Published:Updated:

டக் அவுட் முதல் குட்பை வரை... சச்சினின் பேட்டிங் கிராஃப் எப்படி இருந்தது?! #DataStory

Sachin Birthday
Sachin Birthday ( Vikatan )

5.5 ஆடி உயரம், குழந்தை முகம், சுருட்டை முடி என்பதுதான் சச்சினின் அடையாளம். பிற்காலத்தில் இவை பேட்டிங்கின் அடையாளமாக மாறிப்போனது வரலாறு!

`மாடர்ன் கிரிக்கெட்டின் கடவுள்!'
சச்சின் டெண்டுல்கர் பிறந்த தினம் இன்று!

கிரிக்கெட் விளையாடாத, கிரிக்கெட்டே தெரியாத நாடுகளுக்குச் சென்று கிரிக்கெட்டை பற்றிப் பேசினால், அந்த நாட்டவர்களுக்குத் தெரிந்த ஒரே பெயர், சச்சின் டெண்டுல்கர் என்பதாக மட்டுமே இருக்கும். கிரிக்கெட் விளையாடி பெருமைபெற்றவர்கள் பலர். ஆனால், தன் சிறப்பான ஆட்டத்தால் கிரிக்கெட்டுக்கே பெருமை சேர்த்தவர் சச்சின் மட்டுமே.

சச்சின்
சச்சின்
Wisden

ஆரம்ப காலத்தில், 5.5 ஆடி உயரம், குழந்தை முகம், சுருட்டை முடி என்பதுதான் சச்சினின் அடையாளம். பிற்காலத்தில் இவை பேட்டிங்கின் அடையாளமாக மாறிப்போனது வரலாறு. 'டான் ஆஃப் கிரிக்கெட்' சர் டான் பிராட்மேனே மெச்சும் அளவிற்கு பேட்டிங் திறமை கொண்டவர் சச்சின் டெண்டுல்கர். சச்சினின் ஸ்ட்ரைட் டிரைவிற்கு மயங்காதவர்களே கிடையாது என்று சொன்னால் அது மிகையாகாது.

கிரிக்கெட்டில் இரண்டு வகை பேட்ஸ்மென்கள் உண்டு. முதலாவது சச்சின்! அடுத்தது மற்ற பேட்ஸ்மென்கள்.
ஆன்டி ப்ளவர்

சச்சினின் பேட்டிங், ரசிகர்கள் மத்தியில் ஏன் இவ்வளவு பிரபலம்? ரசிகர்களைத் தாண்டி கிரிக்கெட் பிரபலங்களே சச்சினின் பேட்டிங்கை வியந்து பாராட்டுவதற்கான காரணம் என்ன? என்பது பற்றித்தான் புள்ளிவிவரங்கள் கொண்டு இங்கே அலசப்போகிறோம்.

ஒருநாள் போட்டிகள்!

ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பாகவே நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தார் சச்சின். அதில் கிடைத்த அனுபவங்கள், முதல் ஒருநாள் போட்டியில் பயமில்லாமல் களமிறங்க சச்சினுக்கு சிறு தைரியம் கொடுத்தது. முதல் சர்வதேச ஒருநாள் போட்டியை சச்சின் விளையாடுவதற்கு முன்பாக நடந்த ஒரு சுவாரஸ்யத்தை முதலில் பார்த்துவிடுவோம்.

Sachin
Sachin
Flickr

1989-ம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாட இருந்த முதல் ஒருநாள் போட்டி, போதிய வெளிச்சமின்மை காரணமாக ரத்து செய்யப்பட்டது. ஆனால், போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்துவிட்ட காரணத்தால், கண்காட்சிப் போட்டி ஒன்று நடத்தப்பட்டது. 20 ஓவர் போட்டியாக நடைபெற்ற அந்தக் கண்காட்சிப் போட்டியில், முஷ்தக் அகமது வீசிய ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை அடித்தார் சச்சின். இந்த இரண்டு சிக்ஸர்களுக்குப் பின்னர், பாகிஸ்தான் அணியின் சீனியர் பெளலர் அப்துல் காதர், சச்சினிடம் பின் வருமாறு கூறினார்...

ஏன் சின்ன பையன் ஓவரில் இப்படி அடிக்கிறாய்? முடிந்தால் என் ஓவரில் அடி.
அப்துல் காதர்

அப்துல் காதரின் இந்த சீண்டலுக்கு வாய்திறக்காத சச்சின், தன் பேட்டால் பதில் சொல்லி காதரின் வாயை அடைத்தார். பாகிஸ்தானின் சீனியர் ஸ்பின்னர் என்றுகூட பார்க்காமல், காதர் வீசிய ஆறு பந்துகளில் 5 பந்துகளை வெளுத்துவிட்டார் சச்சின். அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 28 ரன்கள்.

அப்துல் காதர் vs சச்சின் !
6, 0, 4, 6, 6, 6

அந்தப் போட்டியில், 18 பந்துகளில் 53 ரன்களைக் குவித்து அங்கிருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் சச்சின். இது வெறும் கண்காட்சி போட்டி என்பதால் சச்சினின் இந்த அதிரடி ஆட்டம் அந்த மைதானத்திலிருந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. பிற்காலத்தில், சச்சின் உட்பட அந்தப் போட்டியில் விளையாடிய பலரும் இந்த நிகழ்வுகள் பற்றி பேட்டி அளித்த காரணத்தால் அனைவருக்கும் தெரியவந்தது. இந்த பட்டாஸான இன்னிங்ஸை ஆடியபோது சச்சினின் வயது 16 மட்டுமே!

அதே தொடரின் 2-வது ஒருநாள் போட்டியிலும் வெளிச்சமின்மை ஏற்பட்டதால், 16 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. அந்தப் போட்டியில் அதிரடி காட்டுவார் என்று நினைத்திருந்த இந்திய வீரர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தார் சச்சின். தான் சந்தித்த 2-வது பந்தில் அவுட் ஆனார். வாசிம் அக்ரம் வீசிய பந்தை ஆன் சைடில் அடிக்க நினைத்தார் சச்சின். ஆனால், பந்து டாப் எட்ஜ் ஆகி மிட் ஆஃபிலிருந்த வக்கார் யூனிஸிடம் கேட்ச் ஆனது.

சச்சின்
சச்சின்

முதல் போட்டியில் டக் அவுட்டாகி வெளியேறும்போது, குழந்தை முகம், டீன் ஏஜ் பருவம் என சின்னப்பையன் உருவம் கொண்ட இந்த சச்சின்தான் பிற்காலத்தில் சர்வதேச கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டராக மாறுவார் என்று அந்தப் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர்கூட நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால், எவரும் நினைத்துப்பார்க்காத விஷயங்களை கிரிக்கெட்டில் நிகழ்த்திக் காட்டினார் சச்சின்.

ஆட்ட நாயகன்!
1990-ம் ஆண்டு, இலங்கைக்கு எதிரான போட்டியில் தன் முதல் ஒருநாள் அரை சதத்தைப் பதிவுசெய்தார் சச்சின். 41 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 53 ரன்களைக் குவித்து ஒருநாள் போட்டிகளில் முதல் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

ஒருநாள் போட்டிகளில் 463 போட்டிகளை எதிர் கொண்ட சச்சின், 18,426 ரன்களைக் குவித்துள்ளார். முதன்முதலாக ஒருநாள் போட்டிகளில் 200 ரன்களைக் கடந்தது சச்சின் டெண்டுல்கர்தான். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்தச் சாதனையைச் செய்து முடித்தார். இவருக்குப் பின்னர் 5 பேட்ஸ்மென்கள் இந்தச் சாதனையைச் செய்திருந்தாலும், விதை போட்டவர் லிட்டில் மாஸ்டர்தான்!

Sachin Odi stats
Sachin Odi stats
Vikatan Infographics

சச்சினின் ஒருநாள் பயணத்தை மூன்று கட்டங்களாகப் பிரித்துக் கொள்ளலாம். முதல் கட்டமாக 1989 முதல் 1993 வரை சச்சின் விளையாடிய ஒருநாள் போட்டிகளை எடுத்துக்கொள்ளலாம். இந்த நான்காண்டு காலம்தான் சச்சினின் ஒருநாள் பயணத்தில் மோசமான காலகட்டம். இந்தக் காலகட்டத்தில் சச்சின் 5 அல்லது 6 டவுண் இறங்கிக்கொண்டிருந்தார். அதன் காரணமாக, சச்சினுக்கு பேட் செய்ய மிகக் குறைந்த ஓவர்களே கிடைத்தன. அந்த காலகட்டத்தில் சச்சினின் சராசரி 31.1 என்பதாகத்தான் இருந்தது. 1994-ம் ஆண்டு, இந்திய அணியின் ஓப்பனர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கு கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டது. இதனால் இந்திய அணியின் அன்றைய கேப்டன் அசாருதீனும் கோச் அஜித் வடேகரும் சச்சினை ஓப்பனிங் ஆட வைக்க முடிவுசெய்தனர்.

இந்த ஓப்பனிங் வாய்ப்பைப் பெறுவதற்கு சச்சின் எந்த அளவிற்குக் கெஞ்சினார் என்பதையும் கெஞ்சிப் பெற்ற வாய்ப்பை எப்படிப் பயன்படுத்தினார் என்பதையும் கீழே இருக்கும் லிங்க்கில் படித்து விடுங்கள்!
49 பந்துகள்... 82 ரன்கள்... ஓடி எடுத்தது 10 ரன்கள் மட்டுமே... சச்சின் ஓப்பனரான கதை!
Sachin ODI
Sachin ODI
Vikatan Infographics

சச்சின் ஓப்பனிங் ஆட ஆரம்பித்த காலகட்டத்தை இரண்டாம் கட்டமாக எடுத்துக்கொள்ளலாம். 1994 முதல் 2003 வரை சச்சின் விளையாடிய ஒருநாள் போட்டிகள்தான் அவருக்கு 'காட் ஆஃப் கிரிக்கெட்' என்ற பெயரைப் பெற்றுத்தந்தது. இந்தக் காலகட்டத்தில் கன்சிஸ்டன்டாக மட்டுமல்ல அதிரடியாகவும் விளையாடினார் சச்சின். ஓப்பனிங் பேட்ஸ்மென்னாக 48.5 என்கிற சராசரியோடு 1994-2003 காலகட்டத்தில் மட்டும் 11,006 ரன்களைக் குவித்திருக்கிறார் சச்சின்.

அடுத்ததாக மூன்றாம் கட்டம். 2004 முதல் 2012 வரையிலான இந்த காலகட்டத்தில் 44.2 என்கிற சராசரியோடு 5,741 ரன்கள் குவித்துள்ளார். இந்த காலகட்டத்தின் தொடக்கம், அதாவது 2004, 2005-ம் ஆண்டுகளில், சச்சினுக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டது. காயங்களிலிருந்து மீண்டு வந்த பின்னும் சச்சின் கன்சிஸ்டன்டாகவே விளையாடினார். ஆனால், பழைய அதிரடி ஆட்டங்கள் குறைந்துபோயிருந்தன.

ஓப்பனிங் பேட்ஸ்மென்னாக மட்டும் சச்சின் அடித்த ரன்கள் 15,310
Sachin Position Batting Wise Runs
Sachin Position Batting Wise Runs
Vikatan Infographics

இந்திய மண்ணில் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், மலேசியா சிங்கப்பூர் எனப் பல நாடுகளில் உள்ள மைதானங்களில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளிலும் திறம்பட ஆடி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.

Sachin ODI Stats
Sachin ODI Stats
Vikatan Infographics
சச்சின் இந்திய மண்ணில் 160 இன்னிங்ஸ்களில் ஆடி 6,976 ரன்களும் வெளிநாட்டு மண்ணில் 292 இன்னிங்ஸ்களில் விளையாடி 11,450 ரன்களும் குவித்துள்ளார்!

சச்சினின் ஃபிட்னஸுக்கு எடுத்துக்காட்டாக, அவர் 24 ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடியிருக்கிறார் என்ற ஒற்றைக் காரணமே போதுமானது. அந்தக் காரணத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இன்னொரு புள்ளிவிவரமும் இருக்கிறது. பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களின் மூலம் 9,234 ரன்களைக் குவித்திருக்கிறார். அதே அளவிலான ரன்களை ஓடி எடுத்தும் சேர்த்திருக்கிறார். 9,192 முறை அந்த 22 அடி பிட்சில் ஓடி ரன் சேர்த்த புள்ளிவிவரம் அவர் ஃபிட்னஸைக் காட்டுகிறது.

Sachin ODI
Sachin ODI
Vikatan Infographics

சச்சினின் கிராஃபை பற்றிப் பேசும் போது முக்கியமாகப் பேசப்பட வேண்டிய விஷயம், Nervous 90s! 27 முறை 90ஸில் அவுட் ஆகியிருக்கிறார் சச்சின். இதில் 3 முறை 99 ரன்களில் ஆட்டமிழந்திருக்கிறார் சச்சின். இந்த 27 முறைகளில் 20 முறையாவது சதம் கடந்திருந்தால், சச்சின் கணக்கில் சர்வதேச போட்டிகளில் 120 சதங்கள் என்றாகியிருக்கும். எந்த ஒரு வீரரும் நெருங்கக் கூட முடியாத ஒரு சாதனையாக இருந்திருக்கும்!

சச்சின் சாதனையை கோலி முறியடிக்கலாம்; ஆனால், ரோகித் சாதனையை? - கிரிக்கெட்டின் முரட்டு சாதனைகள்!
Sachin Out In 90s
Sachin Out In 90s
Vikatan Infographics

18 மார்ச், 2012 அன்று தாக்காவில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டிதான் சச்சினின் கடைசி ஒருநாள் போட்டி. இந்தப் போட்டியில் சச்சின், 48 பந்துகளில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில்தான் கோலி தனது அதிகபட்ச ஸ்கோரான 183 ரன்களைக் குவித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்து சச்சினுக்கு வெற்றி மாலை அணிவித்தார்.

சச்சின் - கோலி
சச்சின் - கோலி
கிங் கோலி... டேட்டாக்கள் சொல்வது என்ன?! #HBDKohli #Vikataninfographics

மொத்தமாக 6 உலகக் கோப்பைகளில் சச்சின் ஆடியிருந்தாலும், அவர் கடைசியாக ஆடிய 2011 உலகக் கோப்பையில்தான் சச்சினின் கனவு நிறைவேறியது. தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றி சச்சினுக்குப் பரிசாக்கியது. ஒருநாள் போட்டிகளில் சச்சினின் ஆரம்பக் காலகட்டம் அவ்வளவு சிறப்பானதாக இல்லையென்றாலும் கடைசித் தருணங்கள் அற்புதமானதாகவே அமைந்தன.

சச்சின் - தோனி
சச்சின் - தோனி
தோனி, யுவராஜ், கோலி உள்ளிட்ட இளம் வீரர்கள், சச்சினைப் பார்த்து கிரிக்கெட் கற்றுக் கொண்டுதான் இந்திய அணிக்கு விளையாட வந்தனர். அந்த இளம் வீரர் படைதான் ஒருநாள் போட்டிகளில், சச்சினின் கடைசி தருணங்கள் சிறப்பாக அமைய வழிவகுத்தனர் என்பது ஒரு எமோஷ்னல் விளையாட்டுச் செய்தி!

டெஸ்ட் போட்டிகள்!

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடி சாதனை புரிய வேண்டும் என்ற கனவோடு சச்சின், முதன்முதலாகப் பிட்சில் அடியெடுத்து வைத்தது டெஸ்ட் போட்டியில்தான். 15 நவம்பர், 1989 அன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக கராச்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில்தான் முதன்முதலாகக் களம் கண்டார் சச்சின். அந்த போட்டியில் பேட்டைப் பிடிப்பதற்கு முன்பாகவே பந்து வீசியிருந்தார் சச்சின். முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி பேட் செய்தது. நீண்ட நேரமாக ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த சச்சினுக்கு பெளலிங் போட ஒரு வாய்ப்புக் கொடுத்தார் அப்போதைய இந்திய கேப்டன் கிரிஸ் ஶ்ரீகாந்த். சச்சின் போட்ட முதல் ஓவரிலேயே 10 ரன்கள் கொடுத்துவிட்டதால் அதன் பின் அவருக்கு ஓவர் வழங்கப்படவில்லை.

அந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் பேட்டிங் செய்ய சச்சினுக்கு வாய்ப்பு கிடைத்தது. முதல் இன்னிங்ஸில் மட்டுமே பேட் செய்த சச்சின், 2 பவுண்டரிகளுடன் 24 பந்துகளுக்கு 15 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அந்தப் போட்டி டிராவில் முடிந்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான அதே தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார் சச்சின். 254 நிமிடங்கள் களத்திலிருந்த சச்சின் 172 பந்துகளில் 59 ரன்கள் அடித்து, ஒரு ப்ராப்பர் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடியிருந்தார்.

1990-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தன் முதல் சதத்தைப் பதிவு செய்தார் சச்சின். முதல் இன்னிங்ஸில் 68 ரன்களில் ஆட்டமிழந்தார் சச்சின். இரண்டாவது இன்னிங்ஸில் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்திய அணியை தன் சதத்தின் மூலம் தனியொருவனாக மீட்டெடுத்தார் சச்சின். 189 பந்துகளைச் சந்தித்தவர் 119 ரன்களோடு கடைசி வரை ஆட்டமிழக்காமலிருந்தார். சச்சினின் இந்த இன்னிங்ஸால் போட்டி டிராவில் முடிந்தது.

முதல் ஆட்ட நாயகன் விருது!
முதல் இன்னிங்ஸில் 68 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 119 ரன்களையும் சேர்த்து சர்வதேச போட்டிகளில், தன் முதல் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார் சச்சின்.

டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணிக்காக 329 இன்னிங்ஸ்களில் பேட் செய்துள்ள சச்சின், 15,921 ரன்களைச் சேர்த்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளைப் போலவே டெஸ்ட் போட்டிகளிலும் அதிக ரன்கள், அதிக சதங்கள் (51), அதிக அரைசதங்கள் (68) என அனைத்து பேட்டிங் ரெக்கார்டுகளும் சச்சின் வசமே! 2004-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராகத் தனது அதிகபட்ச ஸ்கோரான 248* ரன்களைக் குவித்தார் சச்சின். இந்திய அணியின் அனைத்து வீரர்களும் அவுட் ஆன காரணத்தால் 2 ரன்களில் 250 ரன்கள் என்ற சாதனையை மிஸ் செய்தார் சச்சின்.

Sachin test stats
Sachin test stats
Vikatan Infographics

இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 52.67 என்கிற சராசரியோடு மொத்தம் 7,216 ரன்கள் சேர்த்திருக்கிறார் சச்சின். அதே சமயத்தில் வெளிநாட்டு மண்ணில் சச்சினின் சராசரி 54.75. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய மண்ணில் 1809 ரன்களும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 1575 ரன்களும் தென்னாப்பிரிக்க மண்ணில் 1161 ரன்களும் குவித்திருக்கிறார் சச்சின்.

Sachin Test
Sachin Test
Vikatan Infographics

இந்திய வீரர்கள் சுழல் பந்து வீச்சாளர்களை மட்டுமே சமாளிப்பார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்த காலகட்டத்திலேயே வேகப்பந்து வீச்சிற்குச் சாதகமான ஆஸ்திலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து பிட்ச்களிலும் அதிகப்படியான ரன்களைச் சேர்த்து விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தவர் டெண்டுல்கர்.

Sachin test infographics
Sachin test infographics
Vikatan Infographics
டெஸ்ட் போட்டிகளில், மொத்தம் 6 இரட்டைச் சதங்களைப் பதிவு செய்துள்ளார் சச்சின். அதில் 3 இரட்டைச் சதங்கள் இந்திய மண்ணிலும் 3 இரட்டை சதங்கள் அந்நிய மண்ணிலும் அடிக்கப்பட்டவை.

சச்சினுக்கு டெஸ்ட் போட்டிகளில், 2010-ம் ஆண்டு மிக முக்கியமான ஆண்டு. அந்த ஆண்டில் மொத்தம் 7 சதங்கள் உள்பட 1562 ரன்களைக் குவித்திருந்தார் சச்சின். டெஸ்ட் போட்டிகளில், 6 முறை 'ஓராண்டில் 1000 ரன்கள்' என்ற சாதனையைச் செய்திருக்கிறார் சச்சின். சச்சினைத் தவிர வேறு எந்த வீரரும் டெஸ்ட் போட்டிகளில் 5 முறைக்கு மேல் இந்தச் சாதனையைச் செய்ததில்லை. இந்த 6 ஆண்டுகள்தான் சச்சினின் டெஸ்ட் கிராஃபில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த 6 ஆண்டுகளிலும் தான் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில், இந்திய மண்ணிலும் வெளிநாட்டு மண்ணிலும் மிகச் சிறந்த சராசரியோடு ரன்களைக் குவித்திருக்கிறார் சச்சின்.

Sachin test
Sachin test
Vikatan Infographics
2013-ம் ஆண்டு, நவம்பர் 16-ம் தேதி. முதல் போட்டியில் பேட்டிங் செய்த அதே தேதியில், வான்கடே மைதானத்தில் தனது கடைசி இன்னிங்ஸை ஆடினார் சச்சின்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அந்த டெஸ்ட் போட்டியில் 74 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார் சச்சின். அன்று அரைசதம் அடித்தபோது கையை உயர்த்தினார். மீண்டும் சதம் அடித்துவிட்டு ஹெல்மெட்டை கழற்றி கையை வான் நோக்கி உயர்த்துவார் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, சச்சின் 74 ரன்களில் ஆட்டமிழந்தது கண்ணீரை வரவழைத்தது. டியோநரேன் பந்தில் டேரன் சமியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் சச்சின். விக்கெட் எடுத்ததைத் துள்ளிக் குதித்துக் கொண்டாடுவார் டியோநரேன். ஆனால், கேட்சை பிடித்த சமியோ மிகப் பெரிய பாவம் செய்துவிட்டதாகக் கலங்கிப் போயிருப்பார். விளையாட்டை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் எமோஷ்னலான தருணம் அது.

சச்சினின் கிரிக்கெட் பயணம் பற்றி ஐசிசி வெளியிட்ட வீடியோவை கீழே காணலாம்...

போட்டி முடிந்த பின்பு அரை மணிநேரம் ரசிகர்கள் மத்தியில் பேசினார் சச்சின். அதில் கடைசியாக சச்சின் பேசியவை...

எனக்காக விரதம் இருப்பவர்கள், எனக்காகக் கடவுளிடம் வேண்டிக் கொள்பவர்கள் என நிறையப் பேரை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களால்தான் நான் இன்று வாழும் வாழ்க்கையே சாத்தியமானது. என் மனதின் ஆழத்திலிருந்து அவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லிக் கொள்கிறேன். என் இறுதி மூச்சு அடங்கும் வரை `சச்சின், சச்சின்' என்று நீங்கள் கொடுக்கும் உற்சாகக் குரல் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். நான் எதையாவது சொல்ல மறந்திருந்தால், அதற்கான காரணம் என்ன என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். எமோஷ்னலாக உள்ளது அதுதான் காரணம். குட் பை.
சச்சின் டெண்டுல்கர்

வேறெந்த விளையாட்டு வீரரின் ஃபேர்வல் ஸ்பீச்சும் இவ்வளவு எமோஷ்னலாக இருந்ததில்லை. சச்சின், 'குட் பை' என்று சொன்ன அடுத்த நிமிடமே சச்சினின் ரசிகர் அல்லாதவர்கள்கூட கண் கலங்கியதைக் காண முடிந்தது. 22 அடி பிட்சின் நடுவே சச்சினுக்கு இந்திய வீரர்கள் அணி வகுத்துக் கொடுத்த உபசரிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு என்றைக்குமே விளையாட்டு உலகில் ஒரு முக்கிய இடமுண்டு.

Gaurd Of Honour For Sachin
Gaurd Of Honour For Sachin

கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு முன்பாகவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை நிறுத்திவிட்டார் சச்சின். ஆனால், இன்றும் கிரிக்கெட்டின் அடையாளமாகக் கொண்டாடப்படுவர் சச்சின் மட்டுமே. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சச்சினின் சாதனைகளே முறியடிக்கப்பட்டாலும் கிரிக்கெட் இருக்கும் வரை சச்சின்தான் 'மார்டன் கிரிக்கெட்டின் கடவுள்' என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

மாஸ்டர் பிளாஸ்டருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
CSK-வின் இந்தச் சாதனையை யாரும் செய்ததில்லை, செய்யவும் முடியாது! #UnbreakableIPLRecords
அடுத்த கட்டுரைக்கு