Published:Updated:

`உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்’ - 22 மாதங்களுக்குப் பிறகு களமிறங்கும் சஹாவுக்கு கோலி பாராட்டு

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு விருத்திமான் சஹா அழைக்கப்பட்டுள்ளார்.

SAHA
SAHA

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இதில் ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்குகிறார். அதேபோல் விக்கெட் கீப்பிங்கில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரிஷப் பன்ட்டுக்குப் பதிலாக விருத்திமான் சஹா அணிக்குள் கொண்டுவரப்படுகிறார். டெஸ்ட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்ற பிறகு பார்த்தீவ் பட்டேல், விருத்திமான் சஹா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பன்ட் ஆகியோர் கீப்பிங் பணியை மேற்கொண்டு வந்தனர்.

`உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்’ - 22 மாதங்களுக்குப் பிறகு களமிறங்கும் சஹாவுக்கு கோலி பாராட்டு

சஹா அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டார். இந்நிலையில் புதுவரவான ரிஷ்ப் பன்ட்டுக்கு அதிகப்படியான வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரும் சில போட்டிகளில் பேட்டிங்கில் ஜொலித்தார். தோனிக்குப் பிறகு கீப்பிங் பொறுப்பு ரிஷப் பன்ட் கைக்குக் கொடுக்கப்படவுள்ளது. இதன் காரணமாகக் கடந்த ஒரு வருடமாகத் தோனி ஆடாத போட்டிகளின்போது டி-20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

உலகக்கோப்பைத் தொடருக்குப் பிறகு, தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள ரிஷப் தவறிவிட்டார். தேவையில்லாத ஷாட்டுகளின் மூலம் விக்கெட்டுகளை இழப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இந்நிலையில்தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 22 மாதங்களுக்குப் பிறகு சஹா களமிறங்கவுள்ளார்.

Kohli
Kohli

இதுகுறித்துப் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ``சஹா நல்ல உடல்தகுதியுடன் இருக்கிறார். அவர் இந்தத் தொடரில் விளையாடவுள்ளார். அவரது விக்கெட் கீப்பிங் திறமையை அனைவரும் பார்க்க வேண்டும். தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேட்டிங்கிலும் கீப்பிங்கிலும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். காயம் காரணமாக அவரால் நீண்ட நாள்கள் விளையாட முடியாமல்போனது. என்னைப் பொறுத்தவரை அவர்தான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர். கடந்த காலங்களில் இதை அவர் செய்தும் காட்டியுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.