Published:Updated:

100 கோடி மகிழ்ச்சி...100 கோடி கண்ணீர்...100 கோடி கனவு... சச்சின் எனும் உணர்வு! #HBDSachin

Sachin Tendulkar
Sachin Tendulkar ( AP )

நூறு கோடி பேரின் நினைவுகளில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார் ஒருவர். நூறு கோடிக்கும் மேலானவர்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாய், பல கனவுகளின் அஸ்திவாரமாய் வாழ்ந்திருக்கிறார் ஒருவர்.

‘An idle mind is a devil’s workshop’ - மிகவும் அழகான பழமொழி. செயலற்றுக்கிடக்கும் ஒருவனின் மூளை, சாத்தானின் இருப்பிடமாம். எதைவேண்டுமானாலும் யோசிக்கும். அதனால்தான், மூளைக்கு வேலை வைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால், அப்படி எல்லா நேரமும் இருந்துவிட முடியுமா... நிச்சயம் இல்லை. ஒவ்வொரு தினத்தையும் கடத்துவதே இப்போது கடினமான காரியமாக இருக்கிறது. மூளைக்கு என்ன, உடலுக்கே வேலை இல்லாத சூழல் உருவாகியிருக்கிறது. ஹிப்போகேம்பஸ், அமிக்டாலா போன்ற பகுதிகள் மனநோய்களுக்கு மூளையை வாடகைக்கு விடத் தொடங்கும் சமயம் இது. நினைவுகளின் சக்தி இதுபோன்ற ஒரு அசௌகரியமான சமயத்தில்தான் தெரிகிறது. அன்றாட வாழ்க்கையின் அவசரத்திலிருந்து விலகி நிற்கும்போதுதான் புரிகிறது. எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வழியில்லாத நேரத்தில், இறந்த காலத்தின் சிதறிய மணிகளைச் சேகரித்து மாலையாக்கி அணிந்துகொள்கிறது மூளை. அதனால்தான், கடந்த சில வாரங்களாக எங்கும் எதிலும் நாஸ்டால்ஜியாவாக உலாவிக்கொண்டிருக்கிறது.

இதுபோன்ற அசாத்திய சூழ்நிலை எப்போதும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. ஆனால், எதிர்காலம் நோக்கி நகர முடியாத, சிந்தனைகளுக்கு உருவம்கொடுக்க முடியாத ஒரு காலகட்டம் நம் அனைவருக்குமே நிச்சயம் வரும். முதுமை! வீட்டுத் திண்ணையில், ஈசி சேரில், பார்க் பெஞ்சில் அமர்ந்து கழிக்கும் ஒவ்வொரு நாளும் இதயத்தின் துடிப்பை சீராக வைத்திருக்கும் பேஸ் மேக்கர் நம் வாழ்வின் நினைவுகள்தான். நட்பு, கல்லூரி, காதல், குடும்பம், கொண்டாட்டம், கண்ணீர், பிரிவு என ஃப்ளாஷ்பேக் மோடில்தான் காலம் கழிந்துகொண்டிருக்கும். நம் நினைவில் வரும் ஒவ்வொரு முகமும், நண்பனோ, எதிரியோ… சுருங்கிய கன்னத்தில் புன்னகையை விதைத்துச்செல்லும். நம் வாழ்வை அளப்பது என்னவோ எத்தனை முகங்களில் நாம் புன்னகையை விதைத்தோம் என்பதாகத்தான் இருக்கும். எத்தனை பேரின் நினைவில் நம்மால் தாக்கத்தை ஏற்படுத்திவிடமுடியும்? மிகச் சொற்பம்தான்.

இதையெல்லாம் இன்று நினைக்கும்போது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. நான் எத்தனை பேரின் நினைவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பேன் என்று எண்ணிப்பார்த்தால் நூறைத் தாண்டவே வெகுநேரம் பிடித்தது. ஆனால், நூறு கோடிப் பேரின் நினைவுகளில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார் ஒருவர். நூறு கோடிக்கும் மேலானவர்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாய், பல கனவுகளின் அஸ்திவாரமாய் வாழ்ந்திருக்கிறார் ஒருவர். பார்வை மங்கி தொலைக்காட்சியின் சத்தம் மட்டும் செவிகளில் விழும்போது, தான் ரேடியோவில் கமென்ட்ரி பார்த்த காலத்தை நோக்கிப் பயணிக்கும் அந்த முதியவரின் வாழ்க்கையில், செல்போனில் ஸ்டிக் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும் தன் மகனைப் பார்க்கும்போது, தான் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடியதை நினைத்துப்பார்க்கும் தந்தையின் வாழ்க்கையில், டி.வி-யை அணைக்கும்போதெல்லாம், இந்தியாவின் தோல்விக்குப் பிறகு டி.வி-யை கோபமாய் ஆஃப் செய்துபோன தன் மகனை நினைத்துச் சிரிக்கும் அம்மாக்களின் வாழ்க்கையில், இன்று கோலியைக் கொண்டாடும் மில்லினியல்களைப் பார்க்கும்போதெல்லாம் தங்கள் பால்யத்தை நினைத்துப் பார்க்கும் 80ஸ், 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையில்… இவ்வளவு ஏன், இப்போதைய ரன் மெஷின் அந்த விராட் கோலியின் வாழ்க்கையில்…. சச்சின்… ஓர் அழியா நினைவு!

பிப்ரவரி 24, 2010

அடுத்த நாள் பத்தாம் வகுப்பு பப்ளிக் பிராக்டிகல் பரீட்சை. வீட்டுக்கும் விடுதிக்கும் எட்டு கிலோமீட்டர்தான். பரீட்சைக்குத் தேவையான பொருள்களை எங்கள் கடையிலிருந்து எடுத்துச் செல்லலாமென்று வீட்டிற்கு வந்துவிட்டேன். இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி. சாதாரணமாகத் தொடங்கி சரித்திரமாகிக்கொண்டிருந்தது அந்த ஆட்டம். சச்சின் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறார். கடைக்கு மேலேதான் வீடு. திடீரென்று அப்பா மேலே வந்துவிட்டார். “ரெயில்வே பட்ஜெட் என்னாச்சு” என்று அமர்ந்தார். ‘கிரிக்கெட் போச்சா’ என நினைத்தேன். ஆனால், ஸ்கோர் போர்டைப் பார்த்தவர் ரிமோட்டைத் தொடக்கூட இல்லை. ஸ்டெய்ன் பந்துவீச்சில் ஓவருக்கு இரண்டு பவுண்டரிகள் அடித்துக்கொண்டிருக்கிறார் மாஸ்டர் பிளாஸ்டர். நியூஸிலாந்துக்கு எதிராக 163, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 175 என கடந்த சில மாதங்களில் இரண்டு பெரிய ஸ்கோர்கள்… இந்த முறை அது 200 ஆகிவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பயம். அப்பாவின் போன் ஒலிக்கிறது.

“இப்போ வர முடியாது.”

“கடையில கூட்டமா இருந்தா நீங்க சமாளிங்க. எதுக்கு இருக்கீங்க. இங்க ஒருத்தன் 200 அடிக்கப்போறான். இப்ப அதுதான் முக்கியமாக்கும்.”

கடைக்கு வந்த அழைப்பை கிரிக்கெட்டுக்காக நிராகரித்தார் அப்பா. அதுவும், ‘200 அடிக்கறப்போ, அதான் முக்கியமா’ என்று அவர் கேட்டது இன்னமும் எனக்கு ஒருவகையான சிலிர்ப்பை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. சச்சினை, கிரிக்கெட்டை எனக்கு அறிமுகம் செய்துவைத்தது அவர்தான். வியாபாரத்தை விட அந்தத் தருணம் முக்கியம் என்று கருதினார்.க் நம் வாழ்வின் ஆகச் சிறந்த நினைவுகள் இப்படித்தானே சேர்த்து வைக்கப்படுகின்றன!

179 ரன்கள்… பேருந்தைப் பிடிக்கக் கிளம்பிவிட்டேன். காலையில் இயற்பியல் பிராக்டிக்கல் பரீட்சையில் அமரவேண்டுமே! கடையில் கூட்டத்தைப் பார்த்து அடக்க முடியாத சிரிப்பு. அப்பா கீழே இறங்குவதாக இல்லை. சரித்திர நிகழ்வைத் தவறவிடுவதாக இல்லை. பேருந்தில் ஏறிவிட்டேன். அப்படியொரு பதற்றம். பின்னால் பேக் தொங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், பாரம் ஏனோ முன்னால்தான் உணர்ந்தது. பேருந்தில் பயணித்த ஒரு 25 வயது அண்ணன் இரண்டு முறை செல்போனில் யாரிடமோ பேசினார். அவரையே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தேன். என்னைப் பார்த்தார். வெட்கத்தை விட்டு, “அண்ணா சச்சின் எவ்ளோ தெரியுமா” என்றேன். போன் செய்தார். தன் நண்பனிடம் கேட்டார். “193 தம்பி” என்று சொல்லிச் சிரித்தார். நானும் சிரித்தேன். அறிமுகம் இல்லாத எங்கள் இருவரின் புன்னகைக்குமான பாலம் அன்று சச்சின்தான்!

சில நிமிடங்களில் இறங்கிவிட்டேன். முடிந்த வரை வேகமாக ஓடி விடுதியை அடைந்தேன். பொருள்களை வைத்துவிட்டு வேகமாக மெஸ்ஸை அடைந்தேன். உள்ளே கூட்டமாக நின்றுகொண்டிருந்தார்கள். அப்பா மட்டுமல்ல, இவர்களும் தங்கள் தொழிலை சில நிமிடங்கள் மறந்துதான் போயிருந்தார்கள். வெளியே நின்றுகொண்டே “முத்தண்ணா ஸ்கோர்” எனக் கத்தினேன். 198 என்றார். “இன்னமும் அடிக்கலையா” என்ற என் ஆதங்கம் கலந்த கேள்விக்கு, தோனி மீதான ஆத்திரத்தை பதிலாகக் கொடுத்தார் அவர். தோனி முதன்முதலில் ரசிகர்களால் வசைபாடப்பட்ட நாளும் அதுவாகத்தான் இருக்கும். காத்திருப்பு தொடர்ந்தது. 198… 199… இதயம் வெளியே விழ எத்தனித்துக்கொண்டிருந்தது. எதிர்பார்ப்பை மீறி பயம் வெளிப்பட்டுக்கொண்டிருந்தபோது, “டபுள் சென்சுரிடா” என்று அவர் கத்த, அவரைச் சுற்றியிருந்தவர்களும் கத்த, வெறிபிடித்து ஓடினேன்.

வகுப்பில் நண்பர்கள்… மெஸ்ஸுக்கு வெளியே நான் அமர்ந்திருந்த அதே மனநிலையில். வராண்டாவில் நின்றபடி ‘சச்சின் 200’ என்று நான் சொல்ல, அத்தனை சத்தம். அன்று அவர்கள் அத்தனை பேருக்கும் மறக்க முடியாத நினைவை ஏற்படுத்தியது சச்சினும், அந்தச் செய்தியைச் சொன்ன நானும்தான். எத்தனை பேர் எனக்கு ஹை-ஃபை கொடுத்தார்கள் என்று எண்ண முடியவில்லை. அப்படியொரு சந்தோஷம். சிம்பிள் பெண்டுலம், பிரிசம், சோனோமீட்டர் என்று எதைப் பற்றியும் அன்று நாங்கள் பேசவில்லை. அடுத்த நாள் காலை பிராக்டிக்கல் எக்ஸாமுக்குள் நுழையும் வரை சச்சின்தான்!

Sachin 200
Sachin 200

என் பத்தாவது பரீட்சையை நினைத்துப்பார்த்தால் இன்றும் முதலில் நினைவுக்கு வருவது சச்சினே! சச்சினின் சாதனைகள் மட்டும் நினைவுகள் ஏற்படுத்தியவை அல்ல. சச்சின் அவுட்டாவதுகூட பல நினைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. 2007 காதலர் தினம். குலசேகரா பந்தில் காலையே நகர்த்தாமல் போல்டாவார் சச்சின். அதைப் பார்த்து டென்ஷன் ஆன ஒரு சீனியர், பச்சையாக வசை பாடினார். அந்த வார்த்தையைக் கேட்டதும் அன்றுதான். ஃபுட்வொர்க் பற்றித் தெரிந்துகொண்டதும் அன்றுதான். அந்த நாள் ஏன் நினைவில் இருக்கிறதென்றால், 2012 காதலர் தினத்தன்றும் அதே குலசேகரா பந்துவீச்சில் அவுட்டாவார் சச்சின். அந்தப் போட்டிகளிலெல்லாம் அவர் சொற்ப ரன்கள்தான் எடுத்தார். ஆனால், அந்த நாள்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. சச்சின் சதமடித்தால் இந்தியா ஜெயிக்காது என்றும் ஒருகாலத்தில் நம்பிக்கொண்டுதான் இருந்தேன். நவம்பர் 8, 2007. பாகிஸ்தானுக்கு எதிராக 99 ரன்களில் அவுட்டாவார். இந்தியாவின் தோல்வி தவிர்க்கப்பட்டுவிட்டது என தீபாவளிக்கு முந்தைய நாளே பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கினேன் (ஆனாலும் இந்தியா தோற்றுத்தான்போனது). இப்படி சச்சினின் விக்கெட்டுகளும் என்னை ஃப்ளாஷ்பேக்குக்குள் மூழ்கடித்துக்கொண்டுதான் இருக்கும். 2013 தீபாவளியன்று ரோஹித் இரட்டைச் சதமடித்தபோது நினைவுக்கு வந்தது சச்சின் அவுட்டானதுக்கு நான் வைத்த பட்டாசுதான். இந்தியா உலகக்கோப்பை வென்றதற்குக்கூட பட்டாசு வைத்ததில்லை. ஆனால், சச்சின் அவுட்டானதுக்காக வைத்திருக்கிறேன். இதை எழுதும்போதே சிரிப்பாகத்தான் இருக்கிறது. வாழ்க்கைக்குத் தேவை அவைதானே! நம்மைச் சிரிக்கவைக்கும் நினைவுகள்!

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவுகள் இருக்கும். ஷார்ஜா இன்னிங்ஸ், சிட்னி இரட்டை சதம், ஃபேர்வெல் ஸ்பீச் என ஒவ்வொருவரும் நினைத்துப்பார்க்க, நினைத்துப் பார்த்துச் சிரிக்க, சிலாகிக்க சில சச்சின் கதைகள் இருக்கும். சச்சின் அவுட்டானதும் ரிமோட் உடைத்தது, கடைவீதியில் MRF பேட் தேடி அலைந்தது, சுவர்களில் சச்சின் போஸ்டர் ஒட்டியது, ‘சச்சினா உனக்கு சோறு போடுறான்’ என்று அம்மாவிடம் திட்டுவாங்கியது என்று எண்ணற்ற கதைகள் எல்லோருக்கும் இருக்கும். சச்சினின் சதங்கள், சாதனைகள் உடைபடலாம். அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆனால், அவர் கொடுத்த அளவுக்கான நினைவுகள் எவராலும் கொடுக்க முடியாதவை. எவராலும்! உலகில் எந்தவொரு தனி மனிதன் அதிகப்படியான மக்களுக்கு நினைவுகளைப் பரிசளித்திருக்கிறான் என்று கணக்கெடுத்தால், உலக வரலாற்றில் அங்கு முதலிடத்தில் இருப்பது சச்சினாகத்தான் இருக்கும். நூறு சதங்கள் அடித்தவருக்கு நன்றி சொல்லிவிடலாம். நூறு கோடி பேருக்கு நல்ல நினைவுகளைப் பரிசளித்தவருக்கு..?!

அடுத்த கட்டுரைக்கு