Published:Updated:

`ஹர்பஜன் ஏன் அப்படி பண்ணார்னே புரியல...!' - சச்சின் பகிர்ந்த `வடிவேலு' மொமன்ட்

நான் முதல் முதலாக மொகாலி சென்றிருந்தேன். 1996-ம் ஆண்டு இருக்கும் என நினைக்கிறேன். அங்கிருந்த உள்ளூர்க்காரர்கள் பலரும் ஒரு இளம் வீரர் வந்திருக்கிறார். அவர் மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார் என்று தெரிவித்தனர்.

சச்சின் - வடிவேலு
சச்சின் - வடிவேலு

இந்திய கிரிக்கெட்டில் நேற்று மிக முக்கியமான, வரலாற்று சிறப்புமிக்க நாள். இந்திய அணி முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் ஆடியது. பிசிசிஐ தலைவராக கங்குலி பதவியேற்ற பின்னர் இந்த பகலிரவு ஆட்டத்துக்கான முயற்சிகளை மேற்கொண்டு அதை நடத்தியும் காட்டிவிட்டார்.

இஷாந்த் சர்மா
இஷாந்த் சர்மா

டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பல முன்னணி வீரர்கள் இந்தச் சிறப்பு மிக்க போட்டியை நேரில் கண்டுகளித்தனர். வங்கதேச பிரதமர் மற்றும் மேற்கு வங்க முதல்வர் ஆகியோர் இணைந்து இந்தப் போட்டியைத் தொடங்கிவைத்தனர்.

போட்டி தொடங்குவதற்கு முன்னும் போட்டியின் இடைவேளையின்போதும் பல முன்னணி வீரர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்தனர். பல சாம்பியன் வீரர்களின் ரீ-யூனியனாக அமைந்தது பிங்க் பால் டெஸ்ட் பேட்டி. இந்த உரையாடலின்போது சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் உடனான தனது முதலாவது சந்திப்பு குறித்த சுவாரஸ்ய தகவலைப் பகிர்ந்தார்.

ஈடன் கார்டனில் முன்னணி வீரர்கள்
ஈடன் கார்டனில் முன்னணி வீரர்கள்

``நான் முதல் முதலாக மொகாலி சென்றிருந்தேன். 1996-ம் ஆண்டு இருக்கும் என நினைக்கிறேன். அங்கிருந்த உள்ளூர்க்காரர்கள் பலரும் ஒரு இளம் வீரர் வந்திருக்கிறார். அவர் மிகச் சிறப்பாகப் பந்து வீசி வருகிறார் என்று தெரிவித்தனர். மேலும், ஆஃப் ஸ்பின் மற்றும் தூஸ்ரா வீசுவதாகவும் என்னிடம் தெரிவித்தனர். நான் அவரை எனக்கு வலைப் பயிற்சியில் பந்து வீச அழைத்து வருமாறு சொன்னேன்.

`பிங்க் பால்’ டெஸ்டில் மிரட்டிய இஷாந்த் புதிய சாதனை! - முதல்நாளிலேயே இந்திய அணி முன்னிலை

எனக்கு அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அவர் சிறப்பாகப் பந்து வீசினால், அவரை ஊக்கப்படுத்த வேண்டும் என நினைத்து அழைத்து வரச் சொன்னேன். அப்படிதான் வலைப் பயிற்சியில் ஹர்பஜன் எனக்கு முதலில் பந்து வீசினார். அப்படி பந்துவீசும்போது அடிக்கடி என்னை நெருங்கிவந்து `என்ன?” என்று கேட்பார். நான் அவரிடம், `என்ன.... போய் பந்துவீசு என்பேன். இது அன்று பலமுறை நடந்தது. ஹர்பஜன் ஏன் என்னிடம் அப்படிக் கேட்டார் என எனக்கு புரியவே இல்லை.

லட்சுமன், ஹர்பஜன், கும்ளே, சச்சின்
லட்சுமன், ஹர்பஜன், கும்ளே, சச்சின்

அதன்பின்னர் ஹர்பஜன் அணியில் இடம்பிடித்த பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்துகொண்டு நன்றாக பேசிக்கொண்டோம். அப்போது ஒருநாள் ஹர்பஜன் என்னிடம் வந்து, ``உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்.. கேட்கலாமா?” என்றார். கேளுங்கள் என்றேன். அப்போது ஹர்பஜன், `வலைப்பயிற்சியில் உங்களுக்கு முதல் முதலாக பந்துவீசும்போது எதற்காக என்னை மீண்டும் மீண்டும் அழைத்தீர்கள்.. ஆனால், அழைத்து எதுவும் சொல்லாமல் மீண்டும் போய் பந்துவீசு என்றீர்கள்.. ஏன்’ எனக் கேட்டார்.

எனக்கு எதுவும் புரியவில்லை. நான் எப்போது உன்னை அழைத்தேன் என பதில் கேள்வி கேட்டேன். பின்னர்தான் விஷயம் புரிந்தது. நான், எனது ஹெல்மெட்டை அட்ஜெஸ்ட் செய்வதை அழைப்பதாக ஹர்பஜன் தவறாகப் புரிந்துகொண்டார் என்று” அன்று நடந்ததை விரிவாக தெரிவித்தார் சச்சின்.

வடிவேலு
வடிவேலு

சச்சின் ஹெல்மெட் தனது தோள் மூலம் அட்ஜெஸ்ட் செய்யும் காட்சிகள் ஒவ்வொரு சச்சின் ரசிகருக்கும் தெரிந்திருக்கும். ஆரம்பகாலத்தில் இதை அறியாத ஹர்பஜன் சச்சின் தன்னை அழைப்பதாக நினைத்து அவரிடம் சென்றுள்ளார். இந்த நிகழ்வு தொடர்பாக ஹர்பஜன், `அது ஒரு ஃபேன் பாய் மொமென்ட்' என நெகிழ்கிறார்.

`ஏய்’ படத்தின் போஸ்ட் ஆபீஸ் காட்சியில் நமீதாவிடம் சரத்குமார் காதலைச் சொல்லும்போது `கமான் கமான்’ என வடிவேலு ஊக்கப்படுத்துவார். தன்னை அழைப்பதாக நினைக்கும் சரத் குமார், காதலைச் சொல்லாமல் வந்துவிடுவார். அதுபோன்று ஆகிவிட்டது சச்சினின் நிலை!