Published:Updated:

`அவங்க உழைப்பு பாராட்டப்பட வேண்டியது!' - மைதான ஊழியர்களுக்கு ஊதியத்தைப் பரிசளித்த சஞ்சு சாம்சன்

தினேஷ் ராமையா
பிரேம் குமார் எஸ்.கே.

தென்னாப்பிரிக்க ஏ அணிக்கெதிரான தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடிய சஞ்சு சாம்சன், தனது போட்டி ஊதியத்தை மைதான ஊழியர்களுக்குப் பரிசளிக்க முடிவு செய்திருக்கிறார்.

sanju samson
sanju samson

தென்னாப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிகாரபூர்வமற்ற ஒருநாள் தொடரில் பங்கேற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகளில் வென்ற இந்திய ஏ அணி, 4-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. திருவனந்தபுரம் க்ரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன.

sanju samson
sanju samson

கேரளாவில் பெய்துவரும் பருவ மழையால் இவ்விரு அணிகள் இடையிலான எந்தப் போட்டியும் முழுமையாக 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடக்கவில்லை. அந்தத் தொடரின் ஐந்து போட்டிகளுமே மழையால் பாதிக்கப்பட்டன. இதனால், ஒவ்வொரு போட்டியையும் நடத்த மைதான ஊழியர்கள் அனைவருமே கடும் சிரமப்பட்டனர். மழைக்குப் பின்னர் மைதானத்தில் தேங்கிய நீரை வெளியேற்றுவது, மைதானத்தை உலரவைப்பது என மைதான ஊழியர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

இந்தநிலையில், தொடர் நிறைவடைந்ததற்குப் பின்பாக தனது போட்டி ஊதியத்தை மைதான ஊழியர்களுக்குப் பரிசளிப்பதாக இந்திய ஏ அணி வீரர் சஞ்சு சாம்சன் அறிவித்தார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளில் அவர் விளையாடினார். ஒரு போட்டிக்கு ரூ.75,000 ஊதியம் என தனக்குக் கிடைக்கும் ஊதியம் ரூ.1.5 லட்சத்தை அவர் கொடுக்க இருக்கிறார்.

sanju samson - Dawan
sanju samson - Dawan

இதுகுறித்து பேசிய சஞ்சு சாம்சன், ``மைதான ஊழியர்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும். அவர்களால்தான் நம்மால் இந்த மைதானத்தில் விளையாட முடிந்தது. மழைபெய்திருக்கும் சூழல்களில் மைதானத்தில் ஏதோ ஒரு பகுதியில் ஈரப்பதம் இருந்தாலும், போட்டி ஏற்பாட்டாளர்கள் நம்மை விளையாட அனுமதிக்கமாட்டார்கள். நிச்சயம் அவர்களுக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும். அதனால், என்னுடைய போட்டி ஊதியத்தை அவர்களுக்கு அளிக்கலாம் என நான் முடிவெடுத்திருக்கிறேன்'' என்றார். அதேபோல், மைதான ஊழியர்களின் பணியைப் பாராட்டிய ஷிகர் தவான், போட்டி முடிந்தபின்னர் மைதானத்துக்குச் சென்று அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

`தோனி எனக்கு குரு; ஆனால், ஒப்பீடு..?' - மனம்திறக்கும் ரிஷப் பன்ட்

இந்தியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்க ஏ அணிகள் இடையிலான ஐந்தாவது போட்டி மழையால் பாதிக்கப்படவே, இரண்டு அணிகளுக்கும் தலா 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. முதலில் ஆடிய இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 91 ரன்களும் ஷிகர் தவான் 51 ரண்களும் எடுத்தனர். கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க ஏ அணி, 168 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய ஏ அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷரதுல் தாக்கூர் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.