ரீவைண்டு 2021-ன் முந்தைய அத்தியாயத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளைப் பற்றிப் பார்த்தோம். இன்றைய அத்தியாயம் இந்திய கிரிக்கெட்டை மட்டும் சுற்றிய ஒரு விரிவான ரீவைண்டு
2021-ம் ஆண்டைப் பொறுத்தவரையில் இந்திய அணிக்கு உயரிய சிகரங்களும் ஆழமான பள்ளங்களுயும் ஒரு சேர அமைந்ததாகவே சொல்லவேண்டும். அந்நிய மண்ணில் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் வெற்றிகளை பெற்ற விராட் கோலியின் படையால் இவ்வருடத்தின் முடிவிலும் ஒரு ஐசிசி கோப்பையைக்கூட வெல்லமுடியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்:
மெல்போர்ன் டெஸ்ட் வெற்றி கொடுத்த மிகப்பெரிய உத்வேகத்துடனே இந்த ஆண்டில் காலடி வைத்திருந்தது இந்திய அணி. அதே வேகத்தில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இரண்டாவது முறையாக வீழ்த்தி சாதனை படைத்தது . சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சு தாக்குதலை சுமார் 40 ஓவர்கள் வரை சமாளித்த அஸ்வின் - விஹாரி கூட்டணி, காப்பா கோட்டையை இளம்வீரர்கள் கொண்டு தரைமட்டமாகியது வரை இந்த ஒற்றை தொடரில் கிடைத்த மறக்கமுடியாத நினைவுகள் ஏராளம்.

இங்கிலாந்தின் இந்திய சுற்றுப்பயணம்:
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒன்றல்ல இரண்டு டெஸ்ட் போட்டிகளை சென்னை சேப்பாக்கத்தில் அறிவித்ததுபிசிசிஐ. இதனால் இந்திய வெற்றியை ஸ்பின்னர்கள் பெயரில் ரசிகர்கள் அப்போதே எழுதிவிட அட்டகாசமான இரட்டை சதம் மூலம் அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார் ஜோ ரூட். ஆனால் அடுத்த போட்டியிலேயே மண்ணின் மைந்தன் அஸ்வினின் அபார சதம் இந்தியாவை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்துவந்தது. போதாக்குறைக்கு கூடுதலாக அக்ஸர் படேல் வேறு அணிக்குள் அறிமுகமானார். இரண்டே நாளின் முடிந்த மூன்றாவது டெஸ்ட், பண்ட்டின் அதிரடி சதம் அடங்கிய நான்காவது டெஸ்ட் என இனிதே முடிந்தது அத்தொடர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021
இவ்வாறு சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தியதன் மூலம் முதன்முறையாக நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பின் இறுதிபோட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. ஆனால் இறுதிச் சுற்றில் நியூஸிலாந்து அணியுடன் ஐசிசி தொடர்களில் வழக்கமாக பெரும் தோல்வியைப் பெற்றுக் கோப்பைக் கனவை இழந்தது. பேட்டிங் சொதப்பல், அணி தேர்வில் குளறுபடிகள் என முக்கிய போட்டிகளில் இந்தியா செய்யும் தவற்றை இப்போட்டியிலும் தவறாமல் செய்திருந்தது.

இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணம்:
ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் இருமுறை வீழ்த்திய இந்தியாவிற்கு இங்கிலாந்தை அதன் மண்ணில் வீழ்த்துவது என்பது வெகு நாள்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. அந்த நீண்ட கனவினை கிட்டத்தட்ட மெய்யாக்கியுள்ளது விராட்டின் படை. முதல் டெஸ்டில் மழையினால் பறிபோன வெற்றி குறித்து சோர்வாகமல் லார்ட்ஸில் அபார வெற்றி பெற்று முன்னிலை பெற்றது. அடுத்த ஆட்டத்தில் 78-க்கு ஆல்-அவுட் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஆனால் ரோஹித்தின் முதல் வெளிநாட்டு சதம் மூலம் ஓவலில் வெற்றி பெற்று மீண்டும் முன்னிலை பெற்றது இந்தியா. கோவிட் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இத்தொடரை இந்திய அணி நிச்சயம் வென்று விடும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
பாகிஸ்தான் அணியுடனான முதல் உலகக்கோப்பை தோல்வி, இரண்டு பாகங்களாக நடைபெற்ற ஐ.பி.எல்.தொடர், இலங்கைக்கு பி டீமை அனுப்பிய இந்திய கிரிக்கெட் வாரியம், கோலி-கங்குலி இடையேயான பனிப்போர், இந்திய பெண்கள் அணியின் செயல்பாடுகள் பற்றி முழுவதுமாக அறிய கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.