ஷேன் வார்னே இறப்பின் அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளவில்லை. அவருக்கே இன்னும் கண்ணீர் சிந்தி முடிக்கவில்லை. அதற்குள் ஆஸ்திரேலியாவிலிருந்து இன்னொரு இறப்பு செய்தி வந்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (Andrew Symonds) கார் விபத்தில் பலியாகியிருக்கிறார்.

90-களின் கடைசிக்கட்டம் தொடங்கி 2010 வரைக்குமான கிரிக்கெட் உலகம் ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தது. அவர்களின்றி ஓர் அணுவும் அசையாது. முழுமையாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தனர். அத்தனை அணிகளையும் அடித்துத் துவைப்பார்கள். தங்களின் சொந்த நாட்டு அணியின் கரங்களை இன்ச் அளவு கூட உயர்த்தவிடாமல் ஆஸ்திரேலியா புரட்டி எடுக்கும்போது கடுப்பாக இருந்தாலும், அதைக் கடந்து அந்த அணி மீது எல்லா நாட்டு ரசிகர்களுக்கும் ஒருவித ஈர்ப்பு இருக்கும். அந்த நாட்டு வீரர்களின் மீது தங்கள் நாட்டு வீரர்களைத் தாண்டிய ஒரு பிரமிப்பும் இருக்கும். அந்த ஆஸ்திரேலிய அணிக்குள் பேட்டாலும் பந்தாலும் மட்டுமல்ல, சர்ச்சைகளாலும் அனைவரையும் பிரமிப்படைய வைத்தவர்தான் சைமண்ட்ஸ்.
ஜடா முடி, உதடுகளில் க்ரீம் என ஆளே ஒரு வித்தியாசமான ஸ்டைலில், கூட்டத்திலிருந்து தனித்த ஓர் ஆளாகத் தெரிவார். 90-களின் தொடக்கக்காலத்தில் உள்ளூர் போட்டிகளில் அதிரடி சூரராக எதிரணி பௌலர்களை புரட்டியெடுத்துக் கொண்டிருந்தார். ஒரு போட்டியில் முதல் இன்னிங்ஸில் 16 சிக்ஸர்கள், இரண்டாம் இன்னிங்ஸில் 4 சிக்ஸர்கள் என மொத்தமாக 20 சிக்ஸர்களைப் பறக்கவிட்டிருந்தார். ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்களை அடித்ததற்கான சாதனையாக இது நீண்ட காலம் நிலைத்திருந்தது. இத்தகைய அதிரடியான பேட்டிங்கோடு மிதவேகம் மற்றும் ஆஃப் ஸ்பின் வீசும் திறனும் கொண்டவராக சைமண்ட்ஸ் இருக்க, ஜாம்பவான்களாக நிரம்பியிருந்தாலும் அடுத்தக்கட்ட அணியை உருவாக்கி வைப்பதில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலிய அணி சைமண்ட்ஸூக்கு அழைப்பு விடுத்தது.

1998-ல் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமானார். முதல் ஒன்றிரண்டு ஆண்டுகள் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை. 2000 ஆம் ஆண்டிற்கு பிறகே சைமண்ட்ஸூக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றன. மிடில் & லோயர் மிடில் ஆர்டரில் இறங்கி ஹார்ட் ஹிட்டிங் பேட்ஸ்மேனாக அதகளப்படுத்தத் தொடங்கினார். மைக்கேல் பெவன் மாதிரியான வீரர்கள் தங்கள் கரியரின் கடைசிக்கட்டத்தில் இருந்ததால் சைமண்ட்ஸூக்கான முக்கியத்துவம் அதிகமானது.
2003 உலகக்கோப்பையில் சைமண்ட்ஸின் பங்களிப்பை மறக்கவே முடியாது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொண்டிருக்கும். ஜோஹனஸ்பர்க்கில் நடந்த அந்தப் போட்டியில் 143 ரன்களை அடித்து நாட் அவுட்டாக இருந்திருப்பார். வாசிம் அக்ரம், வக்கார் யுனிஸ், சோயிப் அக்தர் என பாகிஸ்தானின் புயல் வேகங்களைச் சிதறடித்திருப்பார். கடைசி வரை அவர்களால் சைமண்ட்ஸை வீழ்த்த முடிந்திருக்காது. ஆஸ்திரேலியாவை தனி ஆளாக 300+ ஸ்கோருக்கு நகர்த்திச் சென்றிருப்பார். அந்தப் போட்டியை ஆஸ்திரேலியா சிறப்பாக வென்று மீண்டும் ஒரு உலகக்கோப்பையை வெல்வதற்கான பயணத்தை மிரளவைக்கும் வகையில் தொடங்கியிருக்கும். உலகக்கோப்பைத் தொடர்களில் சைமண்ட்ஸூக்கு இதுதான் முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போன்று அரையிறுதியிலும் இலங்கைக்கு எதிராக 91 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக நின்று ஆஸ்திரேலியா வெல்வதற்கு காரணமாக அமைந்திருப்பார். இந்த 2003 உலகக்கோப்பையில் மொத்தமே 4 இன்னிங்ஸில்தான் சைமண்ட்ஸ் பேட்டிங்கே ஆடியிருப்பார். இந்த நான்கில் மூன்று போட்டிகளில் நாட் அவுட்டாக இருந்திருப்பார். ஒரு சதத்தையும் இரண்டு அரைசதங்களையும் அடித்திருப்பார். கிடைத்த குறைவான வாய்ப்பில் அணிக்குத் தேவையான இக்கட்டான சமயத்தில் எதிரணி மிரண்டு போகும் வகையில் பெர்ஃபார்ம் செய்திருப்பார்.

ஆஸ்திரேலியாவின் அந்த 2003 உலகக்கோப்பை பயணத்தில் ஒரு ஆல்ரவுண்டராகவும் கூடுதல் பௌலிங் ஆப்சனாகவும் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பங்காற்றியிருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் மட்டும் 133 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
லிமிட்டெட் ஓவர் போட்டிகளை போன்று டெஸ்ட் போட்டி சைமண்ட்ஸின் களமாக இருந்ததில்லை. அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்ததும் இல்லை. ஆனால், கிடைத்த சொற்ப வாய்ப்பிலும் ஒரு முறை ஆஷஸ் தொடரில் ஹேடனுடன் கூட்டணி சேர்ந்து ஒரு தரமான சதத்தை அடித்துக் கொடுத்திருப்பார். ஹார்ட் ஹிட்டராக லிமிட்டெட் ஓவருக்கென்றே செதுக்கப்பட்ட வீரராக பார்க்கப்பட்டதால் சைமண்ட்ஸை அதிகமாக வெள்ளை ஜெர்சியில் பார்த்திருக்க முடியாது.
இந்தியாவிற்கு எதிராக எப்போதுமே அபாயகரமான வீரராகவே சைமண்ட்ஸ் இருந்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக அவரின் பேட்டிங் ஆவரேஜ் 39. இந்தியாவிற்கு எதிராக மட்டும் அது இன்னும் கூடுதலாக 41 ஆக இருக்கிறது. இந்தியாவிற்கு எதிராக தனது கரியரின் தொடக்கத்தில் அவர் ஆடிய முதல் போட்டியிலேயே அரை சதமடித்திருப்பார். காலங்கள் உருண்டோடி அவரின் கரியர் முடியும் தறுவாயில் இருந்த போதும் 2007-ல் நாக்பூரில் வைத்து ஒரு வெறித்தனமான சதத்தை அடித்திருப்பார்.
சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி, ஐ.பி.எல் லிலும் சில சீசன்களில் அசத்தினார். இவர் ஆடியபோதுதான் டெக்கான் சார்ஜர்ஸ் அணி சாம்பியனும் ஆகியிருந்தது. 2010 சீசனில் 400+ ரன்களை எடுத்து 10 விக்கெட்டுகளையும் சேர்த்துத் தூக்கிச் சிறப்பித்திருப்பார்.

பேட்டாலும் பந்தாலும் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த வீரராக இருந்தாலும் சைமண்ட்ஸ் என்ற பெயரை கேட்டவுடன் அவரால் ஏற்பட்ட சர்ச்சைகள்தான் முதலில் நினைவுக்கு வரும். இந்திய ரசிகர்களுக்குச் சொல்லவே வேண்டாம். ஹர்பஜனுக்கும் சைமண்ட்ஸூக்கும் இடையே பற்றி எரிந்த மோதல் இன்னும் அனைவருக்கும் நினைவில் இருக்கும். ஆஸ்திரேலிய அணியில் ஒழுங்கற்று காணப்பட்ட வீரர்களில் முக்கியமானவராக சைமண்ட்ஸ் இருந்தார். எங்கே சென்றாலும் பிரச்னைதான். மைதானம், ட்ரெஸ்ஸிங் ரூம், பப் என அவரின் இருப்பு புலப்படும் இடமெல்லாம் சர்ச்சைகளால் சூழ்ந்தது. பப்பில் குடித்துவிட்டு ரசிகருடன் மோதலில் ஈடுபட்டது, போட்டிக்குத் தயாராகாமல் குடி போதையில் மூழ்கி போட்டியிலிருந்தே விலக்கப்பட்டது, டீம் மீட்டிங்கிற்கு வராமல் மீன் பிடிக்கச் சென்றது என வரைமுறையே இன்றி சரமாரியாக ஆஸ்திரேலிய கேப்டன்கள் மற்றும் கிரிக்கெட் போர்டின் கோபத்தை சம்பாதித்தார்.
'Monkey Gate' சம்பவம்தான் சைமண்ட்ஸின் வீழ்ச்சியின் தொடக்கம் என ரிக்கி பாண்டிங்கே கூறியிருக்கிறார். தொடர் சர்ச்சைகளால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்ட் சைமண்ட்ஸை ஒதுக்கத் தொடங்கியது. சைமண்ட்ஸ் எந்தச் சலசலப்புகளுமின்று வகுத்து வைக்கபட்டிருந்த நேர்க்கோட்டிலேயே பயணப்பட்டிருந்தால் அவரின் கிரிக்கெட் பயணம் இன்னும் நீண்டதாக கூட அமைந்திருக்கும். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமல் அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்த கார் விபத்தை போன்றே அவரின் கரியரும் முடிவுக்கு வந்தது சோகம்தான்.

எத்தனையோ சர்ச்சைகளாலும் பிரச்னைகளாலும் சூழப்பட்டவராக இருந்தாலும் அவர் அதற்காக மட்டுமே நினைவுக்கூரப்படுவது நியாயமாக இருக்காது. அவர் அவற்றையெல்லாம் தாண்டி ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிற்காக சில ஆண்டுகள் உன்னதமான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். ஆஸ்திரேலிய அணி அரியணையிலிருந்து இறக்கப்படாமலேயே இருந்ததில் அவரின் பங்கும் இருக்கிறது. அவர் அதற்காகத்தான் நினைவுக்கூரப்பட வேண்டும்.