Published:Updated:

`கிரிக்கெட்டில் க்ரஷ்.. சீனியர் வீரர்களுக்கு மதிப்பு.. அன்று, இன்று!’ - ரோகித், யுவராஜ் Live chat

ரோகித் - யுவராஜ்
ரோகித் - யுவராஜ்

ரோகித், ``நான் அணிக்குள் வரும்போது இந்திய அணி சீனியர் வீரர்களால் நிரம்பி இருந்தது. ஆனால், தற்போதைய நிலவரம் அப்படி இல்லை” என்றார்.

கொரோனாவால் ஒட்டுமொத்த உலகமும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறது. பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள், மக்களை வீட்டிலே இருக்கும்படி தொடர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். களத்தில் பிஸியாக இருந்த விளையாட்டு வீரர்கள் எல்லாம் சமூகவலைதளத்தில் பிஸியாகி விட்டார்கள். வீட்டில் நடக்கும் விஷயங்களைப் பதிவு செய்கிறார்கள். குடும்பத்துடன் செலவு செய்யும் நேரம் குறித்தும் சிலர் பதிவு செய்து வருகிறார்கள்.

ரோகித் ஷர்மா
ரோகித் ஷர்மா

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் லிமிடெட் ஓவர்ஸ் அணியின் துணை கேப்டனுமான ரோகித் ஷர்மா, நேற்று தனது இன்ஸ்டாகிராமில் லைவ் சாட்டில் வந்தார். கிரிக்கெட் உலகில் தனது க்ரஷ் குறித்துப் பேசிய ரோகித், இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கை லைவ் சாட்டுக்கு அழைத்து வந்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்.

கிரிக்கெட் உலகில் தனது க்ரஷ் குறித்து பேசிய ரோகித், ``நான் இந்திய அணிக்குள் வரும்போது, கிரிக்கெட்டில் எனக்கு இருந்த மிகப்பெரிய க்ரஷ் என்றால் அது யுவராஜ்தான். அப்போது எல்லாம் அவரிடம் பேச வேண்டும் என நினைப்பேன், அவரைப் போல் ஆட வேண்டும் என நினைப்பேன். அந்த காலகட்டத்தில் அணியில் யுவராஜின் பங்களிப்பு என்பது மிகப்பெரியது. எனக்கும் எதிர்காலத்தில் இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என நினைத்த காலம் உண்டு. மிடில் ஆர்டரில் களமிறங்கி, அது 5-வது இடத்தில் இறங்கும்போதாக இருக்கலாம், அல்லது 6, 7 -வது வீரராக களம் கண்டிருக்கலாம்... எந்த இடத்தில் இறங்கினாலும் அவர் ஆட்டத்தை முடித்துக்கொடுப்பார்.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்
twitter

ஃபீல்டிங் என்று விட்டாலும் அவர் சிறப்பாகச் செயல்படுவார். பாயிண்ட் -ல் அவர் ஃபீல்டிங் செய்வதெல்லாம் இன்ஸ்பிரேஷன் தரும்” என்றவர் யுவராஜிடம், ``நீங்கள் விளையாடும்போது இருந்த இந்திய அணிக்கும் தற்போது கோலி தலைமையிலான இந்திய அணிக்கும் இருக்கும் வித்தியாசம்?” என்ன என கேள்வி எழுப்பினார்.

கேள்விக்குப் பதிலளித்த யுவராஜ், ``நாங்கள் விளையாடிய இந்திய அணிக்கும் தற்போது இருக்கும் இந்திய அணிக்கும் நான் பார்க்கும் பெரிய வித்தியாசம், நான் விளையாடிய காலத்தில் சீனியர் வீரர்களிடம் அதிக ஒழுக்கம் இருந்தது. தவிர அந்தக் காலகட்டத்தில் கவனச் சிதறல்களை ஏற்படுத்தும் சோஷியல் மீடியாக்கள் இல்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய யுவராஜ், ``சிறந்த வழியில் நாங்கள் எங்களை வழிநடத்திச் செல்ல வேண்டி இருந்தது. நாங்கள் எங்கள் சீனியர்களைப் பார்த்து கற்றுக்கொண்டோம். அவர்களின் செயல்பாடு, ஊடகத்தினரிடம் பேசும் விதம், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அவர்கள் எங்களை வழிநடத்தினர். நானும் நிறையவே கற்றுக்கொண்டேன். நாங்கள் கற்றுக்கொண்டதை உங்களுக்கும் சொல்லிக்கொடுத்தோம். தற்போது இருக்கும் இந்திய அணியில் நீங்களும் (ரோகித்) கோலியும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் சீனியர் வீரர்களாக இருக்கிறீர்கள். மூத்த வீரர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் குறைந்து, அந்த எண்ணம் மெல்லிய கோடாக மாறிவிட்டது” என்றார்.

பன்ட் - ரோகித்
பன்ட் - ரோகித்

யுவராஜைத் தொடர்ந்து பேசிய ரோகித், ``நான் அணிக்குள் வரும்போது இந்திய அணி சீனியர் வீரர்களால் நிரம்பி இருந்தது. ஆனால், தற்போதைய நிலவரம் அப்படி இல்லை. என்றாலும் நானும் பன்ட் மாதிரியான இளம் வீரர்களிடம் தொடர்ச்சியாக பேசி வருகிறேன். சமயத்தில் அவர் அதிகமாக ஆராயப்படுகிறார் என தோன்றும். அவர் 21-22 வயது நிரம்பிய இளம் வீரர். இன்னும் நேரம் தேவை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். 5 முதல் 6 வீரர்களிடம் நான் தொடர்ச்சியாகப் பேசி வருகிறேன்” என்றார்.

`கங்குலியிடம் கிடைத்த சப்போர்ட்.. தோனி, கோலியிடம் கிடைக்கவில்லை!’ -யுவராஜ் வேதனை
 சச்சின் - யுவராஜ்
சச்சின் - யுவராஜ்
Twitter|@RSWorldSeries

ரோகித் கருத்தை ஏற்ற யுவராஜ், ``சிறப்பாக விளையாட இளம் வீரர்களுக்கு அனுபவம் தேவை. தற்போது பன்ட், பிரித்வி ஷா, சுப்மன் கில் என நிறைய திறமையான இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தொடக்கம் முதலே ரோகித் போன்றோ, கோலி போன்றோ ஆட முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், காலப்போக்கில் அவர்கள் திறமை வெளிவரும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு