Published:Updated:

`ஓப்பனிங்கிற்கு நான்... ஃபினிஷிங்கிற்கு நீ...' - ருத்துராஜின் அழகியலும்; ஷாருக்கின் அதிரடியும்!

Ruturaj Gaikwad and Shahrukh Khan
News
Ruturaj Gaikwad and Shahrukh Khan

ஒருமுனையில் அதிரடி எனும் சொல்லிற்கு ருத்துராஜ் அழகியல் சேர்த்து ஆட மறுமுனையில் பவர் ஹிட்டிங்கிற்கு புதிய அகராதி ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறார் ஷாரூக்.

நடப்பு ஆண்டிற்கான விஜய் ஹசாரே கோப்பை நேற்றைய தினம் தொடங்கியது. முதல் நாளிலேயே தங்களின் இன்னிங்ஸ்களை பலம் பொருந்தியதாக மாற்றியிருக்கிறார்கள் இளம் வீரர்கள். அதில் முக்கியமான இருவர் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் ஷாருக் கான்.

இவர்கள் இருவரின் சமீபத்திய ஆட்டத்தைப் பார்த்தால் இந்திய அணியின் ஓப்பனிங்-க்கு நான் ஃபினிஷர் நீ என்று ஒரு தீர்மானத்தோடு ஆடுவது போல் இருக்கிறது. ஒருமுனையில் அதிரடி எனும் சொல்லிற்கு ருத்துராஜ் அழகியல் சேர்த்து ஆட மறுமுனையில் பவர் ஹிட்டிங்கிற்கு புதிய அகராதி ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறார் ஷாரூக்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அட்டகாசமான ஐ.பி.எல் தொடர். அதற்கு பரிசாக இந்திய அணியில் இடம், மகாராஷ்டிரா அணியின் கேப்டன் பதவி என ருத்துராஜின் கிராஃப் கடந்த ஓராண்டுக்குள் தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. ஆனால் இவை எதுவும் தன் கேமை பாதிக்காது வகையில், இன்னும்கூட தன் டைமிங்கிற்கு ஃபர்பெக்ஷன் சேர்த்துக்கொண்டிருக்கிறார் ருத்து. ஆட்ட யுக்திகளில் மாற்றம், 3டி வீரர்களின் முக்கியத்துவம் என வருடத்திற்கு வருடம் உருமாறிக் கொண்டிருக்கிறது டி20 பார்மட் கிரிக்கெட். ஆனால் ஒரு ஆர்த்தோடாக்ஸ் பேட்ஸ்மேனின் இருப்பும், வீரர்களின் மனதளவிலான இன்டென்ட் என்பதும் ஆட்டத்தில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அழுத்தமாக பதிவு செய்து வருகிறார் ருத்துராஜ்.

Ruturaj Gaikwad in IPL
Ruturaj Gaikwad in IPL

ஐ.பி.எல் 2021-ல் 635 ரன்கள், சையத் முஷ்டாக் அலி தொடரின் 5 போட்டிகளில் 259 ரன்கள் என டி20 போட்டிகளில் இந்த ஆண்டு முழுவதும் மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் ருத்து. தன் முந்தைய ஃபார்மை 50 ஓவர் ஃபார்மர்ட்டிலும் தொடர அட்டகாசமான தொடக்கத்தை அமைத்துக்கொண்டார் அவர். நேற்று நடந்த ஒரு போட்டியே இதற்கு உதாரணம். மஹாராஷ்டிரத்தின் பௌலிங் அட்டாக்கை மிக நேர்த்தியாக எதிர்கொண்ட மத்திய பிரதேச அணி 329 எனும் இமாலய ஸ்கோரை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் ஒரு சிறு தடங்கல் கூட இல்லாமல் அவ்வளவு எளிதாக சேஸ் செய்து பதிலடி கொடுத்தது மகாராஷ்டிரம். இதற்கு மிக முக்கிய காரணம் கேப்டன் ருத்துராஜின் இன்னிங்க்ஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தன் அட்டகாசமான டைமிங்கால் நூலிழை தப்பாத கிளாசிக்கல் கவர் டிரைவ், தன்னை நோக்கி வரும் ஷார்ட் பால் ஒவ்வொன்றையும் அறைவேன் என்ற மனதிடம் என நேற்று ருத்து ஆடிய இன்னிங்ஸ் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். 85 பந்துகளில் சதத்தை கடந்த அவர் இறுதியாக 136 ரன்களில் (112 பந்துகள் ) ஆட்டமிழந்தார். கிரிக்கெட் என்னும் குழு விளையாட்டில் ஒரு தனி நபரால் வெற்றிக்கு அதிக பங்காற்ற முடியுமே தவிர முழுவதுமாக வெற்றியைப் பெற்றுத்தர முடியாது.

Ruturaj Gaikwad
Ruturaj Gaikwad

இதை நன்கு புரிந்துக்கொண்ட ருத்துராஜ்தான் ஆடிய இன்னிங்ஸைவிட மகத்தான செயல் ஒன்றையும் செய்தார். இதுநாள் வரை தன் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெளிப்படுத்தி வந்த இன்டெண்டை அணியின் சக வீரர்களுக்கும் தொற்ற வைத்தார் ருத்து. தொடக்கத்தில் ஒப்பனராக களமிறங்கிய யாஷ் நஹார் முதல் ஏழாவது பேட்டராக வந்த ஸ்வப்னில் ஃபுல்பகார் வரை அனைவரிடத்திலும் கேப்டன் ருத்துராஜின் இன்டெண்ட்டை காணமுடிந்தது.

எதிர்கால இந்தியாவின் ஒப்பனராக ருத்துராஜ் கெய்க்வாட் எந்தளவுக்கு முக்கிய வாய்ந்தவராக பார்க்கப்படுகிறாரோ அதே அணியில் ஃபினிஷராக தன்னை நிலைநிறுத்தி கொள்ள அனைத்து திறமைகளை உடையவராக விளங்கும் மற்றொரு வீரர் ஷாருக் கான். இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அவ்வளவு சிறப்பான ஆட்டத்தை ஷாரூக் வெளிப்படுத்தவில்லை என்றாலும் அதற்காக அவரை நிச்சயம் குறைகூற முடியாது.

Shahrukh Khan in IPL
Shahrukh Khan in IPL

எந்த உருப்படியான திட்டங்களும் இல்லாத ஒரு நிலையற்ற அணியில் தனக்கென்ற நிலையான இடத்தை ஏற்படுத்திக்கொள்ள சரியான களம் ஷாரூக்கிற்கு அமையவில்லை என்றே சொல்ல வேண்டும். இதை மெய்யாக்கும் விதமாக அடுத்த வந்த சையத் முஸ்டாக் அலி தொடரில் தன் உண்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கர்நாடகாவிற்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இறுதிபந்து வரை நிதானம் இழக்காமல் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து பலரையும் புருவம் உயர்த்த செய்தார் அவர். ஆனால் அந்த ஒற்றை சிக்ஸருக்காக திருப்தி அடைய போவதில்லை ஷாரூக் . எதிர்கால இந்திய அணிக்காக இதுபோன்ற கடைசி பால் சிக்ஸர்களை பன்மடங்கில் விளாசிய பிறகே கொதித்து கொண்டிருக்கும் ஷாரூக்கின் இளம் ரத்த நாளங்கள் அடங்கும்.

தான் சந்திக்கும் ஒவ்வொரு பந்தையும் தன் முழு பலங்கொண்டு விளாவது மட்டுமே ஒரு பினிஷரின் பணி கிடையாது. போட்டியின் சூழ்நிலைக்கேற்ப சிங்கிள்கள் ஓடி, ஸ்ட்ரைக்குகள் மாற்றி இறுதியில் தன் அணியை கரைசேர்ப்பவனே ஒரு தேர்ந்த பினிஷர். தன் கரியரின் தொடக்க காலத்திலேயே ஷாரூக் கானிடம் வெளிப்படுகிறது இந்த முதிர்ச்சி. நேற்றைய ஆட்டத்தில் இதை மற்றுமொரு நிரூபித்திருக்கிறார் அவர். சரியான நேரத்தில் டேக் ஆப் செய்து மும்பை பௌலர்களை பந்தாடி வெறும் 35 பந்துகளில் ஷாரூக் விளாசிய ரன்கள் 66 ரன்கள்.

Shahrukh Khan
Shahrukh Khan

இந்தக் கட்டுரையை எழுத தொடங்கி நிறைவு செய்வதற்குள் மற்றுமொரு முறை சதம் விளாசினார் ருத்துராஜ் ( 143 பந்துகளில் 154 ரன்கள் vs சத்தீஸ்கர் ). கிளாஸ் ருத்து ஒருபுறம், மாஸ் ஷாரூக் மறுபுறம். எதிர்கால இந்திய அணியைக் கட்டி ஆளப்போகும் இளம்படையின் தளபதிகள் தங்கள் அணிவகுப்பைத் தொடங்கிவிட்டனர்.