Published:Updated:

மூன்று ஃபார்மேட்டிலும் கேப்டனாக சதம் அடித்த இந்தியர்; முழுமையான டெஸ்ட் வீரராகிவிட்டாரா ரோஹித் சர்மா?

ரோஹித் சர்மா ( Rafiq Maqbool )

சென்னை சதத்திற்கு அடுத்தபடியாக இது ரோஹித்திற்கு மனதிற்கு நெருக்கமான ஒன்றாக மாறியுள்ளது. ஏனெனில் சதமின்றிக் கழித்த இருண்ட 2022-க்குப் பிறகு கம்பேக் கொடுக்கும் வகையில் 41 நாள்களில் இரு சதங்களை 2023-ல் ரோஹித் அடித்திருக்கிறார்.

Published:Updated:

மூன்று ஃபார்மேட்டிலும் கேப்டனாக சதம் அடித்த இந்தியர்; முழுமையான டெஸ்ட் வீரராகிவிட்டாரா ரோஹித் சர்மா?

சென்னை சதத்திற்கு அடுத்தபடியாக இது ரோஹித்திற்கு மனதிற்கு நெருக்கமான ஒன்றாக மாறியுள்ளது. ஏனெனில் சதமின்றிக் கழித்த இருண்ட 2022-க்குப் பிறகு கம்பேக் கொடுக்கும் வகையில் 41 நாள்களில் இரு சதங்களை 2023-ல் ரோஹித் அடித்திருக்கிறார்.

ரோஹித் சர்மா ( Rafiq Maqbool )
ஆடும் களத்தை எல்லாம் தனதாக்குவது திறமை என்றாலும் யாராலுமே ஆடமுடியாத களத்தில் கோலோச்சுவதுதான் வல்லமை.

டெஸ்ட் ஃபார்மேட் 'சிறந்த வீரர்' என்ற பாராட்டுப் பத்திரத்தை எல்லோருக்கும் தந்துவிடாது. அதிலும் சுழலுக்கு ஏற்ற இந்தியக் களங்கள் ஆளையே விழுங்கும் புதைகுழிகள். ஒரு வீரரின் அத்தனை திறமைகளுக்குமான நேர்காணலை அவை வைக்கும். ஒவ்வொரு நிலையிலும் வீடியோ கேமின் லெவல் கூடக்கூட கடினத்தன்மை அதிகரிப்பதைப் போல போகப்போகச் சவால்கள் பலமடங்காகும். இதைச் சமாளிப்பதே எரிமலைக் குழம்பில் எதிர்நீச்சல் போடுவது போன்றதுதான். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட் தன்முன் தூக்கி எறியும் ஒவ்வொரு சவால்களின் மீதும் ஏறிநின்று தனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார் ரோஹித் சர்மா.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

நடப்புத்தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே குற்றவாளிக் கூண்டில் பலமுறை ஏற்றப்பட்ட நாக்பூர் பிட்ச் போல டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித்தின் பூரணத்துவம் குறித்தும் பல ஆண்டுகளாக கேள்விக்கணைகள் எட்டுத்திக்கிலிருந்தும் ஏவப்பட்டுக் கொண்டே தானிருந்தன. அவரது லிமிடெட் ஃபார்மேட் அறிமுகத்திற்கும் டெஸ்ட் உலகில் குடிபுகுந்ததற்குமான கால இடைவெளியே அதற்கான சான்று. அறிமுக டெஸ்டிலும் அதற்கடுத்த டெஸ்டிலும் சதமடித்து ரோஹித் நிரூபித்தும்கூட முதல் மதிப்பெண் வாங்கும் மாணவனிடம் ஆசிரியருக்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதைப்போல, "Give Me More" என டெஸ்ட் ஃபார்மேட் அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தது.

சுழல் சாட்டை, சகவீரர்களைச் சுருட்டிய சென்னை டெஸ்டில் அவர் ஆடிய ஆட்டமே சுழல் பந்துவீச்சை எதிர்கொள்ளப் பயிற்றுவிக்கும் பாடப்புத்தகத்தில் பல்லாண்டுகளுக்கு வைக்கப்பட வேண்டிய ஒன்று. இங்கிலாந்து மண்ணில் ஆண்டர்சனின் ஸ்விங் பந்துகளை அவர் கையாண்ட விதமோ அவரை டிஸ்டிங்க்சனோடு பாஸ் செய்யவைத்தது. இறுதியாக இப்போது வந்திருக்கும் நாக்பூர் டெஸ்ட் சதமோ, இணையற்ற வீரர்களில் ஒருவர் என்பதற்கான சான்றிதழையும் வழங்கியிருக்கிறது.
ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

வேகமான களங்களில் எகிறிவரும் பந்துகளைச் சந்திக்க அளவுகடந்த துணிவு வேண்டுமென்றால் 'Low' மற்றும் 'Slow' பிட்சுகளில் ஆட அசாத்திய சாமர்த்தியமும் பொறுமையும் அவசியம். சச்சின், டிராவிட், சேவாக் உள்ளிட்ட சுழற்பந்தைச் சுலபமாகச் சமாளித்த இந்தியாவின் முந்தைய தலைமுறை வீரர்கள் எல்லோருமே மதிப்புக்கூட்டப்பட்ட உத்திகளோடு வலம் வந்தவர்கள். நடப்பு இந்திய அணியில் அவர்களது சாயலோடு ஸ்பின் பந்துகளை ரோஹித்தான் கையாண்டு வருகிறார். இந்த இன்னிங்ஸும் அப்படிப்பட்ட பல தருணங்களைக் காட்சிப்படுத்தியது.

களத்தைக் கணிப்பது, பௌலரின் கரங்களிலிருந்து விடுபடும் முன்பே அந்த வேரியேஷனை உணர்வது, பந்தின் லெந்தை அறிந்துகொண்டு அதற்கேற்ப ஷாட்களைத் தேர்ந்தெடுப்பது என ஒவ்வொரு படிநிலையிலும் ரோஹித்தின் ஆட்டம் தெளிந்த நீரோடை போலிருந்தது. பந்துகளைத் தாமதமாகச் சந்திக்கும் பாலபாடமும் சரியாகவே கடைபிடிக்கப்பட்டது.

கம்மின்ஸ் வீசி எதிர்கொண்ட தனது இன்னிங்ஸின் முதல் பந்தையே பவுண்டரியாக மாற்றித்தான் ஆட்டத்தைத் தொடங்கினார் ரோஹித். அந்த ஓவரிலேயே இன்னமும் இரண்டு பவுண்டரிகள் வந்து சேர்ந்தன. அங்கிருந்து கம்மின்ஸின் பந்துகள் மட்டுமல்ல லயானின் ஓவர்களும் அவரால் சூறையாடப்பட்டன. சில மாதங்களுக்கு முன்பாக ஓடி ரன் சேர்க்கத் திணறுகிறார் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வதில்லை என்ற குறை லிமிடெட் ஃபார்மேட்டில் அவர் மீது வைக்கப்பட்டது. ஆனால் இப்போட்டியில் அதிலும் அவர் தன்னைச் செம்மைப்படுத்திக் கொண்டிருந்தார்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா
Rafiq Maqbool

முதல் பாதி மொத்தமும் பௌலர்ளை அட்டாக் செய்து ஆடியிருந்தார். 66 பந்துகளில் அரைசதம் வந்தபோது எட்டு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடிக்கப்பட்டிருந்ததே அந்த ஆட்டத்தில் தெறித்த அக்ரஷனுக்கான குறியீடுகள். களத்தின் Uneven Bounce-ஐ கருத்தில் கொண்ட ஸ்வீப் ஷாட்டுகளை சென்னை இன்னிங்ஸ் போலில்லாமல் பெரும்பாலும் தவிர்த்திருந்தார். இரண்டாவது நாள் தொடர்ந்த அவரது இரண்டாவது பாதி ஆட்டத்திலோ நிதானமே நிரம்பியிருந்தது. மறுபுறம் விக்கெட்விழ அவருக்கான பொறுப்புகள் பல மடங்கு அதிகரித்தது. அதனையும் மிகச்சிறப்பாகவே கையாண்டார்.

வாழ்வில் பக்குவப்பட்ட மனிதன் அடுத்தடுத்து எடுத்துவைக்கும் அடிகள் அடுத்தகட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் அவனை நகர்த்துவதாக இருக்கும். ரோஹித்தின் அணுகுமுறைகூட அப்படியானதாகவே இருந்தது. களம் மற்றும் நல்ல பந்துகளுக்கான மரியாதையும் அவரிடமிருந்து நிரம்பவே வெளிப்பட்டது. அதேசமயம் பயந்து அடிபணிந்தும் விடவில்லை. லயானின் பந்துகளை டவுன் தி டிராக்கில் இறங்கிவந்து பவுண்டரிக்கு அனுப்பியது முதல் கம்மின்ஸின் ஷாட் பாலில் தனது டிரேட்மார்க் புல்ஷாட் ஆடியதுவரை எனத் தனக்குள் இருந்த அக்ரஷனுக்கு அவ்வப்போது தீனிபோட்டுக் கொண்டார்.

தொடக்கத்தில் ஒன்றிரண்டு ரன்களோடு மர்பியின் ஓவர்களை வரவேற்றதிலிருந்து, பின் அவரது ஒரே ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்ததுவரை எனத் தனது இரண்டு எதிர்புற எல்லைகளையும் அவருக்குக் காட்டினார். சரணடைவதற்கும் வதம் செய்வதிற்கும் இடையே ஒரு சமநிலையோடு மிதிவண்டி பயணம் போல அந்த பேலன்ஸை அப்படியே முன்னோக்கி எடுத்துச் சென்றார். இருபுறமும் ஸ்பின்னர்களை வைத்துத் தாக்கியபோதும் அந்த நிதானம் தவறவில்லை. அதில் அவரது அதீத கவனம் வெளிப்பட்டது. அரைசதம் 66 பந்துகளில் வந்திருந்தது, சதமோ ஒட்டுமொத்தமாக 171 பந்துகள் காக்கவைத்தது. காரணம் சதத்திற்காக அவர் அவசரப்படவில்லை, மெய்டன் ஓவர்கள் குறித்து கவலையும் கொள்ளவில்லை, ஆட்டத்தின் போக்கிலேயே அதை எடுத்துச்சென்றார்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா
இறுதியில் மர்பியின் பந்தில் அடித்த இன்சைட்அவுட் Lofted Drive-ன் மூலமாக அந்தச் சதத்தை அவர் பூர்த்தி செய்தபோதும் வழக்கம்போலவே பெரிய ஆர்ப்பாட்டமோ ஆக்ரோஷமோ அவரிடமிருந்து வெளிப்படவில்லை. ஹெல்மட்டைக்கூட கழற்றவில்லை. மாறாக ஒருவிதமான திருப்தியே அந்த அழகிய புன்னகையில் ஒளிந்திருந்தது. சென்னை சதத்திற்கு அடுத்தபடியாக இது ரோஹித்திற்கு மனதிற்கு நெருக்கமான ஒன்றாக மாறியுள்ளது. ஏனெனில் சதமின்றிக் கழித்த இருண்ட 2022-க்குப் பிறகு கம்பேக் கொடுக்கும் வகையில் 41 நாள்களில் இரு சதங்களை 2023-ல் ரோஹித் அடித்திருக்கிறார்.

கேப்டனாக தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்ததன் மூலமாக மூன்று ஃபார்மேட்களிலும் கேப்டனாக சதம் அடித்த ஒரே இந்தியர் என்பது மட்டுமல்ல, 2020-க்குப்பிறகு ரோஹித்தின் டெஸ்ட் ஆவரேஜ் 59.8 ஆகவும் மற்ற சமகால இந்திய பேட்ஸ்மேன்களின் சராசரிகளின் சராசரி வெறும் 21.7 ஆகவும் மட்டுமே இருக்கிறது. குறிப்பாகக் கடந்த ஆறாண்டுகளில் இந்திய டெஸ்ட் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பின் சராசரி, ரோஹித் இருக்கும்போது 48 ஆகவும் இல்லாதபோது 29.7 ஆகவும் இருக்கிறது. 2017-க்குப்பின்பு ஆடியுள்ள 25 டெஸ்ட்களில் ஏழு சதங்களையும் ரோஹித் அடித்துள்ளார். 2021-க்குப் பிறகு ஆசியக்களங்களில் ஆஃப் ஸ்பின்னுக்கு எதிராக ஒரே ஒருமுறை மட்டுமே விக்கெட்டை விட்டிருக்கிறார், சராசரியோ 163 என்பது ஸ்பின்னுக்கு எதிராக அவரை தலைசிறந்த பேட்ஸ்மேனாக முன்னிறுத்துகிறது.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

கடினமான களசூழல், அல்லாட வைக்கும் எதிரணி, பார்டர் கவாஸ்கர் தொடர் என்னும் பெரிய மேடை, அதிலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான ஓட்டப்பந்தயத்தில் ஒரு பகுதி எனப் பன்முக சவால்கள் நெருக்கடி தந்தன. ஆனால் அவை ஒவ்வொன்றையும் அசிரத்தையாக அவர் சமாளித்த விதம்தான் அவரை தனித்தன்மை உடையவராக்குகிறது.

ஒரு முழுமையான டெஸ்ட் பேட்ஸ்மேனாக விமர்சனங்களை மௌனிக்க வைத்து அவர் சாதிக்கும் ஒவ்வொரு கணமும், தரவுகளும் ரெக்கார்டுகளும் தரமுடியாத எல்லையற்ற ஆனந்தத்தை அவருக்குப் பெற்றுத் தருகின்றன, இனியும் அது தொடரும்!