Published:Updated:

`தோனி எனக்கு குரு; ஆனால், ஒப்பீடு..?' - மனம்திறக்கும் ரிஷப் பன்ட்

தோனியுடனான ஒப்பீடு, உலகக் கோப்பை அணியில் இடம் கிடைத்தது, ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் உடனான பேபி சிட்டர் சம்பவம் உள்ளிட்டவை குறித்து இந்திய அணி வீரர் ரிஷப் பன்ட் மனம் திறந்திருக்கிறார்.

அதிரடி பேட்ஸ்மேனாக அறியப்படும் இளம் வீரர் ரிஷப் பன்ட், 21 வயதில் இந்திய அணிக்காகப் பல்வேறு சர்வதேச போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அவரை தோனியுடன் ஒப்பிட்டுப் பேசுவதுண்டு. ஆனால், தோனியிடமிருந்துதான் அதிகமாகக் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார் ரிஷப் பன்ட். பாம்பே டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தோனியுடனான ஒப்பீடு முதல் தனது கரியர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பன்ட் மனம் திறந்திருக்கிறார்.

Rishab Pant
Rishab Pant
AP

தோனி குறித்து பேசிய பன்ட், `தோனியுடன் ஒப்பிடுவது குறித்து நானும் சில சமயங்கள் சிந்தித்ததுண்டு. ஆனால், அது மிகவும் வித்தியாசமானது. நான் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவே முயலுகிறேன். அவரை நான் எனது குருவாகக் கருதுகிறேன். பேட்டிங்கில் என்ன மாதிரியான நுணுக்கங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது முதல் பேட்டிங் செய்துகொண்டிருக்கும்போது நமது எண்ண ஓட்டங்களை எப்படிக் கையாள வேண்டும் என்பது வரை அவர் எனக்கு பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.

Vikatan

முக்கியமாக, கடினமான சூழல்களை எப்படி மனஅழுத்தம் இல்லாமல் எதிர்க்கொள்வது என்பதை நான் அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். 21 வயதில், தோனியைப்போல் ஆக முடியும் என்று நான் நினைத்தால், அது எனக்கு கடும் நெருக்கடியையும் சவாலையும் அளித்துவிடும். நான், களத்தில் என்னுடைய முழுதிறனையும் வெளிப்படுத்தி விளையாடவே நினைக்கிறேன். அதேபோல், என்னைச் சுற்றி இருப்பவர்கள் குறிப்பாக, சீனியர் வீரர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறேன்'' என்றார்.

Rishab Pant
Rishab Pant
Twitter

இளம் வயதிலேயே இந்திய அணியில் வாய்ப்புக் கிடைத்துவிட்டது என்றரீதியிலான கருத்துகள் குறித்து பகிர்ந்த பன்ட், ``ஒவ்வொரு வீரருக்கும் இளம் வயதிலேயே வாய்ப்புக் கிடைப்பது என்பது நல்ல விஷயம்தான். இதையெல்லாம்விட, எதுவுமே எனக்கு இலவசமாகக் கிடைத்துவிடவில்லை. இந்திய அணியில் எனக்காக இடம் என்பதை நான் கடினமாக உழைத்தே பெற்றிருக்கிறேன். மாறாக, யாரும் அதை எனக்குப் பரிசாகக் கொடுத்துவிடவில்லை. நீங்கள் சரியான முறையில் விளையாடவில்லை என்றால், இயற்கையாகவே உங்கள் இடத்தை நீங்கள் இழந்துவிடுவீர்கள். ஒவ்வொருவரும் தனக்குக் கிடைத்த வாய்ப்புக்கு நியாயம் சேர்க்க வேண்டும்'' என்றார்.

Vikatan

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பன்ட் இடம்பெறவில்லை. ஆனால், தொடக்க வீரர் தவானுக்குக் காயம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு மாற்றுவீரராக பன்ட் அறிவிக்கப்பட்டார். அந்தத் தருணங்கள் குறித்து பேசிய பன்ட், ``உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்று நான் நம்பினேன். அதற்காக நான் கடுமையாக உழைத்தேன். உலகக் கோப்பைத் தொடரில் விளையாடியதன் மூலம் ஒரு கிரிக்கெட் வீரராக எனது கனவு நனவானதாக நான் நினைத்தேன். ஆனால், எனக்கான வாய்ப்பு இப்படிக் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. இதனால், நான் மகிழ்ச்சியடைந்தேன்.

Rishab Pant
Rishab Pant
Twitter

உலகக் கோப்பைத் தொடருக்குத் தயாராகுமாறு பிசிசிஐயிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தபோது நான் எனது சொந்த ஊரான ரூர்க்கியில் இருந்தேன். `எந்தநேரம் வேண்டுமானாலும் இங்கிலாந்து புறப்பட வேண்டிவரும்; அதனால், டெல்லியிலேயே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்' என பிசிசிஐயிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், `நான் ஏற்கெனவே டெல்லியில்தான் இருக்கிறேன்' என்று அவர்களிடம் சொல்லிவிட்டேன்'' என்று தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

`இந்தியக் கிரிக்கெட்டில் தோனி அரிதானவர்; ஆனால்...!’ - கங்குலி சொல்லும் லாஜிக்

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன் குழந்தைகளுடனான பேபி சிட்டர் டேக் குறித்து பேசிய பன்ட், ``முதலில் என்னை அவர் அப்படி அழைத்தவுடன் எனக்கு சிரிப்புதான் வந்தது. எதை அடிப்படையாக வைத்து அவர் என்னை அப்படி அழைத்தார் என்பது குறித்து நான் சிந்தித்தேன். அதை விளையாட்டாகவே நான் எடுத்துக்கொண்டேன். டிம் பெய்ன் குடும்பத்தினரை நான் சந்தித்தபோது, என்னுடன் புகைப்படம் எடுத்துகொள்ள வேண்டும் என அவரின் தாயார் விரும்பினார். அப்போது டிம் பெய்னின் மனைவியும் அவர்களது இரண்டு குழந்தைகளுடன் அங்கிருந்தார். அவரும் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டார்.

Pant with Tim paine family
Pant with Tim paine family
Instagram
Vikatan

`உங்கள் குழந்தையை நானே நன்றாகப் பார்த்துக்கொள்வேன்' என்று கூறி அந்தப் புகைப்படத்துக்காக அவர்களது குழந்தையையும் நான் தூக்கி வைத்திருந்தேன். அதை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடவே, அது வைரலானது. நட்புரீதியிலான பேச்சுதான் அது. களத்தில் என்ன நடந்தாலும், அதை மனதில் வைத்துக்கொண்டு அதற்காகப் பதிலடி கொடுக்க வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. யாரையும் முதலில் சீண்டுவது எனது வழக்கமல்ல. ஆனால், என்னை யாராவது சீண்டினால், அதைப் பொறுத்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது; அதற்கு நான் பதிலடி கொடுத்துவிடுவேன்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு