தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆட்டநாயகன் விருதைப் பெற்ற ரோஹித், இது தனது வழக்கமான ஆட்டம் கிடையாது என்று தெரிவித்தார்.

வெற்றியுடன் உலகக் கோப்பை தொடரைத் தொடங்கியுள்ளது இந்திய அணி. நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் 8 -வது ஆட்டத்தில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடர்ச்சியாகக் கிடைத்த 3 -வது தோல்வியால் கலங்கிப்போய் உள்ளது தென்னாப்பிரிக்கா. பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டது. பந்துவீச்சில் சஹாலும் பேட்டிங்கில் ரோகித் ஷர்மாவும் கலக்கினர். ரோஹித் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆட்டநாயகன் விருதைப் பெற்ற ரோஹித்,' இது தனது வழக்கமான ஆட்டமல்ல' எனத் தெரிவித்தார். ``இந்தப் போட்டியின் தொடக்கம் முதல் இறுதி வரை மைதானம் பந்துவீச்சு சாதகமாக இருந்தது. இந்திய அணிக்கு, இந்தப் போட்டி ஒரு வித்தியாசமான அனுபவம் என்றுதான் சொல்ல வேண்டும். பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக சிறப்பாகப் பந்துவீசும்போது, தொடக்கத்தில் சில ஓவர்கள் பந்து எவ்வாறு இந்த ஆடுகளத்தில் செயல்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். அதைத்தான் செய்ய முயற்சித்தோம்.
எப்போதுமே சேஸ் செய்யும்போது நல்ல பார்ட்னர்ஷிப்புகள் அமைய வேண்டும். இது சிறிய இலக்குதான். ஆனாலும் ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்ததால், பார்ட்னர்ஷிப் மிக முக்கியம். மிடில் ஆர்டரில் களமிறங்கும் வீரர்கள் இதனைக் கருத்தில்கொள்ள வேண்டும். எப்போதுமே ஒரு வீரர் அணி சார்ந்து இருக்கக் கூடாது.
அனைத்துப் போட்டிகளிலும் ஏதாவது ஒருவர் பொறுப்பை உணர்ந்து விளையாடி வெற்றிப்பாதைக்கு அணியை அழைத்துச் சென்று விடுகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில், இதுதான் இந்தியாவின் ப்ளஸ்ஸாக இருக்கிறது.
இங்கிலாந்தில், ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் விளையாடி இருக்கிறோம். ஆனால் இது ஜூன். வானிலை நன்றாக இருக்கிறது. இந்தியாவில் இருப்பதுபோன்று சூடாக இல்லை. எனது ஆட்டத்தைப் பொறுத்தவரை, இது எனது வழக்கமான ஆட்டம் கிடையாது. தொடக்க ஓவர்களிலும் சிறப்பாக விளையாட வேண்டும்” என்றார்.