Published:Updated:

ஜவகல் ஸ்ரீநாத்... கபில்தேவின் மாற்று, ஜாகிர்கானின் மென்டர்... ஆனால்?! அண்டர் ஆர்ம்ஸ் - 6

தேவன் சார்லஸ்
கார்த்திகேயன் மேடி
ஜவகல் ஶ்ரீநாத்
ஜவகல் ஶ்ரீநாத் ( ICC )

ஷோயப் அக்தரின் வேகத்துக்கு இணையாகப் பந்துவீசியவர் ஜவகல் ஶ்ரீநாத். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் 150 கி.மீட்டருக்கு மேல் பந்துவீசக்கூடியவர். இவரது பெளலிங்கில் யார்க்கர்கள் பெரும்பாலும் இருக்காது. ஆனால், லைன் லைண்ட் லென்த் பக்காவாக இருக்கும்.

வீடு, வேலை, நட்பு என எல்லா இடங்களிலும் சிலர் இல்லையென்றால் நம்மால் இயங்கியிருக்கவே முடியாது என்கிற சூழல் இருந்திருக்கும். அவர்கள் நம்மோடு இருக்கிறார்கள், நமக்கு உதவுகிறார்கள், நமக்காக வேலை செய்கிறார்கள் என்பதையே நாம் மறந்து இயங்கியிருப்போம். அப்படிப்பட்டவர்கள் இல்லையென்றால் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையுமே கடந்திருக்க முடியாது. அப்படிப்பட்டவர்களை நாம் நன்றி சொல்லாமல்கூட கடந்துவந்திருப்போம். அப்படி இந்தியக் கிரிக்கெட்டில் நாம் நன்றிசொல்ல மறந்தவர்தான் ஜவகல் ஶ்ரீநாத்.

இந்தியா சார்பாக ஒருநாள் போட்டிகளில் 300 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த பெளலர்கள் இருவர்தான். ஒருவர் அணில் கும்ப்ளே. இவர் 269 போட்டிகளில் விளையாடி 334 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். இன்னொருவர் ஜவகல் ஶ்ரீநாத்! இவர் 229 போட்டிகளில் 315 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை அதிகமுறை எடுத்த இந்தியர்கள் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பவர்கள் இருவர். ஒருவர் ஸ்ரீநாத், மற்றொருவர் ஹர்பஜன் சிங்.

கும்ப்ளே, ஹர்பஜன் இருவருமே ஸ்பின்னர்கள். இந்தியாவில் ஸ்பின்னர்களுக்கு சாதகமான பிட்ச்களே 90'ஸ் மற்றும் 2000-த்தின் தொடக்கங்களில் அதிகம் இருந்தன. ஸ்பின்னர்களுக்கு சாதகமான மைதானங்களில் வேகப்பந்துவீசி அதிக ரன்கள் கொடுக்காமல், மேட்ச்சுக்கு 2, 3 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஶ்ரீநாத்.

ஜவகல் ஶ்ரீநாத்
ஜவகல் ஶ்ரீநாத்
கார்த்திகேயன் மேடி

கபில்தேவுக்கு அடுத்தபடியாக அதிக மெய்டன் ஓவர்களை வீசியவரும் ஶ்ரீநாத்தான். 90'களில் கபில்தேவ் ஓய்வை நெருங்கிக்கொண்டிருந்தபோது கபில்தேவுக்கு அடுத்து யார் என்கிற கேள்வி எழுந்தது. அப்போது பெளலிங்கில் கபில்தேவுக்கு சரியான மாற்றாக வந்து நின்றவர்தான் ஜவகல் ஶ்ரீநாத். ஷோயப் அக்தரின் வேகத்துக்கு இணையாகப் பந்துவீசியவர் ஜவகல் ஶ்ரீநாத். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் 150 கி.மீட்டருக்கு மேல் பந்துவீசக்கூடியவர். இவரது பெளலிங்கில் யார்க்கர்கள் பெரும்பாலும் இருக்காது. ஆனால், லைன் லைண்ட் லென்த் பக்காவாக இருக்கும். ஓடிவந்து பெளலிங் போடும் ஸ்டைலிலுமே ஒரு நிதானமும், ஒரு அழகியலும் இருக்கும்.

91-லேயே இந்திய அணிக்குள் வந்துவிட்டார் ஶ்ரீநாத். கபில்தேவ், மனோஜ் பிரபாகர் ஆகியோரோடு மூன்றாவது பெளலராக இருப்பார். ஆனால், இந்திய அணிக்குள் வந்த பிறகு இன்ஜினீயரிங் பரிட்சைகள் எழுத வேண்டும் என்பதற்காக 6 மாத பிரேக் எடுத்தார். இந்த ஆறு மாத இடைவெளி அவரை மீண்டும் பழைய ஃபார்முக்கு கொண்டுவரவிடாமல் செய்தது. இதனால் சென்னை எம்ஆர்எஃப் பேஸ் ஃபவுண்டேஷனில் டென்னிஸ் லில்லியிடம் சிலகாலம் பயிற்சி எடுத்து அதன்பிறகு மீண்டும் இந்திய அணிக்குள் வந்தார் ஶ்ரீநாத்.

90'ஸில் ஶ்ரீநாத்தும், வெங்கடேஷ் பிரசாத்தும்தான் ஓப்பனிங் பெளலர்கள். இருவருமே தொடர்ந்து தலா 6 ஓவர்கள் வீசுவார்கள். 12வது ஓவருக்கு மேல் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் அல்லது ஸ்பின்னர்கள் வருவார்கள். ஶ்ரீநாத் - பிரசாத் ஓப்பனிங் பெளலிங்கில் எதிர் அணியின் பேட்ஸ்மேன்கள் ஶ்ரீநாத்தின் பெளலிங்கில் அவுட் ஆகிவிடக் கூடாது என்பதற்காகக் கவனமாக ஆடுவார்கள். ஶ்ரீநாத்தின் பெளலிங் ஏற்கெனவே சொன்னதுபோல லூஸ் பால்கள் இல்லாமல் சரியான லென்த்தில் இருக்கும். இதனால் பேட்ஸ்மேன்கள் ஶ்ரீநாத்தின் பெளலிங்கில் தடுத்தாடிவிட்டு அடுத்த எண்டில் பிரசாத்தின் பெளலிங்கை அடிக்க ஆசைப்பட்டு அவுட் ஆவார்கள். வெங்கடேஷ் பிரசாத்தின் பெரும்பாலான விக்கெட்டுகளில் ஶ்ரீநாத்தின் பெரும்பங்கிருக்கிறது.

ஜவகல் ஶ்ரீநாத்
ஜவகல் ஶ்ரீநாத்
ICC

92, 96, 99, 2003 என நான்கு உலகக்கோப்பைகளில் விளையாடி 39 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார் ஶ்ரீநாத். அசாருதின், சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி என மூன்று கேப்டன்களுமே ஶ்ரீநாத்தைத்தான் முழுமையாக நம்பியிருந்தார்கள். டெஸ்ட்டில் இருந்து ஓய்வுபெறுகிறேன் என்று ஶ்ரீநாத் அறிவித்த பிறகும் எனக்காக வந்து இந்த சீரிஸில் விளையாடுங்கள் என ஶ்ரீநாத்தை அழைத்துவந்து விளையாடவைத்தார் கங்குலி.

ஶ்ரீநாத் இன்னும் அதிக விக்கெட்டுகள் எடுத்திருக்க வேண்டியவர். உண்மையை சொல்லப்போனால் அவர் ஒருநாள் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை எல்லாம் ஈஸியாகக் கடந்திருப்பார். ஆனால், அவரது கடுமையான உழைப்புக்குப் பலன் கிடைக்காமல் போகக்காரணம் அப்போதைய இந்திய அணியின் ஃபீல்டர்களும் கேப்டன்களுமே. 90'ஸில் இந்தியாவின் ஃபீல்டிங் மிக மோசமாக இருக்கும். ஸ்லிப்பில் கைக்கு வரும் கேட்சை எல்லாம் கோட்டைவிடுவார்கள். ஶ்ரீநாத் பெளலிங்குக்கு அட்டாக்கிங் ஃபீல்டிங்கை செட் செய்ய வேண்டும். ஆனால், அசாருதின் கன்சர்வேட்டிவான ஃபீல்டிங்கையே செட் செய்வார். 3 ஸ்லிப், கல்லி, ஷார்ட் பாயின்ட் திசைகளில் எல்லாம் ஃபீல்டர்களை நிறுத்தவே மாட்டார் அசாருதின். இதனாலேயே பல்வேறு விக்கெட் எடுக்கும் வாய்ப்புகளை இழந்தார் ஶ்ரீநாத்.

ஶ்ரீநாத்தைப் பற்றி எழுதும்போது பெங்களூருவில் நடைபெற்ற டைட்டன் கப் மேட்சை குறிப்பிடாமல் இருக்க முடியாது. 1996 அக்டோபரில் நடைபெற்ற இந்தப்போட்டியில் வழக்கம்போல ஶ்ரீநாத், பிரசாத் இருவரும் முதல் 12 ஓவர்களை வீசுவார்கள். மார்க் வாகும், மார்க் டெய்லரும் ஆஸ்திரேலியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள். ஶ்ரீநாத்தின் முதல் ஓவரில் 2 ரன்கள்தான் அடிப்பார்கள். ஶ்ரீநாத்தின் அடுத்து ஓவர், அதாவது ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் 1 ரன்தான் அடிப்பார்கள். இதனால் வெங்கடேஷ் பிரசாத் ஓவரில் அடித்தே ஆக வேண்டும் என்கிற பிரஷர்கூட நான்காவது ஓவரில் பிரசாத்தின் பந்தில் அவுட் ஆவார் மார்க் வாக். இதேபோல் மேட்ச்சின் ஒன்பதாவது ஓவரை வீசுவார் ஶ்ரீநாத். இந்த ஓவரில் 1 ரன்கூட மைக்கேல் ஸ்லேட்டரால் அடிக்க முடியாமல் மெய்டன் கொடுப்பார். ஶ்ரீநாத்தின் மெய்டன் ஓவர் பிரஷரால் பிரசாத்தின் அடுத்த ஓவரில் அடிக்க ஆசைப்படுவார் ஸ்லேட்டர். கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆவார். முதல் 6 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 ஓவர்கள் மெய்டன் போடுவார் ஶ்ரீநாத். இந்தப் பிரஷரால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் அப்படியே குறைந்துவிடும். ஆஸ்திரேலியா 215 ரன்கள் மட்டுமே அடித்திருக்கும்.

இப்போது இந்தியாவின் சேஸிங். ஒருபக்கம் விக்கெட்டுகள் போய்க்கொண்டேயிருக்க சச்சின் மட்டுமே பக்குவமாக விளையாடிக்கொண்டிருப்பார். ஆனால், 43வது ஓவரில் சச்சின் 88 ரன்களில் இருக்கும்போது மார்க் வாக்கின் பந்துவீச்சில் எல்பிடள்யு ஆகி விக்கெட்டை இழப்பார். அப்போது 7 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களில் இருக்கும் இந்தியா. வெற்றிக்கு 48 பந்துகளில் 52 ரன்கள் தேவை என்கிற சூழல். டெண்டுல்கர் அவுட் ஆனதும் பல வீடுகளில் டிவிக்கள் அணைக்கப்பட்டன. ஶ்ரீநாத்தும் கும்ப்ளேவும் 0 ரன்களில் களத்தில் நிற்கிறார்கள். இந்தியா வெற்றிபெறும் என யாருக்கும் எந்த நம்பிக்கையும் இல்லை. ஆனால், ஶ்ரீநாத் செய்துகாட்டினார்.

ஜவகல் ஶ்ரீநாத்
ஜவகல் ஶ்ரீநாத்
ICC

யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் ஸ்டீவ் வாகின் பந்தை லாக் ஆஃப் திசையில் சிக்ஸருக்கு அடித்தார் ஶ்ரீநாத். அந்த சிக்ஸர்தான் அந்த ஆட்டத்தின் திருப்புமுனை. எதிர் திசையில் இருந்த கும்ப்ளேவுக்கும் நம்பிக்கை வந்துவிட்டது. அந்த ஓவரில் மட்டும் 11 ரன்கள். ஆனால், மெக்ராத்தும் கில்லெஸ்ப்பியும் அடுத்தடுத்த ஓவர்கள் வீசப்போகிறார்கள். 18 பந்துகளில் 17 ரன்கள் அடிக்க வேண்டும். கிளன் மெக்ராத், ஜேஸன் கில்லெஸ்பி பந்துவீசுகிறார்கள். 47-வது ஓவரில் கில்லெஸ்பியின் முதல் பந்தை பவுண்டரிக்கு ஓங்கி அடிப்பார் ஶ்ரீநாத். அடுத்து சிங்கிள், டபுள் என இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைக்கும். 12 பந்துகளில் 8 ரன்கள். அப்போதும் யாருக்கும் நம்பிக்கையில்லை. ஏனென்றால் பந்துவீசுவது மெக்ராத். ஆனால், ஒரு பவுண்டரி உட்பட 8 ரன்களை இந்த ஓவரிலேயே அடித்து இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றியை கும்ப்ளேவோடு இணைந்து பெற்றுத்தந்தார் ஶ்ரீநாத். 23 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார் ஶ்ரீநாத். இந்தத் தொடரில் சச்சின்தான் கேப்டன். இந்தப் போட்டிக்குப் பிறகு ஶ்ரீநாத்தை ஒரு ஆல்ரவுண்டராகவே மாற்றத்துடித்தார் சச்சின் டெண்டுல்கர்.

தென்னாப்பிரிக்காவுடனான அடுத்த போட்டியில் ஜடேஜாவுக்கு முன்பாகவே ஶ்ரீநாத்தை இறக்கிவிட்ட சச்சின், அடுத்த போட்டிலேயே மீண்டும் தென்னாப்பிரிக்காவுடன் பின்ச் ஹிட்டராக, 1 டவுன் பேட்ஸ்மேனாக ஶ்ரீநாத்தை இறக்கினார். சித்து 2 ரன்களில் அவுட் ஆக சச்சினோடு பார்ட்னர்ஷிப் போடுவார் ஶ்ரீநாத். ஆனால், சச்சினுமே இந்தப் போட்டியில் 28 ரன்களில் அவுட் ஆக, ஶ்ரீநாத்தான் இந்தியாவின் டாப் ஸ்கோரர். முதல் அரை சதம். பின்ச் ஹிட்டராக வந்தவர், ஒரு பேட்ஸ்மேனாகவே மாறி 69 பந்துகளில் 53 ரன்கள் அடிப்பார். ஆனால், இந்தியாவின் மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லோருமே சொதப்பியதால் 185 ரன்கள்தான் இந்தியா அடித்திருக்கும்.

சேஸிங்கிலும் இந்தியாவை வெற்றிபெற வைக்கப் போரடியிருப்பார் ஶ்ரீநாத். இவரின் 8 ஓவர்களில் 26 ரன்களை மட்டுமே தென்னாப்பிரிக்கா அடித்திருக்கும். சச்சின் கேப்டனாக இருந்தபோது தன்னைத் தவிர அவர் நம்பும் இன்னொரு பேட்ஸ்மேனாக ஶ்ரீநாத் இருந்தார். இந்த டைட்டன் கோப்பையின் இறுதிப்போட்டிவரை ஶ்ரீநாத்தை ஒன் டவுன் பேட்ஸ்மேனாகவே களத்தில் இறக்கினார் சச்சின். ஒருகட்டத்தில் தான் பெளலரா இல்லை பேட்ஸ்மேனா என்கிற குழப்பதையே ஶ்ரீநாத்துக்கு ஏற்படுத்தினார் சச்சின்.

ஜவகல் ஶ்ரீநாத்
ஜவகல் ஶ்ரீநாத்
ICC

டைட்டன் கோப்பைக்கு அடுத்து இந்தியா விளையாடிய ஒருநாள் தொடர் 1997 இன்டிபென்ட்டன்ஸ் கோப்பைதான். சயீத் அன்வர் சம்பவம் செய்த இந்தத் தொடரில் காயம் காரணமாக ஶ்ரீநாத் விளையாடவில்லை. கிட்டத்தட்ட ஓர் ஆண்டு கழித்து டிசம்பரில் ஷார்ஜாவில் நடந்த சிங்கர் கோப்பையில்தான் விளையாடவந்தார் ஶ்ரீநாத். இங்கிலாந்துடன்தான் ரிட்டன். இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியிருப்பார். இந்தத் தொடரில் சச்சினே 2 டவுன் பேட்ஸ்மேனாகத்தான் இறங்கியிருப்பார் என்பதால் ஶ்ரீநாத்தை அவர் 1 டவுன் பேட்ஸ்மேனாக இறக்கவில்லை. இந்த சீரிஸுக்கு அடுத்து சச்சின் கேப்டன்ஷிப்பில் இருந்து விலக, அசாருதின் மீண்டும் கேப்டன் ஆனார்.

1998-ன் தொடக்கத்தில் வங்கதேச சுதந்திரதின வெள்ளிவிழா போட்டிகளில் இந்தியா பங்கேற்கும். இந்தத் தொடரில்தான் வங்கதேசத்துக்கு எதிராக 5 விக்கெட்டுகள் எடுப்பார் ஶ்ரீநாத். 10 ஓவர்களில் 4 மெய்டன் செய்து, 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பார். இதுதான் ஒருநாள் போட்டிகளில் ஶ்ரீநாத்தின் சிறந்த ஸ்பெல்.

டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை வெளிநாடுகளுக்கு இந்தியா போனால்தான் ஶ்ரீநாத்துக்கு வேலை. மற்றபடி கடமைக்கு சில ஓவர்களை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொடுத்துவிட்டு முழுக்க முழுக்க ஸ்பின்னர்களைத்தான் இந்திய கேப்டன்கள் பயன்படுத்துவார்கள். ஆனாலும் 97-ல் அஹமதாபாத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அதுவும் ஸ்பின்னுக்கு சாதகமானப் பிட்ச்சில், கடைசி நாளில் சூப்பர் பர்ஃபாமென்ஸைக் கொடுத்திருப்பார் ஶ்ரீநாத். 170 ரன்கள்தான் தென்னாப்பிரிக்காவுக்கு டார்கெட். ஆனால், முதல் ஓவரிலேயே ஹட்ஸனை டக் அவுட் ஆக்கி இந்தியாவுக்கு சிறப்பான ஓப்பனிங்கைக் கொடுப்பார் ஶ்ரீநாத். கல்லினன், ரிச்சர்ட்ஸன், ஜான்ட்டி ரோட்ஸ், டொனால்ட், ஆடம்ஸ் என 6 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவை 105 ரன்களுக்குள் சுருட்டிவிடுவார்.

1999-ல் கொல்கத்தாவில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 5, இரண்டாவது இன்னிங்ஸில் 8 என 13 விக்கெட்டுகள் எடுத்திருப்பார். சயீத் அன்வர், இரண்டாவது இன்னிங்ஸில் 188 ரன்கள் அடித்தப்போட்டி இது. இதிலுமே அன்வர் 2 ரன்களில் இருக்கும்போது ஶ்ரீநாத் பெளலிங்கில் கேட்ச் டிராப் ஆகும். ஆனால், இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்திருக்கும்.

ஜவகல் ஶ்ரீநாத்
ஜவகல் ஶ்ரீநாத்
ICC

வேகப்பந்து வீச்சாளர்... நல்ல பவுன்சர்களை வீசக்கூடியவர். ஆனால், பேட்ஸ்மேன்களை முறைத்ததோ, அவர்களோடு வாக்குவாதம் செய்ததோ, அம்பயர்களுடன் சண்டை போட்டதோ என எந்தக் கெட்டப்பெயரும் ஶ்ரீநாத்துக்குக் கிடையாது. கிரிக்கெட்டை ஜென்ட்டில்மேன்களின் கேமாகவே விளையாடிய ஒரு சில வீரர்களில் முக்கியமானவர் ஶ்ரீநாத். இந்தியாவின் வெற்றிக்காக ஒவ்வொரு போட்டியிலும் அதிகபட்ச உழைப்பைக் கொடுத்திருப்பார்.

2003 உலகக் கோப்பைதான் ஶ்ரீநாத் விளையாடிய கடைசி ஒருநாள் தொடர். இந்த உலகக்கோப்பையில்தான் ஶ்ரீநாத்துக்கு முதல்முறையாக நல்ல வேகப்பந்து வீச்சு கூட்டணி அமைந்தது. ஜாகீர் கானும், ஆசிஷ் நெஹ்ராவும் இடது கை பெளலிங், ஶ்ரீநாத் வலது கை பெளலிங் என இந்தக் கூட்டணி தென்னாப்பிரிக்காவில் மிகச்சிறப்பாக வொர்க் அவுட் ஆனது. ஜாகிருக்கும் நெஹ்ராவுக்கும் சிறந்த மென்டராக விளங்கினார் ஶ்ரீநாத். இலங்கைக்கு எதிரான சூப்பர் சிக்ஸ் போட்டியில் இந்தியாவின் 293 ரன்கள் டார்கெட்டுக்கு 109 ரன்களிலேயே இலங்கை ஆல் அவுட் ஆனாது. அட்டப்பட்டு, ஜெயசூர்யா, முபாரக், அரவிந்த டி சில்வா டாப் 5 பேட்ஸ்மேன்களில் நான்கு பேரை ஶ்ரீநாத் மட்டுமே பெவிலியனுக்கு அனுப்பி அந்தப் போட்டியில் இலங்கையை ஆட்டம் காண வைத்திருப்பார்.

சயீத் அன்வர்... சேப்பாக்கம் மட்டுமல்ல; சென்சூரியனிலும் சம்பவம் நடந்திருக்கும்? - அண்டர் ஆர்ம்ஸ் - 5

இறுதிப்போட்டிவரை 16 விக்கெட்டுகளை எடுத்திருப்பார் ஶ்ரீநாத். ஆனால், அவரது கடைசிப்போட்டி அவரது கரியரிலேயே மிக மோசமானப் போட்டியாக மாறியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டி அது. 10 ஓவர்களில் அதுவரை இல்லாத அளவுக்கு 87 ரன்கள் கொடுத்து விக்கெட் எடுக்காமல் கடைசிப்போட்டியில் இருந்து வெளியேறினார் ஶ்ரீநாத்.

கொண்டாடப்பட்டிருக்க வேண்டியவரின் கரியர் கொண்டாட்டங்கள் எதுவும் இல்லாமலேயே முடிந்தது. 90'ஸில் நல்ல கேப்டன்களும், சிறந்த ஃபீல்டர்களும், சரியான வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர்களும் இருந்திருந்தால் ஶ்ரீநாத் யாராலும் தொடமுடியாத சிகரத்தை தொட்டிருப்பார்!

அடுத்த கட்டுரைக்கு