Published:Updated:

மீம்ஸ் எல்லாம் உரம்... இனி இப்படித்தான் இருக்கும் ரோஹித்தான் இன்னிங்ஸ்! #RohitSharma #INDVsSA

Rohith Sharma
Rohith Sharma

ஒருநாள், டி20 போட்டிகளில் ரோஹித் ஹிட்மேன். அவர் அடிக்க ஆரம்பித்தால் அடி விழாது எதிர் டீமுக்கு இடி விழும். ரோஹித் 50 ரன்களை கடந்து விட்டால் எதிர் அணி டீம் கேப்டனுக்கு குளிர் காய்ச்சல் அடிக்க ஆரம்பிக்கும்.

''ரோஹித் ஷர்மா white ball கிரிக்கெட் பிளேயர்ங்க... அவரைப்போய் டெஸ்ட் கிரிக்கெட்ல ஓப்பனரா இறக்குறீங்க ...உங்களுக்கு புத்திகெட்டு போச்சா?'', ``பாத்திங்களா நாங்க சொன்ன மாதிரியே ப்ராக்டீஸ் மேட்ச்லகூட டக் அவுட் ஆயிட்டார்.... அவருக்கு எல்லாம் டெஸ்ட் கிரிக்கெட் ஒத்து வராதுங்க''- கடந்த ஒரு வாரமாக ரோஹித் ஷர்மாவைப் பற்றி அவ்வளவு கேலிகள், கிண்டல்கள், மீம்கள்...

ஆனால், அத்தனை கிண்டல்களையும் அடித்து தூள் தூளாக்கிவிட்டார் ரோஹித். கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு அழைத்துச்செல்லப்பட்டு பென்ச்சில் உட்காரவைக்கப்பட்ட ரோஹித், நேற்று அடித்தது 115 ரன்கள். 12 பவுண்டரி, 5 சிக்ஸர்கள். கிட்டத்தட்ட ஒரு ஷேவாக்கின் இன்னிங்ஸை நேற்று ஆடினார் ரோஹித். சதம் அடித்ததும் கூச்சலோ, கோபமோ, `நான் யார்னு தெரியுதா?' என்கிற ஸ்டைல் ஸ்டேட்மென்ட்களோ எதுவும் இல்லை. வானத்தைப் பார்த்து ஒரு நன்றி சொல்லிவிட்டுக் கடந்துவந்துவிட்டார் ரோஹித். ஆமாம், மீம்கள் எல்லாம் உரமாக அத்தனை கிண்டல்களுக்கும் தனது பேட்டால் பதிலடி கொடுத்திருக்கிறார் God's gifted player.

“ When Rohit Sharma was born Doctors said 'Congrats! Talent was born'.
வீரேந்திர ஷேவாக்

ஷேவாக் சொன்னதுபோல் ரோஹித் உண்மையிலேயே மிகவும் திறமையான வீரர் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஒருநாள், டி20 போட்டிகளில் ரோஹித் ஹிட்மேன். அவர் அடிக்க ஆரம்பித்தால் அடி விழாது, எதிர் டீமுக்கு இடி விழும். ரோஹித் 50 ரன்களைக் கடந்து விட்டால் எதிர் அணி டீம் கேப்டனுக்குக் குளிர் காய்ச்சல் அடிக்க ஆரம்பிக்கும். ஆமாம், அவர்களுக்குத் தெரியும் ரோஹித் 50 ரன்களோடு நிற்பவர் அல்ல என்று. 200 ரன்கள் இவர் பேட்டில் சாதாரணம். பெளலர்கள் போடும் பந்துகள் இவர் பேட்டுக்கு வந்தால் தரையில் போகாது, அந்தரத்தில் பறக்கும். பவுண்டரிகளாகவும் சிக்ஸர்களாகவும் 50 ரன்களிலிருந்து 150 ரன்களை அசாதாரணமாக 40 பந்துகளில் கடந்துவிடுவார் இந்த அசுரன்.

ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறிக்கொண்டிருந்தார் ரோஹித். ஒருநாள், டி20 போட்டிகளில் தவிர்க்கமுடியாத டாப் வீரராக இருந்த ரோஹித் ஷர்மாவை வைத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்ளே வெளியே ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தது இந்திய அணி. அவருக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் கொஞ்சம் சாதித்தார். நிறையவே சறுக்கினார். மிடில் ஆர்டர் பேட்டிங் பொசிஷன் அவருக்குக் கைகொடுக்கவில்லை.

``மூச்சு நின்றால் மட்டும் மரணம் அல்ல முயற்சி நின்றாலும் மரணம்தான்" - ஆமாம், ரோஹித் ஷர்மா கடைசி வரை தனது முயற்சியைக் கைவிடவில்லை. டெஸ்ட் அணிக்குள் நுழைய தொடர்ந்து போராடிக்கொண்டே இருந்தார்.

ஷேவாக் இந்திய அணியில் அறிமுகமானபோது மிடில் ஆர்டரில் ஆடினார். ஆனால், அப்போது இந்திய அணியின் மிடில் ஆர்டர் என்பது ஜாம்பவான்களால் நிரம்பியிருந்தது. டிராவிட், சச்சின், லட்சுமணன் என அசைக்கமுடியாத வீரர்கள் இருந்தார்கள். அப்போது கங்குலி ஷேவாக்குக்கு ஒரு ஆப்ஷன் கொடுத்தார். ``ஓப்பனிங் ஸ்லாட் மட்டும்தான் இருக்கு. அதில் இறங்கி உங்க திறமையை நிரூபிச்சா நீங்கதான் இந்தியாவின் நிரந்தர ஓப்பனர்'' என்று. அப்படி ஓப்பனிங் ஆட வந்த ஷேவாக்தான் இந்தியாவின் விவியன் ரிச்சர்ட்ஸாக மாறினார்.

Rohith Sharma
Rohith Sharma

இப்போது கிட்டத்தட்ட அதேநிலைதான் ரோஹித் ஷர்மாவுக்கும். வெஸ்ட் இண்டீஸில் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டவருக்கு தென் ஆப்பிரிக்க டூர் கடைசி வாய்ப்பாகக் கொடுக்கப்பட்டது. மிடில் ஆர்டர் இடங்கள் எல்லாம் நிரப்பப்பட்டுவிட்டதால் ஷேவாக்கைப் போல கடைசி வாய்ப்பாக ஓப்பனிங் ஸ்லாட். இந்த சீரிஸ் கிட்டத்தட்ட வாழ்வா, சாவா தொடர் என ஆனது. ஆனால், முதல் டெஸ்ட்டுக்கு முன்பாக தென் ஆப்பிரிக்க அணியுடன் பயிற்சி போட்டி நடந்தது. அந்தப் போட்டியின் கேப்டன் ரோஹித்தான். ஆனால், டக் அவுட் ஆனார் ரோஹித். எல்லோருமே சிரித்தார்கள். இந்திய அணியில் இருந்தவர்கள் உட்பட.

ரோஹித் ஷர்மாவைப்போலவே ஒருநாள் போட்டிகளில் அதிரடியாக ஆடக்கூடிய ஆஸ்திரேலியாவின் ஃபின்ச்சும், இங்கிலாந்தின் ஜேசன் ராயும் டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் ஆடவைக்கப்பட்டனர். ஆனால், அந்த முயற்சிகள் படுதோல்வியில் முடிந்தன. இதேநிலைதான் ரோஹித்துக்கும் ஏற்படும் என ஆருடம் சொன்னார்கள் கிரிக்கெட் நிபுணர்கள். ஆனால், ரோஹித் யார் சொன்னதையும் காதில் வாங்கவில்லை. அவருக்குத் தெரியும்... ஒரு சதம் என்னவெல்லாம் செய்யும் என்று. அந்த சதத்தை நோக்கித்தான் விசாகப்பட்டினத்தில் பயணமானார் ரோஹித்.

டெஸ்ட் கிரிக்கெட்டில், அதுவும் ஓப்பனிங் பேட்ஸ்மேனுக்கு இருக்கும் பெரிய சவால் அவுட் சைட் ஆஃப் போகும்பந்துகளைக் கையாளத் தெரியவேண்டும். அந்தப் பந்தை பேட்டால் கொஞ்சம் தொட்டாலும் எட்ஜாகி கீப்பர், ஸ்லிப்புகளின் கைக்குப் போய்விடும். நேற்றும் ரபாடா, ஃபிலாண்டர் இருவரும் சரியான லைன் அண்ட் லென்த்தில் ரோஹித் ஷர்மாவுக்கு ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே பந்துகளைப் போட்டுக் கொண்டேயிருந்தனர். 10 ஓவர்கள் வரை பொறுமை காத்தார் ரோஹித். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வந்த பந்துகளை பேட்டால் தொட முயற்சி செய்யவில்லை. ஆனால், பந்து கொஞ்சம் பழசானதும் தனது ஒன் டே கிரிக்கெட் ஃபார்முலாவைக் கையில் எடுத்தார். இதுவும் ஷேவாக் சொல்லிக்கொடுத்ததுதான். பந்துகள் நாலாப்பக்கமும் தெறித்துஓட ஆரம்பித்தன. ரோஹித்தின் ரன்கள் உயர ஆரம்பித்தன.

Rohith Sharma
Rohith Sharma

இப்போதும் கேள்விகள் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. இந்திய பிட்ச்களில் ரோஹித்தின் ஆட்டம் எடுபடலாம். ஆனால், தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் எல்லாம் ரோஹித்தால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்கள். ரோஹித்தின் காதுகளிலும் இந்த விமர்சனங்கள் விழுந்திருக்கின்றன. பொறுத்திருப்போம், தனது பேட்டால் பதில் சொல்லக் காத்திருக்கிறார் ரோஹித்.

கேலிகளும் அவமானங்களும் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கும். அதை நிரந்தரமாக்குவதும் தற்காலிகமாக்குவதும் அவனவன் கையில். நிரந்தரமாக்கினால் அவன் ஏமாளி. தற்காலிகமாக்கினால் அவன் புத்திசாலி. ரோஹித் புத்திசாலி!

இந்திய டெஸ்ட் அணியில் ஷேவாக் இருக்கும் வரை முதல் நாளே ஸ்கோர் 350 ரன்களைத் தொட்டுவிடும். முதல் செஷனிலேயே சில நேரங்களில் சதம் அடித்துவிடுவார் ஷேவாக். அந்தப் பொற்காலம் ரோஹித் ரூபத்தில் வரக் காத்திருக்கிறது. காத்திருப்போம்... ரோஹித்தானின் வெறித்தன இன்னிங்ஸ்களைக் காண!

அடுத்த கட்டுரைக்கு