Published:Updated:

`தோஸ்து’ தோனி ரொம்ப பெட்... கிரிக்கெட் சரிப்பட்டு வரல! - மனம் திறந்த ஆர்.பி.சிங்

தோனி - ஆர்.பி.சிங்

தோனி அடிக்கடி சொல்லுவார் "உனக்கு கடின உழைப்பும் திறமையும் இருக்கிறது. ஆனாலும் உன்னால் முன்னேற முடியவில்லை அதற்கு உன் அதிர்ஷ்டம்தான் காரணம் என்று நினைக்கிறன்" எனக் கூறுவார் அதுவும் உண்மைதான்.

Published:Updated:

`தோஸ்து’ தோனி ரொம்ப பெட்... கிரிக்கெட் சரிப்பட்டு வரல! - மனம் திறந்த ஆர்.பி.சிங்

தோனி அடிக்கடி சொல்லுவார் "உனக்கு கடின உழைப்பும் திறமையும் இருக்கிறது. ஆனாலும் உன்னால் முன்னேற முடியவில்லை அதற்கு உன் அதிர்ஷ்டம்தான் காரணம் என்று நினைக்கிறன்" எனக் கூறுவார் அதுவும் உண்மைதான்.

தோனி - ஆர்.பி.சிங்

இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனியின் நெருங்கிய நண்பரும் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான ஆர்.பி.சிங் தோனி உடனான நட்பு குறித்தும், தன்னுடைய 13 வருட கால கிரிக்கெட் அனுபவங்கள் குறித்தும் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா உடனான உரையாடலில் மனம் திறந்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.பி.சிங். இந்திய அணிக்கு 2005-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானார். இந்திய அணிக்காக 13 ஆண்டுகள் விளையாடியுள்ள ஆர்.பி.சிங், 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகளையும், 58 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 69 விக்கெட்டுகளையும், டி20 போட்டியில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கடைசியாக 2011-ம் ஆண்டு இங்கிலாந்து தொடருக்கான அணியில் ஆர்.பி.சிங் இடம் பெற்றிருந்தார். அதன்பின் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

தோனி - ஆர்.பி.சிங்
தோனி - ஆர்.பி.சிங்

ஐபிஎல் தொடரில் 2008-ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு விளையாடிய ஆர்.பி.சிங், அதன்பின் கடைசியாக 2016-ம் ஆண்டு புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியிலும் இடம் பெற்றிருந்தார். இதுவரை 86 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மேலும் 94 முதல் தரப்போட்டிகளில் விளையாடி 301 விக்கெட்டுகளையும், உள்ளூர் டி20 போட்டிகளில் 132 போட்டிகளில் 142 விக்கெட்டுகளையும் ஆர்.பி.சிங் வீழ்த்தியுள்ளார்.

ராகுல் டிராவிட் தலைமையில் இங்கிலாந்தில் 2007-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்திய அணி வெற்றி பெற்ற அந்த டெஸ்ட் போட்டியில் ஆர்.பி.சிங் 117 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தியதை இந்திய ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

டி-20 உலக கோப்பையின் முதல் தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற பெருமையைத் தனதாக்கி கொண்ட ஆர்.பி.சிங்கால், அதன் பின் ஏனோ கிரிக்கெட்டில் பிரகாசிக்க முடியவில்லை.

தோனி
தோனி

தன் கிரிக்கெட் அனுபவங்களை ஆகாஷ் சோப்ரா உடன் பகிர்ந்து கொண்ட ஆர்.பி.சிங்,``கிரிக்கெட் துறையில் 13 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். தொடக்கத்தில் எனக்கு கிடைத்த வரவேற்பும் ஆதரவும் பின்னாளில் எனக்கு கிடைக்கவில்லை. மகேந்திர சிங் தோனியும் நானும் சமகாலத்து விளையாட்டு வீரர்கள்; சொல்லப்போனால் தோனியும் நானும் கிரிக்கெட்டுக்கு வருவதற்கு முன்பிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். நானும் தோனியும் ஒரு நேரத்தில்தான் இந்தத் துறைக்குள் அடியெடுத்து வைத்தோம். ஆனால், தோனி இன்று மளமளவென உயர்ந்து உச்ச நட்சத்திரமாக கிரிக்கெட்டில் பிரகாசித்துக்கொண்டிருக்கிறார்.

கிரிக்கெட்டில் தோனி அடைந்த உயரங்களை என்னால் அடைய முடியவில்லை. ஆனால், இன்றளவும் எங்கள் பிணைப்பு மிகவும் உறுதியாகவே இருக்கிறது. தோனி என் நெருங்கிய நண்பர். நாங்கள் இருவரும் இன்றளவும் பேசிக்கொண்டு அரட்டை அடிப்பதும் விடுமுறை நாள்களில் ஊர் சுற்றுவதும் என ஒருவருக்கொருவர் தொடர்பில்தான் இருந்து வருகிறோம்.

தோனி அடிக்கடி சொல்லுவார் "உனக்கு கடின உழைப்பும் திறமையும் இருக்கிறது. ஆனாலும் உன்னால் முன்னேற முடியவில்லை அதற்கு உன் அதிர்ஷ்டம்தான் காரணம் என்று நினைக்கிறன்" எனக் கூறுவார் அதுவும் உண்மைதான்.

கிரிக்கெட்டில் எனது செயல்பாடு சிறப்பாக இருந்தபோதிலும் என்னால் தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் எனக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. ஐ.பி.எல் போட்டிகளில் கிட்டத்தட்ட நான்கு சீஸன்களில் எனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறேன். ஆனாலும், என் அணி தலைவர்கள் என்னை பிளேயிங் லெவனில் சேர்க்க யோசித்தார்கள்.

கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்று எவ்வளவோ போராடிப் பார்த்தேன் என்னால் முடியவில்லை. நான் நன்றாக விளையாடிய போதிலும் அணி தேர்வர்கள் என்னை தேர்வு செய்யாமல் புறக்கணித்தனர். காரணம் கேட்டதற்கு `போராடிக்கொண்டே இருங்கள், நிச்சயம் ஒரு நாள் உங்களுக்கான நேரம் வரும்’ என்றனர். ஆனால், அந்த நேரம் இது வரையிலும் வந்ததாகத் தெரியவில்லை.

இனியும் கிரிக்கெட்டில் என்னால் முழு ஈடுபாட்டுடன் தொடர முடியாது எனத் தோன்றியது. அதன் காரணமாக 2018-ம் ஆண்டு அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன்" என்றார்.

தோனி ஓய்வு நாள்களில் அடிக்கடி சந்தித்து நேரத்தை செலவழிக்கும் ஒரே நபர் ஆர்.பி.சிங்தான். விளையாட்டில் இருவருக்கும் பல முரண்பாடுகள் இருந்துள்ள போதிலும் இன்றளவும் அவர்களின் பாசப் பிணைப்பு உறுதியாகவே இருக்கிறது.