Published:Updated:

"அவருக்கு இன்னும் வயசே ஆகல!" - மீண்டும் மிரட்டிய சச்சின் - லாரா... ஃபைனலில் இந்தியா லெஜண்ட்ஸ்!

சச்சின் - லாரா
சச்சின் - லாரா

சச்சினின் இந்த இன்னிங்ஸின் ஹைலைட்டான விஷயம் டினோ பெஸ்ட் ஓவரில் அடித்த ஒரு சிக்ஸர். ஷாட் பாலாக பெஸ்ட் வீசிய அந்த பந்தை நன்கு கணித்து க்ரீஸுக்குள் முழுமையாக பின் சென்று, ஃபைன் மற்றும் ஸ்கொயர் லெக்குக்கு இடையில் செல்லுமாறு ஒரு ஷாட் ஆடி சிக்ஸராக்கினார். இந்த ஷாட் அப்படி ஒரு க்ளாஸ்!

ஓய்வுபெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குபெறும் சாலை பாதுகாப்பு தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணிகள் மோதின. பிரையன் லாராவின் அதிரடியால் கடைசி ஓவர் வரை சுவாரஸ்யமாக சென்ற இந்தப் போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற பிரையன் லாரா ஃபீல்டிங்கைத் தேர்வு செய்ய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் சார்பில் ஷேவாக்கும் சச்சினும் ஓப்பனர்களாகக் களமிறங்கினர். சுலைமான் பென் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே, தனது வழக்கமான பாணியில் பவுண்டரி அடித்து ஆட்டத்தைத் தொடங்கினார் ஷேவாக். இந்த ஓவரில் மட்டும் இரண்டு பவுண்டரிகள். ட்வெய்ன் ஸ்மித் வீசிய அடுத்த ஓவரில் லாங் ஆன் மற்றும் ஸ்கொயர் லெகில் சிக்ஸரும் பவுண்டரியும் அடித்து வின்டேஜ் வீரூவாக அசத்தினார். முதல் இரண்டு ஓவர்களில் அமைதியாக இருந்த சச்சினும் மூன்றாவது ஓவரிலிருந்து பேட்டை வீச ஆரம்பித்தார். நாகமுத்து வீசிய அந்த ஓவரில் மட்டும் ஒரு டிரைவ் மற்றும் ஒரு கட் ஷாட் ஆடி இரண்டு பவுண்டரிகளை விளாசினார். சச்சின் - ஷேவாக் இந்தக் கூட்டணியின் அதிரடியில் அணியின் ஸ்கோரும் வேகமாக உயர்ந்தது. 4.4 ஓவர்களிலேயே இந்திய அணி 50 ரன்களைக் கடந்தது. டினோ பெஸ்ட் வீசிய 6வது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஷேவாக் 35 ரன்களில் வெளியேறினார்.

ஒன் டவுனில் கைஃப் களமிறங்கினார். 6-10 இந்த ஓவர்களில் சச்சின், கைஃப் இருவருமே கொஞ்சம் பார்த்து ஆடியதால் ரன்ரேட் குறைந்தது. ஆனால், 11வது ஓவரிலிருந்து இருவரும் கியரை மாற்றினர். ட்வெய்ன் ஸ்மித் வீசிய 11-வது ஓவரில் கைஃப் 6, 6, 4 என மூன்றே பந்துகளில் 16 ரன்கள் எடுத்து மிரட்டினார். ஆனால், அடுத்த ஓவரிலேயே இன்னொரு பெரிய ஷாட்டுக்கு கெய்ஃப் முயன்று நாகமுத்துவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து ஸ்மித் வீசிய 13-வது ஓவரில் அரைசதம் கடந்த சச்சின் டெண்டுல்கர் லாங் ஆனில் ஒரு பெரிய சிக்ஸரையும் இதே ஓவரில் அடித்தார். ஆஸ்டின் வீசிய அடுத்த ஓவரிலேயே மிட்விக்கெட் மேல் இன்னொரு சிக்ஸர் அடித்து சச்சின் வெறித்தனம் காட்டினார்.

சச்சின்
சச்சின்

6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களை விளாசி 65 ரன்கள் எடுத்திருந்த சச்சின் டெண்டுல்கர் டினோ பெஸ்ட் ஓவரில் கேட்ச் ஆகி வெளியேறினார். சச்சினின் இந்த இன்னிங்ஸின் ஹைலைட்டான விஷயம் டினோ பெஸ்ட் ஓவரில் அடித்த ஒரு சிக்ஸர். ஷாட் பாலாக பெஸ்ட் வீசிய அந்த பந்தை நன்கு கணித்து க்ரீஸுக்குள் முழுமையாக பின் சென்று, ஃபைன் மற்றும் ஸ்கொயர் லெக்குக்கு இடையில் செல்லுமாறு ஒரு ஷாட் ஆடி சிக்ஸராக்கினார். இந்த ஷாட் அப்படி ஒரு க்ளாஸ்! மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

சச்சின் அவுட் ஆன பிறகு யூசுஃப் பதானும் யுவராஜும் கூட்டணி போட்டனர். யூசுஃப் பதான் ஏதுவான பந்துகளில் சில பவுண்டரிகளை அடிக்க, கடைசி 2 ஓவர்களில் யுவராஜ் வெறியாட்டம் ஆடினார். அந்த 2 ஓவர்களில் மட்டும் 6 சிக்ஸர்களை வெளுத்தெடுத்தார். நாகமுத்து வீசிய 19-வது ஓவரில் 4 சிக்ஸர்களையும் பென் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்களையும் அடித்தார். இந்த 2 ஓவர்களில் மட்டும் 40 ரன்கள் கிடைத்ததால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்களை எட்டியது.

219 என்ற பெரிய இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணி களமிறங்கியது. பெர்க்கின்ஸும், ஸ்மித்தும் ஓப்பனர்களாகக் களமிறங்கினர். போட்டியை வென்றே ஆக வேண்டும் என்பதில் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்டுகள் உறுதியாக இருந்தனர். தொடக்கம் முதலே தொய்வின்றி சரியாக ரன்ரேட்டை மெயின்டெய்ன் செய்து வந்தனர். இர்ஃபான் பதான் வீசிய முதல் ஓவரிலேயே 19 ரன்கள் வந்தது. பெர்கின்ஸ் சீக்கிரமே வெளியேறினாலும், ஸ்மித் நின்று அதிரடியாக ஆடினார். அவருக்கு ஒத்துழைக்கும் விதமாக டியோநரைனும் சப்போர்ட்டிவ் இன்னிங்ஸ் ஆடினார். ஸ்மித் அதிரடியாக ஆடி அரைசதம் கடக்க முதல் 10 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 108 ரன்களை எடுத்தது வெஸ்ட் இண்டீஸ். இர்ஃபான் பதான் வீசிய 11 வது ஓவரில் ட்வெய்ன் ஸ்மித் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்துவிட்டு, சிக்ஸருக்கு முயல லாங் ஆனில் கேட்ச் ஆகி 63 ரன்களில் வெளியேறினார். அதன்பிறகு வந்த எட்வர்ட்ஸ் முதல் பந்திலேயே ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார்.

நம்பர் 5-ல் அமைதி சூறாவளியாக பிரையன் லாரா களமிறங்கினார். லாரா க்ரீஸுக்குள் வரும்போது 52 பந்துகளில் 99 ரன்கள் தேவைப்பட்டன. லாரா பல அணிகளுக்கு எதிராக சிம்மசொப்பனமாக விளங்கியிருந்தாலும், இந்தியாவுக்கு எதிராக மட்டும் அச்சமூட்டும் வகையில் பெரிய இன்னிங்ஸை ஆடியதில்லை என்கிற விமர்சனம் உண்டு. ஆனால், தனது இளம் வயதில் இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் ஏற்படுத்த முடியாத பயத்தை 51 வயதில் நேற்று ஏற்படுத்தினார்.

ஸ்மித்
ஸ்மித்

தொடக்கத்தில் ஓஜாவின் பந்தில் லாரா ஒரு ஸ்டம்பிங்கில் தப்பித்தார். அவரது ஃபூட் வொர்க்கில் பயங்கரமான தளர்வு தெரிந்தது. எப்படியும் சீக்கிரம் வெளியேறிவிடுவார் என நினைக்கும்போதே சைலன்ட்டாக பெரிய சேஸிங்கை சாத்தியப்படுத்த தொடங்கினார் லாரா. டார்கெட்டை எப்படி அணுக வேண்டும் என்பதை இளம் வீரர்களுக்குப் பாடமாகக் கற்பித்தார். ஓவருக்கு 12 ரன்களுக்கு மேல் தேவைப்பட்டபோதும் எந்த அழுத்தமும் ஆரவாரமும் இல்லாமல் இந்தியாவை பயமுறுத்தினார் லாரா. ஓவருக்கு ஒன்றிரண்டு பவுண்டரி மற்ற பந்துகளில் ரிஸ்க் எடுக்காமல் சிங்கிள்கள் என நேர்த்தியாக திட்டமிட்டு ஆடினார் லாரா. யூசுஃப் பதானின் ஓவரில் பிட்ச் ஆஃப் தி பாலுக்கு இறங்கி வந்து சிக்ஸர், முனாஃப் பட்டேலின் பந்தில் புல் ஷாட் என தனது டிரேட்மார்க் ஷாட்களை பவர் குறையாமல் துல்லியமாக அடித்து அசத்தினார்.

லாராவின் திட்டமிட்ட அணுகுமுறையால் கடைசி 2 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. செட்டில் ஆன டியோநரேனும் லாராவும் க்ரீஸில் இருந்ததால் இந்திய ரசிகர்கள் சோகமடைந்தனர். வினய்குமார் வீசிய 19 ஓவரில் மிட்விக்கெட்டில் ராக்கெட் வேகத்தில் ஒரு பவுண்டரி அடித்த லாரா, இந்திய ரசிகர்களை மேலும் டென்ஷனாக்கினார். ஆனால், அடுத்த பந்தே லோயர் லெக் ஸ்டம்பை பறிகொடுத்து லாரா வெளியேறினார். இதன்பிறகுதான் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கையே வந்தது.

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அரைசதம் கடந்திருந்த டியோநரேன் ரன் அவுட் ஆகிவிட, இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.
அடுத்த கட்டுரைக்கு