தோட்டாக்கள் துளைக்காத இரும்பைக்கூட இளக வைக்குமளவு வெப்பத்தை உண்டாக்குபவை இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான மோதல்கள்.
பவுன்சர்களும் கூக்ளிகளும் மட்டும் இங்கே சுவாரஸ்யமேற்றுபவை இல்லை, பேட்டுகளும் பந்துகளும் மட்டுமே இங்கே உரசிக் கொள்வதுமில்லை; அவற்றையும் தாண்டி சர்ச்சைகளும் ஸ்லெட்ஜிங்களும்கூட அனலடிக்க வைத்து அரசாளுபவை. தொடரின் விறுவிறுப்பினைக் கொஞ்சமும் குறையவிடாது தூபமிட்டு பற்றி எரிய வைப்பவை. அவ்வகையில் பார்டர் கவாஸ்கர் தொடர் கண்டுற்ற டாப் 4 சர்ச்சைகளையும் வார்த்தைப் பரிமாற்றங்களையும் சற்றே ரீவைண்ட் செய்து ஓடவிடுவோம்.
சச்சின் SBW:
கிரிக்கெட்டின் விதிப் புத்தகத்தின் எப்பக்கத்திலும் காணப்படாத சர்ச்சையான முறையில் 1999 சிட்னி டெஸ்டில் சச்சனுக்கு அவுட் கொடுக்கப்பட்டது. மெக்ராத்தால் வீசப்பட்ட பவுன்சர் சற்றே உயரம் தாழ்ந்து சென்று சச்சினின் தோளினைத் தொட்டுச் செல்ல, மெக்ராத் எல்பிடபிள்யூவுக்கு அப்பீல் செய்ய, தயக்கமேயின்றி அம்பயர் டேரியல் ஹார்பர் அதனை அவுட் என அறிவித்தார். 'ஷோல்டர் பிஃபோர் விக்கெட்' என கேலிகளோடு எண்ணற்ற முறை இந்த வீடியோ பார்க்கப்பட்டு பகிரப்பட்டது. 11 வீரர்களோடு மட்டுமின்றி அம்பயர்களோடும் அவர்களது தவறான முடிவுகளோடும் சச்சின் பலமுறை போராட வேண்டிய சூழ்நிலை இதற்கு முன்னரும் பின்னரும் உருவாகியிருந்தாலும் இந்த அவுட் எல்லாவற்றையும்விட அதிக விவாதத்திற்கு உள்ளானது. 'Tenducker' எனும் வார்த்தைப் பிரயோகத்தோடு இன்னமும் தனது தவற்றை ஹார்பர் ஏற்றுக் கொள்ளாததுதான் கொடுமையிலும் கொடுமை.
2008 சிட்னி டெஸ்ட்:
தவறான அம்பயரிங்கின் மூலம் சச்சினுக்கு அநீதி இழைக்கப்பட்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாகவோ என்னவோ 2008-ல் நடைபெற்ற சிட்னி டெஸ்டில் அம்பர்களின் முடிவுகள் தாறுமாறாகத் தவறானதாக இந்தியாவுக்குப் பாதகமானதாக வந்து கொண்டே இருந்தன. ஸ்டீவ் பக்னர் மற்றும் மார்க் பென்சன் ஆகிய இருவர்தான் அவ்விழாவைச் சிறப்பித்த சிறப்பு அம்பயர்கள். அதிலும் பக்னர் ஒருவரே ஏழு தவறான முடிவுகளை அப்போட்டியில் கொடுத்திருந்தார். அதிலும் ஆட்டமிழந்த சைமண்ட்ஸுக்கு வீடியோ கேம் போல மூன்று மறுவாழ்வுகள் அம்பயர்களால் கொடுக்கப்பட்டன. போட்டியின் முடிவினையே திருத்தி எழுதிவிட்டன அந்தத் தவறான தீர்ப்புகள்.
'Monkey Gate' சச்சரவு:
மேலே சொன்ன சர்ச்சையினையே மறைத்து விடும் பெரும் நிழலாக அதே போட்டியில் Monkey Gate சச்சரவு உருவெடுத்தது. ஆன்ட்ரூ சைமண்ட்ஸை இந்தியாவின் ஹர்பஜன் சிங் இனவெறியை வெளிப்படுத்தும் வகையிலான வார்த்தையால் வசைபாடினார் என்பதுதான் அது. தனது தலையிலிருக்கும் டர்பனைப் பற்றி ஆஸ்திரேலிய வீரர்கள் கிண்டல் செய்ததாகவும் அந்தக் கோபத்தில் பதிலுக்கு தான் சொன்ன வார்த்தைகள் மொழி புரியாததால் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் ஹர்பஜன் பின்னால் விளக்கம் கொடுத்தார். சைமண்ட்ஸோ அந்த இழிவுபடுத்தும் வார்த்தைகள் தனது மனதை ஆழமாக பாதித்ததாகத் தெரிவித்திருந்தார். இருபக்கமும் காரசாரமாக வந்து விழுந்த கருத்துக்கணைகள் பிரச்னையின் தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே சென்றன. மொத்தத்தில் ஒரு கரும்புள்ளியாகக் காலத்திற்கும் இது நிலைத்து விட்டது.
ஸ்மித் Brainfade:
ஸ்மித் இருக்குமிடமெல்லாம் சர்ச்சைகளும் இருக்கும். முரளி விஜய்யை தகாத வார்த்தைகளால் திட்டியது மற்றும் பண்ட்டின் பேட்டிங் கார்ட் மார்க்கை அழித்தது தொடங்கி இந்தியாவில் நடைபெறுகின்ற பயிற்சி ஆட்டங்கள் குறித்து சமீபத்தில் கூறிய கருத்துகள் வரை அவருக்கும் சர்ச்சைகளுக்குமான அதீத காதல் தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது. 2017 பெங்களூர் டெஸ்டில் அவர் கிளப்பியதோ எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டது. எல்பிடபிள்யூவில் ஆட்டமிழந்தாரா இல்லையா என்பதனை ரிவ்யூவுக்குப் போகும்முன் டிரஸ்ஸிங் ரூமை நோக்கி அவர் கேட்டது ஒட்டுமொத்த இந்தியப் பக்கத்தையும் கொந்தளிக்க வைத்தது. பின்னர் அளித்த விளக்கத்தில் 'Brainfade' என்ற வார்த்தையைக்கூறி தனது தவறினை அப்படியே சமாளித்தார். எனினும் இன்னமும் இந்திய வட்டாரங்களில் அந்த வார்த்தையும் சர்ச்சையும் நிழலாடுகின்றன.
ஸ்லெட்ஜிங்:
"ஸ்லெட்ஜிங் என்பது ஒருவகை ரிவர்ஸ் சைக்காலஜி" என ஸ்ரீசாந்த் ஒருமுறை கூறியிருந்தார். "இங்கே உன்னால் பேட் செய்ய முடியாது, இந்தக் களத்தில் உன் பந்துவீச்சு எடுபடாது" என்னும் ரீதியிலான வார்த்தைகள் எதிராளியை உலுக்கும், வெறிகொடுக்கும், அதனை செய்து முடிக்கவும் வைக்கும். கோலிக்கு எதிராக எக்காரணத்தைக் கொண்டும் அவர்களது வழக்கமான ஆயுதமான ஸ்லெட்ஜிங்கை கையிலெடுக்கக் கூடாதென ஸ்டீவ் வாக் ஆஸ்திரேலியாவுக்கு அறிவுரை சொன்னதும் இக்காரணத்தினால்தான். மொத்தத்தில், ஒரு ஸ்லெட்ஜிங் கொல்லும், ஒரு ஸ்லெட்ஜிங் வெல்லும், பலவும் காலத்திற்கும் மறக்காத வடுவாகவே நிலைத்திருக்கும்.
ஸ்டீவ் வாக் - பார்த்தீவ் படேல்:
ஸ்டீவ் வாக்கின் கடைசி போட்டி அது. அவரை வம்பிழுக்கும் விதமாக பார்த்தீவ் படேல், "கம் ஆன்! ஆடுங்கள் உங்களது புகழ்பெற்ற ஸ்லாக் ஸ்வீப்பை உங்களால் ஆட முடிகிறதா என பார்க்கலாம்" எனக் கூற ஸ்டீவ் வாக் சற்றும் தாமதிக்காமல், "சிறிதளவேனும் மரியாதையைக் காட்ட கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் குழந்தையாக இருக்கும்போதே நான் எனது அறிமுக டெஸ்டில் ஆடிவிட்டேன்" என்று கூறினார். இச்சம்பவத்தை சமீபத்தில் நினைவுகூர்ந்த பார்த்தீவ், "அன்று நான் ஸ்டீவ் வாக்கிடம் எதிர்வாதம் செய்யவில்லை பொறுமையாகக் காத்திருந்தேன். 2018/19 சிட்னி டெஸ்டில் அவரது மகன் சப்ஸ்ட்யூட் ஃபீல்டராக இறங்க அவரிடம் சென்று, "நீங்கள் குழந்தையாக இருக்கும்போதே நான் எனது அறிமுக டெஸ்டில் ஆடிவிட்டேன் என்று சிரித்துக் கொண்டே கூறினேன்", என்றார். சில ஸ்லெட்ஜிங்குகள் இப்படி யாரையும் பெரிதாகப் புண்படுத்தாமலே முடிந்து போகும்.
வார்னர் - வருண் ஆரோன்:
அக்ரஷன் கொண்டு வரும் ஆற்றல் சமயத்தில் கட்டுக்கடங்காததாக அதிகரித்து கட்டுப்பாட்டை இழக்க வைத்து தேவையில்லாத வார்த்தைகளை உபயோகிக்க வைத்து விடும். வார்னர் விஷயத்தில் அது ஒருமுறை நடந்தது. 66 ரன்களோடு பேட் செய்து கொண்டிருந்த வார்னரை வருணின் வேகம் ஸ்டம்புகளை சிதறடித்து வெளியேற்றியது. எடுத்தது வார்னரின் விக்கெட் ஆயிற்றே? வருணின் விக்கெட் கொண்டாட்டம் உச்சத்தை அடைந்து ஓரிரு வார்த்தைகளை சொல்லி வார்னரையும் கோபப்படுத்தியது. ஆனால் அது நீடிக்கவில்லை. அவர் வீசியது நோ பால் என்ற அறிவிப்பு உடனே வெளியாகி வருணின் உற்சாகத்தைக் கட்டிப்போட்டது. உள்ளே தேக்கி வைத்திருந்த மொத்த ஆக்ரோஷத்தையும் வார்னர் "கம் ஆன்" என்ற கர்ஜனையோடு வருணைப் பார்த்தபடி வெளியேற்றினார். சில நேரங்களில் ஸ்லெட்ஜிங் இப்படி பேக் ஃபயராகவும் வாய்ப்பிருக்கிறது.
பண்ட் - பெய்ன்:
ஸ்லெட்ஜிங்கின் வாயிலாக எதிராளியின் கவனத்தைச் சிதறடிப்பது ஆஸ்திரேலியாவுக்கு கைவந்த கலை. அதிலும் பெய்ன் அதனை அடிக்கடி செய்யக்கூடியவர். வார்த்தைகளை விட்டு வாங்கிக் கட்டிக் கொள்வதும் அவருக்கு புதிதல்ல. 2018/19 தொடரில் பண்டுக்கும் அவருக்குமான உரையாடல்கள் ஸ்டம்ப் மைக்கையும் மதிமயங்கி சிரிக்க வைத்திருக்கும்.
தொடர்ச்சியாக பண்டை சீண்டிக் கொண்டே இருந்த பெய்ன், "எனது குழந்தைகளுக்கு பேபி சிட்டிங் செய்ய முடியுமா, நானும் எனது மனைவியும் படத்திற்குச் செல்ல வேண்டும்" என்று வம்பிழுத்தார். போட்டிக்குப் பின்னதாக அவரது குழந்தைகளோடு பண்ட் பேபி சிட்டராக எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்தாலும் களத்திற்கு உள்ளே பண்ட் அவர் பேட்டிங் செய்கையில் கொடுத்த பதிலடிதான் ஹைலைட். "தற்காலிக கேப்டன் இவர், பேசுவது மட்டுமே இவருக்குத் தெரிந்த ஒன்று, நாள் முழுவதும் கூட பேசிக் கொண்டே இருப்பார்" என பெய்னைக் கேலி செய்தார்.
சிராஜ் - ஆஸ்திரேலிய பார்வையாளர்கள்:
2020/21 சீசனில் அறிமுகத் தொடரிலேயே ரெட் பாலில் தனது வித்தைகளை சிராஜ் காட்டியிருந்தார். புதுமுக வீரரென்ற சுவடே தெரியாத அளவு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார். இதைப் பார்க்க பொறுக்காத இனவெறி பிடித்த சில ஆஸ்திரேலிய பார்வையாளர்கள் அவரை இனப்பாகுபாடு காட்டி இழிவான வார்த்தைகளால் கிண்டல் செய்தனர். பாதுகாக்கும் அரணாக கோலியும் இல்லாத நிலையில் இது சிராஜையும் மற்ற இந்திய வீரர்களைக் காயப்படுத்தியது.
'ஜென்டில்மேன் கேம்' என்ற பெயரில் கேலிகளை பொறுத்துப் பழகிய இந்திய வீரர்கள் சமயத்தில் திருப்பிக் கொடுக்கவும் செய்திருக்கின்றனர். ரவி சாஸ்திரி இதைப்பற்றி ஒருமுறை, "ஆஸ்திரேலியர்களுக்கு எதிராக ஆடும்போது அவர்களுக்கு இணையான Attitude-ஐ காட்டுவது மிக முக்கியம். அதனால்தான் நான் எனது வீரர்களிடம் அவர்கள் ஒன்றாகக் கொடுத்தால் நீங்கள் அதனை மூன்று மடங்காகத் திருப்பிக் கொடுங்கள் என்று கூறியிருக்கிறேன்" என்றார். மொத்தத்தில் பந்துக்கும் பேட்டுக்குமான மோதல்தான் என்றாலும் 'Butterfly Effect' போல இத்தகைய சின்ன சின்ன சீண்டல்களும் நிகழ்வுகளும் போட்டி முழுவதிலும் சங்கிலித் தொடராக வியாபித்து அதனைக் கட்டுப்படுத்தி எதிர்பாராத திசையில்கூட பயணிக்க வைக்கும்.
வரவிருக்கும் தொடருக்கான மைண்ட் கேம்களும் அஷ்வின் கூறியிருந்ததைப் போல ஆஃப் ஃபீல்டிலேயே தொடங்கி விட்டன. களத்துக்குள் அவை இன்னமும் சூடு பிடித்து வெப்பமானியையே தகர்க்கச் செய்யலாம்.