Published:Updated:

WPL: `என் கனவல்ல; என் தந்தையின் கனவு!; - ஹர்திக், பும்ரா வரிசையில் வெளிச்சம் பெறும் இசாக்!

Ishaque ( WPL )

ஆண்கள் அணியின் அதே பாணியைத்தான் பெண்கள் அணியும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது. அதன் பலனாகத்தான் இசாக் இப்போது வெளிச்சம் பெற்றிருக்கிறார்.

Published:Updated:

WPL: `என் கனவல்ல; என் தந்தையின் கனவு!; - ஹர்திக், பும்ரா வரிசையில் வெளிச்சம் பெறும் இசாக்!

ஆண்கள் அணியின் அதே பாணியைத்தான் பெண்கள் அணியும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது. அதன் பலனாகத்தான் இசாக் இப்போது வெளிச்சம் பெற்றிருக்கிறார்.

Ishaque ( WPL )
`இது என் கனவல்ல. என் தந்தையுடைய கனவு. அவருடைய கனவை நிஜமாகவே ஆடிக்கொண்டிருக்கிறேன்' என பூரிப்பும் நெகிழ்வுமாக பேசுகிறார் சைகா இசாக். இவர்தான் இப்போது வுமன்ஸ் ப்ரீமியர் லீக் தொடரின் அதிக விக்கெட்டை எடுத்த வீராங்கனைக்கு வழங்கப்படும் பர்ப்பிள் தொப்பியை தற்போது வைத்திருக்கிறார்.

3 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை அள்ளியிருக்கிறார். எக்கானமி ரேட் 5 க்கும் கீழ் இருக்கிறது. விளைவு, பர்ப்பிள் தொப்பி தனக்கேற்ற தலையாக இசாக்கை தேடி வந்து அலங்கரித்திருக்கிறது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் நேற்று ஆடியது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசியது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டெல்லியை இத்தனை குறைவான ஸ்கோரில் ஆல் அவுட் ஆக்குவது சுலபமான காரியமல்ல. ஏனெனில், அந்த அணி முதல் இரண்டு போட்டிகளையுமே வென்றிருந்தது. அந்த இரண்டு போட்டிகளிலுமே டெல்லி அணி 200 ரன்களுக்கும் அதிகமாக ஸ்கோர் செய்திருந்தது. முழுமையாக ஒரு அணியாகவே டெல்லி அணி சிறப்பாக ஆடியிருந்தது. அப்படி ஒரு அணியை இவ்வளவு குறைவான ஸ்கோருக்குள் மும்பை அணி சுருக்கியதற்கு மிக முக்கிய பங்களிப்பைக் கொடுத்தவர் இசாக்தான். 3 ஓவர்களை வீசி 13 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அவர் வீழ்த்திய மூன்று விக்கெட்டுகளுமே ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. டெல்லி அணியின் ஓப்பனிங் கூட்டணியான மெக் லேனிங் - ஷெபாலி வர்மா இருவரின் விக்கெட்டுகளையுமே இசாக்தான் வீழ்த்தியிருந்தார்.

மெக் லேனிங் + ஷெபாலி இது ஒரு அபாயகரமான கூட்டணி. இந்த வுமன்ஸ் ப்ரீமியர் லீகின் ஆகச்சிறந்த கூட்டணி எனும் பெயரை பெறுவதற்கான அத்தனை தகுதியுமுடைய கூட்டணி. முதல் போட்டியில் 162 ரன்களையும் இரண்டாவது போட்டியில் 67 ரன்களையும் இவர்கள் கூட்டாக எடுத்திருந்தனர். டெல்லி அணி அத்தனை வலுவாக தெரிந்ததற்கு இவர்களின் ஓப்பனிங் கூட்டணியுமே மிக முக்கிய காரணம். அவர்கள் இருவரின் விக்கெட்டையுமே இசாக் வீழ்த்திக் கொடுத்தார். மிடில் ஆர்டரில் அதிரடியாக ஆடக்கூடிய ஜெமிமா ரோட்ரிக்ஸின் விக்கெட்டையும் இசாக்கே வீழ்த்தினார். இந்த போட்டி என்றில்லை. இதற்கு முந்தைய இரண்டு போட்டியிலுமே கூட இசாக் இப்படியான முக்கியமான விக்கெட்டுகளையே வீழ்த்தியிருக்கிறார்.

Ishaque
Ishaque
WPL

விக்கெட்டை வீழ்த்த இசாக் கடைப்பிடிக்கும் யுக்தி ரொம்பவே எளிதானது அதேநேரத்தில் தொடர்ச்சியாக ஒரு ஒழுங்குத் தன்மையொடு அதை பின்பற்றுவது ரொம்பவே கடினம். ஸ்டம்ப் டூ ஸ்டம்ப்பாக டைட்டான லைனை பிடித்துக் கொண்டு கொஞ்சம் ரிஸ்க் எடுத்து ஃபுல்லாக வீசுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். பேட்டர்களுக்கு ஷாட் ஆட இடமே கொடுக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். அதனால் இந்த டைட்டான லைனை மீறி பெரிதாக எதையும் வீசவே விரும்பமாட்டார். இதுவரை இசாக் வீழ்த்தியுள்ள 9 விக்கெட்டுகளில் 7 விக்கெட்டுகள் LBW அல்லது Bowled முறையிலேயே வந்திருக்கிறது. இசாக் பயன்படுத்தும் யுக்திக்கான பரிசு இது. டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் மெக் லேனிங் இசாக்கின் பந்தில் கேட்ச் ஆகியிருந்தார். அது கூட லேனிங் இசாக்கின் அந்த டைட் லைனை முறியடித்து விலகி வந்து ஆட முயன்றதால் உருவான கேட்ச்தான்.

இடதுகை ஸ்பின்னரான இசாக் கொல்கத்தாவை சேர்ந்தவர். சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர். தந்தையின் விருப்பப்படி கிரிக்கெட்டில் சாதித்துக் காட்டும் முனைப்போடு களமிறங்கியிருக்கிறார். எல்லாம் சரியாக அமைந்து அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு முன்னேறியவருக்கு திடீரென தோள்ப்பட்டையில் ஒரு காயம் ஏற்பட்டு அவரை முழுமையாக முடக்கிப் போட்டது. அதன்பிறகு, பழைய மாதிரி பந்துவீச முடியாமல் போகிறது. அணிகளிலிருந்து ஓரங்கட்டப்படுகிறார். இந்த சமயத்தில்தான் பெங்கால் அணியின் முன்னாள் இடதுகை ஸ்பின்னர் ஷிப்சாகர் சிங் இசாக்கிற்கு பயிற்சியளிக்க தொடங்கினார்.

Ishaque
Ishaque
WPL

மீண்டும் அடிப்படையிலிருந்து பயிற்சியை தொடங்கினார். டெக்னிக்கலாக எக்கச்சக்க மாற்றங்களை செய்திருந்தார். அத்தனையும் பலன் கொடுக்க தொடங்கியது. மீண்டும் இசாக் கிரிக்கெட் களத்தில் முன்னேறி ஓட தொடங்கினார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடும் வாய்ப்பும் கிடைத்தது. மும்பை அணிக்காக பிரத்யேகமான பயிற்சிகளில் இறங்கி இப்போது கலக்கியும் வருகிறார்.மும்பை அணியில் எப்போதுமே நட்சத்திர வீரர்கள் அதிகமாக இருப்பார்கள்.

அதேநேரத்தில், வெளிச்சம் பெறாத வீரர்களுக்குமே குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்கி மெருகேற்றி விடுவார்கள். பும்ரா, ஹர்திக் பாண்டியா என இன்றைய நட்சத்திரங்கள் பலரும் அப்படியாக வந்தவர்கள்தான். ஆண்கள் அணியின் அதே பாணியைத்தான் பெண்கள் அணியும் கடைபிடித்துக் கொண்டிருக்கிறது. அதன் பலனாகத்தான் இசாக் இப்போது வெளிச்சம் பெற்றிருக்கிறார்.