தினேஷ் லாட், மும்பையில் 26 ஆண்டுகளாக கிரிக்கெட் பயிற்சியாளராகப் பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். ரோஹித் சர்மா, ஷர்துல் தாக்கூர் போன்ற இன்றைய முன்னணி கிரிக்கெட் வீரர்கள் இவரிடம் பயிற்சி பெற்றவர்கள்தான்.
இந்நிலையில் அண்மையில் பேசிய இவர், இந்திய அணி சர்வதேசப் போட்டிகளில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது என்று விமர்சனம் செய்திருந்தார். மேலும், "இந்திய கிரிக்கெட் வீரர்கள், ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதைத் தவிர்த்துவிட்டு சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்று அறிவுரை கூறியுள்ளார்.

இது பற்றிப் பேசிய தினேஷ் லாட், "கடந்த ஏழு, எட்டு மாதங்களாக இந்திய அணி ஒரு நிலையாக இல்லை. உலகக்கோப்பைக்குத் தயாராக வேண்டுமென்றால் இந்திய அணி சிறப்பான அணியாக உருவெடுக்க வேண்டும். கடந்த ஏழு மாதங்களில் ஓப்பனிங் இன்னிங்ஸ் ஆட யாரோ வருகிறார்கள், யாரோ பந்து வீசுகிறார்கள். அணியில் ஒரு உறுதித் தன்மையே இல்லை. அவர்களுக்குப் பணிச்சுமை இருக்கிறதா என்று தெரியவில்லை. அவர்கள் கை தேர்ந்த முறையான விளையாட்டு வீரர்கள். எனவே பணிச்சுமை காரணத்தால் மட்டும் அவர்களால் சர்வேதேச போட்டிகளில் விளையாட முடியவில்லை என்று கூறிவிட முடியாது.
பணிச்சுமை இருக்கிறதென்றால் ஐபிஎல் போட்டிகளில் ஏன் அவர்கள் விளையாடுகிறார்கள்? சர்வதேச உலகக் கோப்பைப் போட்டிகளில் வெற்றிபெற வேண்டுமெனில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். முறையாக சர்வதேச போட்டிகள் அனைத்திலும் விளையாட வேண்டும். ஏனென்றால் இதன் மூலம் நிறையக் கற்றுக்கொள்ளலாம். சர்வதேச கிரிக்கெட்டில் எந்தச் சமரசமும் இருக்கக்கூடாது. இதுதான் நாம் விளையாட்டிற்குச் செய்யும் கெளரவம்" என்று கூறியுள்ளார்.