Published:Updated:

ரிக்கி பான்ட்டிங்... களத்துக்கு வந்துட்டா சமாதானமே கிடையாது... சண்டை செய்வோமா?! அண்டர் ஆர்ம்ஸ் - 14

ரிக்கி பான்ட்டிங்
ரிக்கி பான்ட்டிங் ( ஹாசிப் கான் )

தொடர்ந்து வெற்றி, தொடர்ந்து கோப்பைகள், தொடர்ந்து ஷாம்பெய்ன் குலுக்கல்களைப் பார்த்து வளர்ந்தவர் என்பதாலோ, என்னவோ இவருக்கு வெற்றிகள் மட்டுமேதான் பிடிக்கும்.

''என்னுடைய தீர்மானங்கள் மிகக்கடுமையானவை. அவை என்னை வெற்றியை மட்டுமே நோக்கி உந்தித்தள்ளக்கூடியவை!''
- ரிக்கி பான்ட்டிங்

தோல்விகள் இவருக்கு வெறும் தோல்விகள் அல்ல. அவற்றை அவமானமாக, அசிங்கமாக, அருவருப்பானவையாக எப்போதுமே வெறுத்தவர் ரிக்கி பான்ட்டிங். கிரிக்கெட் களத்துக்குள் வந்துவிட்டப்பிறகு எதிரிகளோடு கைகுலுக்குவது, அவர்கள் சிறப்பாக விளையாடும்போது கைதட்டுவது, புன்சிரிப்புகளை பரிமாறிக்கொள்வது... இதெல்லாம் பான்ட்டிங்கின் பள்ளியில் இல்லை. களத்துக்கு வந்துவிட்டால் அவன் எதிரிதான். எதிரிக்கு ஒரு சிறுவெற்றிகூட கிடைக்கக்கூடாது, அப்படிப்பட்ட ஒரு தருணத்தைக்கூட ஏற்படுத்திவிடாக்கூடாது என்பதில் கவனமாகவும், கடுமையாகவும் இருந்த... கிரிக்கெட் உலகம் பார்த்த ஒரே வீரன் ரிக்கி பான்ட்டிங்.

பார்ப்பதற்கு பள்ளிக்கூடச் சிறுவன் போல பால் வடியும் முகத்துடன் இருப்பார். ஆனால், களம் இறங்கிவிட்டால் டெரர் ஆகிவிடுவார். களத்துக்குள் வந்துவிட்டால் சமாதானம் எல்லாம் இல்லை... சண்டைதான்... ஒதுங்கிப்போகிறவர்களையும் வம்படியாக இழுத்துவந்து சண்டை செய்த சண்டைக்காரன், சாகசக்காரன் இந்த ரிக்கி பான்ட்டிங்.

Ricky Ponting
Ricky Ponting
ICC

ஒரு கிரிக்கெட்டரை வெறும் எண்களைக்கொண்டு வர்ணிக்கக்கூடாது என சொல்வர்கள். ஆனால், பான்ட்டிங்கின் சாதனைகளை எண்களால் சொல்லாமல் இருக்கமுடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருப்பவர் ரிக்கி பான்ட்டிங்தான். 13,378 ரன்கள் அடித்திருக்கிறார். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின், சங்ககாராவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருக்கிறார். 13,704 ரன்கள் அடித்திருக்கிறார். இரண்டிலும் சேர்த்து மொத்தமாக 71 சதங்கள் அடித்திருக்கிறார். 144 அரை சதங்கள் அடித்திருக்கிறார்.

168 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இதில் 100 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் வெற்றியைப் பார்த்திருக்கிறார். மார்க் டெய்லர் தலைமையிலான அணியில் மார்க் வாக், ஸ்டீவ் வாக், ஜஸ்ட்டின் லேங்கர் ஆகியோருடன் விளையாட ஆரம்பித்து, கிளார்க் தலைமையிலான அணியில் வாட்ஸன், வார்னர் ஆகியோருடன் விளையாடி ஓய்வுபெற்றவர் பான்ட்டிங். இந்த இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருந்து தொடர்ந்து இரண்டு உலகக்கோப்பைகளைப் பெற்றுத்தந்தவர்.

மெக்ராத்தும், ஷேன் வார்னேவும் ரிக்கி பான்ட்டிங் தலைமையிலான அணியில் இருந்தவரை ஆஸ்திரேலியா ஒரு டெஸ்ட் போட்டியில்கூட தோற்கவேயில்லை. இந்த காம்போ 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறது. அதில் 19 வெற்றி, 5 போட்டிகளில் டிரா.

தொடர்ந்து வெற்றி, தொடர்ந்து கோப்பைகள், தொடர்ந்து ஷாம்பெய்ன் குலுக்கல்களைப் பார்த்து வளர்ந்தவர் என்பதாலோ, என்னவோ இவருக்கு வெற்றிகள் மட்டுமேதான் பிடிக்கும். தோல்வி நிலை வந்துவிட்டால் பான்ட்டிங் முகத்தைப் பார்க்கவே முடியாது. முகமெல்லாம் சிவந்து, கடுகடுவென ஆகிவிடுவார். இப்போதும், வாய்ப்பு கிடைத்தால் இந்தியாவுக்கு எதிரான அந்த 2011 உலகக்கோப்பை காலிறுதிப்போட்டியைப் பாருங்கள்.

Ricky Ponting
Ricky Ponting
ICC

2003, 2007 எனத்தொடர்ந்து இரண்டு உலகக்கோப்பைகளைப் பெற்றுத்தந்தவர் அந்த மூன்றாவது உலகக்கோப்பையும் பெற்று ஹாட்ரிக் அடித்துவிடவேண்டும், இந்தியாவைத் தோற்கடித்துவிட வேண்டும் என்று ஆட்டத்தின் இறுதிவரை முயன்றிருப்பார். ரிக்கி பான்ட்டிங் கடைசியாக அடித்த ஒருநாள் சதம் அன்றுதான். 104 ரன்கள் அடித்து மொத்தமாக இந்தியாவுக்கு 260 ரன் டார்கெட்டை செட் செய்திருப்பார் பான்ட்டிங். ஆனால், சச்சின், கம்பீர், யுவராஜ் சிங் ஆகியோரின் ஆட்டத்தால் வெற்றி இந்தியாவின் பக்கம் போக ஆரம்பித்தது. யுவராஜ் சிங்கின் அரை சதத்தால் இந்தியா வெற்றியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. மிகவும் எளிதான வெற்றியை நோக்கிப் பயணிக்கிறது இந்தியா. ஆனால், அந்த நிலையிலும் மனதைத்தளர விடாமல் நகங்களைக் கடித்துக்கொண்டே, ஃபீல்ட் செட் அப்பை மாற்றி, பெளலர்களை மாற்றி, பேட்ஸ்மேன்களின் கவனத்தைத் திசைதிருப்ப வார்த்தைகளால் துப்பி என அந்தத் தோல்வியைத் தவிர்க்கப் போராடிக்கொண்டிருந்தார் ரிக்கி பான்ட்டிங். இந்தியாவுக்கு வெற்றியை அவ்வளவு எளிதாகக்கொடுத்துவிடவில்லை பான்ட்டிங்.... அதுதான் ரிக்கி தாமஸ் பான்ட்டிங்கின் கேரக்டர்!

90-களின் கிரிக்கெட் விதவிதமான, ரகம் ரகமான வித்தியாச பேட்ஸ்மேன்களையும், பெளலர்களையும் பார்த்துக்கொண்டிருந்தது. பால் ஆடம்ஸ் என்ற தென்னாப்பிரிக்காவின் பெளலர் ஸ்டம்புகளைப் பார்க்காமலேயே, ஓடிவந்து தரையைப் பார்த்துக்கொண்டே ஸ்பின் போடுவார். ஆனால், லைன் அண்ட் லென்த் துல்லியமாக இருக்கும். அதேபோல் சந்தர்பால் நண்டு நிற்பதுபோல, லெக் அம்பயரைப் பார்த்தபடி பேட் பிடிப்பார். அந்த வரிசையில் ரிக்கி பான்ட்டிங்கும் கொஞ்சம் வித்தியாசமானவர். பெளலர் பந்தை ரிலீஸ் செய்வதற்கு சில விநாடிகளுக்கு முன்பே ஒரு ப்ரிவியூ பார்ப்பதுபோல, ஸ்டைலாக ஒரு ஸ்ட்ரோக் வைத்துவிட்டுத்தான் பந்தை அடிப்பார் பான்ட்டிங். பார்க்கவே படு வித்தியாசமாக இருக்கும். அந்த வித்தியாசமான பேட்டிங் ஸ்டைல் மூலமே 'யார்ரா இவன்' என கவனிக்க வைத்துவிடுவார் பான்ட்டிங். அதுவும் அந்த ஹூக் ஷாட்... பான்ட்டிங்கிடம் பாடம் படிக்கவேண்டும்.

நாசர் ஹுசைன்...  கேப்டன்களின் ரோல் மாடல்... ஆனால்?! அண்டர் ஆர்ம்ஸ் - 13 #NasserHussain

1995-லேயே ஆஸ்திரேலிய அணிக்குள் வந்துவிட்டாலும் 96 உலகக்கோப்பையின்போதுதான் பிரபலமானார் ரிக்கி பான்ட்டிங். வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலுக்காக பார்க்கப்பட்டாரே தவிர பெரிய இன்னிங்ஸ்கள் பெரிதாக எதுவும் ஆடவில்லை. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக மட்டும் கடைசியாக ஆடிய லீக் போட்டியில் சதம் அடித்தார். ஆனால், அந்த மேட்ச்சில் பான்ட்டிங் சதம் அடித்தும் ஆஸ்திரேலியா தோற்றுப்போனது. தொடர்ந்து அணிக்குள் வருவதும், போவதுமாக இருந்த பான்ட்டிங்கிற்கு கொஞ்சம் குடிப்பழக்கமும் அதிகமாகவே இருந்தது.

''சில நேரங்களில் நான் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிடுகிறேன். அப்படிக் குடித்துவிட்டால் அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே எனக்குத் தெரியாமல் போய்விடுகிறது. எல்லையை மீறிவிடுகிறேன்.''
ரிக்கி பான்ட்டிங்

1998-ல் ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்தபோது கொல்கத்தாவில் குடித்துவிட்டு முதல் சம்பவம் செய்தார் பான்ட்டிங். அந்த சீரிஸின் முதல் டெஸ்ட் சென்னையில் நடந்தது. சச்சினின் அதிரடியால் இந்தியா வெற்றிபெற, இரண்டாவது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலியாவின் ஓப்பனர்களைத் தூக்கிவிட்டார் ஶ்ரீநாத். கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் கழித்து ஒரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் முதல் இரண்டு விக்கெட்களையும் முதல் ஓவரிலேயே வீழ்த்துவது அதுதான் முதல்முறை. 29 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்துவிட்டது ஆஸ்திரேலியா. அப்போதுதான் ஸ்டீவ் வாகுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப்போட்டு ஆங்கர் இன்னிங்ஸ் ஆடினார் பான்ட்டிங். ஸ்டீவ் வாக் 80 ரன்கள் அடிக்க, பான்ட்டிங் 60 ரன்கள் அடித்தார். அன்றைய தினத்தைக் கொண்டாட முடிவு செய்த பான்ட்டிங், கொல்கத்தாவின் பார் ஒன்றுக்குள் நுழைந்திருக்கிறார். குடி அதிகமாக, அங்கிருந்த பெண்கள் சிலரிடம் தவறாக நடக்கமுயன்றதாகவும், அதனால் அவர் அடித்து வெளியேற்றப்பட்டதாகவும் அடுத்த நாள் செய்திகள் வெளியாகின. பான்ட்டிங் இப்படி குடித்துவிட்டு பிரச்னைகளில் ஈடுபட்டது முதல்முறையல்ல. பலமுறை இதுபோன்ற சம்பங்கள் நடக்க, அணியில் இருந்து விலக்கப்பட்டு குடிப்பழக்கத்தைக் கைவிடுவதற்கான கவுன்சிலிங்கிற்கு அனுப்பப்பட்டு, திரும்ப அணிக்குள் வந்தவர் பான்ட்டிங்.

ரிக்கி பான்டிங்
ரிக்கி பான்டிங்

பான்ட்டிங்கின் பொற்காலம் என்பது 2002-ல்தான் தொடங்கியது. ஸ்டீவ் வாகிடம் இருந்து கேப்டன்ஸி எடுக்கப்பட்டு, ஆடம் கில்கிறிஸ்ட்டிடம் கொடுக்கப்படும் என எல்லோரும் எதிர்பார்க்க 'சண்டைக்காரன்' ரிக்கி பான்ட்டிங்கிடம் கேப்டன்ஷிப் போனது. கேப்டன் ஆனால் ப்ரஷர் கூடும், பேட்டிங் பாதிக்கப்படும் என்கிற கதைகள் எல்லாம் பான்ட்டிங்கிடம் செல்லுபடியாகவில்லை. உண்மையில் கேப்டன் ஆனப்பிறகுதான் ஃபார்முக்கு வந்தார் பான்ட்டிங். அவரது பேட்டிங்கில் பவர் கூடியது.

2002-2008 காலகட்டத்தில் மட்டும் 72 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார் பான்ட்டிங். இதில் இவர் அடித்தது 7269 ரன்கள். ஆவரேஜ் 67.93. சதங்கள் மட்டும் 27. அரை சதங்கள் 26. அதேபோல் இதே காலகட்டத்தில் 170 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். 6,320 ரன்கள் அடித்திருக்கிறார். சச்சின் டென்னிஸ் எல்போ பிரச்னையால் அவதிப்பட்ட இந்தக் காலத்தில் பான்ட்டிங்கின் கொடியே சர்வதேச கிரிக்கெட்டில் பறந்தது. இதில் 2003 மற்றும் 2007-ல் மட்டும் ஆண்டுக்கு 5 சதங்கள் எல்லாம் அடித்து பரபரக்கவைத்தார்.

இந்தக் காலகட்டத்தில் அவர் பல முக்கியமான இன்னிங்ஸ்கள் ஆடியிருந்தாலும் நான் இரண்டே இன்னிங்ஸ்களை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். முதலாவது அவர் கேப்டன்ஸியின் உச்சம்தொட்ட 2003 உலகக்கோப்பை. இந்த உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான அந்த இறுதிப்போட்டியில் அவர் ஆடிய ஆட்டம் இன்றுவரை கண்களுக்குள் கலவரம் செய்கிறது. தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கில், வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் 23-ம் தேதி நடைபெற்றது அந்த இறுதிப்போட்டி. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அன்று மனஅழுத்தத்தை வரவைத்தார் ரிக்கி பான்ட்டிங்.

Ricky Ponting
Ricky Ponting
ICC

''நாங்களே இப்பதான் ரொம்ப வருஷம் கழிச்சு ஃபைனல்ஸுக்குலாம் வந்திருக்கோம். ஆனா, கொஞ்சம் கூட கருணையே இல்லாம இந்த அடி அடிக்கிறானே'' என இந்தியர்களைப் புலம்பவைத்தது பான்ட்டிங்கின் ஆட்டம். ஜாகீர்கான், ஶ்ரீநாத், ஆசிஷ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங் மட்டுமல்லாது தினேஷ் மோங்கியா வரை அன்று மட்டும் 8 பேர் பெளலிங் போட்டார்கள். ஆனால், பான்ட்டிங்கை ஒன்றுமே செய்யமுடியவில்லை. முதலில் கொஞ்சம் சாதுவாகத்தான் ஆடினார் பான்ட்டிங். 74 பந்துகளுக்கு 50 ரன்கள்தான் அடித்தார். அதுவரை ஹோண்டா சிட்டியின் ஸ்டீயரிங் வீலைப் பிடித்துக்கொண்டிருந்தவரின் கைகளுக்கு, போர்ஷேவின் ஸ்டீயரிங் வீல் வந்ததுபோல் இருந்தது.

50 ரன்களைத் தாண்டியதும் கார் டாப் கியரில் ஆட்டோமேட்டிக் மோடுக்குத் தாவியதுபோல டாப்ஸ்பீடில் பறக்க ஆரம்பித்தது. அடுத்த 50 ரன்களை வெறும் 29 பந்துகளில் அடித்து சதம் அடித்தவர், மொத்தமாக 140 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக நின்றுகொண்டிருந்தார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் ஆஸ்திரேலியா அடித்தது 64 ரன்கள். இதில் ரிக்கி பான்ட்டிங்கின் கணக்கு மட்டும் 42 ரன்கள். இந்த இன்னிங்ஸ் மூலம் மனதளவில் இந்திய வீரர்களின் நம்பிக்கையை மொத்தமாக சிதைத்துவிட்டார் பான்ட்டிங். அதன்பிறகு என்ன நடந்தது என்பது நம் எல்லோருக்குமே தெரியும்.

சமிந்தா வாஸ்... சத்தமில்லா யுத்தங்கள் பல செய்தவன்! அண்டர் ஆர்ம்ஸ் - 12

இதற்கு அடுத்து நிச்சயம் குறிப்பிட்டே ஆகவேண்டிய ரிக்கி பான்ட்டிங்கின் இன்னொரு இன்னிங்ஸும், அதே ஜோஹன்னஸ்பர்க், வாண்டரர்ஸ் மைதானத்தில்தான் நடந்தது. ஆனால், இந்த முறை பான்ட்டிங்கிற்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி அது. இரண்டு உலகத்தரமான அணிகள், இரண்டு உலகத்தரமான கேப்டன்கள். முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் கிராம் ஸ்மித் தலைமையிலான தென்னாப்பிரிக்கா வெற்றிபெற, அடுத்த இரண்டு போட்டிகளில் கேப்டன் ரிக்கி பான்ட்டிங்கின் அணிவெற்றிபெற்று தொடரை 2-2 என சமநிலைக்குக் கொண்டுவந்தது. ஐந்தாவது போட்டிக்காக உலகமே பரபரப்புடன் காத்திருக்கிறது. ஆனால், இவ்வளவு அதிர்ச்சிகளும், ஆச்சர்யங்களும் அந்த ஒரே நாளில் நடக்குமா என கிரிக்கெட் உலகம் எதிர்பார்க்கவேயில்லை.

அந்த நாள் 12-03-2006. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பேட்ஸ்மேன்களின் உச்சபட்ச வேட்டை நடந்தது அன்றுதான்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியாவின் ஓப்பனர்கள் ஆடம் கில்கிறிஸ்ட், சைமன் கேட்டிச் இருவருமே சிறப்பாக ஆட ஆஸ்திரேலியா 15 ஓவர்களில் 90 ரன்களைக் கடந்தது. ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் கார்டு 97 ரன்களைக்காட்டியபோது கில்கிறிஸ்ட் அவுட். வந்தார் பான்ட்டிங். உலகின் சிறந்த பெளலிங் அட்டாக்கைக் கொண்ட அணி தென்னாப்பிரிக்கா. ஆனால், அந்த அணியின் பெளலிங்கையே அன்று ஒன்றும் இல்லாமல் ஆக்கினார். காலிஸின் 6 ஓவர்களில் மட்டும் 70 ரன்கள் விழுந்தது. தென்னாப்பிரிக்க வீரர்கள் மிரண்டு போனார்கள். வழக்கம்போல முதல் 50 ரன்களைக் கொஞ்சம் பொறுமையாக 43 பந்துகளில் அடித்தவர், அடுத்த 50 ரன்களை 33 பந்துகளில் அடித்தார். அடுத்த 50 ரன்களை 26 பந்துகளில் அடித்தார் என பான்ட்டிங்கின் பேட்டில் பொறிப் பறந்தது. மொத்தம் 105 பந்துகளில் 164 ரன்கள். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக 400 ரன்களைத்தொட்ட அணியாக, ஒருநாள் கிரிக்கெட்டின் அதிகபட்ச ஸ்கோராக 434 ரன்களைப் பதிவு செய்தது ஆஸ்திரேலியா.

ரிக்கி பாண்டிங்
ரிக்கி பாண்டிங்

434 ரன்களை எல்லாம் சேஸ் செய்யமுடியுமா என டிவி முன் உட்கார்ந்திருந்த என்னைப் போன்றவர்களுக்கு கிப்ஸ் எனும் அசுரனின் ஆட்டம் உற்சாகத்தில் உருள வைத்தது. பான்ட்டிங்கின் இன்னிங்ஸை மறக்கடித்தார் கிப்ஸ். தென்னாப்பிரிக்கா சேஸ் தொடங்கியதில் இருந்தே சிக்ஸர்களும் பவுண்டரிகளும் பறக்க ஆரம்பித்தன. கேப்டன் கிராம் ஸ்மித்துடன் சேர்ந்து கிப்ஸ் ஆடிய ஆட்டம் பான்ட்டிங்கின் வயிற்றுக்குள் பாறாங்கல்லை இறக்கியிருக்கும். கிப்ஸ் 175 ரன்கள் அடிக்க, ஸ்மித் 90 ரன்கள் அடிக்க, இறுதியில் மார்க் பவுச்சர் 50 ரன்கள் அடித்து, இறுதிவரை களத்தில் நின்று 434 ரன்களை சேஸ் செய்து முடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களாக தென்னாப்பிரிக்காவின் 438 ரன்கள் உலகசாதனைப் படைத்தது. ஒரே நாளில் உலக சாதனைகள் மாறிக்கொண்டேயிருந்த ஒரே ஆட்டம் இதுதான். ரிக்கி பான்ட்டிங் வாழ்நாளுக்கும் மறக்கமுடியாதபோட்டி இது.

ரிக்கி பான்ட்டிங் சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த கேப்டன் மட்டுமல்ல... மிகச்சிறந்த ஃபீல்டர். இவரின் டைரக்ட் ஹிட் ரன் அவுட்கள் எல்லாம் வேற லெவலில் இருக்கும். கேப்டன் என்பதால் பெரும்பாலும் சர்க்கிளுக்குள்தான் இருப்பார் பான்ட்டிங். ஆனால், அந்த 30 யார்டு சர்க்கிளுக்குள் எங்கிருந்தாலும் மிகச்சரியாக ஸ்டம்புக்களை குறிபார்க்கும் பான்ட்டிங்கின் கண்கள். சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை ரன்அவுட் செய்த ஃபீல்டர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பான்ட்டிங்தான். 80 முறை எதிர் அணியின் வீரர்களை ரன் அவுட் செய்திருக்கிறார் பான்ட்டிங். இவருக்கு அடுத்துதான் ஜான்ட்டி ரோட்ஸே!

தொடர் வெற்றிகளைப் பார்த்துக்கொண்டிருந்த ரிக்கி பான்ட்டிங்கின் கரியரில் 2008-க்கு மேல் புயல் வீச ஆரம்பித்தது. அவருக்கு பக்கபலமாக இருந்த பல வீரர்கள் அணியில் இருந்து ஓய்வுபெற்று வெளியேற தோல்விகள் பான்ட்டிங்கை துரத்த ஆரம்பித்தன. குறிப்பாக ஆஷஸ் தொடரில் அவமானகரத் தோல்விகளைத் தழுவ ஆரம்பித்தது பான்ட்டிங்கின் ஆஸ்திரேலியா. இறுதியில் இந்தியாவுக்கு எதிரான 2011 உலகக்கோப்பை காலிறுதிப்போட்டிக்குப் பிறகு ஒருநாள் கேப்டன்ஸியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

Ricky Ponting
Ricky Ponting
ICC

பான்ட்டிங் பல சாதனைகள் படைத்திருந்தாலும் அவருக்கு கடைசிவரை மன உறுத்தலாகவே இருந்தது இந்தியாதான். இந்திய மைதானங்களில் இந்தியாவுக்கு எதிராக அவர் பெரிதாக ரன்கள் அடித்ததேயில்லை. ஹர்பஜன் அவரைப்பல முறை சுழலில் சிக்கவைத்து அவுட் ஆக்கியிருக்கிறார். இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக அவர் அடித்த ஒரே ஒருநாள் சதமும் உலககோப்பையில் இருந்து வெளியேறவே வைத்ததில் பான்ட்டிங் ரொம்பவே அப்செட்.

எவ்வளவு பெரிய ஜாம்பவனாக இருந்தாலும், வெளியேற்றம் என்பது அவ்வளவு சுமுகமானதாக இருக்காது என்பார்கள். ஃபார்ம் இழந்து, வெற்றிகளை இழந்து, வேகத்தை இழந்து கடைசியில் பல அவமானங்களுக்குப்பிறகே வெளியேறினார் ரிக்கி பான்ட்டிங்.

பான்ட்டிங் போனப்பிறகு ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்றிருக்கலாம். ஆனால், அந்த வெற்றிக்கான வெறியை விதைக்கக்கூடிய ஒரு கேப்டன், ஒரு பான்ட்டிங் இன்னும் ஆஸ்திரேலியாவுக்குள் வரவில்லை. வந்தால் சண்டை செய்யத் தயாராக இருப்போம்!
அடுத்த கட்டுரைக்கு