இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2 - 1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
அகமதாபாத்தில் நடைபெற்ற இதன் இறுதிப்போட்டியின் முடிவில் இந்தியாவின் வெற்றியை மைதானத்திலிருந்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இதற்கிடையில் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியை நோக்கி சிலர் 'ஜெய் ஶ்ரீராம்... ஜெய் ஶ்ரீராம்' எனக் கத்தி கூச்சலிட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. பலரும் முகமது ஷமிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து, கூச்சலிட்ட நபர்களைக் கண்டித்துப் பேசியிருந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள கேப்டன் ரோஹித் சர்மா, "முகமது ஷமியை நோக்கி 'ஜெய் ஶ்ரீராம்... ஜெய் ஶ்ரீராம்' எனக் கோஷமிட்டது எனக்குத் தெரியாது. முதல் முறையாக இதுபோன்று கேட்கிறேன். அங்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார். ரோஹித்தின் இந்தப் பேச்சு பொறுப்பில்லாமல் இருப்பதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதேபோல 2021-ல் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பையில் இந்தியா தோல்வியடைந்தபோது ஷமி மீது இதேபோன்ற மத ரீதியிலான தாக்குதல்களை சில கும்பல்கள் செய்தன.

அப்போதைய கேப்டன் விராட் கோலி, ஷமிக்கு ஆதரவாக, "மதத்தை வைத்து ஒருவரைத் தாக்குவது என்பது என்னைப் பொறுத்தவரை மனிதர்களின் பரிதாபத்திற்குரிய செயல். முதுகெலும்பில்லாத சிலர், தனிப்பட்ட நபரைப் பற்றித் தரம் தாழ்ந்து பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. மதம் என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரீதியிலான நம்பிக்கை" என்று தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் இதுபோன்று ஷமி மீதான மத வெறுப்புத் தாக்குதல் குறித்து ரோஹித் சர்மா பேசியுள்ளதையும், விராட் கோலி பேசியுள்ளதையும் சமூக வலைதளங்களில் ஒப்பிட்டுப் பதிவு செய்து கிரிக்கெட் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
முகமது ஷமியின் விவகாரத்துப்பிறக்கு பேசிய ரோஹித் சர்மா, ஐபிஎல் மற்றும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து நடைபெறுவதை எப்படிக் கையாளுவது எனப் பேசியுள்ளார்.
2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC) இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் தகுதி பெற்றுள்ளன. இதற்கான இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7, 2023 அன்று தொடங்க உள்ளது. இதற்கிடையில் இந்த வருட ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 31ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி முடிவடைகிறது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள், ஐபிஎல் போட்டியை முடித்துவிட்டு உடனே மீண்டும் ஜூன் 7 நடைபெறும் WTC இறுதிப் போட்டிக்குத் தயாராக வேண்டும்.

ஏற்கெனவே ஐபிஎல் போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடிச் சோர்ந்து போவதால் அவர்களால் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடிவில்லை என்ற விமர்சனத்தைப் பலரும் கூறிவருகின்றனர். இந்நிலையில் இந்தக் குறுகிய இடைவெளியில் இந்திய வீரர்கள் எப்படி WTC இறுதிப் போட்டிக்குத் தயாராக முடியும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்நிலையில் 2023 ஐபிஎல் தொடரில் பிளேஆஃப்களில் பங்கேற்காத வீரர்களை WTC இறுதிப்போட்டிக்குத் தயாராவதற்காக முன்கூட்டியே இங்கிலாந்துக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள அவர், "இது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், WTC இறுதிப் போட்டிக்கான முன்தயாரிப்புகள் நிச்சயம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். மே 21-ம் தேதி, ஐபிஎல் ப்ளேஆஃப் போட்டிகளுக்கு முன்னதாக ஆறு அணிகள் தொடரிலிருந்து வெளியேறியிருக்கும். அதில் எந்தெந்த வீரர்கள் இந்திய டெஸ்ட் அணியில் இருக்கிறார்களோ, அவர்களை முடிந்தவரைச் சீக்கிரம் இங்கிலாந்துக்கு அனுப்பிவிடுவோம். முடிந்தவரை இதற்காக முறையான நேரத்தை ஒதுக்கிக் கண்காணித்து இதனைத் திட்டமிடுவோம். அனைத்து வீரர்களுடனும் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கப் போகிறோம். மேலும், அவர்களின் பணிச்சுமையை அவ்வப்போது பார்த்து அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதையும் கண்காணிப்போம். இந்த இறுதிப் போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானது" என்று கூறியுள்ளார்.