Published:Updated:

`மிஸ் யூ கோலி; பன்ட் -ஐ இப்போது எதுவும் சொல்லமுடியாது!’ - ரோஹித் ஷர்மா #IndvBan

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்தது.

ரோஹித்
ரோஹித்

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதலாவதாக டி20 தொடர் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச முடிவு செய்தது.

ரோஹித்
ரோஹித்

இந்திய அணியில் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்ததால், ரோஹித் ஷர்மா கேப்டனாக களமிறங்கினார். நேற்றையை போட்டியில் ரோஹித் களமிறங்கியதன் மூலம் அதிக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக தோனி 98 போட்டிகளுடன் முதலிடத்தில் இருந்தார். அதேபோன்று அதிக சர்வதேச டி20 போட்டிகளில் ஆடிய வீரர்கள் பட்டியலில் 3-ம் இடத்தில் இருக்கிறார். முதல் இரண்டு இடத்தில் பாகிஸ்தான் அணியின் மாலிக் மற்றும் அஃப்ரைடி ஆகியோர் உள்ளனர்.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகள் அடித்து அதே ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 9 ரன்கள் எடுத்ததன் மூலம் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பட்டியலில் முதலிடம் பிடித்தார். முன்னதாக கோலி இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்துவந்தார். ரோஹித் விக்கெட்டுக்குப் பிறகு இந்திய அணியால் வேகமாக ரன்கள் சேர்க்க முடியவில்லை இதனால் ரன் ரேட் மிதமான வேகத்தில்தான் சென்றது. இறுதி கட்டத்தில் க்ருணல் பாண்ட்யா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் அதிரடி காரணமாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 148 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் தவான் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார்.

தவான்
தவான்

அடுத்து களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தாலும் அடுத்து வந்த வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ரஹிம் 43 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். வங்கதேச அணி 19.3 ஓவர்களில் 3 வீக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை துரத்திப் பிடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம் வங்கதேச அணி முதன்முதலாக இந்திய அணியை டி20 போட்டியில் வெற்றிகொண்டுள்ளது.

ஒரே போட்டியில் தோனி, கோலி சாதனைகளை ரோஹித் முறியடித்திருந்தாலும், இந்தப் போட்டி கேப்டனாக அவருக்கு கை கொடுக்கவில்லை. போட்டி முடிந்த பின்னர் பேசிய ரோஹித், ``வங்கதேச அணி வெற்றிக்குத் தகுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே எங்களுக்கு அவர்கள் அழுத்தம் கொடுத்தனர். நாங்கள் எடுத்த ஸ்கோர் வெற்றிபெறக்கூடிய ஸ்கோர்தான். ஆனால், களத்தில் நாங்கள் சில தவறுகள் செய்தோம்.

ரோஹித்
ரோஹித்

அணியில் இருந்த சில வீரர்களுக்கு அனுபவம் குறைவு. ஆனால், இந்தப் போட்டியிலிருந்து அவர்கள் நிச்சயம் நிறைய கற்றுக்கொண்டிருப்பார்கள். அதனால் அடுத்த போட்டிகளில் இந்தத் தவறுகள் இருக்காது என நினைக்கிறேன். டி20 போட்டிகளில் சஹால் முக்கியமான வீரர். பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடும்போது அவரால் அவர்களை வீழ்த்த முடியும். கேப்டனின் பணியை எளிதாக்கும் வீரர் அவர்” என்றார்.

போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரோஹித், ``நாங்கள் எப்போதுமே எதிரணி யார் என்று பார்க்கமாட்டோம். எங்கள் பணியை களத்தில் செய்யதான் விரும்புவோம். வங்கதேச அணி என்று எளிதில் எடுத்துக்கொள்ளவில்லை. களத்தில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிபெற வேண்டும்..

வங்கதேசம்
வங்கதேசம்

முதலாவது போட்டியில் திறமைகளை வெளிக்காட்டுவதில் தோற்றுவிட்டோம்” என்றார். அணியில் கோலி இல்லாதது குறித்து பேசிய ரோஹித், ``இந்திய அணிக்கு கோலி மிகச் சிறப்பான வீரர். அதில் சந்தேகமே இல்லை. அவர் ஆடாதபட்சத்தில் கட்டாயம் அது இழப்புதான்” என்றார்.

வங்கதேச அணி பேட்டிங் செய்தபோது 10-வது ஓவரில் இந்திய அணி ரிவீவை வீணாக்கியது. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பன்ட் உறுதியாக இருந்ததால் ரோஹித் டி.ஆர்.எஸ் முறையை பயன்படுத்தினார். ஆனால் அதன் முடிவு நாட்-அவுட் என வர, இந்தியாவின் ரிவீவ் வீணானது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ரோஹித், ``ஒரு கேப்டன் சரியான இடத்தில் இல்லாதபோது இதுபோன்ற தருணங்களில் நாம் விக்கெட் கீப்பர் மற்றும் பந்துவீச்சாளர் ஆகியோர் சொல்வதைதான் கேட்க வேண்டும்.

பன்ட்
பன்ட்

பன்ட் இளம் வீரர். அதிகபட்சமாக 10-12 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி இருப்பார். இதுபோன்ற விஷயங்களை கற்றுக்கொள்ள சிறிது காலம் தேவைப்படும். அவரால் சரியான முடிவை எடுக்க முடியுமா என்பதை இப்போதே தீர்மானிக்க முடியாது. அவருக்கான கால அவகாசத்தை நாம் வழங்க வேண்டும்” என்றார்.