கிரிக்கெட்டில் பல பரிமாணங்களில் பரிணாம வளர்ச்சியடைந்தவர்கள் மத்தியில் கிரிக்கெட்டையே பரிணாம வளர்ச்சி அடையச்செய்த பெருமை சச்சினுக்கே உரித்தானது.
சமீபத்தில் தோனி சார்லஸ் டார்வினாக மாறி கரியரில் ஒருவரது பரிணாம வளர்ச்சி குறித்து பாடம் நடத்தியிருந்தார்.
"வயதும் அனுபவமுமே ஆட்டநுணுக்கங்களில் ஒருவரை மேலும் மேலும் மெருகேற்றும்", என்பது அவரது வாதம்.

சச்சினின் விஷயத்தில் மட்டும் இது சற்றே மாறும். ஒரு முழுமுதல் கிரிக்கெட்டராகத்தான் அவர் தொடங்கினார். எப்போதேனும் நிகழும் பின்னடைவுகளைக்கூட சுயமாகவே செப்பனிட்டு பலங்கொண்டவராய் திரும்பிவந்தார். கிரிக்கெட்டில் பல பரிமாணங்களில் பரிணாம வளர்ச்சியடைந்தவர்கள் மத்தியில் கிரிக்கெட்டையே பரிணாம வளர்ச்சி அடையச்செய்த பெருமை அவருக்கே உரித்தானது.
கால் நூற்றாண்டு ஓட்டத்தில் இந்த ஓடம் எத்தனை முறை ஆற்றினையே தனது பாதைக்குத் திருப்பியிருக்கிறது, அளவிடவே முடியாததாக சாதித்திருக்கிறது??
சச்சினின் சாதனைகள், தரவுகள், ரன்கள் இவற்றுக்குள் நீந்திக் கரையேறுவது கனவிலும் நடக்காதது. ஆகவே அவற்றுக்குள்ளே மாட்டிக்கொள்ளாமல் எப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர் ஆட்டநுணுக்கங்களில் மாற்றங்களைக் கொணர்ந்து மைல்கற்களை தனதாக்கினார் என்பதைக் காணலாம்.
"பேட் எனது நீட்டிக்கப்பட்ட கையாக இருப்பதையே நான் விரும்புகிறேன்" என சச்சினே குறிப்பிட்டதைப் போலவே அது அவருடைய உடலின் இன்னொரு அங்கமே. அத்தகைய எண்ணமே அதனை இலகுவாக கட்டுப்படுத்தவும் உதவியது.

அதிவேகமாக சைக்கிளில் அபாய வளைவுகளைக் கடப்பவரிடமிருக்கும் அதே பேலன்ஸ் சச்சினிடம் வியாபித்திருந்தது. அதிலும் அவரது பேட்டிங் ஸ்டான்ஸ், ஒரு பக்கமாக சாயாமல் சரியாக அமர்ந்த கிரீடமாக அவரது தலை, கேமராவாக கண்கள் என இருக்கவேண்டிய இடத்தில் எல்லாமே இருந்து செய்யவேண்டியவற்றை சிறப்பாகச் செய்தது.
மற்றவர்கள் எல்லாம் எடை குறைந்த பேட்களைப் பயன்படுத்திய சமயத்தில்கூட சச்சின் மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ எடையுள்ள பேட்டினைப் பயன்படுத்தினார். சிறுவயதில் தனக்கென பேட் இல்லாத போது தன்னைவிட பத்து வயது மூத்த சகோதரரின் பேட்டினை பயன்படுத்தியவரால் பழக்கத்தினை மாற்றிக் கொள்ள முடியாதுபோக, அதனை நிரந்தரமாக்கி விட்டார். காயங்களுக்கு இதுவும் ஒரு காரணமே என ஒருதரப்பு வாதிட்டது, புல்ஷாட் உள்ளிட்ட கிராஸ்பேட் ஷாட்டுகளை இதனால்தான் அவரால் Vertical பேட் ஷாட்கள் அளவிற்கு ஆடமுடியவில்லை என்ற பின்னூட்டம்கூட வந்தது, ஆனால் சச்சின் தனது தேர்வில் தெளிவாயிருந்தார்.
அதேநேரத்தில் சரி எனப்பட்டால் சொல்வது யாரென்று அவர் யோசித்ததில்லை. Arm Guard-னை அவர் அணிகின்ற போதெல்லாம் அவரது பேட்டின் ஸ்விங் மாறுகிறதென ஒரு ஹோட்டல் ஊழியர் கவனித்து சச்சினிடம் சுட்டிக்காட்ட,
"பேட்டிங் மேஸ்ட்ரோ நான், உங்களது அறிவுரை எனக்குத் தேவையில்லை" என அதனை விலக்கி வைக்கவில்லை. ஆர்ம் கார்டை தனக்கேற்றாற் போல் மாற்றியமைத்து அதில் ஏற்றமும் கண்டிருந்தார்.

இதனை வெளியுலகிடம் மறைக்காமல், பல்லாண்டுகள் கழித்து அதனைக் குறித்து ட்வீட் செய்து அந்த மனிதரை கண்டுபிடித்துத் தருமாறு கோரிக்கையும் வைத்து அவரை சந்திக்கவும் செய்தார். எத்தனை பேரால் இப்படிப்பட்ட அறிவுரையை நேர்மறையாக அணுக முடியும், அதனை மனதார மற்றவர்களிடம் பகிர முடியும்???
சச்சினின் ஸ்டான்ஸும் ஆண்டுகளில் சற்றே மாறுதல்களைப் பார்த்திருந்தது. 90-களில் தொடக்கத்தில் பேட்டின் பக்கமாக சற்றே அதிகமாக சாய்ந்தது போலிருப்பார், ஆஃப் ஸ்டம்பை நோக்கி சற்றே தலையும் சாய்ந்திருக்கும். இது மிட்விக்கெட்டில் பந்தினை துரத்துகையில் சின்னதாக நிலைதடுமாறச் செய்தது. இவ்வாறு நிற்கையில் எல்பிடபிள்யூவாகவும் வாய்ப்புகள் அதிகம். பேட்டிங்கின் போது தலையிலிருந்து செங்குத்தாக வரையப்படும் கோடு கால்களை அடைய வேண்டும் என்பது நிலைப்புத்தன்மைக்காக இயற்பியல் கூறும் விதியும்கூட. எனவே அதனை பின்னாளில் மாற்றி தலை ஆஃப்சைட் பக்கம் நகராமல் பார்த்துக் கொண்டார். புதிதாக சைக்கிள் கற்றுக்கொள்ளும் சிறுவன் அடிக்கடி கீழேவிழுவது போல் நடக்காமல் இது தவிர்த்தது.
இசையில் மயங்கி கரும்பினையே தின்ன மறந்து அதில் திளைத்த யானைகள், இணைந்து நின்ற சிங்கம், மான்களின் கதை தெரியுமா? கார்ட் எடுக்க சச்சின் ஆயத்தமாகும் அந்த நொடி இந்தியர்கள் மொத்தமும் அதேபோலத்தான் வேற்றுமை மறந்து அவருக்குள்ளேயே ஆழ்ந்து போவார்கள். எந்த ஸ்டம்புக்கு கார்ட் எடுப்பது என்பதைக்கூட சச்சின் நாளடைவில் மாற்றியிருந்தார். முதலில் லெக் ஸ்டம்பில் கார்ட் எடுத்தவர், பின்னர் அதனை மிடில் ஸ்டம்புக்கு மாற்றியமைத்தார். இதற்கான காரணம் லெக் சைடினையும் தனதாக்கவே. இதனால் ஃப்ளிக் ஷாட் மூலமாகவோ ஆன் டிரைவ் வாயிலாகவோ இலகுவாக ரன்களைக் கொண்டு வரமுடிந்தது.

லெக் மற்றும் ஆஃப் சைட் இரண்டையுமே தனக்காகத் அவர் இப்படி திறந்துவிட்டுக் கொண்டது ஃபீல்ட் செட் செய்யும் விஷயத்தில் எதிரணி கேப்டனுக்கான சவாலானது.
இதிலும் எல்பிடபிள்யூவில் ஆட்டமிழக்க வாய்ப்புண்டு எனினும் அதனை பார்த்துக்கொள்ள அவரது டைமிங் தயாராக இருந்தது. ரசிகர்களோ நேரம் நழுவுவதைக்கூட மறந்து அவரை மட்டுமே ஆராதித்துக் கொண்டிருந்தனர்.
சச்சினின் பேக்லிஃப்ட் கூட காலத்தைப் பொறுத்து சற்றே மாறுதல்களைச் சந்தித்திருந்தது. சச்சின் பொதுவாக எந்த ட்ரிக்கர் மூவ்மெண்டையும் பின்பற்றியது இல்லை தனது பொஷிசனை மாற்றிக் கொள்ளாது நிலையாக இருப்பதே அவருக்குப் பிடித்தமானதும் வசதியானதும். இதற்கு சமயங்களில் சில விதிவிலக்குகளும் உண்டு. அக்தரின் பந்துகளை எதிர்கொண்ட சமயங்களில் அதில் சின்ன மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தார்.
2003 உலகக்கோப்பையில் அக்தரது பந்தை சந்தித்த போது இருந்ததைவிட, 2004 ராவல்பிண்டி ஒருநாள் போட்டியில் அதை மாற்றி பேக்வர்ட் பிரஸ்ஸினை பின்பற்றினார். அக்தரின் அதிவேகத்தை சிதறடிக்க அது பெரிதும் உதவியது

பொதுவாகவே அதிவேகப்பந்து வீச்சிற்கு பதிலளிக்க ஒரு பேட்ஸ்மேனுக்கு ஒரு விநாடிக்கும் குறைந்த நேரமே இருக்கும். அப்படியிருக்க அதற்குள் சச்சினால் எப்படி எல்லாவற்றையும் கணிக்க முடிந்து அதற்கேற்றாற் போல் சகலத்தையும் மாற்றியமைப்பது சாத்தியமாகிறது என்ற கேள்வி ஒருமுறை கேட்கப்பட்டது. அவரளித்த பதில் அற்புதம்! "பௌலர் வீசப்போகும் பந்தின் மீதுதான் எனது கவனமிருக்கும். லைன், லெந்த், எந்தளவு மூவ்மெண்ட் இருக்கும், எவ்வளவு பவுன்ஸ் ஆகும் இதையெல்லாம் கணிப்பது மட்டுமே என் வேலை, எதிர்ப்பக்கம் மட்டுமே கண்கள் இருக்கும்", என்று கூறியிருந்தார். Reflex Action எனப்படும் அனிச்சை செயல்தான் சச்சின் எப்படி செயல்பட வேண்டுமென்பதை மைக்ரோ விநாடிகளில் முடிவு செய்தது. அதாவது சிந்தனைக்கெல்லாம் இடமேயின்றி அது அவ்வளவு அழகாக இயல்பாக அவருக்கு வந்தது. பிறவிக்கலைஞன் என்போமே கிரிக்கெட்டில் அது சச்சின்தான்.
பெரும்பாலும் பேக்ஃபுட் பிளேயரே என்றாலும் அதிலேயே தேங்கியதில்லை. தேவைக்கேற்றாற் போல் மாறிக்கொள்வார். பேக் ஃபுட் புல் ஷாட், கட் ஷாட், டிரைவ் கண்கவருமெனில் ஃப்ரன்ட் ஃபுட் டிரைவ்கள் மதிமயக்கும். குறிப்பாக அவரது சிக்னேச்சர் ஷாட்டான ஸ்ட்ரெய்ட் டிரைவ் அவர் ஆடிய 24 ஆண்டுகளில் பல மாற்றங்களைச் சந்தித்தது. எனினும் அதன் ஒவ்வொரு எபிசோடும் அழகே.
ஊஞ்சலை பலங்கொண்டு தள்ளுவதுபோல ஆடத்தொடங்கிய காலகட்டத்தில் தனது முழுத்திறன் கொண்டே ஸ்ட்ரெய்ட் டிரைவினை அடித்திருந்தார். பேட்டின் ஃபாலோஅப் தலைக்கு பின்னால் சென்று முடிந்ததே எந்தளவு அது பலங்கொண்டு அடிக்கப்பட்டதென்பதை விளக்கும். 90களின் பிற்பகுதியிலேயே அதனை அப்டேட் செய்திருந்தார். திறனில் மட்டுமே நம்பிக்கை கொள்ளாது டைமிங்கையும் சரி செய்திருந்தார். பல மணிநேரங்கள் பயிற்சி அதனை சாத்தியமாக்கியது. முன்பைப்போல் அடித்த பின்னர் பேட் தலைக்கு பின்னால் தஞ்சமடையவில்லை. 2000-க்கு பின்னதாகவோ அது இன்னமும் அழகோடு வெளிப்பட்டது. காரணம் பெரிதாக அவர் பவர் கொடுத்து அடிக்க வேண்டிய அவசியமின்றி, டைமிங்கை இன்னமும் பிசிறு அற்றதாக்கி இருக்க, சறுகலில் சிறுகுழந்தையைத் தள்ளிவிடுவது போல பேட்டினால் ஒரு சின்ன தொடுதலே ஸ்ட்ரெய்ட் டிரைவுக்கு போதுமானதாக இருந்தது.

பௌலர்களின் பவுன்சர்களை சமாளிக்க அவரது ஆயுதமாக உருவெடுத்த அப்பர்கட்டும் இப்படியே மெருகேறியது. பவுன்சர்கள் தேர்ட் மேனைத் தாண்டி பவுண்டரியாக, அதனை வீசவே பௌலர்கள் தயங்கினர். முரளிதரனின் தூஸ்ராவுக்கு அனைவரும் நடுங்க அதனை இலகுவாக இன்சைட் அவுட் ஷாட்டில் சிக்ஸராக்கினார்.
வார்னேவுக்காக 1998-ல் சிறப்பு பிட்ச்களில் பயிற்சி மேற்கொண்டு பின் அவரை துவம்சம் செய்தது நினைவிருக்கிறதா? தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் 2002-லேயே சச்சினால் அடிக்கப்பட்டது. ரிவர்ஸ் ஸ்வீப், பேடில் ஸ்வீப் என எல்லாவற்றையும் முயற்சித்திருந்தார். அந்தத் தீரமும் தீவரப்பயிற்சியும்தான் சச்சின். திறமைகளாலும் அதனை பட்டை தீட்டிக் கொண்டேயிருந்த கிரிக்கெட் மீதான அவரது அதீதக்காதலாலுமே அவரது வளர்ச்சி அபரிதமாயிருந்தது.
முதல் 12 ஆண்டுகள் ஒரு டெஸ்டைக்கூட காயத்தினால் தவிர்க்காதவரை அடுத்தடுத்து காயங்கள் முடக்கின. உண்மையில் அவைதான் அவரும் மனிதர்தான் போலும் என்பதையே உறுதிபடுத்தின ஏனெனில் அதற்கு முன்பாக அவர் வெளிப்படுத்தியது எல்லாமே சூப்பர்மேன்களுக்கே உரியவை. "சச்சினின் காயங்கள்தான் மனித உடல்கூறினை குறித்தே நமக்குத் தெரிவிக்கின்றன" என ஒருமுறை ஹர்சா போக்லே தெரிவித்திருந்தார். வீரனுக்கு விழுப்புண் படாத நாளெல்லாம் வீணான நாள்தானே? இவற்றையெல்லாம் சமாளிக்கும் வைராக்கியமும் அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழிமுறைகளுக்குமான தேடலுமே அவரை சிறப்பாக்கியது.
டென்னிஸ் எல்போ காயம் மொத்தமாகவே முடக்க, தேநீர் கோப்பையைக்கூட கையால் பிடிக்க முடியாத நிலை. "Endulkar" என சிலர் தலையங்கங்கள் வாசித்தனர். காலத்தை வென்றவரை காயங்களா வீழ்த்திவிடும்?

பேட்டிங்கில் செய்த சிறிய மாற்றங்களால் வல்லமையோடு நாயகன் மீண்டுவந்து தொடர்ந்து கோலோச்சினார். 2010-ல் தனது 37-வது வயதில் தனது கரியரின் உச்சம் தொட்டார். டி20 இளைஞர்கள் ஃபார்மட் என யார் சொன்னது என இந்த சக்ரவர்த்தியின் தலைசேர்ந்து மகுடமாகிய ஐபிஎல் ஆரஞ்சுக்கேப் கேட்காமல் கேட்டது.
2004-ல் பிராட் ஹாக் சச்சினின் விக்கெட்டை எடுத்தபின் அந்தப் பந்தில் ஆட்டோகிராஃப் வாங்க நீட்ட, "இனி இது எப்போதும் நடக்காது" என சச்சின் எழுதிக் கையெழுத்திட்டாராம். அதன்பின் 21 சந்தர்ப்பங்களில் இருவரும் மோதிக் கொண்டபோதும் ஒருமுறைகூட சச்சினின் விக்கெட்டை ஹாக்கால் வீழ்த்த முடியவில்லை.
ஆகமொத்தம் தோனி மற்றவர்கள் விஷயத்தில் சொன்னதைப் போல ஆண்டாக ஆண்டாக அவர் மெருகேறவில்லை. சச்சினைப் பொறுத்தவரை 98 மதிப்பெண்களுக்கும் 100-க்கும் இடையிலான பயணமாகவே சச்சினின் கரியர் இருந்தது. Positive, Comparative, Superlative என ஆங்கிலத்தில் சொல்வது போல் ஒவ்வொரு கட்டமாக நகர்ந்து இறுதியில் அவருக்கு இணை யாருமில்லை என்ற ஐடியல் நிலை அவரால் எட்டப்பட்டது. என்றும் மாறாத கிரிக்கெட் மீதான நேசத்திற்காக அவர் தன்னை மாற்றிக் கொண்டேயிருந்தார்.
சச்சின் விடைபெறும் போது அவரது கண்களின் ஈரம், வார்த்தைகளின் வலி, மனதினை பிசையும் அவரது வருத்தம் தோய்ந்த முகம் இவையெல்லாம் ஏன் நம்மையும் கலங்க வைத்தன, இனிமேல் இந்த மனிதரைக் களத்தில் காண முடியாதென்ற நினைப்பே ஏன் மரணவலியை அனுபவிக்க வைத்தது? ஏனெனில் நூற்றாண்டுகளுக்குமான நாயகன் அவர், நம்மிலிருந்தும் நமது நினைவுத் தடங்களிலிருந்தும் நீக்கமுடியாதபடி உணர்வோடு ஒன்றிய நம்மில் இன்னொரு பகுதி.

ஏனெனில் நூற்றாண்டுகளுக்குமான நாயகன் அவர், நம்மிலிருந்தும் நமது நினைவுத் தடங்களிலிருந்தும் நீக்கமுடியாதபடி உணர்வோடு ஒன்றிய நம்மில் இன்னொரு பகுதி.
கேப்டன்ஷி பறிக்கப்பட்டது பற்றி தனக்கு முறையாக அறிவிக்கப்படாதது குறித்து வருந்தியிருந்த சச்சின், "கேப்டன்ஷியை என்னிடமிருந்து எடுக்கலாம், ஆனால் கிரிக்கெட்டை என்னிடமிருந்து விலக்க யாராலும் முடியாது" என கூறியிருந்தார்.
உண்மையில் அவரும் கிரிக்கெட்டும் வேறல்ல. அவரை நீக்கிப்பார்த்தால் இந்தியக்கிரிக்கெட் வெறும் கூடுதான்.
சச்சினின்றி இயங்கியிருக்காது இந்திய கிரிக்கெட் உலகு.
பிறந்தநாள் வாழ்த்துகள் சச்சின்!