Published:Updated:

ரிவர்ஸ் ஸ்வீப்பில் அசத்தும் இங்கிலாந்து... ஆஸ்திரேலியாவை தவிக்கவிட்டது எப்படி?! #EngVsAus

#EngVsAus
#EngVsAus

ஆஸியும் இந்த ரிவர்ஸ் ஸ்வீப்புக்கு எதிராக எதாவது டெக்னிக்கை கண்டுபிடிக்கும் போதுதான் அவர்களின் ஸ்பின் அட்டாக் இன்னும் தாக்கம் ஏற்படுத்தக்கூடியதாக மாறும்.

அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்றுள்ளது இங்கிலாந்து. முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற நிலையில் இந்தப் போட்டியில் பட்லரின் பொறுப்பான இன்னிங்ஸால் எளிதாக வெற்றி பெற்றுள்ளது.

கடந்த போட்டியில் சேஸிங் சரிபட்டு வராததாலும் போகப்போக பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக மாறியதாலும் இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் ஆஸி கேப்டன் ஃபின்ச். ஃபார்மில் இல்லாத பேட்டிங் லைன் அப் + நல்ல பௌலிங் அட்டாக் இருந்ததால் இந்த முடிவு ஏற்கக்கூடியதுதான். முதல் போட்டியில் வார்னரும், ஃபின்ச்சும் மட்டுமே இங்கிலாந்து பௌலிங்கை சமாளித்து சவால் அளித்திருப்பர். கடந்த போட்டி போன்றில்லாமல் இந்தப் போட்டியில் சுலபமாக வெற்றி பெற வேண்டுமாயின் வார்னரையும் ஃபின்ச்சையும் சீக்கிரமாக வீழ்த்திவிட வேண்டும் என இங்கிலாந்து அறிந்திருந்தது. ஆர்ச்சர்+ மார்க்வுட் கூட்டணி 140 ப்ளஸ் வேகத்தில் துல்லியமாகத் தொடர்ந்து பந்துகளை வீசி இதை கச்சிதமாக செய்தும் காட்டியது.

#EngVsAus
#EngVsAus

வார்னரின் டி20 கரியரில் பல ஆண்டுகளுக்கு பிறகு நேற்றுதான் டக்-அவுட் ஆனார். இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே ஆர்ச்சர் வீசிய பந்து கையுறையில் பட்டு பட்லரிடம் கேட்ச் ஆனது. இங்கிருந்தே ஆஸியின் சரிவு தொடங்கிவிட்டது. கடந்த போட்டியில் மிடில் ஆர்டரில் வந்த அலெக்ஸ் கேரி இந்த முறை ஒன்டவுன் பேட்ஸ்மேனாக களமிறங்கினார். அவருக்கும் அதே 140+ ஸ்பீட் டெக்னிக்கில் மார்க்வுட் வீச, இறங்கி வந்து தலைக்கு மேல் அடிக்க ஆசைப்பட்டு எட்ஜாகி பட்லரிடம் கேட்ச் ஆனார். நம்பர் 4 பேட்ஸ்மேனாக ஸ்மித் உள்ளே வந்தார். ஸ்மித்தும் ஃபின்ச்சும் பார்ட்னர்ஷிப் போட்டிருந்தால் கூட ஸ்கோரை உயர்த்தியிருக்க முடியும். ஆனால், ஸ்மித் அவசரப்பட்டு ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓட மார்கன் டைரக்ட் ஹிட் அடித்து ஸ்மித்தை வெளியேற்றினார்.

பவர்ப்ளேக்கு உள்ளாகவே மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டதால் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆட முடியாமல் ஃபின்ச் தவித்தார். பத்து ஓவருக்கு மேல்தான் கொஞ்சம் பேட்டை தூக்கி ஒன்றிரண்டு பவுண்டரிகள் அடித்தார். 11-வது ஓவரில் ஜோர்டன் வீசிய ஓர் அற்புதமான பந்தில் போல்டாகி ஃபின்ச்சும் பெரிய இன்னிங்ஸ் ஆட முடியாமல் வெளியேறினார். அதன்பின், மேக்ஸ்வெல், அகர், கம்மின்ஸ் ஆகியோர் ஒன்றிரண்டு பவுண்டரிகள் அடிக்க இங்கிலாந்துக்கு 158 ரன்களை டார்கெட்டாக்கியது ஆஸ்திரேலியா.

#EngVsAus
#EngVsAus

சேஸ் செய்த இங்கிலாந்து அணியிலும் ஓப்பனர் பேர்ஸ்ட்டோ 3-வது ஓவரிலேயே ஹிட் விக்கெட்டாகி வெளியேறினார். இந்தப் பிடியை அப்படியே வைத்துக்கொண்டு ஆட்டத்தில் ஆஸியின் கை ஓங்கும் என எதிர்பார்க்கையில் பட்லரும் மாலனும் அதற்கு இடம் கொடுக்காமல் பொறுப்பான ஆட்டம் ஆடினர். இருவரும் அவசரமே இல்லாமல் பந்துகளுக்கு இணையாக ரன் எடுத்து அவ்வப்போது மட்டுமே பவுண்டரிகள் அடித்தனர். இந்த பார்ட்னர்ஷிப்பே ஆஸியிடமிருந்து மேட்ச்சை பறித்தது. மாலன் 42 ரன்களில் ஆட்டமிழந்து விட அதன்பிறகு கடைசி கட்டத்தில் கொஞ்சம் பரபரப்பு கூட 19 ஓவரில் மொயின் அலியும் பட்லரும் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை வெற்றிக்கரமாக முடித்தனர்.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக கச்சிதமாக, நினைக்கும்போதெல்லாம் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுகிறார்கள். ஓவருக்கு ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் ஆவது நிச்சயம் இருக்கிறது. இனி, இங்கிலாந்தை எதிர்க்கொள்ளும் அணிகள் இந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களின் ரிவர்ஸ் ஸ்வீப்பை முறியடிக்கும் வகையில் ஸ்பின்னர்கள் வித்தியாசமாகப் பந்து வீச வேண்டும். ஆஸியும் இந்த ரிவர்ஸ் ஸ்வீப்புக்கு எதிராக எதாவது டெக்னிக்கை கண்டுபிடிக்கும் போதுதான் அவர்களின் ஸ்பின் அட்டாக் இன்னும் தாக்கம் ஏற்படுத்தக்கூடியதாக மாறும்.
#EngVsAus
#EngVsAus
மலிங்கா இல்லாத மும்பை ப்ளே ஆஃப்கூட தாண்டியதில்லை... இந்த முறை எப்படி? #MumbaiIndians

ஆஸ்திரேலியாவின் சிறந்த ஸ்பின்னர் ஆடம் ஸாம்பாவே 4 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்துக்கொண்டிருந்தால் அடுத்தப் போட்டியிலும் தோல்வியைத் தழுவி ஒயிட் வாஷ் நிச்சயம். அதே மாதிரி பேட்டிங்கிலும் ஸ்டாய்னிஸ்க்கு டாப் ஆர்டரில் ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கலாம். பிக்பேஷ் லீகில் அவர் டாப் ஆர்டரில்தான் அதிக ரன்கள் அடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அலெக்ஸ் கேரிக்கு பதில் இளம் வீரரான பிலிப்பை பயன்படுத்தலாம். இந்த விஷயத்தில் எல்லாம் கொஞ்சம் மாற்றங்கள் செய்தால், ஆஸ்திரேலியா ஒயிட் வாஷில் இருந்தாவது தப்பிக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு