Published:Updated:

மேட்ச்சை மாற்றிய ஸ்பின்னர்கள்; தொடரை வென்றது இந்தியா! ரோஹித் - டிராவிட் கூட்டணியின் முதல் சம்பவம்!

இரண்டு அணியின் ஸ்பின்னர்களுமே தாக்கம் ஏற்படுத்தும் வகையில் பெர்ஃபார்ம் செய்திருந்தாலும் அவர்கள் எந்த இடத்தில் பயன்படுத்தப்பட்டார்கள் என்பதே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் விஷயமாக அமைந்தது.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் 3-0 என இந்த தொடரையும் இந்திய அணி வென்றுள்ளது. ரோஹித் - டிராவிட் கூட்டணி தங்களது முதல் தொடரிலேயே எதிரணியை ஒயிட் வாஷ் செய்திருக்கிறது.

ஏற்கனவே 2-0 என தொடரை வென்றுவிட்டதால் இந்த போட்டியில் ப்ளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேமாதிரியே, இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. கே.எல்.ராகுலுக்கு பதில் இஷன் கிஷனும் அஷ்வினுக்கு பதில் சஹாலும் சேர்க்கப்பட்டிருந்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு ப்ளேயிங் லெவனில் இடம் கொடுக்கப்படவில்லை.

நியுசிலாந்து அணியில் இந்த தொடருக்கு கேப்டனாக செயல்பட்டுக் கொண்டிருந்த டிம் சவுத்தி ஓய்வெடுக்க, மிட்செல் சாண்டனர் கேப்டனாக செயல்பட்டார்.

இந்த தொடரில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ரோஹித் சர்மா டாஸை வென்றார். இந்த முறை சேஸிங் செய்யாமல், பேட்டிங்கை தேர்வு செய்து பரிச்சார்த்த முயற்சியில் இறங்கினார். இந்திய அணிக்கு உலகக்கோப்பையில் மட்டுமில்லை, சமீபமாக சில காலமாகவே முதலில் பேட்டிங் செய்வது அலர்ஜியாகவே இருக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய அணி முதலில் பேட் செய்த போட்டிகளில் 12 போட்டிகளில் வெற்றியும் 11 போட்டிகளில் தோல்வியும் அடைந்திருக்கின்றது. கிட்டத்தட்ட 50% போட்டிகளிலேயே வெற்றி பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், ஸ்கோர் சேஸிங் செய்த போது இந்திய அணி 80% க்கும் மேல் வெற்றி சதவீதத்தை வைத்திருக்கிறது.

நேற்றைய போட்டி நடைபெற்ற கொல்கத்தா மைதானத்திலும் சர்வதேச டி20 போட்டிகளில் 5 போட்டிகளில் ஸ்கோரை சேஸ் செய்த அணியும் இரண்டே இரண்டு போட்டிகளில் மட்டும் முதலில் பேட் செய்த அணிகளும் வென்றிருக்கின்றன. ஆக, நேற்றைய போட்டியில் இந்திய அணி முதல் பேட்டிங்கை வலிந்து எடுத்ததற்கு தங்களுக்கு தாங்களே சவாலளித்து பலவீனங்களை உடைக்க வேண்டும் என்பதே மிக முக்கிய காரணமாக இருந்தது.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா
BCCI

கே.எல்.ராகுல் இல்லாததால் ரோஹித்தும் இஷன் கிஷனும் ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். ட்ரெண்ட் போல்ட் முதல் ஓவரை வீசினார். முதல் பந்தே இன்ஸ்விங் ஆகி உள்ளே திரும்ப ரோஹித் அதை காலில் வாங்கினார். நியுசிலாந்து அப்பீல் செய்த போதும் ரிவியூ எடுக்கவில்லை, எடுத்திருந்தாலும் அது அவுட்டாக இருந்திருக்காது. ஆனால், இந்த இன்ஸ்விங் கொஞ்சம் பயமுறுத்தியது. அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு பவுண்டரிகளை அடித்து ரோஹித் சகஜ நிலைமைக்கு திரும்பினார். அந்த ஒரு பந்தை தவிர்த்து பவர்ப்ளேயில் வேறெந்த பந்தும் ரோஹித்-இஷன் கிஷன் கூட்டணியை தொந்தரவு செய்யவில்லை. இருவரும் வெளுத்தெடுத்தனர். இந்த போட்டியிலும் ட்ரெண்ட் போல்டின் ஷார்ட் பாலில் சிக்சரை பறக்கவிட்டு ரோஹித் மிரட்டினார். இஷன் கிஷனும் இன்னொரு பக்கம் பவுண்டரிக்களாக அடிக்க பவர்ப்ளேயிலேயே 69 ரன்களை எடுத்திருந்தனர்.

பவர்ப்ளே முடிந்தவுடன் சாண்ட்னர், இஷ் சோதி என ஸ்பின்னர்கள் வீச ஆரம்பித்தனர். இங்கேதான் ஆட்டம் கொஞ்சம் நியுசிலாந்து பக்கமாக திரும்பியது. இருவரும் மாறி மாறி வீசிய 7-12 ஓவர்களில் 39 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். குறிப்பாக, சாண்ட்னர் இஷன் கிஷனையும் சூர்யகுமாரையும் ஒரே ஓவரில் வீழ்த்தியிருந்தார். அடுத்த ஓவரில் ரிஷப் பண்டை வீழ்த்தினார். இஷ் சோதி 31 பந்துகளில் 56 ரன்களை எடுத்திருந்த ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன்பிறகு, ஸ்ரேயாஸ் ஐயரும் வெங்கடேஷ் ஐயரும் கணிசமான பங்களிப்புகளை அளிக்க, இறுதியில் சர்ப்ரைஸாக ஹர்சல் படேலும் தீபக் அதிரடி கேமியோவை ஆடி ஸ்கோரை உயர்த்தினார். ஆடம் மில்னே வீசிய கடைசி ஓவரில் மட்டும் தீபக் சஹார் 19 ரன்களை சேர்த்திருந்தார். இந்த அதிரடியால் இந்திய அணியின் ஸ்கோர் 184 ஆக உயர்ந்தது.

பெரிய டார்கெட்டை நோக்கி சேஸிங்கை தொடங்கிய நியுசிலாந்து அணி தொடக்கத்திலேயே சறுக்க தொடங்கியது. மார்டின் கப்தில் மட்டும் ஒரு முனையில் நிற்க இன்னொரு முனையில் விக்கெட்டுகள் வரிசையாக விழுந்துக் கொண்டே இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கப்தில்
கப்தில்
ICC

பவர்ப்ளேயிலேயே வீச வந்த அக்சர் படேல் 3வது ஓவரில் டேரில் மிட்செலையும் சாப்மனையும் வீழ்த்தினார். 5 வது ஓவரில் க்ளென் பிலிப்ஸை வீழ்த்தினார். அங்கேயே ஆட்டம் இந்தியா பக்கமாக திரும்ப தொடங்கிவிட்டது. நின்று ஆடி அரைசதம் கடந்த மார்டின் கப்திலை 11 வது ஓவரில் சஹால் வீழ்த்தினார். இதன்பிறகு, நியுசிலாந்தால் வீழ்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை. 17.2 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியோடு தொடரையும் முழுமையாக வென்றது.

இரண்டு அணியின் பெர்ஃபார்மென்ஸ்களிலுமே ஸ்பின்னர்களின் பங்கு பெரிதாக இருந்தது. நியுசிலாந்து அணியில் சாண்ட்னர் + சோதி 8 ஓவர்களில் 58 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். 4 விக்கெட்டுகளுமே இந்திய பேட்டிங் ஆர்டரின் டாப் 4 விக்கெட்டுகள். பவர்ப்ளே வரை ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருந்த இந்தியாவின் ரன்ரேட் சாண்ட்னர் பந்தை கையில் எடுத்த பிறகுதான் கொஞ்சம் இறங்கியது.

இந்திய அணியில் அக்சர் + சஹால் 7 ஓவர்களை வீசி 35 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். அந்த நான்குமே நியுசிலாந்தின் டாப் 4 விக்கெட்டுகள். குறிப்பாக, அக்சர் படேல் 3 ஓவர்களை வீசி 9 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

மிட்செல் சாண்ட்னர்
மிட்செல் சாண்ட்னர்
ICC
இரண்டு அணியின் ஸ்பின்னர்களுமே தாக்கம் ஏற்படுத்தும் வகையில் பெர்ஃபார்ம் செய்திருந்தாலும் அவர்கள் எந்த இடத்தில் பயன்படுத்தப்பட்டார்கள் என்பதே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் விஷயமாக அமைந்தது.

கொல்கத்தாவின் பிட்சில் பந்து பெரிதாக ஸ்விங்கே ஆகவில்லை. போல்ட் வீசிய அந்த முதல் ஸ்விங்கிற்கு பிறகு அந்தளவுக்கு ஸ்விங் ஆன எந்த பந்தையுமே நம்மால் பார்க்க முடியவில்லை. அப்படிப்பட்ட நிலையில் பவர்ப்ளேயின் 6 ஓவர்களையுமே வேகப்பந்து வீச்சாளர்களுக்கே சாண்ட்னர் கொடுத்திருந்தார். இந்த 6 ஓவர்களில் மட்டுமே 69 ரன்களை இந்தியா எடுத்திருந்தது.

அதேநேரத்தில், இந்திய அணியின் பௌலிங்கை பொறுத்தவரைக்கும் பவர்ப்ளேயின் 6 ஓவர்களில் 3 ஓவர்களை வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் 3 ஓவர்களை ஸ்பின்னர்களுக்கும் ரோஹித் கொடுத்திருப்பார். புவனேஷ்வர் குமார், தீபக் சஹார் முதல் இரண்டு ஓவர்களை வீசியிருந்தனர். புவியின் முதல் ஓவரில் ஸ்விங்கை எதிர்பார்த்து முதலில் இரண்டு ஸ்லிப்களை வைத்து ரோஹித் அட்டாக் செய்திருப்பார். ஆனால், இரண்டு மூன்று பந்துகளிலேயே பந்து பெரிதாக ஸ்விங் ஆகவில்லை என்பதை உணர்ந்தவர். ஒரு ஸ்லிப்பை நீக்கியிருப்பார். ஷார்ட் பாலுக்கு ஏற்ப ஃபீல்ட் செட்டப்பும் மாற்றப்பட்டது. இந்த முதல் ஓவரில் மட்டுமே 3 முறை ரோஹித் ஃபீல்டிங்கை மாற்றியிருந்தார். அடுத்து தீபக் சஹார் வீசிய ஓவரிலும் முதலில் ஒரு ஸ்லிப்பை வைத்து அட்டாக் செய்து விட்டு, பிறகு அந்த ஒரு ஸ்லிப்பையும் எடுத்துவிடுவார்.

அக்சர் படேல்
அக்சர் படேல்
BCCI
இந்த இரண்டு ஓவர்கள்தான் ரோஹித்திற்கு பிட்ச் குறித்த ஒரு புரிதலை கொடுத்து 3வது ஓவரிலேயே ஸ்பின்னரை அழைக்க வைத்தது. அக்சர் படேல் 2 ஓவர்களையும் சஹால் ஒரு ஓவரையும் அடுத்தடுத்து வீசினர். இந்த 3 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே சென்று 3 விக்கெட்டுகளும் கிடைத்தது.

நியுசிலாந்தின் ரன்ரேட்டும் விழுந்தது. முக்கிய விக்கெட்டுகளும் விழுந்தது. அங்கேயே போட்டி இந்தியாவின் பக்கம் திரும்பிவிட்டது. கப்திலை வீழ்த்துவது மட்டும்தான் இந்தியாவிற்கு இருந்த ஒரே டாஸ்க். கொஞ்சம் நேரமாகியிருந்தாலும் அதையும் 11 வது ஓவரில் சஹால் நிகழ்த்திக் காட்டினார்.

ஒருவேளை சாண்டனரும் பவர்ப்ளேக்குள்ளாக பந்தை கையில் எடுத்திருந்தால் ஆட்டம் இன்னும் விறுவிறுப்பாக சென்றிருக்கக்கூடும். நியுசிலாந்து இவ்வளவு மோசமாக தோற்பதற்கான வாய்ப்பும் இல்லாமல் போயிருக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு