Published:Updated:

`ஓ... நாட் நவ்’... சொல்லி அடித்த ரோஹித்..! வைரலான வீடியோ

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாள் முடிவில் இந்திய அணி 224 ரன்களை எடுத்துள்ளது.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது மட்டும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டூப்ளெஸ்ஸி ஆசிய மண்ணில் டாஸ் அதிர்ஷ்டம் இல்லாமல் இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் டாஸ் வெல்வது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பெரிய அளவில் ரன்களைக் குவித்ததால் தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடி கொடுத்து வெற்றி பெற்றது.

`ஓ... நாட் நவ்’... சொல்லி அடித்த ரோஹித்..! வைரலான வீடியோ

டுப்ளெஸ்ஸிஸ் ஆசிய மண்ணில் கடைசியாக விளையாடிய 9 போட்டிகளில் டாஸை இழந்தார். சரி நமக்குதான் அதிர்ஷ்டம் இல்லைபோல சரி வேறொரு வீரரை டாஸ் போட அழைத்துச் செல்வோம் என முடிவெடுத்து. இன்றைய போட்டியின்போது பவுமாவை அழைத்துச் சென்றார். ஆனால், இந்த முறையும் இந்திய அணியின் கேப்டன் கோலியே டாஸ் வென்றார். இதையடுத்து விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய மயங்க் அகர்வால், புஜாரா இருவரும் விரைவிலேயே வெளியேறினர். அடுத்து வந்த கேப்டன் கோலியும் 12 ரன்களில் அவுட்டானார்.

இந்திய அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியதால் தென்னாப்பிரிக்கா வீரர்கள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், அவர்களது உற்சாகம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ரோஹித் சர்மா - ரஹானே இணை தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்களுக்குக் கடும் சோதனை அளித்தனர். இருவரும் அரைசதம் கடந்து விளையாடி வந்தனர். ஆட்டத்தின் 45 ஓவரின்போது மழைவருவதுபோல் இருந்தது. அப்போது ரோஹித் சர்மா 92 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தார். அந்த ஓவரின் முதல் பந்தில் 2 ரன்களை எடுத்தார். இரண்டாவது பந்தில் ஒரு சிங்கிள் எடுத்தார். இதையடுத்து ரஹானே பேட் செய்ய வந்தார். அப்போது கருமேகம் சூழ்ந்து லேசாக மழை பொழிவு இருந்தது. இதைக் கவனித்த ரோஹித் ‘இப்போது வேண்டாம்’ என்றார்.

அடுத்த பந்தில் ரஹானே சிங்கிள் கொடுக்க ரோஹித் மீண்டும் பேட்டிங் எண்ட் சென்றார். அந்த ஓவரின் 4 பந்தில் சிக்ஸர் விளாசி ரோஹித் தனது சதத்தை பூர்த்தி செய்தார். ரோஹித் சதமடித்ததும் அணி வீரர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தத் தொடரில் ரோஹித் அடித்த மூன்றாவது சதம் இதுவாகும். போதிய வெளிச்சம் இல்லாததால் 58-வது ஓவருடன் முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. முதல் நாள் முடிவில் இந்தியா அணி 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்களை எடுத்துள்ளது.ரோஹித் சர்மா 117 ரன்களுடனும் ரஹானே 83 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் ரபாடா 2 விக்கெட்களையும் நார்ட்ஜே 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.