Published:Updated:

டேவிட் ஷெப்பர்ட்: 80ஸ், 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் அம்பயர் - களத்தில் இவரின் ஒற்றைக் கால் ஜம்ப் எதற்காக?

டேவிட் ஷெப்பர்ட்

அம்பயர்கள் ஒரு சார்பாகச் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஓரளவு குறையத் தொடங்கியதே ஷெப்பர்டின் வருகைக்கு பிறகுதான்! அவரின் பிறந்தநாள் இன்று!

டேவிட் ஷெப்பர்ட்: 80ஸ், 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் அம்பயர் - களத்தில் இவரின் ஒற்றைக் கால் ஜம்ப் எதற்காக?

அம்பயர்கள் ஒரு சார்பாகச் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஓரளவு குறையத் தொடங்கியதே ஷெப்பர்டின் வருகைக்கு பிறகுதான்! அவரின் பிறந்தநாள் இன்று!

Published:Updated:
டேவிட் ஷெப்பர்ட்
'அம்பயர்களின் பிதாமகன்' என்று வர்ணிக்கப்படும் டேவிட் ஷெப்பர்டின் பிறந்தநாள் இன்று. 80ஸ், 90ஸ் கிட்ஸுக்கு இவர் மிகவும் நெருங்கிய சொந்தம் என்றாலும் தற்போதைய ஆட்களுக்கு கொஞ்சம் அந்நியம்தான். இருந்தாலும் சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்பதற்காக இந்த நினைவூட்டல்.

பழைய ஆட்டங்களின் ஹைலைட்சை தற்போது பார்த்தால் அழகாக கோட் போட்டுக்கொண்டு, சற்றுக் குனிந்து கூர்மையாக ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார் இவர். பெரிய உருவம், குட்டிக் கண்ணாடி, இருக்கிறதா இல்லையா என்றே தெரியாமல் அதற்குள் இருக்கும் சிறிய கண்கள். இவைதான் டேவிட் ஷெப்பர்டின் அங்க அடையாளங்கள். இங்கிலாந்து நாட்டின் கவுன்ட்டி அணிக்காக 10,000 ரன்களுக்கும் மேல் எடுத்தவர். ஆனால் இந்த 10,000 ரன்களை எல்லாம் எடுத்து ஓய்ந்த பிறகு கிரிக்கெட்டில் இவர் எடுத்த அவதாரம்தான் இன்றும் அவரை பல 80ஸ், 90ஸ் கிட்ஸ்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர வைத்துள்ளது.

டேவிட் ஷெப்பர்ட்
டேவிட் ஷெப்பர்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1940ல் இங்கிலாந்து நாட்டின் டெவோன் மாகாணத்தில் பிறந்தவர். பள்ளிக் காலத்திலேயே கிரிக்கெட் விளையாட்டில் இவர் காட்டிய ஆர்வம் இவரை கவுன்ட்டி அணி வரை அழைத்துச் சென்றது. க்ளூசெஸ்டெர்ஷைர் அணிக்காக இவர் 282 முதல் தரப் போட்டிகளில் ஆடி 10,672 ரன்கள் எடுத்துள்ளார். அப்போதே ஷெப்பர்ட் அதிகமான ரன்களை பவுண்டரி மூலம்தான் எடுப்பார். ஒரு முறை இவர் அடித்த சிக்ஸர், கேலரியில் அமர்ந்து நாளிதழ் படித்துக் கொண்டிருந்த ஒருவரைத் தாக்கியதும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய நிலை வந்தது. முதல் தரப் போட்டியில் தொடர்ச்சியாக தனது திறமையை வெளிக்காட்டத் தவறியதால் இவரது பங்களிப்பை இங்கிலாந்து அணி பெற முடியாமலே போய்விட்டது. இங்கிலாந்துக்குக் கிடைக்காவிட்டால் என்ன? கிரிக்கெட் ஆடுவதை நிறுத்திய பிறகு இவர் எடுத்த இரண்டாவது அவதாரத்தால் மொத்த உலக கிரிக்கெட்டும் பயன்பெற்றது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தனது நண்பர் கொடுத்த ஆலோசனையின் பேரில் அம்பயர் ஆன ஷெப்பர்ட் முதலில் கவுன்ட்டி போட்டிகளில் அம்பயராக செயல்படத் தொடங்கினார். கூர்மையான அம்பயரிங் வேலைக்கு அப்போது இருந்த டிமாண்ட் காரணமாக சீக்கிரமாகவே சர்வதேச போட்டிகளுக்கு வந்து விட்டார் ஷெப்பர்ட். 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அம்பயர்களில் ஒருவராக இருந்த இவர், 1985ம் ஆண்டு, தனது முதல் டெஸ்ட் போட்டியில் அம்பயராகப் பணியாற்றினார். பார்க்க அன்பானவராக, அப்பாவியாகத் தெரிந்தாலும் அம்பயரிங் என்று வந்துவிட்டால் ஸ்ட்ரிக்டான ஹெட் மாஸ்டர் ஆகிவிடுவது இவரது வழக்கம்.

பவுண்டரி காட்டும்போது மென்மையாகப் பூக்களை வருடுவது போல இருக்கும் இவரது விரல்கள், அவுட் கொடுக்கும் போது 'ஓடு வெளியே' என்னும் தோரணையில் மிரட்டுவதுபோல மேலே எழும். கங்குலி ஒரு முறை நடு பிட்ச்சில் ஓடி வரும் போது, வர்ணனையாளருக்கு ஈடாக சத்தமாக, "off the pitch please" என்று சத்தமாக ஒலித்தது இவரின் குரல்.

இரண்டு வீரர்களுக்கு இடையே எதாவது முட்டல் முனங்கல் நடக்கிறது என்றால் இருவருக்கும் முதல் ஆளாக நடுவே வருபவர் ஷெப்பர்ட் ஆகத்தான் இருக்கும். யார் பக்கம் பிரச்னை என்பது எல்லாம் இரண்டாவது. ஷெப்பர்ட் சொல்லிவிட்டால் இரண்டு வீரர்களும் அவர்களது இடத்திற்கு சென்றுவிட வேண்டும். ஷெப்பர்டின் மேல் கிரிக்கெட் உலகம் வைத்திருந்த மரியாதை இதுதான்.
David shepherd
David shepherd
ICC

இத்தனை மரியாதை ஷெப்பர்டுக்குக் கிடைக்க முக்கிய காரணம் அவர் வழங்கிய துல்லியமான முடிவுகள்தான். அம்பயர்கள் ஒரு சார்பாகச் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஓரளவு குறையத் தொடங்கியதே ஷெப்பர்டின் வருகைக்குப் பிறகுதான். அதுவும் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வெளிநாட்டு அம்பயரின் முடிவுகள் மோசமானதாகவே இருக்கும் என்ற விமர்சனத்தை உடைத்துப் போட்டவர் ஷெப்பர்ட்தான். ஒருமுறை இங்கிலாந்தைச் சேர்ந்த ஆத்தர்டன், சச்சினைத் தொடர்ந்து வம்பிழுத்துக் கொண்டே இருக்கும்போது தன் நாட்டவர் என்றெல்லாம் பாராமல் ஆத்தர்டனை அதட்டியவர் இவர். "நான் ஒரு நாளும் யாருக்கும் வேண்டுமென்றே தவறான தீர்ப்பை அளித்தது கிடையாது" என்று பலமுறை கூறியுள்ளார்.

வீரர்களுடன் மிக சகஜமாக பழகும் இவரது குணம்தான் அம்பயரிங் உலகில் இவர் விதைத்துச் சென்ற விதை. இப்போதும் அலீம் தார் போன்ற அம்பயர்கள் களத்தில் இருக்கும் வீரர்களுடன் சிரித்துக் கொண்டே தங்கள் வேலைகளைச் செய்வதைப் பார்த்திருப்போம். அதைத் தொடங்கி வைத்தது ஷெப்பர்ட்தான். ஒருமுறை ஆஸ்திரேலிய வீரர்கள் கேட்ச்சுக்கு அப்பீல் செய்ததும் விக்கெட் கீப்பர் இயன் ஹீலி 'இல்லை நான் பந்தை பிடிக்கவில்லை' என்று கூறுவார். மைதானத்திலேயே அந்த நடத்தையை பாராட்டுவார் ஷெப்பர்ட்.

இத்தனை சிறப்பான அம்பயராக இருந்தாலும் அவர் வாழ்வில் 2001ம் ஆண்டு ஒரு புயல் வீசியது. மூன்று நோ-பால்களை அவர் கவனிக்காதுவிட அதைப் பயன்படுத்தி பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தியது. இது பூதாகரமாக வெடிக்க, உடனே ராஜினாமா செய்ய முடிவெடுத்தார் ஷெப்பர்ட். ஆனால் இத்தனை ஆண்டு காலம் அம்பயர்களுக்கு ஆசிரியராக விளங்கிய ஷெப்பர்டை சிறு தவறுக்காகப் புறக்கணித்துவிட முடியாது என்று கிரிக்கெட் உலகம் அவரை மீண்டும் ஏற்றுக் கொண்டது. அவரும் மேலும் நான்கு ஆண்டுகள் அம்பயராகச் செயல்பட்டார்.

டேவிட் ஷெப்பர்ட் வென்ற விருது
டேவிட் ஷெப்பர்ட் வென்ற விருது
ICC

அவர் அம்பயராக இருக்கும் போதே, 2004ம் ஆண்டு அவரது பெயரில் டேவிட் ஷெப்பர்ட் டிராபி என்று அம்பயர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதை அறிமுகப்படுத்தியது ஐசிசி. அவர் ஓய்வுபெறும் போது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டு வீரர்கள் இணைந்து நின்று அதிகம் சாதித்த வீரர்களுக்குக் கொடுக்கப்படும் 'Guard of Honour' மரியாதையை கொடுத்தனர். 1996 முதல் 2003 வரை நடந்த மூன்று உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் அம்பயராக பணியாற்றிய ஷெப்பர்ட் 2009ம் ஆண்டு நுரையீரல் புற்றுநோய் காரணமாக தனது மூச்சை நிறுத்திக் கொண்டார்.

ஷெப்பர்ட் என்றாலே முதன்மையாக நினைவுக்கு வரும் விஷயம் அவரது ஒற்றைக்கால் ஜம்ப்புகள்தான். அணியின் ஸ்கோர் 111 அல்லது 222 போன்று வந்துவிட்டால் ஒரு காலை தூக்கி மெல்ல குதிப்பார். இது போன்ற நெல்சன் எண்கள் (No luck Nelson) மோசமானவை என்பதால் இதனால் அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்பதும், இவ்வாறு ஒற்றைக் காலில் நின்றால் அதைத் தடுக்கலாம் என்பதும் இவரது நம்பிக்கை. ஒருமுறை 111 என்ற எண் கொண்ட அறை அவருக்குத் தரப்பட்டதால் அதில் தங்க மறுத்துவிட்டார். மற்றொரு முறை 13ம் தேதி வெள்ளிக்கிழமையில் வந்துவிட்டதால் அதுவும் அசம்பாவிதம் என்று எண்ணி அதற்குப் பரிகாரமாக சின்ன தீக்குச்சியை அந்த நாள் முழுதும் தன் கரத்திலேயே பிடித்திருந்தார்.

டேவிட் ஷெப்பர்ட்
டேவிட் ஷெப்பர்ட்
Twitter

மரத்தைத் தொட்டுவிட்டால் பேய் அடிக்காது என்பது இங்கிலாந்து நாட்டின் நம்பிக்கை. மற்றொரு முறை 333 என்ற ஸ்கோரில் தான் குதிக்க மறந்ததால்தான் தனது ஊரில் சிறு நிலநடுக்கம் ஏற்பட்டது என்று கூறினார். இத்தனை நம்பிக்கைகளையும் தீய சக்திகள் குறித்த பயத்தையும் உடையவர் நிச்சயம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டிருக்க மாட்டார். காரணம் அதற்கும் எதாவது அசம்பாவிதம் நடக்கும் என்று தனக்குத்தானே நம்பியிருப்பார். மூட நம்பிக்கை கூட சில நேரம் நல்லதுதான் என்ற விசித்திர பாடத்தை நமக்கு கூறிச் செல்கிறது டேவிட் ஷெப்பர்டின் வாழ்க்கை.