Published:Updated:

Roger Binny: குட்டி கோஸ்ட்; வேர்ல்டு கப் ஹீரோ; பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி என்ன செய்யப்போகிறார்?

BCCI ( BCCI )

`Once upon a time, there lived a ghost' என்று கபில்தேவ் தன்னுடைய ஆல் ரவுண்டர் திறமையால் இந்திய அணியை உச்சத்திற்குக் கொண்டு சென்று கொண்டிருக்கையில், குட்டி கோஸ்ட் ஆக வலம் வந்தவர் பின்னி.

Roger Binny: குட்டி கோஸ்ட்; வேர்ல்டு கப் ஹீரோ; பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி என்ன செய்யப்போகிறார்?

`Once upon a time, there lived a ghost' என்று கபில்தேவ் தன்னுடைய ஆல் ரவுண்டர் திறமையால் இந்திய அணியை உச்சத்திற்குக் கொண்டு சென்று கொண்டிருக்கையில், குட்டி கோஸ்ட் ஆக வலம் வந்தவர் பின்னி.

Published:Updated:
BCCI ( BCCI )

கங்குலியின் பிசிசிஐ தலைவர் பதவி காலம் முடிந்திருக்கிறது. `இவர் வந்தால் எல்லாம் தலை கீழாக அப்படியே மாறிவிடும்' என்று நம்பி வாக்களித்து அடையும் ஏமாற்றம் எப்படி இருக்கும் என்பதையும் கங்குலி காட்டிச் சென்றுள்ளார். போனது போகட்டும். கங்குலியின் பதவிக்காலம் தற்போது அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டது. கங்குலிக்கு அடுத்ததாக கர்நாடகத்தைச் சேர்ந்த ரோஜர் பின்னியும் பிசிசிஐ தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.

யார் இந்த ரோஜர் பின்னி? தற்கால கிரிக்கெட் ரசிகர்களுக்கு கங்குலியைத் தெரிந்திருக்கும் அளவுக்கு ரோஜர் பின்னியைத் தெரிந்திருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். சிலருக்கு வேண்டுமானால் ஸ்டுவர்ட் பின்னியின் தகப்பனார் என்றும் மயாந்தி லாங்கரின் மாமனார் என்றும் தெரிந்திருக்கலாம். ஆனால் இவருக்கு இதைத் தாண்டிய ஒரு வரலாறும் உண்டு. ஸ்காட்லாந்தை பூர்வீகமாகக் கொண்ட ரோஜர் பின்னி இந்தியாவுக்காக கிரிக்கெட் ஆடிய ஒரு ஆங்கிலோ இந்தியர்.
Roger Binny
Roger Binny
RCB

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்த பின்னி கர்நாடக ரஞ்சி அணிக்காக தன்னுடைய கிரிக்கெட் கரியரைத் தொடங்கினார். பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் பின்னி அசத்த இந்திய அணியின் கதவு அவருக்காகத் திறந்தது. 1979ம் ஆண்டு இந்திய அணிக்காக முதன்முதலில் களமிறங்கினார். இம்ரான் கான் போன்ற பாகிஸ்தானின் முன்னணி பந்துவீச்சாளர்களை எதிர்த்து அவர் அடித்த 46 ரன்கள் அவருடைய திறமைக்கான உத்தரவாதத்தை வழங்கியது. அதன் பின்பு இந்திய அணியின் முக்கியமான தருணங்களில் எல்லாம் பின்னியின் பெயர் இருந்தே ஆக வேண்டும் என்ற எழுதப்படாத விதி உருவானது.

'Once upon a time, there lived a ghost' என்று கபில்தேவ் தன்னுடைய ஆல் ரவுண்டர் திறமையால் இந்திய அணியை உச்சத்திற்குக் கொண்டு சென்று கொண்டிருக்கையில், குட்டி கோஸ்டாக வலம் வந்தவர் பின்னி. துவக்க வீரர், மிடில் ஆர்டர் வீரர், அதிரடி வீரர், விக்கெட்டுகள் விழாமல் நிலைத்து நின்று ஆடும் வீரர் என்று பேட்டிங்கில் பல அவதாரம் எடுத்திருக்கிறார் பின்னி. பந்துவீச்சிலும் போட்டியின் ஆரம்பத்தில் தற்போதைய புவனேஸ்வர் குமார் போல இரண்டு பக்கங்களிலும் பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர் இவர்.

1977 ரஞ்சி தொடரில் கேரளா அணிக்கு எதிராக துவக்க விக்கெட்டுக்கு 453 ரன்கள் பார்ட்னர்ஷிப்பாக ரோஜர் பின்னி அடித்து உலக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையை தனது பக்கம் திருப்பினார். இதில் ரோஜர் பின்னியின் ஸ்கோர் மட்டுமே 211 ரன்கள். இந்தச் சம்பவத்தால் நாளிதழ்கள் அனைத்தும் பின்னிமயமானது. அதன் பிறகு 1979ல் அரை மணி நேரத்திற்குள் மஜித் கான், ஜாவத் மியாண்தத், ஜகீர் அபாஸ் என பாகிஸ்தானின் முக்கிய பேட்டிங் வீரர்கள் அனைவரையும் வெளியே அனுப்பி வெறித்தனமான பௌலிங்கை வெளிப்படுத்தினார் பின்னி. ஆனால், `இதெல்லாம் சும்மா டிரெய்லர்தான் கண்ணா!' என்று கூறி தனது மெயின் பிக்ச்சர் எப்படி இருக்கும் என்பதைக் காட்ட 1983 உலகக்கோப்பை தொடரைத் தேர்ந்தெடுத்தார் பின்னி. பின்னி வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் போல அதிவேக பந்துவீச்சை வெளிப்படுத்தும் வீரர் கிடையாது. தற்கால ஆண்டர்சன் போல மித வேகத்தால் எதிரணியை மிரட்டுபவர். இந்த வித்தை இங்கிலாந்தில் நன்கு எடுபட்டது.

1983 உலகக்கோப்பையின் லீக் சுற்றிலேயே இந்தியா வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது. இந்த வெற்றிதான் இறுதிப்போட்டியிலும் வெல்ல உத்வேகம் கொடுத்தது. இந்த வெற்றிக்கு மிகப்பெரிய அடித்தளமிட்டவர் பின்னிதான்.
Roger Binny
Roger Binny
BCCI

ரிச்சர்ட்ஸ், லாய்ட், டுஜோன் போன்ற மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை தனது பந்துவீச்சால் பதம் பார்த்தார். கண்டிப்பாக வென்றே ஆக வேண்டிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவை அரையிறுதியில் ஆட வைத்தவர் பின்னி.

அரையிறுதியிலும் இங்கிலாந்து நன்கு ஆடிக்கொண்டிருந்த போது பார்ட்னர்ஷிப்பை உடைத்து இரண்டு துவக்க வீரர்களையும் வெளியே அனுப்பியவர் பின்னிதான்.

இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் லாய்டை வெளியேற்றியவரும் பின்னிதான். அந்தத் தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவரானார்.

உலகக்கோப்பையை வென்றாலும் இந்தியா ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தில் வென்றது என்ற பேச்சுதான் அப்போது இருந்தது. அதையும் மாற்றத் தயாரானார் பின்னி.

1985ல் எட்டு முன்னணி நாடுகள் பங்கேற்ற 'World Championship of Cricket' என்ற தொடரில், இந்தியா இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வாகை சூடியது. அதிலும் நான்கு ஆட்டங்களில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் பின்னி. காயம் காரணமாக இறுதிப்போட்டியில் ஆடாமல் போனதால் இதிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைக்க முடியாமல் போனது. இப்படி எண்பதுகளில் இரண்டு முக்கியக் கோப்பைகளை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பின்னி. இவரும் கம்பீர் போல, 'என்னையும் சற்று கவனியுங்கள்!' என்று கேட்டிருக்கலாம்... விட்டுவிட்டார் பாவம்.

Roger Binny
Roger Binny
IFCC
1987 உலகக்கோப்பையுடன் தனது கிரிக்கெட் கரியரை முடித்துக் கொண்டார் பின்னி. இருந்தும் கிரிக்கெட் மீதான ஆர்வம் காரணமாக ஆஸ்திரேலியா சென்று பயிற்சியாளர் ஆவதற்கான கோர்ஸ்களை முடித்து 2000ம் ஆண்டு கோப்பை வென்ற இந்திய அண்டர் 19 அணிக்கு பயிற்சியாளராகத் திகழ்ந்தவர். 2012ல் இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவரானார். கர்நாடக கிரிக்கெட்டின் நிர்வாகப் பொறுப்பில் பல முறை இருந்துள்ளார் பின்னி. தற்போது பிசிசிஐ சேர்மன் பதவி அவரைத் தேடி வந்துள்ளது.

யாரும் ஆட்சேபனை சொல்லாமல், போட்டியே இன்றித் தேர்வாகி உள்ளார் பின்னி. கங்குலிமீது வைக்கப்பட்ட பிரதான குற்றச்சாட்டே, அவர் வெறும் வாய்ச்சொல் வீரராக இருந்தார் என்பதுதான். Domestic cricket ஆடும் வீரர்களுக்கு சம்பள நிர்ணயம், மகளிர் IPL போன்றவை வெறும் வாய்மொழியாக வந்ததே தவிர செயல்வடிவம் பெறவில்லை. மேலும் கோலி உடனான உறவு, ஜூனியர் அமித்ஷாவின் கைப்பாவையாக இருந்தது என கங்குலி மீது பல குற்றச்சாட்டுகள் ரசிகர்கள் தரப்பிலிருந்தே எழுந்தன. 2000களில் சூதாட்ட சிக்கல்களால் விழுந்த கறையை கங்குலி துடைத்தார். தற்போது, கங்குலியால் ஏற்பட்ட கறையை துடைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார் ரோஜர் பின்னி.

வாழ்த்துகள் பின்னி!