இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில் அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைத் தக்க வைத்திருக்கிறது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணியை வழிநடத்தி வரும் ரோஹித் சர்மாவைப் பலரும் பாராட்டி வரும் நிலையில், கோலி உருவாக்கிய டெம்ப்ளேட்டைதான் ரோஹித் சர்மா பின்பற்றி வருகிறார் என்று ரோஹித்தின் கேப்டன்ஷிப் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் சர்மா சிறந்த கேப்டன்தான். ஆனால் கேப்டன்ஷிப்பில் விராட் கோலி உருவாக்கிய டெம்ப்ளேட்டைத்தான் இவரும் பின்பற்றி வருகிறார். அவர் தனக்கென்று ஒரு தனி டெம்ப்ளேட்டை உருவாக்கவில்லை. விராட் கோலி கேப்டன்ஷிப்புக்கும், ரோஹித் சர்மா கேப்டன்ஷிப்புக்கும் பெரிதாக வித்தியாசம் எதுவுமில்லை.

இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்திய விராட் கோலி, அஷ்வின், ஜடேஜாவை எப்படி அணிக்காகப் பயன்படுத்தினாரோ அதையேத்தான் ரோஹித் சர்மாவும் தற்போது பின்பற்றுகிறார். ஆகவே, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் கலந்துக்கொள்ளும் போதுதான் ரோஹித் சர்மாவுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.