Published:Updated:

தோனியைப் போலவே ராஸ் டெய்லரும் கொண்டாடப்பட வேண்டியவர்... ஏன் தெரியுமா? #RossTaylor

Ross Taylor
Ross Taylor ( AP )

இதோ 42-வது ஓவர் வரை ஐந்துக்கும் குறைவான ரன்ரேட்டோடு 8 விக்கெட்டுகளை இழந்திருந்த அணியை 273 என்ற அட்டகாசமான ஸ்கோருக்கு எடுத்துச் சென்றிருக்கிறார் ராஸ் டெய்லர். ஒவ்வொரு முறையும் நியூசிலாந்து அணியை, அது நிற்க வேண்டிய இடத்திலிருந்து ஒரு படி மேலே தூக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்.

மூன்று போட்டிகள்... மூன்று வெற்றி வாய்ப்புகள்... நழுவவிட்டார். மூன்றையும் நழுவவிட்டார். தன் கேப்டன் கையில் கொடுத்துச் சென்ற வாய்ப்பை, வெறும் ஆறு பந்துகள் தொலைவில் இருந்த வாய்ப்பை, தானாக எட்டிப்பிடித்த ஒரு வாய்ப்பை... ராஸ் டெய்லர் மூன்றையும் நழுவவிட்டார்! அணியின் மூத்த வீரர், 15 வருட அனுபவங்கள் கொண்டவர், தன் அணி வைட்வாஷ் ஆவதை ஒருமுறைகூடத் தடுக்க முடியவில்லை என்பது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததுதான். ஏன் அவரால்கூட ஏற்றுக்கொள்ள முடியாததுதான். ஆனால், ஒரு ஜாம்பவான் வீரரால் அதிலிருந்து மீண்டுவர முடியும். தோல்வியின் பிடியிலிருந்து வெற்றியைப் பறித்துப் பரிசளிக்க முடியும். ராஸ் டெய்லர், பிளாக் கேப்ஸின் மிகச் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் இந்த வாய்ப்பை நழுவ விடவில்லை.

 `90-ஸ் கிட்ஸ்'  கிராண்ட் ஸ்லாம் வென்றதேயில்லை... எதனால் தெரியுமா? #Tennis

முதல் 65 பந்துகளில் 93 ரன்கள். 10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள். குல்தீப்பை அற்புதமாகக் கட் செய்தார். சிக்கனமாகப் பந்துவீசிக்கொண்டிருந்த ஜடேஜாவின் பந்துகளை சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். அதையெல்லாம்விட, பும்ராவின் லென்த் பாலை அவ்வளவு அசால்டாக மிட் விக்கெட்டில் தெறிக்கவிட்டார். ஒவ்வொரு ஷாட்டிலும் அவருடைய அதே பலம். அந்த ஸ்லாக் ஸ்வீப்களில் அதே பழைய மிரட்டல். ஷர்துல் தாகூர் வீசிய 40-வது ஓவரின் கடைசி 3 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என அதிரடியின் உச்சத்தில் தாண்டவமாடிக்கொண்டிருக்கிறார். ஆனால், அந்த ஓவரோடு எல்லாம் மாறுகிறது.

Ross Taylor
Ross Taylor
AP

40-வது ஓவரின் கடைசிப் பந்தில் அவர் அடித்த பவுண்டரி, தேவைப்படும் ரன்ரேட்டை முதல் முறையாக ஆறு ரன்களுக்கும் குறைவாக்கியது. டெய்லர் களமிறங்கியபோது 7.75 ஆக இருந்த Required Run Rate, இப்போது 5.6. இந்திய பௌலர்களைச் சிதறவிட்ட புயல், இப்போது ஓய்ந்துவிட்டது. கடைசி 18 பந்துகளில் ஒரு பவுண்டரிகூட இல்லை. குல்தீப்பை ஸ்வீப் செய்யவில்லை, கட் செய்யவில்லை. மோசமான லென்தில் பந்துவீசிக்கொண்டிருந்த ஷர்துலைத் தண்டிக்கவில்லை. பும்ராவை... தீண்டவில்லை. தன் விக்கெட்டை இழக்க அவர் தயாராக இல்லை. 3 முறை நழுவவிட்டதை இம்முறையும் நழுவவிடத் தயாராக இல்லை. தன் திட்டத்தில் தீர்க்கமாக இருந்தார். இம்முறை அணியைக் கரைசேர்த்தார்.

ஆனால், இதை மூன்று தோல்விகள் கொடுத்த பாடம் என்று கருதிவிட முடியாது. இது டி-20 இல்லை... ODI! டெய்லரின் களம். 15 ஆண்டுகளாக ஆயிரம் ஆயிரம் ரன்களை, பல அசத்தல் சதங்களை, சில அசாத்திய சேஸ்களை சாத்தியப்படுத்திய களம். எதிரணி வெற்றி பெற்றுவிடும் என்று அனைவரும் நினைக்கும் போட்டிகளில், அத்தனை கனிப்புகளையும் பொய்யாக்கி, அந்த மாபெரும் இலக்கை அடையும் வித்தையை இன்றைய வீரர்களில் ராஸ் டெய்லரைப் போல் அறிந்தவர்கள் (மார்ஷியன் விராட் கோலியை மறந்துவிடலாம்) யாரும் இருக்க முடியாது.

Ross Taylor
Ross Taylor
AP

தனக்கென மிகச் சில டெம்ப்ளேட் ஷாட்கள் மட்டும் வைத்துக்கொண்டு, அதற்குள்ளாகவே மிகப்பெரிய இன்னிங்ஸ்களைக் கட்டமைப்பவர் டெய்லர். புல், ஸ்லாக் ஸ்வீப், கட்... இவைதான் அவரது ஆயுதங்கள். இவை மட்டும்தான். டிரைவ், ஃப்ளிக் போன்ற கிளாசிகல் ஷாட்களையோ, ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்விட்ச் ஹிட் போன்ற அன்ஆர்தடாக்ஸ் ஷாட்களையோ அவரிடம் அதிகம் பார்க்க முடியாது. டிரைவ், ஃப்ளிக் போன்ற ஷாட்களை அதிகம் ஆடாத ஒரு வீரரால், பெரும்பாலும் ஆன் சைட் மட்டுமே ஆடும் ஒரு வீரரால் தொடர்ச்சியாக 80+ ஸ்ட்ரைக் ரேட்டில், சுமார் 50 என்ற சராசரியில் எப்படி ஆட முடிகிறது? டெய்லரின் நிதானம்!

ஒருநாள் அரங்கைப் பொறுத்தவரை டெய்லரின் தரத்தைப்போல், அவரது நிதானமும் பெரிதாகப் பாராட்டப்படாத ஒன்று. எப்பேர்ப்பட்ட போட்டியிலும் எவ்வளவு பெரிய இலக்கையும் எந்தப் பதற்றமும் இல்லாமல், அதே பாடி லேங்குவேஜோடு கடைசி வரை ஆடுபவர். பொதுவாக அவரது அணுகுமுறையை ஒரு குறிப்பிட்ட கேடகரிக்குள் அடக்க முடியாது. வில்லியம்சன் முழுக்க முழுக்க நிதானமாக ஆடும் வீரர் இல்லை. முன்றோ போல் முழுநேர அதிரடி ஆட்டக்காரரும் இல்லை. போட்டியின் தன்மைக்கு ஏற்ப முழுக்க முழுக்க தன் அணுகுமுறையை அமைத்துக்கொள்பவர். ரன்ரேட்டுக்குத் தகுந்ததுபோல் மிகவும் எளிதாகத் தன் ஆட்டத்தை மாற்றிக்கொள்பவர். எந்த இடத்திலும் தன் நிதானத்தை இழக்காமல்! கோலியைப்போல்... வின்டேஜ் தோனியைப்போல்..!

Ross Taylor
Ross Taylor
AP

முதல் கியரிலிருந்து படிப்படியாக ஐந்தாவது கியருக்கு மாறுவது பல முன்னணி வீரர்களாலும் எளிதில் செய்ய முடியும். எளிது. ஆனால், நான்காவது கியரில் ஆடும் வீரர்கள் அவ்வளவு எளிதில் இரண்டாவது கியருக்கு வந்துவிட மாட்டார்கள். அது கடினமான விஷயம் ஒன்றுமில்லை. ஆனால், ஹைவேயில் பயணிப்பவர்களுக்கு ஆக்சிலரேட்டரிலிருந்து காலை எடுக்க மனம் வராதே! வெகுசிலருக்கு மட்டும்தான் அந்த நிதானம் இருக்கும். ஒருசிலருக்கு மட்டும்தான் டெய்லரின் அந்த அசாத்திய நிதானம் இருக்கும்.

ரன் ரேட் அதிகமாகத் தேவைப்படும் போட்டிகளில், நல்ல பார்ட்னர்ஷிப் அமையும் வரை காத்திருப்பார். அந்த நிதானம் அதிசயம் இல்லை. ஆனால், டாப் கியரில் பயணிக்கும்போதும் ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் காற்றில் பறந்து வரும் ஒரு இடது கை ஸ்பின்னரின் பந்தை, இன்சைட் அவுட் ஆடாமல், ஒவ்வொரு முறையும்... ஒவ்வொரு முறையும் லேட்டாகக் கட் செய்ய, பேக் ஃபூட் எடுத்து வைத்துக் காத்திருக்கும் அவரது அந்த நிதானம் நிச்சயம் மிகப்பெரிய ஆச்சர்யம்தான்!

Ross Taylor
Ross Taylor
AP

அவர் பொறுமையாக ஆடுவதற்கும் அதிரடியாக ஆடுவதற்கும் அவரது ஸ்டைலில் பெரிய வித்தியாசங்கள் தெரியாது. சிங்கிளுக்குப் போகும் பந்துக்கும் சிக்ஸருக்குப் போகும் பந்துக்கும் ஒரே பலம்தான் கொடுக்கப்படும். மிட்விக்கெட் பவுண்டரியைக் கடக்கும் புல் ஷாட்டும், ஸ்கொயர் லெக் ஃபீல்டரை அடையும் புல் ஷாட்டும் ஒன்றையொன்று ஒத்திருக்கும். அந்தப் பலம் அவருக்கு மிகப்பெரிய ப்ளஸ். ஸ்டம்ப் லைனில் வீசப்படும் பந்துகளை, அவர் லெக் செய்டில்தான் அடிக்க முற்படுவார் என்பது உலகறிந்த விஷயம். இவர் களத்திலிருக்கையில், டீப் மிட் விக்கெட், லாங் ஆன், டீப் ஸ்கொயர் லெக், டீப் ஃபைன் லெக் என ஆன் சைடு பவுண்டரியை ஃபீல்டர்கள் முற்றுகையிடுவது வழக்கம்தான். ஆனாலும் டெய்லர் ஆன் சைடிலேயே ஸ்லாக் ஷாட் ஆடுவார். பவுண்டரியை கிளியர் செய்வார். நியூசிலாந்துக்காரர்தான்... ஆனாலும், MCG-யின் பவுண்டரிகளையும் அசால்ட்டாகக் கிளியர் செய்வார்!

சொல்லப்போனால், டெய்லரின் பலவீனமும் இதுவாகத்தான் இருக்கும். பிளேஸ்மென்டை விட பலத்தைப் பிரதானப்படுத்துவது, அவரது ஸ்லாக் ஷாட்கள் எட்ஜாவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது.

நியூசிலாந்தின் 4 மிகப்பெரிய சேஸ்களில் மூன்றில் ராஸ் டெய்லர் சதமடித்திருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான இந்தத் தொடரின் முதல் போட்டியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் டெனெடினில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான மகத்தான சேஸில், 2007-ம் ஆண்டு ஆக்லாந்தின் ஆஸ்திரேலியாவைப் பணிய வைத்த போட்டியில்... நியூசிலாந்தின் 4 மகத்தான சேஸ்களில் மூன்றில் ஆட்டநாயகன் ராஸ் டெய்லர்!

Ross Taylor
Ross Taylor
AP

இப்படியான ஒரு வீரர் நிச்சயம் ஜாம்பவானாகக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், டெய்லர் அப்படிக் கொண்டாடப்படவில்லை. பாராட்டப்பட்டார்... டி வில்லியர்ஸ், தோனி, கோலி அளவுக்குக் கொண்டாடப்படவில்லை. மிடில் ஆர்டரில் இன்றுவரை 8,558 ரன்கள் குவித்திருக்கிறார். 50+ சராசரி வைத்திருக்கிறார். 21 சதங்கள், 51 அரைசதங்கள் என 72 முறை 50+ ஸ்கோரைக் கடந்திருக்கிறார். 198 போட்டிகளில் நான்காவது பொசிஷனுக்குக் கீழ்தான் களமிறங்கியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு வீரர் ஏன் அந்த டாப் வீரர்களோடு சேர்ந்து கொண்டாடப்படவில்லை! ஆச்சர்யம்தான்.

கோலி, தோனி இருவரும் கொண்டாடப்படுவதற்கு முக்கியக் காரணம் அவர்கள் போட்டிகளை தங்கள் அணிக்குச் சாதகமாக முடித்தது. வெற்றிகளை சாத்தியப்படுத்தியது. நான்காவது பொசிஷனுக்குக் கீழே அவர்களைவிட நல்ல சராசரி வைத்திருக்கும் ராஸ் டெய்லர், அவர்களுக்கு இணையாக இல்லாத ஒரே இடம் இது மட்டும்தான். ஆனால், இதிலும் அவரைக் குறை சொல்லிவிட முடியாது. அந்த விஷயத்தில் அவர்களின் தரத்துக்கு அவர் இல்லைதான். இருந்தாலும் பல போட்டிகளில் நியூசிலாந்துக்கு வெற்றி பெற்றுத் தந்துள்ளார். என்ன, தொடக்க காலங்களில் மிடில் ஆர்டரில் சரியான பார்ட்னர்கள் அவருக்கு அமையவில்லை.

Ross Taylor
Ross Taylor
AP
Vikatan

நியூசிலாந்து மிடில் ஆர்டரில் தரமான ஆல்ரவுண்டர்களைக் கொண்டிருந்தாலும், அவர்கள் கன்சிஸ்டென்டான பேட்ஸ்மேன்களாக இருக்கவில்லை. டெய்லருக்குப் பிறகு இப்போது டாம் லாதம் இருப்பதுபோல், அப்போது அவருக்கு ஒரு கன்சிஸ்டென்ட் பார்ட்னர் அமையவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் 69+ என இருக்கும் அவரது சராசரி சொல்லிவிடும், அவரது ஆட்டத்தில் ஒரு நல்ல பார்ட்னரின் தாக்கத்தை. இந்த 3 ஆண்டுகளைக் கணக்கில் கொண்டால், கோலி, தோனி, டி வில்லியர்ஸ் வரிசையில் ராஸ் டெய்லருக்கும் நிச்சயம் இடமுண்டு. ஜாம்பவான்கள் வரிசையில் அவருக்கு நிச்சயம் இடமுண்டு!

பின் செல்ல