ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் பங்கேற்ற இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதிபெறாமல் வெளியேறினர். இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வென்று கோப்பையைக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. இந்நிலையில் வீரர்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பத்தொடங்கியுள்ளனர்.

அப்படி தாயகம் திரும்பிய இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா பயன்படுத்தி வந்த ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு கைக்கடிகாரங்களை மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாகத் தகவல்கள் வெளிவந்தன. இந்த கைக்கடிகாரங்களைப் பணம் கொடுத்து வாங்கியதற்கான போதுமான ஆதாரங்கள் அவர் வசமில்லை என்பதே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ஹர்திக் பாண்டியா. "நவம்பர் 15-ம் அதிகாலை துபாயிலிருந்து நாடு திரும்பினேன். வந்ததும் நேராக மும்பை விமான நிலைய சுங்கவரி துறை கவுன்ட்டருக்குத்தான் சென்றேன். என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகளில் உண்மை இல்லை. நான் துபாயில் வாங்கிய பொருட்கள் அனைத்தையும் அவர்களிடம் சமர்ப்பித்தேன். அதற்கான வரியைச் செலுத்தவும் தயாராக இருந்தேன். அந்த பொருட்களை வாங்கியதற்கான ஆவணங்களை சுங்க வரித்துறையினர் கேட்டனர், அதையும் சமர்ப்பித்தேன். பொருட்களை மதிப்பிடும் பணியில் இருக்கிறது சுங்க வரித்துறை. அவர்கள் சொல்லும் வரியைக் கட்டத்தயாராக இருக்கிறேன்.
நான் வாங்கிவந்த வாட்ச்களின் மதிப்பு ரூ.5 கோடி அல்ல. அவை ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ளவை. இந்த நாட்டின் சட்டங்களையும் அரசுத் துறைகளையும் மதிப்பவன் நான். இந்த விஷயத்தில் அவர்கள் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறேன். நான் சட்டத்தை மீறியிருப்பதாக வரும் செய்திகள் பொய்யானவை" எனத் தெரிவித்திருக்கிறார் அவர்.