Published:Updated:

436 பந்துகள், 10 மணி நேர ஆட்டம், சச்சினின் 241 ரன்களில் ஒரு கவர் டிரைவ் கூட இல்லை... ஏன்?! #Sachin

சச்சின் டெண்டுல்கர்... ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எண்ணிலடங்கா சாதனைகளை நிகழ்த்தியிருப்பவர். பல சதங்களை சர்வசாதாரணமாக விளாசி தள்ளியிருப்பவர். ஆனால், அவருக்கு 2003/2004 டெஸ்ட் தொடரின்போது பெரும் சறுக்கல் ஏற்பட்டது. அந்த சறுக்கலில் இருந்து எப்படி மீண்டார்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"ஓட்டுமொத்த உலகமும் உன்னை சுத்தி நின்னு 'நீ தோத்துட்ட... நீ தோத்துட்ட'னு சொன்னாலும் நீயா ஒத்துக்குற வரைக்கும் உனக்குத் தோல்வியே கிடையாது" என சச்சின் நிரூபித்த போட்டி இது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடந்த பரபரப்பான 50 மற்றும் டி20 போட்டிகள் முடிவுக்கு வந்து டெஸ்ட் போட்டிகளை ஆட இரு அணிகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

ஆஸ்திரலியா தொடர் என்றாலே சாதனைகள், சர்ச்சைகள், வார்த்தைப் போர்கள் என பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது. இதுவரை நடைபெற்ற அனைத்து ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களிலும் இந்தியா ஒரு சில போட்டிகளை மட்டுமே வென்று வந்த நிலையில் 2018-ல் முதல்முறையாகத் தொடரை வென்று 72 ஆண்டுகால சாதனை படைத்தது.

சச்சின் டெண்டுல்கர்... ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எண்ணிலடங்கா சாதனைகளை நிகழ்த்தியிருப்பவர். பல சதங்களை சர்வசாதாரணமாக விளாசி தள்ளியிருப்பவர். ஆனால், அவருக்கு 2003/2004 டெஸ்ட் தொடரின்போது பெரும் சறுக்கல் ஏற்பட்டது. அந்தச் சறுக்கலில் இருந்து எவ்வாறு மீண்டார், அதன்பின் எவ்வுளவு பெரிய சாதனைகளை செய்தார் என்பதைப் பற்றிய ஃப்ளாஷ்பேக் பதிவுதான் இது!

வாழ்க்கைக்குத் தேவையான பாடங்கள் பலவும் கிரிக்கெட்டில் கிடைக்கும். அதனாலேயே பலருக்கு இந்த விளையாட்டை மிகவும் பிடிக்கும். சுயகட்டுப்பாடு எந்தளவுக்கு முக்கியம், அது நமக்கு எப்படி வெற்றியைத் தேடிக்கொடுக்கும் என்பதற்கு சச்சினின் இந்த இன்னிங்ஸ் ஒரு சிறந்த உதாரணம்.

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

2003 டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற இந்தியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் சச்சின் சரியாக விளையாடவில்லை. ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து பந்தை அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசி, சச்சினுக்கு கவர் டிரைவ் ஆசைக்காட்டி அவரது விக்கெட்டை தூக்கிக்கொண்டே இருந்தார்கள்.

சச்சின் ஒவ்வொரு முறையும் கவர்டிரைவ் அடிக்க ஆசைப்பட்டு கீப்பர் இல்லை ஸ்லிப் ஃபீல்டர் கையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகிக்கொண்டே இருந்தார். இந்த கவர்டிரைவ் வலையில் இருந்து சச்சினால் மீளவே முடியவில்லை. அவரது ஆவரேஜ் 20-க்கு கீழே போய்விட்டது. எல்லாபக்கமும் சச்சினின் பேட்டிங் குறித்து கிண்டல், கேலிகள்! அவுட் சைட் ஆஃப் ஸ்டெம்ப் லைனில் போட்டால் சச்சினை எளிதாக வீழ்த்திவிடலாம் என கவர்ஸ்டோரிக்கள் எழுதப்பட்டன.

கிரிக்கெட்டை கட்டி ஆண்டவர் தோற்றுவிடுவாரா அல்லது கேலிப்பேச்சைதான் நீடிக்க விட்டுவிடுவாரா? 'வேட்டையாடு விளையாடு' படத்தில் கமல் "கேட்டை மூட்றா" எனச் சொல்வாரே அதுபோல சிட்னியில் அந்த இன்னிங்ஸை ஆடினார் சச்சின். சச்சின் ஆடிய ஆட்டத்துக்கு எங்களிடம் பதிலே இல்லை என ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாகை மனம் திறந்து தோல்வியை ஒப்புக்கொள்ள வைத்த இன்னிங்ஸ் அது.

2003 டிசம்பரில் நடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு அரைசதம்கூட அடிக்காத சச்சினுக்கு 2004 புது வருடம் புது யுக்திகளுடன் பிறந்தது. "நீங்க கவர் டிரைவ்ல தான என் விக்கெட்டை தூக்குறிங்க, நான் இந்த மேட்ச்ல் கவர் டிரைவே ஆடபோறதில்லை. அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப்பில் போடும் ஒரு பந்தைக்கூட நான் தொடப்போவதில்லை... இப்ப எப்படி என் விக்கெட்டை எடுக்குறீங்க பார்த்துடலாம்?" என கங்கனம் கட்டிக்கொண்டு சிட்னியில் களமிறங்கினார் சச்சின்

இது தெரியாத ஸ்டீவ் வாக் வழக்கம்போல ஆஸ்திரேலியா பெளலர்களை, "அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப்பிலேயே போடுங்க... ஈசியா சச்சின் விக்கெட்டை தூக்கிடலாம்" எனச்சொல்ல சொல்ல அந்த நினைப்பில் பெரிய இடியை இறக்கினார் லிட்டில் மாஸ்டர்.

சச்சின் அந்தப் போட்டியை மிகவும் மன வைராக்கியத்தோடு விளையாட ஆரம்பித்தார். ஒரு பால் கூட அவுட்சைட் ஆப் ஸ்டம்ப் போட்ட பந்தை தொடவில்லை. எல்லாமே Well left தான். பெளலர்கள் கடுப்பாகி பாடிலைனில் அல்லது ஸ்ட்ரெய்ட் லைனில் போட்ட பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கு அனுப்பினார்.

#Sachin
#Sachin

ஸ்டீவ் வாக் என்ன செய்வது எனப் புரியாமல் பெளலர்களை மாற்றிக்கொண்டேயிருந்தார். ஒருகட்டத்தில மெயின் பெளலர்கள் நம்பி பிரயோஜனம் இல்லை என பார்ட் டைம் பெளலர்களை களத்தில் இறக்கினார் ஸ்டீவ் வாக். சச்சின் சில சமயம் பார்ட் டைம் பெளலர்களிடம் விக்கெட்டை பறிகொடுப்பதுண்டு. ஆனால், அன்று பார்ட் டைம் பெளலர்களுக்கெல்லாம் மரண அடி விழுந்தது.

''50 ரன்கள் அடித்துவிட்டார்... இனிமேல் கவர் டிரைவ் ஆடுவார்'', ''100 ரன்கள் அடித்துவிட்டார்... இனிமேல் கவர் டிரைவுக்குப் போவார்'', ''150 ரன்கள் அடித்துவிட்டார்... இனிமேல் கவர் டிரைவ்தான்'', ''டபுள் சென்சுரியும் அடித்துவிட்டார்... இனிமேல் கவர் டிரைவ் ஆடுவார்'' என ஸ்டீவ் வாக் ஒரு பக்கம் நினைக்க, கமென்டேட்டர்கள் தங்கள் ஆருடங்களைத் தொடர்ந்து சொல்ல, சச்சின் கவர் டிரைவ் பக்கமே போகவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

436 பந்துகள்.... அதாவது 72 ஒவர் பேட்டிங்... களத்தில் கிட்டத்தட்ட 10 மணி நேர ஆட்டம்... ஆனால், ஒரு கவர் டிரைவ் கூட இல்லை. மற்ற ஷாட்கள் மூலம் மட்டுமே 33 பவுண்டரிகள் அடித்து 241 ரன்களுடன் இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக வரலாறு படைத்தார் சச்சின்.

அவர் நாட் அவுட் பேட்ஸ்மேனாக பெவிலியன் திரும்பியபோது ரசிகர்கள் மட்டுமல்ல, ஆஸ்திரேலியா வீரர்களும், பயிற்சியாளர்களும் எழுந்து நின்று கைதட்டினார்கள். தன்னுடைய கடைசிப்போட்டியை வெற்றியோடு முடிக்கலாம் என நினைத்து ஏமாந்த ஸ்டீவ் வாகும், சச்சினின் ஆட்டத்துக்காக தொடர்ந்து கைதட்டிக் கொண்டேயிருந்தார்.

#Sachin
#Sachin

போட்டி முடிந்ததும் பத்திரிகையாளர்களிடம் ஸ்டீவ் வாக் பேசினார். "தனக்கு மிகவும் பிடித்த ஷாட்டான கவர் டிரைவை சச்சின் எப்படி ஓவர் நைட்டில் ஆடக்கூடாது என முடிவெடுத்து களத்தில் இறங்கினார் எனப் புரியவில்லை. அதை எப்படி வெற்றிகரமாக செயல்படுத்தினார் என்பதும் ஆச்சர்யமாக இருக்கிறது. மிகச்சிறந்த வீரர்கள் ஒரே இரவில் தங்களின் கேமையே மாற்றிவிடுவார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். சச்சினின் விக்கெட்டை எடுக்க நாங்கள் போட்ட திட்டங்கள் எதுவுமே பலன் அளிக்கவில்லை. அவரின் மனபலத்தைப் பார்த்து நாங்கள் பயந்துபோனோம். சச்சின் இன்று ஆடிய இன்னிங்ஸ் வரலாற்று சிறப்புமிக்கது. இப்படி ஒரு இன்னிங்ஸை உலகில் எந்த பேட்ஸ்மேனாலும் இனி ஆடமுடியாது" என்றார் ஸ்டீவ் வாக்!

சச்சின் ஒரு சகாப்தம்!

- இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் நினைவலைகள் தொடரும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு