Published:Updated:

`20 ஆண்டுகளில் சிறந்த தருணம்!' - விளையாட்டு உலகின் உயரிய விருதை சச்சினுக்குப் பெற்றுத் தந்த `2011'

சச்சின்
சச்சின்

தோனி சிக்ஸர் அடித்து முடித்து வைத்தபோது சச்சின் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார். இத்தனை ஆண்டுக்காலம் பல போட்டிகளில் இந்திய அணியை தன் தோள்களில் தூக்கிச் சுமந்த சச்சினை, இந்திய வீரர்கள் தங்களின் தோள்களில் சுமந்து மைதானத்தை வலம் வந்தனர்.

விளையாட்டு உலகில் உயரிய விருதாகக் கருதப்படும் விருதுகளில் லாரியஸ் உலக விளையாட்டு விருதுகளுக்கு முக்கிய இடம் இருக்கும். 1999-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதுகள், குறிப்பிட்ட விளையாட்டுக்கு என்று இல்லாமல், பொதுவாக அனைத்து உலக விளையாட்டுகளில் இருந்தும் சிறந்த வீரர்கள், வீராங்கனைகள், சிறந்த அணி உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படும்.

சச்சின்
சச்சின்

இந்தமுறை லாரியஸ் விருது நிகழ்வு ஜெர்மனியின் பெர்லின் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், விளையாட்டு உலகின் சிறந்த தருணத்துக்கான விருது, இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பெற்றிருக்கிறார்.

6-வது முறையாக சச்சின் 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் களமிறங்கினார். அதுவரையிலும், கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை சச்சின் செய்திருந்தாலும், உலகக் கோப்பை என்பது சச்சினுக்கு எட்டாத கனியாகவே இருந்து வந்தது.

2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணியின் அப்போதைய கேப்டன் தோனி சிக்ஸர் அடித்து முடித்து வைத்தபோது சச்சின் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார். இத்தனை ஆண்டுக்காலம் பல போட்டிகளில் இந்திய அணியை தன் தோள்களில் தூக்கிச் சுமந்த சச்சினை, இந்திய வீரர்கள் தங்களின் தோள்களில் சுமந்து மைதானத்தை வலம் வந்தனர். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கிய தருணமாக, நெகிழ்ச்சி தருணமாக அது பார்க்கப்பட்டது. தற்போது அந்த ஒரு தருணத்தை தான் 2000-20 வரையிலான 20 ஆண்டு காலகட்டத்தில் விளையாட்டு உலகின் மிகச் சிறந்த தருணமாகத் தேர்தெடுத்து அறிவித்துள்ளனர். நாமிநேஷனில் இருந்த 19 மொமென்ட்களை வீழ்த்தி, மதிப்பு மிக்க இந்த விருதை சச்சினுக்குப் பெற்றுத் தந்துள்ளது.

Laureus Tweet
Laureus Tweet

சச்சினுக்கு இந்த விருதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் வழங்கினார். விருதைப் பெற்ற சச்சின் பேசுகையில், ``உலகக் கோப்பையை வென்றது ஒரு அற்புதமான தருணம். வார்த்தைகளில் விவரிக்க முடியாத மகிழ்ச்சி அது. மிக அரிதாகச் சில வெற்றிகளை முழு நாடும் கொண்டாடும். அப்படியான தருணம் அது. இப்போது நான் நினைத்துப் பார்த்தாலும், அது என்னுள்ளே இருக்கும் அற்புத தருணம்.

எனது கிரிக்கெட் பயணம் 1983-ம் ஆண்டு தொடங்கியது. அப்போது எனக்கு 10 வயது. இந்தியா உலகக் கோப்பையை முதல் முறையாகக் கைப்பற்றி இருந்தது. அதன் மதிப்பு எனக்கு அப்போது தெரியாது. அனைவரும் கொண்டாடினார்கள். நானும் கொண்டாடினேன். ஆனால், நாடே கொண்டாடுகிறது என்றால், ஏதோ ஸ்பெஷலாக நடந்திருக்கிறது. நாமும் எதிர்காலத்தில் அதை அனுபவிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன். அப்படித்தான் எனது கிரிக்கெட் பயணம் தொடங்கியது. 22 வருடங்களாகத் துரத்தி, பின்னர் அது எனது கைகளில் கிடைத்தது பெருமையான விஷயம். ஆனால், இறுதிவரையில் நான் நம்பிக்கையை இழக்கவில்லை" என்றார்.

மேலும் தனது 19 வயதில் நெல்சன் மண்டேலாவை சந்தித்தது குறித்தும் அவர் மேடையில் பகிர்ந்தார். ``அவர் அளித்த பல்வேறு செய்திகளில் எனக்கு முக்கியமானது என்றால், `விளையாட்டுக்கு அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தி இருக்கிறது' என்று சொன்னது. அதை என்றும் மறக்க மாட்டேன்" என்றார். தொடர்ந்து, ``இன்று இந்த அறையில் பல விளையாட்டு வீரர்களுடன் இருக்கிறேன். நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான விளையாட்டைத் தேர்ந்தெடுத்து, அதில் உங்களின் கனவை துரத்துகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது நன்றி. இந்த விருது நம் அனைவருக்குமானது. எனக்கு மட்டுமானது கிடையாது" என்றார்.

Laureus Tweet
Laureus Tweet

2019-ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான லாரியஸ் விருது கால்பந்து வீரர் மெஸ்ஸி மற்றும் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரரான லீவிஸ் ஹேமில்டனுக்கும் வழங்கப்பட்டது. அமெரிக்காவில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான சைமன் பிலெஸ் சிறந்த வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த அணிக்கான விருதை தென்னாப்பிரிக்கா தேசிய ரக்பி அணி வென்றிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு