Election bannerElection banner
Published:Updated:

ரிஷப் பன்ட்டின் ரிவர்ஸ் ஸ்வீப் ரிவென்ஜ்... அலறிய ஆண்டர்சன்... இடிந்துபோன இங்கிலாந்து! #INDvENG

ரிஷப் பன்ட்
ரிஷப் பன்ட்

பன்ட் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆட ஆரம்பித்தார், பந்துகள் பவுண்டரி லைனுக்கு ஓட ஆரம்பித்தது. கூடவே பன்ட்டின் அரைச்சதமும் வந்து சேர்ந்தது. தன் பணி இன்னும் முடியவில்லை என்பதை உணர்ந்திருந்த பன்ட், அடுத்து ஆடியதுதான் ருத்ரதாண்டவம்.

ரிவர்ஸில் சென்ற இந்திய அணியை, தனது ரிவர்ஸ் ஸ்வீப்பின் மூலம், நேர் பாதைக்குத் திருப்பியுள்ளார் ரிஷப் பன்ட்.

ஒவ்வொரு முறையும், சரிவில் இருந்து மீட்டெடுக்கும் சாம்ராட்டாக, ரிஷப் பன்ட் உருவெடுக்க, தோல்வியை நோக்கிச் சென்ற இந்திய அணி, மீண்டும் ஒருமுறை வெற்றிப் பாதைக்குத் திரும்பி இருக்கிறது.

24 ரன்களுக்கு ஒரு விக்கெட் என இருந்த இந்தியா, நேற்றைய ஆட்டத்தைத் தொடங்க, ரோஹித் ஷர்மாவும், புஜாராவும் பொறுமையாக ஆட ஆரம்பித்தார்கள்.

முதல் ஓவரை ஆண்டர்சன் ஆரம்பிக்க, இரண்டாவது பந்தே, மிகவும் நெருக்கமான எல்பிடபிள்யூ காலில் இருந்து தப்பித்தார், ரோஹித் ஷர்மா. ஆண்டர்சனும் ஸ்டோக்ஸும், மிகவும் நேர்த்தியான லைனில் பந்து வீச, ரன்கள் எதுவும் வரவில்லை. தடுப்பாட்டத்தை மட்டுமே, நமது பேட்ஸ்மேன்கள் ஆடிக் கொண்டிருந்தார்கள். இங்கிலாந்து பௌலர்கள் எவ்வளவு நேர்த்தியாக வீசினார்கள் என்றால், ஆண்டர்சன் வீசிய 10 ஓவரில், 8 ஓவர்கள், மெய்டன் ஓவர்கள் ஆகி, வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார்.

இந்தத் தொடர் முழுவதும், புஜாராவை, சொல்லி வைத்துத் தூக்கிவரும் ஜேக் லீச்சை உள்ளே ஜோ ரூட் கொண்டு வர, அவர் வீசிய இரண்டாவது ஓவரிலேயே, பலன் கிடைத்தது. லீச் வீசிய பந்தில், முதல் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த ஸ்டோக்ஸிடம், மயிரிழையில், கேட்ச் வாய்ப்பில் தப்பிப் பிழைத்தவர், அடுத்து சிறிது நேரத்தில் லீச் வீசிய மற்றொரு பந்தில் ஃபிரன்ட் ஃபுட்டில் வந்து டிஃபெண்ட் செய்ய வர, பந்து பேடில் பட, அவுட் கொடுக்கப்பட்டது. புஜாரா ரிவ்யூ எடுத்தும், பலன் இல்லை. பந்து மிடில் ஸ்டெம்ப்பைத் தாக்க, அவுட் உறுதியானது. இந்தத் தொடரில் இதுவரை, 4 முறை லீச் பந்தில் புஜாரா ஆட்டமிழந்திருக்கிறார். ஸ்பின் பந்துவீச்சில், நன்றாக விளையாடக் கூடிய புஜாராவே இப்படித் திணறி வருவது மிகவும் வேதனைக்குரியது.

#INDvENG
#INDvENG

சரி, டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் தான் கைவிட்டுவிட்டார். இனி எல்லா ஃபாரமேட்டிலும் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன், அணியின் நம்பர் 1 பேட்ஸ்மேன், அணியின் கேப்டன் விராட் கோலி காப்பாற்றுவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து, 'ஒருநாள் போட்டிகளில், பெரிய பார்ட்னர்ஷிப் எடுப்பது போல், இன்றைய டெஸ்ட் போட்டியிலும் எடுக்கப் போகிறார்கள். விராட் கோலியும் சதம் அடித்து 467 நாட்களுக்கு மேலே ஆகிவிட்டது. இன்றைக்கு, எப்படியும் அதை நிறைவேற்றி விடுவார் 'என சங்கிலித் தொடராய், பல எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக எழ, அந்த எண்ணங்கள் எல்லாமே அடுத்த நிமிடமே காற்றில் கரைந்து போனது!

பென் ஸ்டோக்ஸ் வீசிய, 4-வது ஸ்டம்ப் பவுன்சரில், தேவையில்லாமல் ஆடப் போக, டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார் கோலி. அவரது மோசமான ஃபார்ம், தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அவரும் இந்த மேட்ச் சதம் அடித்துவிடுவார், அடுத்த மேட்ச் சதம் அடித்துவிடுவார் என ரசிகர்கள் வழி மேல் விழிவைத்துக் காத்திருக்க, ஒவ்வொரு முறையும் மிஞ்சுவது ஏமாற்றம் மட்டுமே. விராட் கோலி கடைசியாகச் சதமடித்து 37 இன்னிங்ஸ்கள் ஆகிவிட்டன.

39 ரன்களுக்கு, 1 விக்கெட் என இருந்த அணியின் நிலைமை, 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் ஆனது. புஜாரா, கோலி இருவரும், அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அணியை மீட்கும் பெரும் பொறுப்பு, ரோஹித் ஷர்மா, ரஹானே மீது விழுந்தது. சென்னையில் இரண்டாவது டெஸ்ட்டில் காப்பாற்றியது போல், இந்த இன்னிங்ஸிலும் பெரிய பார்ட்னர்ஷிப் எடுப்பார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தனர் ரசிகர்கள். ரோஹித் ஷர்மாவும், ரஹானேவும், தவறான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்ப, ரன்கள் வரத் தொடங்கின.

ரிஷப் பன்ட்
ரிஷப் பன்ட்

நன்றாக ஆடிக் கொண்டிருந்த ரஹானே, 27 ரன்கள் எடுத்த நிலையில், முதல் செஷன் முடிவதற்கு கடைசி இரண்டு பந்துகள் மட்டுமே இருக்கும் போது, டிஃபென்ஸ் ஆட வேண்டிய ரஹானே, ஆண்டர்சன் வீசிய பந்தில், ஸ்டோக்ஸிடம், இரண்டாவது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

''நிலைப்புத்தன்மையுடன் ரன்களை எடுப்பதே இல்லை. தொடருக்கு ஒரு மேட்ச் மட்டுமே நன்றாக ஆடுகிறார்'' என்று ரஹானே மீது, தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுக் கொண்டேதான் வருகின்றன. அவர் இதை மறுத்து வந்தாலும், நம்பர்கள் அவருக்கு எதிராகவே இருக்கின்றன. விரைவில், இது சரி செய்யப்படவில்லை என்றால், ரஹானேவின் இடம், அணியில் கேள்விக்குறியாகும்!

80 ரன்களுக்கு, 4 விக்கெட் போன நிலையில், இரண்டாவது செஷன் ஆட்டத்தை ரோஹித் ஷர்மாவும், ரிஷப் பன்ட்டும் தொடர்ந்தனர். ரோஹித் ஷர்மா, தன் மீது இருக்கும் பெரிய பொறுப்பை உணர்ந்து, நிதானமாக ஆடிக் கொண்டிருந்தார். பன்ட்டும், அவருக்கு உறுதுணையாக ஆட, ரன்கள் வர ஆரம்பித்தன. பன்ட் வந்தவுடன், ஜோ ரூட் பெளலிங் போட வர, அவரை சிக்ஸர் அடித்து வரவேற்றார் பன்ட் .

ரோஹித் அரைசதத்தை நெருங்கும் வேளையில், ஸ்டோக்ஸ் வீசிய இன்ஸ்விங் பந்தில், எல்பிடபிள்யூ ஆக, ரோஹித் ரிவ்யூவுக்குச் சென்றார். நேற்று, ஏற்கெனவே அம்பயர் காலின் மூலம், கில் எல்பிடபிள்யூ ஆக, அதே அம்பயர் கால் தான் நேற்று ரோஹித் ஆட்டமிழந்ததற்கும் காரணமாக இருந்தது. பந்து இம்பேக்ட் வெளியே இருந்தாலும், டாப் ஆஃப் தி பெயிலை பந்து தொட்டாலும், அம்பயர் கால் என்ற அடிப்படையில் அவுட் தரப்பட, இந்தியர்கள் நொறுங்கித்தான் போனார்கள். அருமையாக ஆடிக்கொண்டிருந்த ரோஹித் ஷர்மா, 49 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

ரோஹித் - ரஹானே கூட்டணி, 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்ந்திருந்தது போல், இந்தக் கூட்டணியும், 40 ரன்கள் மட்டும் சேர்த்துப் பிரிந்தது. இந்திய அணி, பெரிய லீட் எடுக்கவேண்டும் எனில், 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கண்டிப்பாகத் தேவை என்ற நிலையில் பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்து கொண்டே செல்ல, ஒரு கட்டத்தில் 200 ரன்களையாவது அடிப்போமோ என்ற நிலை வந்துவிட்டது.

ஜோ ரூட்
ஜோ ரூட்

ரோஹித் போனவுடன் வந்த அஷ்வினும் வெகுநேரம் நீடிக்கவில்லை. தன் பங்கிற்கு, 13 ரன்களை அடித்துவிட்டு, அவரும் லீச் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். தேநீர் இடைவெளிக்கு முன், எல்பிடபிள்யூ அப்பீலில் இருந்து, பன்ட் தப்பிப் பிழைக்க, அணியின் ஸ்கோர், 153 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என வந்து நின்றது.

52 ரன்கள் பின்தங்கிய நிலையில், மூன்றாவது செஷனைத் தொடர்ந்த இந்தியாவின் ஆட்டத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. பிரிஸ்பேனில் ஆஸ்திரலியா அணிக்கு எதிரான போட்டியில், அதிரடியாக ஆடி அணியை மீட்டது போல், மீண்டும் ஒரு ஆட்டத்தை பன்ட் மற்றும் சுந்தர் கையிலெடுத்தனர்.

பெஸ், லீச், ரூட் என 3 பந்து வீச்சாளர்களும் மாறி மாறிப் பந்து வீசியும், இவர்களை அசைக்க முடியவில்லை. பன்ட் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆட ஆரம்பித்தார், பந்துகள் பவுண்டரி லைனுக்கு ஓட ஆரம்பித்தது. கூடவே பன்ட்டின் அரைச்சதமும் வந்து சேர்ந்தது. தன் பணி இன்னும் முடியவில்லை என்பதை உணர்ந்திருந்த பன்ட், அடுத்து ஆடியதுதான் ருத்ரதாண்டவம்.

ஸ்பின்னர்கள் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிக் கொண்டே இருக்க, 80-வது ஓவரும் வந்தது. இங்கிலாந்து புதுப்பந்து எடுத்தால், இந்திய அணி பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள் என கணக்குப் போட்டு எடுக்க, அது தப்புக் கணக்கு என்பதை முதல் பாலே பன்ட் நிருபித்தார். ஆண்டர்சன் வீசிய முதல் பந்தில், இறங்கி வந்து பவுண்டரி அடித்த போதே, இங்கிலாந்து ஆடிப் போய்விட்டது. அதற்கு அடுத்து நடந்தது எல்லாம் சூரசம்ஹாரம்தான். இங்கிலாந்து அணியை வதம் செய்து விட்டனர், பன்ட் மட்டும் சுந்தர். இருவரும் ஆண்டர்சன் மற்றும் ஸ்டோக்ஸ் பந்துகளை பவுண்டரிகளுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தனர். அதுவும் ஆண்டர்சன் பந்தில், பன்ட் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்த பவுண்டரியைப் பார்த்து, இங்கிலாந்து நொறுங்கித்தான் போய்விட்டது.

வாஷிங்டன், அக்ஸர்
வாஷிங்டன், அக்ஸர்

டெஸ்ட் கிரிக்கெட்டில், புதுப்பந்தில் எல்லாம் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுவார்களா என்ற கேள்வியை ஆச்சரியக்குறியாக மாற்றி எழுதினார் ரிஷப் பன்ட்.

ரிஷப் பன்ட், 94 ரன்களை நெருங்கிய நிலையில், ஜோ ரூட் பந்து வீச வர, லெக் சைட் திசையில், சிக்ஸர் அடித்து நீண்டநாள் சத தவத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். இதுவரை வெளிநாடுகளில் இரண்டு சதமடித்திருக்கும் பன்ட், இந்தியாவில் அடிக்கும் முதல் சதம் இதுதான். சதம் அடித்த கையோடு, ஆண்டர்சன் பந்தைத் தூக்கி அடிக்க அது கேட்ச் ஆனது.

ஒரு கட்டத்தில் 200 ரன்களைத் தாண்டுமா என்ற நிலையில் இருந்த இந்திய அணியை, மீட்டெடுத்து மற்றுமொரு மேட்ச் வின்னிங் இன்னிங்க்ஸ் ஆடி, அணியை ஓரளவு கரைசேர்த்த திருப்தியில், பெவிலியன் திரும்பினார், ரிஷப் பன்ட்.

ரிஷப் பன்ட் விட்ட இடத்தை, கையில் பிடித்துக் கொண்ட சுந்தர், அரைச்சதம் அடித்து, அணியை 89 ரன்கள் லீட் என்ற பாதுகாப்பான நிலைக்கு எடுத்துச் சென்றார்.

ஆட்டநேர முடிவில், சுந்தர் 60 ரன்களும், அக்ஸர் பட்டேல், 11 ரன்களும் எடுத்திருக்க, இந்திய அணி, 294 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் என்ற நிலையில் உள்ளது. நாளை மேலும் கூடுதலாக 50 ரன்களைச் சேர்த்தால், வெற்றி எளிதில் இந்திய அணிக்கு வசப்படும், காத்திருப்போம்... இன்று கிட்டத்தட்ட முடிவு தெரிந்துவிடும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு