``இந்தக் கிறுக்கனை ஏன் திரும்பத் திரும்ப டீம்ல சேர்க்குறாங்க... ஓவர்ரேட்டட்... இவரை விட்டா இந்தியாவுக்கு ஆளா இல்லை... தோனி இருந்த இடத்துல இவரா?'' - `ரிஷப் பன்ட்' என ட்விட்டரில் அடித்தால்போதும் இதுபோன்ற விமர்சனங்கள் வந்து கொட்டும்.
ஆனால், இந்தியா அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையை வெல்லவேண்டுமானால் ரிஷப் பன்ட் அணியில் இருக்க வேண்டும். ஏனென்றால்...
நல்ல ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள், ஸ்ட்ராங் மிடில் ஆர்டர், ஸ்லாக் ஓவர்களில் ஸ்கோரை மளமளவென உயர்த்த அல்லது சேஸ் செய்ய பவர்ஃபுல் ஹிட்டர்ஸ்... என இவை அனைத்தும் கலந்ததுதான் ஒரு நல்ல டீம் காம்போ. இந்த பர்ஃபெக்ட் காம்போவில் இந்தியாவின் பவர்ஃபுல் ஹிட்டராக இருக்கக்கூடியவர் ரிஷப் பன்ட். ஆனால், அவரைத்தான் வேண்டாம் என்கிறது சோஷியல் மீடியா கூட்டம்.
யார் இந்த ரிஷப் பன்ட்?
21 வயதேயாகும் இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் இந்த ரிஷப் பன்ட். பார்க்க சுள்ளான் போல இருந்தாலும் பெளலர்களுக்கு சுளுக்கெடுப்பதில் வல்லவர். 2015-ல் டெல்லி அணிக்காக ரஞ்சி கோப்பையில் அறிமுகமானார் ரிஷப். 2016-ல் மகாராஷ்டிரா அணிக்கு எதிராக ரஞ்சிக்கோப்பையில் ஆடியது டெல்லி. முதல் இன்னிங்ஸில் 635 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது மகாராஷ்டிரா. அந்த அணியின் குகளே 351 ரன்கள் அடித்தார். தளர்ந்துபோய் இன்னிங்ஸைத் தொடங்கியது டெல்லி. மூன்றாவது டவுன் வீரராகக் களமிறங்கினார் ரிஷப் பன்ட். மகாராஷ்டிராவின் பெளலிங்கைத் தனி ஒருவனாகச் சிதைத்தார். 326 பந்துகளில் 308 ரன்கள். 42 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள். அந்த இன்னிங்ஸ்தான் 18 வயது இளைஞன் ரிஷப்பை இந்திய கிரிக்கெட் உலகுக்கு அடையாளம் காட்டியது.

அடுத்ததாக ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக ரஞ்சி போட்டியில் 48 பந்துகளில் 100 ரன்கள் அடித்து பவர்ஃபுல் ஹிட்டர் என்பதைப் பதிவுசெய்தார் ரிஷப். இந்த இரண்டு இன்னிங்ஸ்களால் அடுத்த தோனி என மீடியாக்கள் அடையாளம் காட்ட ஐபிஎல் போட்டிகளுக்குள் வந்தார்.
ஐபிஎல் ரிஷபை இந்தியா முழுக்கக் கொண்டு சென்றது. டெல்லி அணிக்காகத் தனியொருவனாகப் பல இன்னிங்ஸ்களில் மிரட்டியிருக்கிறார் ரிஷப். 25 பந்துகளில் 50 ரன்கள் அடித்திருக்கிறார். 43 பந்துகளில் 97 ரன்கள் வெளுத்திருக்கிறார். 2018 சீசனில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 63 பந்துகளில் 128 ரன்கள் என மிரட்டியிருக்கிறார் ரிஷப்.
2017 சீசனின் ஆரம்பத்தில் முதல் போட்டியாக பெங்களூரு அணிக்கு எதிராக ஆட இருந்தது டெல்லி. ஆனால் சச்சின், கோலிக்கு வந்த சோதனைபோல ரிஷப் பன்ட்டுக்கும் வந்தது. ஆட்டத்துக்கு முந்தைய நாள் திடீரென தூக்கத்திலேயே பன்ட்டின் தந்தை இறந்துவிட, உடனடியாக பெங்களூரிலிருந்து டெல்லிக்குப் பறந்தார் ரிஷப். இறுதிக் காரியங்களை முடித்துவிட்டு மீண்டும் பெங்களூரு. அன்றைய போட்டியில் 36 பந்துகளில் 57 ரன்கள் அடித்தார் ரிஷப். இந்த இன்னிங்ஸ் ரிஷப் பன்ட்டின் மன உறுதிக்குச் சான்று. எமோஷனல் விஷயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு பேட்டிங்கில் அதிரடி காட்டினார் ரிஷப்.
2017-ல் இந்தியன் டீமுக்கு அறிமுகமானார். அன்றிலிருந்து 2019 உலகக்கோப்பை அரை இறுதிப்போட்டிவரை ரிஷப் பன்ட்டுக்கு ஏறுமுகம்தான். ஆனால், அதன்பிறகு எல்லாமே மாறிவிட்டது.
2018-ம் ஆண்டு இங்கிலாந்தில், 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் என 21 வயதிலேயே சதங்கள் அடித்து கோல்டன் இன்னிங்ஸ் ஆடியிருக்கிறார் ரிஷப். 2018-ல் ஐசிசியின் Emerging Cricketer of the Year விருதையும் வாங்கியிருக்கிறார். ஆனால், கிரிக்கெட்டில் ஃபார்ம் என்பது எப்போது வேண்டுமானாலும் சறுக்கும்.
சறுக்கல்கள்...
தேவையில்லாத ஷாட்ஸ் ஆடி அவுட் ஆகிறார் என்பதுதான் ரிஷப் பன்ட்டின் மீது வைக்கப்படும் விமர்சனம். இத்தனை சாதனைகளை இந்த இளம் வயதிலேயே செய்தவர் கொஞ்சம் சறுக்க ஆரம்பித்தவுடன் ஊதிப் பெரிதாக்குவது மிகப்பெரிய தவறு.

when will he learn to make an innings , when will he learn to build an innings என விமர்சனங்கள் வந்துவிழுகின்றன. காரணம் எல்லோரும் இன்னொரு தோனியையே ரிஷப் பன்ட்டிடம் இருந்து எதிர்பார்ப்பதுதான். அப்படி எதிர்பார்ப்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். தோனி எந்தத் தோல்வியும் இல்லாமல் உச்சத்துக்கு உயரவில்லை என்று. MS Dhoni not made in a day...
இதை எல்லோரும் புரிந்துகொண்டாலே, பன்ட்டுக்குத் தேவையில்லாத பிரஷர் இருக்காது. முதலில் கோலியைப் பற்றிப் புகாராக சொல்லப்பட்டதே ஒரு வீரருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் தருகிறார், தொடர்ந்து ப்ளேயிங் லெவனை மாற்றுகிறார் என்பதுதான். ஆனால், இப்போது பன்ட்டுக்கு ஏன் தொடர்ந்து வாய்ப்புகள் தருகிறார் என்கிறார்கள்.
X factor
எல்லா டீமுக்கும் ஒரு எக்ஸ்-ஃபேக்டர் ப்ளேயர் இருப்பார்கள். அவர்கள்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றுவார்கள். முதலில் பேட்டிங் என்றால் மடமடவென ஸ்கோரை உயர்த்துவதற்கும், இரண்டாவது பேட்டிங் என்றால் இமாலய ஸ்கோரை சேஸ் செய்வதற்கும் இந்த எக்ஸ்-ஃபேக்டர் ப்ளேயர் அணியில் அவசியம் இருக்க வேண்டும். ஷேவாக், மெக்கல்லம், மேக்ஸ்வெல், அஃப்ரிடி, ஜெயசூர்யா, ஜேஸன் ராய், கிறிஸ் கெய்ல் என எல்லாருமே இந்த வகை ப்ளேயர்கள்தான்.
அடித்து ஆடு அல்லது அவுட் ஆகு... இதுதான் இவர்களது பாலிசி. அடிச்சா டீம் ஜெயிக்கும். இல்லையென்றால் அடுத்த மேட்ச்சில் பார்த்துக்கொள்ளலாம் என்கிற கூல் ஆட்டிட்யூட் இவர்களுடையதாக இருக்கும்.
அஃப்ரிடி அவுட் ஆகும் விதத்தை நாம் எல்லோருமே பார்த்திருப்போம். அடித்து ஆட வேண்டாம், ஒரு ஓவருக்கு 6 ரன்கள் அடித்தாலே வெற்றி சாத்தியாகும் எனும்போது தூக்கியடிப்பார் அஃப்ரிடி. அவர் அப்படித்தான். அப்படி அடித்தால்தான் அவர் அஃப்ரிடி. தூக்கியடிக்கும் ஸ்டலை அஃப்ரிடியும் மாற்றவில்லை. அதை மாற்ற வேண்டும் என அணி நிர்வாகமும் நிர்பந்திக்கவில்லை. அப்படி விட்டதினால்தான் பாகிஸ்தானுக்கு அஃப்ரிடி கிடைத்தார்.

இதையேதான் யுவராஜ் சிங்கும் சொல்கிறார். பன்ட்டோட குணத்தைப் புரிந்துகொண்டு அவரிடம் இருக்கும் பெஸ்ட்டைக் கொண்டு வாருங்கள் என்கிறார். இந்திய அணியில் பந்துகளை டிஃபெண்ட் செய்வதற்கும், கிரவுண்டட் ஷாட்ஸ் ஆடுவதற்கும், ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வதற்கும் நிறையபேர் அணிக்குள் இருக்கிறார்கள். அவர்கள் அந்த வேலையை செய்யட்டும். பன்ட் ஒரு அதிரடி பேட்ஸ்மேனாகவும், destroyer ஆகவும் இருக்கட்டுமே... இதில் என்ன தவறு.
பன்ட் விஷயத்தில் இந்திய அணி மட்டுமல்ல, இந்திய ரசிகர்களும் பொறுமை காக்க வேண்டும். அப்படிப் பொறுமை காத்தால் மட்டுமே இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு கில்கிறிஸ்ட் கிடைப்பார். இந்தியாவின் கில்கிறிஸ்டைத் தக்கவைத்துக்கொள்வதும், தகர்த்து தரைமட்டமாக்குவதும் நம்மிடம்தான் இருக்கிறது!