து வந்த அந்தப் பாராட்டு பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். மின்னலை விட வேகமாக ஸ்டம்புகளைத் தகர்க்கும் தோனி போன்ற கீப்பர் இருக்கும்போது, சாராவை சிறந்த கீப்பர் என்று அவர் கூறியது, எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. பலர் அவரை ஒரு புதிய வீராங்கனையைப் போல் பார்த்தார்கள்.

பலர், ``அந்த ஜாம்பவான் அந்தப் பாராட்டுதலுக்குரியவர்தான்" என்றார்கள். 13 ஆண்டுக்கால கிரிக்கெட் வாழ்க்கையில், சாதனைகள் செய்வதும் தலைப்புச் செய்தியாவதும் சாராவுக்குப் புதிதில்லை. இதோ, இப்போது மீண்டும் தலைப்புச் செய்தியில்... கிரிக்கெட் வீராங்கனையாக கடைசி முறையாக! ஆம், மகளிர் கிரிக்கெட்டின் மகத்தான கீப்பர் ஓய்வு பெற்றுவிட்டார்.

மகளிர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளுக்குக் காரணமான விக்கெட் கீப்பர், இரண்டு முறை ஐ.சி.சி-யின் சிறந்த டி-20 வீராங்கனை, ஒருமுறை ஐ.சி.சி-யின் சிறந்த ஒருநாள் வீராங்கனை, லார்ட்ஸ் ஹானர் போர்டில் பெயர் என இங்கிலாந்து கிரிக்கெட்டின் மிகமுக்கிய அங்கமாக விளங்கியவர் சாரா. கீப்பிங், பேட்டிங் இரண்டிலுமே ரவுண்டு கட்டி அடித்தவர். ஆனால், இதற்காக மட்டும் கொண்டாடப்படவேண்டியவர் இல்லை அவர்.

Sarah Taylor
Sarah Taylor

ஆஸ்திரேலிய வீராங்கனை எலீஸ் விலானியை சாரா ஸ்டம்பிங் செய்ததுதான் சமீபத்தில் பெரிதும் பேசப்பட்டது. ஆஷஸ் டி-20 போட்டியில் கேத்தரின் பிரன்ட் பந்துவீச்சில், பந்தை எதிர்கொள்ள க்ரீஸை விட்டு இறங்கி முயற்சி செய்த விலானி, பந்தை அடிக்கத் தவற, காலை க்ரீஸுக்குள் திரும்பி வைக்கும் அந்த நொடிப்பொழுதில் சாரா ஸ்டம்பிங் செய்துவிட்டார். அதைப் பாராட்டி கில்கிறிஸ்ட் ட்வீட் செய்ய, கிரிக்கெட் உலகில் வைரலானது அந்த வீடியோ. ஆனால், அந்தப் போட்டியில் எப்படியான சூழ்நிலையில் சாரா விளையாடினார், எப்படியான சூழ்நிலையில் அப்படியான ஸ்டம்பிங்கைச் செய்தார் என்பது பலருக்கும் தெரியாது.

அந்தப் போட்டியின் போது மனப்பதற்றத்தில், எந்த நேரத்திலும் மயங்கி விழும் அபாயத்தில் இருந்தார் சாரா. ஆம், உண்மையாகவே! ஆனால், அது அவருக்குப் புதிதில்லை என்பதுதான் மிகப்பெரிய அதிர்ச்சி!

கடந்த 2016-ம் ஆண்டில், மிகுந்த மனச் சிக்கலில் இருந்த சாராவால், போட்டிகளில் பெரிதாக சோபிக்க முடியாமல் இருந்தது. அதனால், அதிலிருந்து மீண்டு வர சிறு ஓய்வு வேண்டும் என்பதை உணர்ந்தார். ஓய்வு எடுத்தார். தனது சொந்த காரணங்களுக்காக சாரா டெய்லர் 'ப்ரேக்' எடுக்கிறார் என்று அறிவித்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். ஆனால் சாரா தன்னைப் பற்றிய உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்ல வேண்டும் என்று நோக்கத்தில் பி.பி.சி-க்கு பேட்டி அளித்தார்.

தான் ஓய்வு எடுக்கும் உண்மையான காரணத்தைச் சொன்னதோடு மட்டுமல்லாமல், அனைவருக்கும் அதைப்பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். ``இங்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள். நான் இதை (மனச் சிக்கல்) நினைத்து வெட்கப்படவில்லை. என்றும் வெட்கப்பட்டதும் கிடையாது. உலக மக்களில் பெரும்பாலானோருக்கு இந்த பாதிப்பு உள்ளது. எல்லாரும் இதைப்பற்றிப் பேசுங்கள்" என்று மனம் திறந்தார்.

Sarah Taylor
Sarah Taylor

சாரா பேச ஆரம்பித்ததால் அதைப் பற்றி கிரிக்கெட் வீராங்கனைகள் சிந்திக்கவும் பேசவும் தொடங்கியுள்ளனர் என்று இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா ஆதரவு தெரிவித்தார். மேலும், சாராவைத் தொடர்ந்து கேட் க்ராஸ், தன் மனப்பதற்றத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார். சாராவின் அந்த வெளிப்படையான பேட்டி பல வீராங்கனைகளுக்கு ஆறுதலாகவும் ஊக்கமாகவும் இருந்தது.

அதன் பிறகு, 2017-ம் ஆண்டில் மீண்டும் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்த சாரா. உலகக்கோப்பையில் 396 ரன்கள் அடித்து அசத்தினார். பல இளம் வீராங்கனைகள் வந்தபோதும், தன் இடத்தை மீண்டும் தக்கவைத்துக்கொண்டார். சாராவின் இரண்டாவது இன்னிங்ஸ் இன்னும் சிறப்பாக அமைந்தது. ஆஷஸ் தொடரின்போது மீண்டும் மனச் சிக்கலுக்கு ஆளான சாரா. டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு அணியிலிருந்து விலகினார். மீண்டும், ஒரு ஓய்வு எடுத்தார். ஆனால், இந்த முறை அந்த ஓய்வு நிரந்தரமானதாக மாறியிருக்கிறது. சாராவின் கிரிக்கெட் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

நாம் தவறு செய்யாமல் இருப்பதால் ஒன்றும் நிகழப்போவதில்லை. தவறுகள் செய்தே ஆக வேண்டும். தவறுகளில் இருந்துதான் கற்றுக்கொள்ள முடியும். திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும். இதுவே என் பயணத்தில் நான் கற்ற பாடம்.
சாரா டெய்லர்

இவரது திறமைக்கு ரசிகராய் இல்லாதவரே இல்லை. நம் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளும் இதில் அடக்கம். இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா, `நான் சாரா டெய்லரின் பெரிய ரசிகர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மற்றொரு இந்திய இளம் நட்சத்திரம் ஜெமிமா ராட்ரிக்ஸ், ``மனப்பதற்ற (anxiety) பிரச்னைகள் இருந்தும், யாராலும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு வலிகளைத் தாங்கி, அதை எதிர்த்துப் போராடி அசாதாரண சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறீர்கள். உங்களை மிஸ் பண்ணுவோம். நீங்கள் என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்" என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

மனநோய்களால் அவதிப்படுபவர்களுக்கு உதவி புரிய, `ஆஸம் மைண்ட்ஸ்' எனும் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் சாரா. மேலும், 'லைஃப் கோச்சிங்' எனும் பாடப்பிரிவில் டிப்ளோமா வாங்கியுள்ளார். தொழில்முறை விளையாட்டு அணிகளில் வாழ்க்கைப் பயிற்சியாளராகப் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் ஏற்றுக் கொள்வேன் என்றும் அறிவித்திருக்கிறார்.

Sarah Taylor
Sarah Taylor

சமீபத்தில் இங்கிலாந்தில் வெளியாகும் வுமன்ஸ் ஹெல்த் இதழில், `body positivity’ கருத்தை முன்வைத்து பிரபலங்கள், தங்கள் களங்களில் ஆடை இல்லாமல் விளையாடுவதைப் போன்ற புகைப்படங்களை வெளியிட்டது. அதில், சாரா டெய்லரின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, ``என்னைப் பற்றித் தெரிந்த எல்லாருக்கும் இது என் `கம்ஃபெர்ட் ஸோனை' விட்டு சற்றே வெளியே இருப்பது என்று தெரியும். ஆனால், இதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இதைச் செய்வதற்கு சில விஷயங்களைத் தாண்டி வரவேண்டியிருந்தது. தற்போது இது என்னை வலிமையூட்டுகிறது. எல்லா பெண்களும் அழகானவர்கள்" என்று எழுதியிருந்தார் சாரா.

சாராவின் அடுத்த இன்னிங்ஸ், மற்றவர்களை வலிமைப்படுத்துவதாகவே இருக்கப்போகிறது! ஆனால், அவரது முந்தைய இன்னிங்ஸ்கள் ஏற்படுத்திய தாக்கமும் மிகமுக்கியமானது. விளையாட்டையும் சாதனைகளையும் மட்டும் சார்ந்தது அல்ல அவரது வாழ்க்கை. அது போராடவும் கற்றுக்கொடுத்திருக்கிறது!

``லாரா `பேட்டிங்'கானு கேட்டார்... நான் `ஈட்டிங்'னேன்'' - ஸ்போர்ட்ஸ் ஆங்கர் பாவனா!
அடுத்த கட்டுரைக்கு