ரியல் ஹீரோ ரிஷப் பன்ட்... சோஷியல் மீடியாவில் குவியும் ஆதரவுக்கு காரணம் என்ன?! #RishabhPant

ஜனவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக ஐசிசி ரிஷப் பன்ட்டைத் தேர்வு செய்து கெளரவித்திருக்கிறது. இதற்கான பாராட்டுகளைவிடவும், ரிஷப் பன்ட்டின் அறிவிப்பு அவருக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத்தந்திருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்துகொண்டிருக்கிறார் ரிஷப் பன்ட். விக்கெட் கீப்பிங், பேட்டிங் என்பதையும்தாண்டி களத்தில் எப்போதும் பரபரப்பாக இருப்பவர் பன்ட். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின்போதுகூட தோல்வியை நோக்கி நகர்ந்த இந்தியாவை, தனது நம்பிக்கையால் 89 ரன்கள் எடுத்து போட்டியை வென்று கொடுத்தார். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியிலும், முதல் இன்னிங்ஸில் 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரி என 91 ரன்களை எடுத்தார். இரண்டு முறையும் சதத்தை தவற விட்டாலும், இந்திய அணிக்காக அவரது பங்களிப்பு அளப்பரியது.
தற்போது, இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் ஐசிசி சிறந்த வீரருக்கான விருதை வழங்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. அதில், ஜனவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக ரிஷப் பன்ட் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதற்கான பாராட்டுகளைவிடவும், ரிஷப் பன்ட்டின் அறிவிப்பு அவருக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத்தந்திருக்கிறது.
உத்தராகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உடைந்து திடீர் வெள்ளம் வந்ததால், 15-க்கும் மேற்பட்டோர் பலியாகினர், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துமுள்ளனர். இந்த நிகழ்வு ஓட்டுமொத்த இந்தியாவையும் சோகத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

இந்நிலையில், ரிஷப் பன்ட் தற்போதைய இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் மூலம் வரும் சம்பளத்தை இந்த பேரழிவிற்கு நிவாரணமாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வெளிநாட்டு பிரபலங்களைக் கண்டித்து #IndiaTogether என்ற செய்தியை சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரவிசாஸ்திரி உள்ளிட்டோர் தெரிவித்து வந்தனர். இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிகழ்வின்போதும் பன்ட் அமைதியாக இருந்தார். இதனையடுத்து ரசிகர்கள் ''ரியல் ஹீரோ ரிஷப்'' என அவரைக் கொண்டாடி வருகிறார்கள்.