Published:Updated:

சச்சினுக்கு `ஹால் ஆஃப் ஃபேம்’ - கௌரவப்படுத்திய ஐசிசி!

கலிலுல்லா.ச

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு, ஐசிசி `ஹால் ஆஃப் ஃபேம்’ என்ற விருதை வழங்கி கௌரவத்தை வழங்கியுள்ளது.

சச்சின்
சச்சின் ( ICC )

`காட் ஆஃப் கிரிக்கெட்’ என்று கிரிக்கெட் உலகத்தினரால் அன்போடு அழைக்கப்படுபவர், சச்சின். ஏராளமான சாதனைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளவர். 90'ஸ் கிட்ஸ்களின் ஆதர்ஷ நாயகன். கிரிக்கெட் உலக வரலாற்றில் 100 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்தவர் என இவரது சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

சச்சின்
சச்சின்

ஓய்வுக்குப் பிறகு சச்சின், இந்திய அணியில் வீரர்கள் தேர்வு மற்றும் வீரர்களின் செயல்பாடுகள்குறித்து தனது கருத்துகளைத் தெரிவிப்பதும், ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு ஆலோசகராகவும் செயல்பட்டுவருகிறார். பிஷன் சிங் பேடி, காவஸ்கர், கபில்தேவ், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் ஆகியோருக்கு ஏற்கெனவே இந்தியா சார்பில் ஹால் ஆஃப் ஃபேம் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது, சச்சின் டெண்டுல்கரும் இணைந்துள்ளார். ஆறாவது வீரராக `ஹால் ஆஃப் ஃபேம்’ கௌரவத்தைப் பெறுகிறார். சச்சின் உடன் இணைந்து தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.