Published:Updated:

மீண்டெழுந்த ஆஸ்திரேலியா!

மேக்ஸ்வெல், தனி ஆளாக ஆட்டத்தை மாற்ற வேண்டிய தருணத்தில், மோசமான ஷாட் செலக்ஷன் மூலம் ஆட்டமிழந்தார். `அடுத்த அஃப்ரிடி’ என சோசியல் மீடியாவில் வாங்கிக் கட்டிக்கொண்டார்.

Australia
Australia ( AP )

``பேகி கிரீன் அணிந்திருக்கும் ஒவ்வோர் ஆஸ்திரேலிய வீரரிடமும், `நாங்கள் ஐந்துமுறை உலகச் சாம்பியன். நாங்கள்தான் கிரிக்கெட்டின் ராஜா’ என்ற திமிர் இருக்கும். இந்தமுறை அது மிஸ்ஸிங்’ என கிரிக் இன்ஃபோ பாட்காஸ்ட்டில் குறிப்பிட்டிருந்தார் ஜேரட் கிம்பர். உண்மைதான், கடந்த 30 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அவ்வளவு ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. 2019 உலகக் கோப்பை தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புவரை, ஆஸ்திரேலியா பெரும்பாலானோரின் ஃபேவரிட்ஸ் பட்டியலில் இல்லை. ஆனால், உலகக் கோப்பை என்று வந்தவுடன், தாங்கள் யார் என்பதை நிரூபித்தது டீம் ஆஸ்திரேலியா.

ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் வருகைக்குப் பின் ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் வலுவடைந்தது. அதுவே, பேட்டிங் ஆர்டர் குழப்பத்துக்கும் வழிவகுத்தது என்பதையும் மறுக்க முடியாது. எல்லாவற்றையும் கடந்து, ஆஸி இந்த உலகக் கோப்பையில் சாதித்தது. குரூப் சுற்றில் இந்தியாவுக்கு எதிராகவும், கடைசி லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடமும் ஆஸி தோல்வியடைந்திருந்தது. அதுவும்கூட, இந்தியாவிடம் போராடி தோற்றது; தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி டெட்ரப் `மேட்ச்’ என்பதால் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அரையிறுதியில் சாம்பியனுக்குரிய தோரணையில் ஆடியதால், இங்கிலாந்து வென்றது. ஆஸி வெளியேறியது. மற்றபடி பார்த்தால், முதல் எட்டு போட்டிகளில் ஏழு போட்டிகளில் வென்று முதல் ஆளாக, ஆஸ்திரேலியா அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்தது.

Aaron Finch
Aaron Finch
AP

இந்த உலகக் கோப்பையில், அதிக ரன் குவித்த டாப் –10 பேட்ஸ்மேன்களில் டேவிட் வார்னர் (647 ரன்கள்), ஆரோன் ஃபின்ச் (507 ரன்கள்) என இரண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் இருக்கிறார்கள். வங்கதேசத்துக்கு எதிராக டேவிட் வார்னர் 166 ரன்கள் அடித்ததுதான், இந்த உலகக் கோப்பையில் தனிநபர் அடித்த அதிகபட்சம். அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் முதலிடத்தில் இருப்பது மிச்செல் ஸ்டார்க் (27). அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித் ஆடியது, ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களுக்கான பாடம். அதேநேரத்தில், அந்தப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் ஓவரில் ஜேசன் ராய் மூன்று சிக்ஸர்கள் பறக்கவிடுவார். தன் ஓவரில் இப்படி சிக்ஸர்கள் பறப்பதை அன்னாந்து பார்க்க, ஸ்டீவ் ஸ்மித் உலகக் கோப்பைக்கு வரவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு பிரதான ஐந்தாவது பெளலர் இல்லாததால் வந்த பிரச்னை அது.

மிச்செல் ஸ்டார்க் தவிர்த்து வேறு எந்த ஆஸ்திரேலிய பெளலரும், டாப் – 10 பெளலர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதை வைத்தே, அவர்களது பெளலிங் யுனிட் செயல்பாட்டைச் சொல்லிவிடலாம். நாதன் லயான், ஆடம் ஸம்ப்பா சுழல் எடுபடவில்லை. ஸ்டார்க் தவிர்த்து வேறு எந்த பெளலரும் சொல்லிவைத்து விக்கெட் எடுக்கவில்லை. ஐந்தாவது பெளலரும் செல்ஃப் எடுக்கவில்லை. அதனால்தான், ஆரோன் ஃபின்ச், ஸ்டீவ் ஸ்மித் பெளலிங் போடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டனர். இங்கிலாந்து அணியில் அப்படியில்லை. இறுதிப்போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பெளலிங் போட வந்தபோது 30 ஓவர்கள் கடந்திருந்தது. ஃபைனலில் நியூசிலாந்தின் கிராந்தோம், 10 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தார். இப்படியொரு பெளலர் ஆஸ்திரேலியாவில் இல்லை. ஸ்டாய்னிஸ் இந்த இடத்தில் படு சொதப்பல்.

Mithcel Starc
Mithcel Starc
AP

முன்பே சொன்னதுபோல வார்னர், ஸ்மித் அணிக்குத் திரும்பியது, பேட்டிங் ஆர்டரில் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிடில் அல்லது டெப்த் ஓவர்களில் ஆட பணிக்கப்பட்டனர். அது அவர்களது இயல்பான ஆட்டத்தை பாதித்தது. உஸ்மான் கவாஜா எந்த இடத்தில் சோபிக்காமல் இருந்தாரோ (நம்பர் 4) அந்த இடத்திலும், டெத் ஓவர்களில் அதிரடியாக ஆட ஷான் மார்ஷும் இறக்கப்பட்டனர். உஸ்மான் கவாஜா பரவாயில்லை. 9 இன்னிங்ஸில் 316 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆனால் மேக்ஸ்வேல், ஸ்டாய்னிஸ் செயல்பாடு படு மோசம். லெஃப்ட் ரைட் காம்பினேஷனுக்காக, பேட்டிங் ஆர்டரை இஷ்டத்துக்கும் மாற்றியது, அவர்கள் செய்த இன்னொரு தவறு. போதாக்குறைக்கு கடைசி நேரத்தில் வீரர்களுக்கு ஏற்பட்ட காயமும், ஒருவகையில் அவர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. ஹேண்ட்ஸ்கோம் நேரடியாக அரையிறுதியில் வந்து ஆடும்போது அவரால் என்ன செய்துவிட முடியும்?

2003 உலகக் கோப்பையில் பிக்கெல், சைமண்ட்ஸ், 2007 உலகக் கோப்பையில் வாட்சன், 2011–ல் வாட்சன், டேவிட் ஹஸ்ஸி, 2015–ல் ஜேம்ஸ் ஃபாக்னர், வாட்சன் என பக்காவான ஆல்ரவுண்டர்கள் இருந்தனர். இவர்கள் பல போட்டிகளில் கேம் சேஞ்சர்களாக இருந்துள்ளனர். ஆனால், இந்தமுறை அந்த இடத்தில் இருந்த மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் இருவரும் கேம் சேஞ்சர்களாக மாறத் தவறிவிட்டனர்.

மீண்டெழுந்த ஆஸ்திரேலியா!

மேக்ஸ்வெல், தனி ஆளாக ஆட்டத்தை மாற்ற வேண்டிய தருணத்தில், மோசமான ஷாட் செலக்ஷன் மூலம் ஆட்டமிழந்தார். `அடுத்த அஃப்ரிடி’ என சோசியல் மீடியாவில் வாங்கிக் கட்டிக்கொண்டார். பாயின்ட்டில் நின்று நான்கு பவுண்டரிகளைத் தடுத்ததைத் தவிர்த்து மேக்ஸ்வெல், இந்த உலகக் கோப்பையில் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா இரண்டு போட்டிகளில்தான் ஆடினார். ஆனால், மேக்ஸ்வெல்லைவிட ஃபீல்டிங்கிலும் அதிக ரன்களைக் கட்டுப்படுத்தினார். ஏன் இந்த ஒப்பீடு எனில், ஜடேஜா போல ஒரு சப்ஸ்டிட்யூட் பிளேயராக வந்தே மேக்ஸ்வெல் இந்த வேலையைச் செய்திருக்கலாம். ஆல் ரவுண்டர் என்ற பெயரில் அவர் அணிக்கு செய்த சேதாரம் அதிகம். ஸ்டாய்னிஸ் கதையும் கிட்டத்த இதேதான். பேட்டிங்கிலும் நல்லதொரு இன்னிங்ஸ் ஆடவில்லை. பெளலிங்கிலும் கைகொடுக்கவில்லை.

`ஆஸ்திரேலியா அணியின் சோதனை முயற்சிக்கும், 2019 உலகக் கோப்பையில் அவர்கள் செயல்படுத்திய திட்டத்துக்கும் தொடர்பே இல்லை. சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு ஆஸி 33 வீரர்களைப் பயன்படுத்தியுள்ளது. அதில் யாருமே 33 போட்டிகளுக்கு மேல் விளையாடவில்லை. ஆஸ்திரேலியா செய்த இத்தனை களேபர முயற்சியில், வெற்றியடைந்தது அலெக்ஸ் கேரி மட்டுமே’ என, ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை உன்னிப்பாக கவனித்துவரும் கிம்பர் குறிப்பிட்டிருந்தார். அவர் சொன்னதுபோல, ஐ.சி.சி உட்பட எல்லோருடைய (சச்சின் தவிர) பிளேயிங் லெவனிலும் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி தவறாது இடம்பிடித்திருக்கிறார். இந்த உலகக் கோப்பையின் சர்ப்ரைஸ் பேக்கேஜ் அவர். இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் மிடில் ஆர்டரில் மெச்சத்தகுந்த இன்னிங்ஸ் ஆடியிருப்பார். மூன்றுமே இக்கட்டான நேரத்தில் அடிக்கப்பட்ட அரைசதங்கள். அரையிறுதியில் அவர் ஆர்ச்சர் பந்தில் ஹெல்மெட்டில் அடிபட்டு, தாடையில் இருந்து ரத்தம் வந்தபோதும், அவர் சளைக்காமல் போராடியது, கங்காருகளின் இறுதிவரை போராடும் குணத்துக்கு நல்ல உதாரணம்.

Steve Smith
Steve Smith
AP

இரண்டு சதம், மூன்று அரைசதம் உட்பட 10 போட்டிகளில் 507 ரன்கள் அடித்த ஆரோன் ஃபின்ச் எனும் பேட்ஸ்மேனைவிட, கேப்டன் ஆரோன் ஃபின்ச்சின் செயல்பாடு சிறப்பு. உதாரணத்துக்கு, பெளலர்களை அவர் பயன்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. பொதுவாக, அணியின் பெஸ்ட் பெளலரை டெத் ஓவரில் பயன்படுத்துவார்கள். ஆனால், டெத் ஓவர் வரை காத்திருக்காமல், விக்கெட் தேவைப்படும் போதெல்லாம் மிச்செல் ஸ்டார்க் கையில் பந்தைக்கொடுத்தார். அவரும் சொல்லி வைத்து பார்ட்னர்ஷிப்பை பிரித்து விக்கெட் எடுத்தார். ஸ்பெல்லை பிரித்து பயன்படுத்தும் ஃபின்ச்சின் இந்த டெக்னிக்கை, டோர்னமென்ட் முடிவில் மற்ற கேப்டன்களும் பயன்படுத்தத் தொடங்கினர். ஃபின்ச் கேப்டன்சி எல்லா இடத்திலும் வொர்க் அவுட்டானது. அரையிறுதியில் ஸ்மித்துக்கு ஓவர் கொடுத்ததைத் தவிர... அதுவும்கூட மோசமான முடிவு என்று சொல்லமுடியாது... ஏனெனில், அன்று முதல் இன்னிங்ஸிலேயே ஆஸ்திரேலியாவை உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றிவிட்டது இங்கிலாந்து!

பர்ஃபாமன்ஸ்

லீக் சுற்று

எதிரணி: ஆப்கானிஸ்தான் : ஆஸி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

எதிரணி: வெஸ்ட் இண்டீஸ் : ஆஸி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

எதிரணி: இந்தியா : இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

எதிரணி: பாகிஸ்தான் : ஆஸ்திரேலியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

எதிரணி: இலங்கை : ஆஸ்திரேலியா 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

எதிரணி: வங்கதேசம் : ஆஸ்திரேலியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

எதிரணி: இங்கிலாந்து : ஆஸ்திரேலியா 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

எதிரணி: நியூசிலாந்து : ஆஸ்திரேலியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

எதிரணி: தென்னாப்பிரிக்கா : தென்னாப்பிரிக்கா 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

அரையிறுதி

எதிரணி: இங்கிலாந்து : இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி