Published:Updated:

`எந்த பிளானும் இல்லை... அந்த தவறுக்காகக் காத்திருந்தேன்!’- ஹிட்மேன் ரோஹித் சொல்லும் சிக்ஸர் ரகசியம்

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டிகளில் இந்திய அணி த்ரில் வெற்றிபெற்றது.

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டி, ஹாமில்டனில் இன்று நடந்தது. 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களை இந்திய அணி வென்றிருந்ததால், இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் தொடரை வென்றுவிடலாம் என்ற முனைப்புடன் களமிறங்கியது. இந்தப் போட்டியை வென்றால் இந்தியாவுக்கு டஃப் கொடுக்கலாம், சொந்த மண்ணில் தொடரை இழக்கக்கூடாது என நியூஸிலாந்து களமிறங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கனே வில்லியம்ஸன் பந்துவீச்சை தேர்வுசெய்தார்.

கனே வில்லியம்ஸன், கோலி
கனே வில்லியம்ஸன், கோலி

இந்தியாவின் இன்னிங்ஸை ரோஹித் ஷர்மா - கே.எல்.ராகுல் தொடங்கிவைத்தனர். ரோஹித், ஆரம்பம் முதலே அதிரடி காட்டத் தொடங்கினார். கே.எல்.ராகுல், அவருக்கு நன்கு ஒத்துழைப்பு வழங்கினார். இந்திய அணியின் ரன்ரேட்டு 9-க்கும் மேல் இருந்தது. 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 9-வது ஓவரின் கடைசி பந்தில் கே.எல்.ராகுல் விக்கெட் இழந்தார். அப்போது, இந்திய அணி 89 ரன்கள் எடுத்திருந்தது.

`என் ஃபார்முலாவை மாற்றிவிட்டேன்!'- வெற்றி ரகசியம் சொல்லும் கே.எல்.ராகுல்

இதையடுத்து, சிவம் துபே களமிறங்கினார். ரோஹித் அதிரடியாக விளையாடியதால், எப்படியும் ஸ்கோர் 200-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ரோஹித் 69 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து, இந்திய அணியின் ரன்குவிப்பை நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில், இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்து தரப்பில் பெனட் 3 விக்கெட்டுகளும் சான்ட்னர், கிராண்ட்ஹோம் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள்
நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள்

இதையடுத்துக் களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்கு கப்தில், முன்றோ நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், இந்தியாவின் கை ஓங்குவதுபோல் தெரிந்தது. ஆனால், வில்லியம்ஸனின் கேப்டன் இன்னிங்ஸ் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. டெத் பௌலிங் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் பும்ராவின் பந்துவீச்சை நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் வெளுத்துவாங்கினர். கடைசி ஓவரில், நியூஸிலாந்து வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன. இறுதி ஓவரை ஷமி வீசினார்.

களத்தில் ராஸ் டெய்லர் - வில்லியம்ஸன் இருந்தனர். ஷமி வீசிய முதல் பந்தை சிக்ஸருக்குத் தூக்கி அதிர்ச்சி கொடுத்தார் டெய்லர். இரண்டாவது பந்தில் சிங்கிள் எடுத்தார். ஏறக்குறைய நியூஸிலாந்து அணியின் வெற்றி உறுதியான நிலையில், ஷமி மேஜிக் செய்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வில்லியம்ஸன் அவுட்டானார். ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசிப் பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவை என்ற நிலையில், ஷமி வீசிய பந்தை ராஸ் டெய்லர் ஸ்வீப் ஆட முயன்று, இன்ஸைட் எட்ஜாகி போல்டானார். ஆட்டம் டை ஆனது. இதையடுத்து, சூப்பர் ஓவருக்கு அழைக்கப்பட்டது.

வில்லியம்ஸன்
வில்லியம்ஸன்

சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி தரப்பில் கேப்டன் வில்லியம்ஸன் மற்றும் கப்தில் களமிறங்கினர். சூப்பர் ஓவரில் அந்த அணி 17 ரன்கள் எடுத்தது. போட்டியை வெல்ல இந்திய அணிக்கு 18 ரன்கள் தேவை. ரோஹித் மற்றும் ராகுல் களமிறங்கினர். முதல் 4 பந்துகளுக்கு 8 ரன்கள் மட்டுமே எடுக்க, இறுதி இரண்டு பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை. கடைசி இரு பந்துகளிலும் ரோஹித் சிக்ஸர் அடிக்க, இந்திய அணி போட்டியை வென்று தொடரையும் கைப்பற்றியது.

`இந்திய அணி பாகிஸ்தான் வர வேண்டும்; இல்லையென்றால்...!' மிரட்டும் பாக். கிரிக்கெட் வாரியம்

ஆட்டநாயகன் விருதுபெற்ற ரோஹித் ஷர்மா பேசுகையில், “சூப்பர் ஓவரில் இதற்கு முன்பு விளையாடியது கிடையாது. நான் ஆடச் செல்லும்போது எந்த பிளானும் இல்லை. ஆனால், பந்துவீச்சாளர் தவறு செய்யும்போது, அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என காத்திருந்தேன். பிட்ச் மிகவும் அற்புதமாக இருந்தது. நான், கண்டிப்பாக விளையாட வேண்டும் என நினைத்திருந்தேன். முதல் இரண்டு போட்டிகளில் பெரிய அளவில் ரன்களைக் குவிக்கவில்லை. அதன் காரணமாக இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என விரும்பினேன். இன்றைய போட்டியை வென்றால் நாங்கள் தொடரை வென்றுவிடுவொம் என்பது எங்களுக்குத் தெரியும். போட்டிகளை முக்கியமான வீரர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என்றார்.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

இந்திய அணியின் கேப்டன் கோலி பேசுகையில், “ஒரு கட்டத்தில் எல்லாம் முடிந்துவிட்டது என நினைத்திருந்தேன். வில்லியம்ஸன் பேட் செய்த விதம், அவர் அணியை வழிநடத்திச் சென்றதைப் பார்த்துவிட்டு, இந்த ஆட்டத்தை முடிக்க அவர்கள் தகுதியானவர்கள் என எங்களது பயிற்சியாளரிடம் கூறினேன். ஆனால், முக்கியமான கட்டத்தில் எங்களுக்கு விக்கெட் கிடைத்தது. ஷமி ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார். ஆஃப் ஸ்டெம்ப்புகளுக்கு வெளியே தொடர்ந்து பந்துவீசினார்.

கடைசிப் பந்தை வீசுவதற்கு முன்பு நாங்கள் ஆலோசனை செய்தோம். பந்து கண்டிப்பாக ஸ்டெம்ப்புகளைத் தாக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் சிங்கிள் எடுத்துவிடுவார்கள். இறுதியாக ஸ்டெம்ப்பை அட்டாக் செய்வது என முடிவெடுத்தோம். ஷமி சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டை வீழ்த்தினார். சூப்பர் ஓவரில் நியூஸிலாந்து அணி எங்களுக்கு நெருக்கடிகொடுத்தது. ஆனால், ரோஹித் அற்புதமாகச் செயல்பட்டார். ரோஹித் ஒரு ஹிட் அடித்தால், கண்டிப்பாக பந்துவீச்சாளருக்கு நெருக்கடி ஏற்படும். ஒட்டுமொத்தமாக இன்றைய நாள் ஒரு அற்புதமான நாளாகும்.

இந்திய வீரர்கள்
இந்திய வீரர்கள்

ஷமி வீசிய இரண்டு டாட் பந்துகள், அவர் வீழ்த்திய விக்கெட்டுகள், சூப்பர் ஓவருக்கு அழைத்துச்சென்றது. வெற்றியின் விளிம்புக்கு வந்த நிலையில் ஆட்டம் சமனில் முடிந்ததால், கண்டிப்பாக நியூஸிலாந்து வீரர்கள் பதற்றமாக இருப்பார்கள். ஆனாலும் வில்லியம்ஸன் களம் இறங்கி அற்புதமான ஷாட்டுகளை ஆடினார். உலக கிரிக்கெட்டில் மிகச்சிறந்த டெத் பௌலரான பும்ரா, பந்துவீச்சில் சிறப்பாக ஆடினார். இந்தத் தொடரை முழுமையாகக் கைப்பற்ற வேண்டும் என நினைக்கிறோம். சைனி, சுந்தருக்கு அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு