சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று சுமார் பத்து ஆண்டு காலம் ஆகிவிட்டது. இருந்தாலும் இன்னமும் ரசிகர்கள் "Miss You Sachin" என்று பதாகைகளை எடுத்து வருகின்றனர்.
ஐபிஎல் போட்டி நடுவில் சச்சின் முகத்தை திரையில் காட்டினால் ரசிகர்களின் ஆக்ரோஷம் அளவில்லாமல் இருக்கிறது. இன்னமும் செல்வாக்கு மிக்க இந்தியர்கள் வரிசையில் சச்சினின் பெயர் உண்டு. பல்வேறு விளம்பர ஒப்பந்தங்களுடன் இன்னமுமே இந்தியாவின் கிரிக்கெட் முகமாக இருந்து வருகிறார் சச்சின்.
இப்படி கிரிக்கெட் என்றாலே சச்சின் என்று மாறியது எப்படி? சச்சினின் பேட்டிங் மட்டும் தான் அதற்கு காரணமாக என்றால் இல்லை. சச்சின் மட்டுமே அதற்கு காரணமா என்றால் கூட பதில் இல்லை தான். ஆம்
சச்சினின் இந்த சரிவில்லாத சரிநிகரற்ற சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பியதில் பெரும் பங்கு Mark மாஸ்க்கரேன்யஸ் என்னும் தொழிலதிபருக்கு உண்டு. Wordtel என்னும் நிறுவனத்தின் உரிமையாளரான மார்க், 1995ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார்.

மார்க்கிடம் ஏகப்பட்ட பணம் இருந்தது. அதை யார் மேல் முதலீடு செய்வது என்பது தான் அப்போது அவருக்கு இருந்த ஒரே கேள்வி. சச்சின் அப்போது கிரிக்கெட்டுக்குள் வந்து வெறும் ஆறு ஆண்டுகள் தான் ஆகியிருந்தன. இருந்தாலும் சச்சினை ஏன் தேர்வு செய்தேன் என்று பிற்காலத்தில் அவர் கூறும் போது,
"நான் பிராட்மேன் மற்றும் சாபர்ஸ் ஆடியதை பார்த்தது இல்லை. ரிச்சர்ட்ஸை பார்த்துள்ளேன். ஆனால் அவர் கூட சந்திரசேகரிடம் மிக எளிமையாக அவுட் ஆவார். ஆனால் சச்சின் போல நேர்த்தியான எந்த வீரரையும் இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை" என்று கூறினார்.

ரவி சாஸ்திரி மூலமாக சச்சினை தொடர்பு கொண்டு தன்னுடைய வியாபார டீல்களை எல்லாம் சச்சினிடம் காண்பித்தார் மார்க்.
இதற்கு முன்பு வரை சச்சின் பெப்சி பூஸ்ட் போன்ற விளம்பரங்களில் நடித்து வந்தார். அதிகபட்சமாக சச்சினுக்கு 16 லட்ச ரூபாய் இதன் மூலமாக கிடைத்து வந்தது அப்போது. ஆனால் மார்க் இந்த ஒப்பந்தங்களை எல்லாம் உடைத்துவிட்டு சச்சினுக்கு புதிய டீல் ஒன்றை கொடுத்தார். 25 கோடி ரூபாய் - ஐந்து ஆண்டுகள் ஒப்பந்தம். வேறு எந்த நிறுவனமும் சச்சினை அணுக வேண்டியதாக இருந்தாலும் தன் மூலமாகவே அணுக வேண்டும் என்று இருந்தது அந்த ஒப்பந்தம்.
1995ல் 25 கோடி என்பது மிகப்பெரிய பணம்.
பல்வேறு பத்திரிகைகளில் அப்போது இது தலைப்பு செய்தியாக வந்தது. கூடவே மார்க் விமர்சனங்களையும் சந்தித்தார். சச்சின் டெண்டுல்கர் சீக்கிரம் கிரிக்கெட்டில் தேய்ந்து போய் விட்டால் என்ன செய்வீர்கள் என்றெல்லாம் கேள்விகள் வந்தன. ஆனால் மார்க் எதையும் கவனிக்கவில்லை. சில நேரங்களில் ஆராய்ச்சிகளை எல்லாம் விட்டுவிட்டு மனம் கூறுவதை கேட்டு நடப்பது தான் சரி. மார்க் அதை செய்தார்.
இந்த காலக்கட்டத்தில் உலகக்கோப்பை ஒளிபரப்பும் உரிமை கூட மார்க்கிடம் வந்தது. முன்பு போல் இல்லாமல் பல கேமராக்களை புதிதாக அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்தார் மார்க். கூடவே அவர் பணம் கட்டிய குதிரையான டெண்டுல்கர் மேலே மேலே சென்று கொண்டே இருந்தார். மார்க்கிடம் டீல் போடுவதற்கு முன்பு வரை மிடில் ஆர்டரில் விளையாடிக் கொண்டிருந்த சச்சின் அதன் பின்பு துவக்க வீரரானார். பந்துவீச்சிலும் ஆட்டத்திற்கு ஆட்டம் ஆறு முதல் எட்டு ஓவர்கள் வரை வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். அணியின் கேப்டன் ஆனார். சச்சினின் மதிப்பு உயர்ந்து கொண்டே சென்றது. இந்திய கிரிக்கெட் என்றாலே சச்சின் தான் என்று ஆனது. நைக், அடிடாஸ், பிலிப்ஸ் என பல நிறுவனங்கள் சச்சினின் முகத்துக்காக போட்டி போட்டன. சச்சின் இந்திய கிரிக்கெட்டின் பிராண்ட் ஆனார்.

சச்சினின் ஆட்டத்திறன் குறையாமல் இருக்கும் வரை தான் அவருக்கான மதிப்பு என்பதை மிக மிக நன்கு உணர்ந்து இருந்தார் மார்க். இந்த விளம்பரங்கள் ஒப்பந்தங்கள் போன்றவை எல்லாம் சச்சின் கிரிக்கெட்டை சிறிதும் பாதிக்காத வண்ணம் அனைத்தையும் மார்க் மட்டுமே பார்த்துக் கொண்டார். இவ்வளவு பெரிய பண விஷயங்களை மொத்தமாக தன்னிடம் விட்டு விடும் அளவுக்கு சச்சினை நம்பிக்கை பெற்றிருந்தார் மார்க்.
எந்தவித விளம்பர சூட்டிங்கோ அல்லது நிகழ்ச்சிகளோ சச்சினின் பயிற்சியை பாதிக்காத வண்ணமும் பார்த்துக் கொண்டார்.

பலரும் விமர்சித்த நிலையில் சார்ஜா ட்ரை சீரிஸ் போட்டிகளின் ஒளிபரப்பும் உரிமையை 1998ல் வாங்கினார் மார்க். அங்கு நடக்கும் போட்டிகளை எல்லாம் யார் பார்க்கப் போகிறார்கள் என்று கேட்டபோது கொஞ்சமும் அஞ்சாமல் பல்வேறு வகையான கேமராக்கள், வர்ணனையாளர்கள் என அழைத்து வந்து அந்த தொடரை மிக வெற்றிகரமாக மாற்றினார். சச்சின் இறுதிப் போட்டியில் சதம் அடித்தால் அவருக்கு நீங்கள் கார் ஒன்றை பரிசளிக்க வேண்டும் என ஸ்பான்சர்களிடம் டீல் போட்டார். சச்சினுக்கு காரும் மார்க்குக்கு கோடிகளில் பணமும் வந்தது இறுதிப்போட்டி முடிவில்.
ஐந்தாண்டுகள் ஒப்பந்தம் முடிந்தவுடன் அடுத்த சில ஆண்டுகளுக்கு சச்சினுடன் 100 கோடி ரூபாய் ஒப்பந்தம் ஒன்றை போட்டார். பலர் வாய் அடைத்து போய் விட்டனர். காரணம் 1996 உலகக்கோப்பை மொத்த ஒளிபரப்பு உரிமையை வாங்குவதற்கே மார்க் செலவழித்த தொகை 50 கோடி தான். சச்சின் மேல் இவ்வளவு பெரிய தொகையை யோசிக்காமல் முதலீடு செய்தார். சச்சின் தவிர கங்குலி, அக்தர், ராபின் சிங் என பலருடன் அவர் டீல் போட்டிருந்தாலும் இவ்வளவு பெரிய தொகைக்கு அவர் முன்வரவில்லை. காரணம் அவார்ட் வாங்கும் படம் எது, கோடிகளைக் குவிக்கும் படம் எது என்பது மார்க்குக்கு நன்றாக தெரியும்.
எல்லாம் சரியாக போய்க் கொண்டிருந்தபோது 2002 இல் ஒரு சாலை விபத்தில் மார்க் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இந்திய அணி கருப்பு பேண்ட் அணிந்து விளையாடி துக்கத்தை வெளிப்படுத்தியது. மார்க் மரித்த பின்பும் கூட அவர் போட்ட ஒப்பந்தத்தில் கடைசி வரை உறுதியாக இருந்தார் சச்சின்.
"இந்த பிசினஸ் டீல் பேச்சுகளில் எல்லாம் தன்னை இணைக்காமல் தனக்கு எது தேவை எது தேவையில்லை என்பதை ஒரு அண்ணன் ஸ்தானத்திலிருந்து பார்த்துக் கொண்டார் மார்க்" என்று சச்சின் பேசியிருந்தார்.
இந்தியாவில் விளம்பரங்களுக்கும் கிரிக்கெட்டுக்கும் இவ்வளவு பெரிய மார்க்கெட் இருக்கிறது என்பதை முதன் முதலில் வெளிப்படுத்தியது மார்க் தான். பல்வேறு எதிர்ப்புகள், CBI ரைடுகள் மத்தியிலும் தன்னை கடைசி வரை நம்பர் ஒன்னாகவே வைத்துக் கொண்டார்.
சச்சின் இன்னமும் இந்திய கிரிக்கெட்டின் முகமாகவும் பிராண்டாகவும் இருப்பதற்கு முக்கிய காரணம் மார்க். சச்சினை பல்வேறு வடிவங்களில் இந்திய மக்களின் மனங்களில் நுழைத்தவர் அவர். இயன் சேப்பல் ஒருமுறை மார்க் குறித்து நினைவு கூறும் போது, "இந்த டி20 யுகத்தில் மார்க் இருந்திருக்கலாம்" எனக் கூறினார். உண்மைதான் மார்க் மட்டும் IPLல் இருந்திருந்தால், மைதானத்திற்கு வெளியே சிக்சர் அடித்தால் இவ்வளவு, ரிவர்ஸ் ஸ்வீப் சிக்சருக்கு இவ்வளவு, மெய்டனுக்கு இவ்வளவு என அமர்க்களப்படுத்தியிருப்பார். யாருக்கு தெரியும்? கோலியை மெஸ்ஸி, ரொனால்டோ உயரத்திற்கு கொண்டு சென்றாலும் சென்றிருப்பார். தன்னைப் பற்றி மார்க் ஒருமுறை பேசும்போது இப்படி கூறினார்.

"சந்தைக்கு மாட்டு வண்டிகள் தேவைப்பட்ட போதே நான் ரோல்ஸ் ராய்ஸ் கார் தயாரித்துக் கொடுத்தேன்".