Published:Updated:

TNPL : சாய் சுதர்ஷன்... சேலம் பெளலர்களை சிக்ஸர்களால் சுளுக்கெடுத்த சுள்ளான்!

சாய் சுதர்ஷன்

ஆஃப் சைடுகளில் ஆடிய சில ஷாட்களையும், சாய் சுதர்ஷனின் சில சிக்ஸர்களையும் பார்த்த போது, கண் முன் கங்குலியின் உருவம் நிழலாடியதைத் தடுக்க முடியவில்லை.

TNPL : சாய் சுதர்ஷன்... சேலம் பெளலர்களை சிக்ஸர்களால் சுளுக்கெடுத்த சுள்ளான்!

ஆஃப் சைடுகளில் ஆடிய சில ஷாட்களையும், சாய் சுதர்ஷனின் சில சிக்ஸர்களையும் பார்த்த போது, கண் முன் கங்குலியின் உருவம் நிழலாடியதைத் தடுக்க முடியவில்லை.

Published:Updated:
சாய் சுதர்ஷன்

திறமைகளின் தேடலான டிஎன்பிஎல்-ன் முதல் போட்டியே, ஒரு அட்டாக்கிங் பேட்ஸ்மேனை, அடையாளம் காட்டியுள்ளது. க்ளாஸ், எலிகன்ஸ், எஃபர்ட்லஸ் என ஜெஃப்ரி பாய்காட்டின் அத்தனை ஆங்கில வர்ணனைகளையும் பொருள்பட விளக்கியுள்ளார் சாய் சுதர்ஷன். சேப்பாக்கத்தில் மையம் கொண்டு சுழன்றடித்த சுதர்ஷன் புயலால் மிரண்டு அரண்டுபோனார்கள் சேலம் பௌலர்கள். ஒரே இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஷ்வினையே ‘இவரை தமிழ்நாடு டீமுக்கு உடனே எடுங்கப்பா’ என சொல்லவைத்திருக்கிறது சுதர்ஷனின் இன்னிங்ஸ்.

கோவை கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸுக்கு இடையேயான முதல் டிஎன்பில் போட்டி நேற்று இரவு சென்னையில் தொடங்கியது. விஜய் ஷங்கர், ஷாருக்கான், முருகன் அஷ்வின் என ஐபிஎல் ஆடும் முக்கிய வீரர்களின் மீது எல்லோரின் கவனமும் படிந்திருக்க, அதை அப்படியே தன்பக்கம் திருப்பிவிட்டார் சாய் சுதர்ஷன். 43 பந்துகளில் 87 ரன்கள்… அதுவும் விஜய் ஷங்கர், முருகன் அஷ்வின் ஆகியோரின் பந்துகளை எல்லாம் வெளுத்து 8 பவுண்டரி, 5 சிக்ஸர் என சேப்பாக்கத்துக்குள் இடி இறக்கிவிட்டார்.

19 வயதுதான். ஆனால், அவரது ஆட்டத்தில் பக்குவமும் இருந்தது, பதட்டமில்லாத ஒரு நிதானமும் இருந்தது. அணியின் ஸ்கோர், 30-களில் இருக்க, ஐந்தாவது ஓவரில் உள்ளே வந்தவர், அதிரடி ஆட்டத்திற்கான அர்த்தத்தைச் சொல்லத் தொடங்கினார்.

சாய் சுதர்ஷன்
சாய் சுதர்ஷன்

அந்தப் புள்ளியில் இருந்துதான், தடுக்கவே முடியாத காட்டாறாக மாறத் தொடங்கியது, கோவையின் இன்னிங்ஸ். காரணம், மாஸ் ஹீரோவாக, ஆக்ஷன் திரைப்படம் காட்டத் தொடங்கினார், சுதர்ஷன். விஜய் ஷங்கரின் ஓவரில், இரண்டு பவுண்டரிகளுடன் தொடங்கிய அவர், மிக நேர்த்தியாக ரன்களை குவிக்க தொடங்கினார்.

வரும் பந்து என்ன லைனில் வந்தால் என்ன, என்ன லென்த்தில் வீசப்பட்டால் என்ன, பந்தை வீசுவது ஸ்பின்னராக இருந்தால் என்ன, வேகப்பந்து வீச்சாளராக இருந்தால் என்ன, எதற்கும் தயங்காமல், அவரது பேட் நாலாபக்கமும் சுழன்று கொண்டே இருந்தது.

ஷாட் செலக்ஷன், டைமிங், ப்ளேஸ்மென்ட் என அத்தனையும் அற்புதமாக இருந்தது. பௌலரின் தலைக்கு மேலேயே பந்துகளைப் பறக்க விட்டார். பெரும்பாலான ஷாட்கள், பயத்தின் சுவடே இன்றி, ஏரியல் ஷாட்களாகவே ஆடப்பட்டு இருந்தன. ஆஃப் சைடுகளில் ஆடிய சில ஷாட்களையும், அவரது சிக்ஸர்களையும் பார்த்த போது, கண் முன் கங்குலியின் உருவம் நிழலாடியதைத் தடுக்க முடியவில்லை.

பத்தாவது ஓவரோடு, 84 ரன்களும் வந்துவிட்ட பின்பும், "8.4 தான் ரன் ரேட்டா... பத்தாதே!", என்பதைப் போல், இன்னமும் கொஞ்சம் வேகமேற்றினார் சுதர்ஷன். பௌலர்களை மாற்றிக் கொண்டே இருந்தார், சேலம் கேப்டன், ஃபெர்ராரியோ. அனுபவம் வாய்ந்த, முருகன் அஷ்வினின் முதல் ஓவரில், கொஞ்சம் நிதானித்து, கவனித்து, பிறகு அடுத்த ஓவரில் அவரையும் சிறப்பாக கவனித்தார் சுதர்ஷன். 24 பந்துகளில் அரை சதத்தையும் எட்டி விட்டார்.

சாய் சுதர்ஷன்
சாய் சுதர்ஷன்

பொதுவாக, நல்ல லைன் அண்ட் லென்த்தில் வரும் பந்துகளை சிங்கிளாக தட்டுவதும், தவறான பந்துகளை தண்டித்து பெரிய ஷாட்களாக மாற்றுவதும்தான், அதிக நேரம் களத்தில் நின்று ரன்களைக் குவிக்கும் பேட்ஸ்மேன்களின் அணுகுமுறை. ஆனால், சுதர்ஷனைப் பொறுத்தவரை, பந்துகளில் பாரபட்சம் பார்க்கவில்லை. குறிப்பாக, ஸ்பின்னர்களை அவர் கவனித்த விதம்தான், மிகச் சிறப்பு. ஸ்பின்னர்களின் 23 பந்துகளை, 57 ரன்களாக மாற்றி இருந்தார் சுதர்ஷன். அவரது ஒட்டுமொத்த ஸ்ட்ரைக் ரேட் 202 என்றால், ஸ்பின்னர்களுக்கு எதிரான ஸ்ட்ரைக் ரேட் மட்டும் 248.

பேக் ஃபுட்டில் ஆடுகிறார், ஃபிரன்ட் ஃபுட்டில் ஆடுகிறார் என்றெல்லாம் வகைப்படுத்த முடியாமல், பந்துக்கு ஏற்றாற் போல் நகர்ந்து கொண்டே இருந்தது கால்கள். சுதர்ஷன் இருந்த வேகத்துக்கு, கண்டிப்பாகச் சதமடிப்பார், இந்தத் தொடரின் முதல் சதமாகவும், ஒட்டுமொத்த டிஎன்பிஎல்-ன், ஒன்பதாவது சதமாகவும் அது இருக்கும், இருக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பை போட்டியைப் பார்த்த எல்லோரிடமும் ஏற்படுத்தி இருந்தார் சுதர்ஷன்.

ஆனால், இறுதியாக, பெரியசாமி சாமர்த்தியமாக வீசிய ஒரு ஸ்லோ பாலில், பந்தின் வேகத்தை கணிக்காமல், ஆட்டமிழந்தார். 43 பந்துகளில், 87 ரன்களைக் குவித்ததோடு, சதத்தின் பக்கத்தில் சென்று அவர் ஆட்டமிழக்க, அதே ஓவரோடே, மழை குறுக்கிட்டதால், ஆட்டம் தடைப்பட்டு நிறுத்தப்பட்டது. அதன்பிறகு போட்டியைத் தொடரமுடியாமல் புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டன.

விரைவாக வர வேண்டிய மழை கூட, அவரது ரன் மழையில், நனைந்து விட்டு, தாமதமாக, அவர் ஆட்டமிழந்த பின் வந்தது போலத்தான் இருந்தது. அவரது வயதை வைத்து, மின்மினிப் பூச்சி காட்டும் வெளிச்சத்தை எதிர்பார்த்தவர்களுக்கு, மின்னலின் ஒளியையே காட்டி விட்டார் சாய் சுதர்ஷன். அடுத்தடுத்த போட்டிகளில், இந்த அதிரடி தொடரும் பட்சத்தில், ஐபிஎல் எக்ஸ்பிரஸில், சுதர்ஷனுக்கு இடம் உறுதி செய்யப்படும் என்றே எதிர்பார்க்கலாம்!

யார் இந்த சாய் சுதர்ஷன்?

சாய் சுதர்ஷனின் தந்தை தடகள வீரர் பரத்வாஜ். தென் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியிருக்கிறார். இவரது தாய் உஷா கைப்பந்துப் போட்டிகளில், தமிழ்நாட்டுக்காக ஆடியவர். பெற்றோர் இருவருமே, விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவராக இருந்ததால் மகனை சிறு வயதிலேயே கிரிக்கெட்டில் இறக்கி விட்டிருக்கிறார்கள்.

அண்டர் 16, அண்டர் 19 என ஒவ்வொரு படிநிலையாக முன்னேறத் தொடங்கிய சுதர்ஷன், 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 16 விஜய் மெர்சன்ட் தொடரின் பேசுபொருளானார். குறிப்பாக, ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில், அவருடைய 68 ரன்கள் கொண்டாடப்பட்டது.

சாய் சுதர்ஷன்
சாய் சுதர்ஷன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் நடத்தும், பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று, தனது திறமையை நிரூபித்ததன் மூலமாக, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்குள், தனது 17 வயதிலேயே நுழைந்து விட்டார் சாய் சுதர்ஷன்.

அண்டர் 19 இந்தியா ஏ அணியிலும் சேலஞ்சர் டிராபிக்காக சாய் சுதர்ஷன் தேர்ந்தெடுக்கப்பட்டார். வினோ மன்கட் தொடரில், இரண்டு சதங்களையும், ஒரு அரைசதத்தையும், அநாயாசமாக அடித்ததன் மூலமாக, இந்த வாய்ப்பு, சுதர்ஷனைத் தேடி வந்தது. இந்தியா ஏ, பி, மற்றும் சி அணிகளோடு, நேபாளின் சார்பாக ஒரு அணியும் பங்கேற்ற அந்தத் தொடர்தான், சுதர்ஷனின் திறனை முழுமையாக வெளியே கொண்டு வந்தது. மாநில அளவிலான போட்டிகளைவிட, இது அவருக்கு சவாலான ஒன்றாகவும், நிறைய கற்றுக்கொள்ள உதவுவதாகவும் இருந்தது. இதே போல, அண்டர் 19 நிலையில், தமிழ்நாடு அணியின் கேப்டனாகவும் சிறப்பாகச் செயல்பட்டிருந்தார் சுதர்ஷன்.

களத்தில் அதிக நேரம் தாக்குப் பிடித்துத் தாக்கும் வீரரான சுதர்ஷன், இடக்கை ஆட்டக்காரராகவும் இருந்தது இன்னொரு பலம். மேலும், களமிறங்கினாலே, 40 ரன்களுக்குக் குறையாமல் சேர்க்கும் திறமையும் சேர்ந்து, அவரை மிகச் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக உருவாக்கி உள்ளது.

என்னதான் மற்ற தளங்களில் சாதித்துக் கொண்டிருந்தாலும், டிஎன்பிஎல்லில் சாதித்து, அதன் மூலமாக, தன்னுடைய ஐபிஎல் வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொள்ள விரும்பிய சுதர்ஷனுக்கு, 17 வயது நிரம்புவதற்குள்ளாகவே, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் இடம் கிடைத்தது. எனினும், பிளேயிங் லெவனில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. 2020-ஆம் ஆண்டு, கோவை கிங்ஸ் அணியில் எடுக்கப்பட்டாலும், தொடர் நடைபெறாததால், விளையாட முடியாமல் போனது. இந்நிலையில்தான், சேலம் ஸ்பார்டன்ஸுக்கு எதிரான போட்டியில் கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்தி சாதித்திருக்கிறார் சுதர்ஷன்.