Published:Updated:

சேப்பாக்கத்தில் நிகழ்ந்த இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றி... இங்கிலாந்தை வீழ்த்தியது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
IND v ENG: இந்தியாவின் முதல் வெற்றி
IND v ENG: இந்தியாவின் முதல் வெற்றி

இந்திய அணியில் முதல் வெற்றி குறித்த பிண்ணனி தகவல்கள் பலவும் ஆச்சர்யத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டெஸ்ட் போட்டிகளில் கோலி தலைமையிலான இந்திய அணி பல அசாத்தியமான சாதனைகளை செய்து வருகிறது. ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் ஆடப்போகிறது. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி இப்போது ஒரு உச்சத்தை தொட்டிருக்கிறது. ஆனால், இது எதோ ஒரு போட்டியிலோ... ஒரு தொடரிலோ சாத்தியப்பட்ட விஷயம் இல்லை. காலங்காலமாக பல பரிணாமங்களை அடைந்தே இந்திய அணி இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறது.

இப்போதைய உச்சத்துக்கெல்லாம் ஒரு தொடக்கப்புள்ளி இருந்துதானே ஆக வேண்டும்! அந்தப் புள்ளியை தேடி சென்றால் நாம் 68 வருடங்கள் பின்னோக்கி கால ஓட்டத்தில் பயணப்பட வேண்டியிருக்கிறது. ஆம், 1952-ம் ஆண்டில்தான் இந்திய அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இப்போது இந்திய அணி அடையும் வெற்றிகளுக்கெல்லாம் விதை அங்கேதான் போடப்பட்டது. இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கு இன்னும் ஒரு படியே எஞ்சியிருக்கும் நிலையில் இந்திய அணியின் முதல் டெஸ்ட் வெற்றியை பற்றிய ஒரு சின்ன ரீவைண்ட் இங்கே...

1932 - இந்திய கிரிக்கெட் அணி
1932 - இந்திய கிரிக்கெட் அணி
Public domain, via Wikimedia Commons

1932-ம் ஆண்டிலிருந்தே இந்திய அணி கிரிக்கெட் ஆடி வருகிறது. போர்பந்தர் மகாராஜா தலைமையில் பிரிட்டனுக்குப் பறந்த இந்திய அணி தங்களது முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக ஆடியது. போர்பந்தர் மகாராஜா தலைமையில் சென்றிருந்தாலும் இந்தப் போட்டியில் அவரால் ஆட முடியவில்லை. அவருக்கு பதிலாக சி.கே.நாயுடு கேப்டனாக பொறுப்பேற்றிருந்தார். முதன்முதலாக ஆடிய வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியையே தழுவியிருந்தது. இங்கிலாந்து அணி 158 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

1933-ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்தது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வென்றிருந்தது. ஒரு போட்டி ட்ராவில் முடிந்ததால் இந்த தொடரையும் 2-0 என இங்கிலாந்து அணியே வென்றிருந்தது. இப்படியே தோல்வியும் டிராவுமாக காலம் உருண்டோடின. 20 வருடங்கள் கழித்து, 1952-ல் மீண்டும் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதன் முதலாக இங்கிலாந்து அணி கிரிக்கெட் விளையாட இந்தியா வந்திருந்தது.

இந்த முறை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டொனால்டு கேர் தலைமையில் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இந்திய கிரிக்கெட்டின் பிதாமகனான விஜய் ஹசாரே தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. லாலா அமர்நாத், பாலி உம்ரிகர், முஷ்டாக் அலி, வினோ மங்கட் என இந்திய அணி இந்த முறை கொஞ்சம் பலமிக்கதாகவே இருந்தது.

5 போட்டிகளில் முதல் மூன்று போட்டிகள் டிராவிலேயே முடிந்தன. கான்பூரில் வைத்து நடைபெற்ற நான்காவது போட்டியை இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை பெற்றது. இப்போது, கடைசி போட்டி. இங்கிலாந்து அணி டிரா செய்தாலே போதும் என்ற சூழலில் மெட்ராஸ் கிரிக்கெட் க்ளப் மைதானத்தில் (இப்போதைய சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம்) போட்டி தொடங்கியது.

மெட்ராஸ் கிரிக்கெட் க்ளப் (இப்போதைய சென்னை சேப்பாக்கம்)
மெட்ராஸ் கிரிக்கெட் க்ளப் (இப்போதைய சென்னை சேப்பாக்கம்)

இங்கிலாந்து அணியின் கேப்டன் டொனால்டு கேரே டாஸ் வென்று பேட்டிங் செய்வதென தீர்மானித்தார். இங்கிலாந்து அணியின் சார்பில் ஃப்ராங்க் லோசனும் டிக் ஸ்பூனரும் ஓப்பனர்களாகக் களமிறங்கினர். தொடக்கத்திலேயே வெறும் 1 ரன்னில் ஃப்ராங்க் லோசனை தத்து பத்கர் போல்டாக்கி வெளியேற்றினார். இதன்பிறகு, டிக் ஸ்பூனருடன் டாம் க்ரவேனி கூட்டணி சேர்ந்தார். இந்தக் கூட்டணி சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்ந்தியது. அரைசதம் கடந்த டிக் ஸ்பூனரை இந்திய கேப்டன் விஜய் ஹசாரே வீழ்த்தினார். நம்பர் 4-ல் வந்த ராபர்ட்சனும் அரைசதம் அடிக்க இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 244-5 என்ற நிலையில் வலுவாக இருந்தது. இடக்கை ஸ்பின்னரான வினோ மங்கட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இங்கிலாந்தில் ஒரு மன்னர் இறந்ததால் இரண்டாம் நாள் ஆட்டம் முழுமையாகக் கைவிடப்பட்டது. மூன்றாவது நாளில் இங்கிலாந்து அணி தொடர்ந்து பேட்டிங் ஆடியது. 244 ரன்களிலிருந்து அடுத்த 22 ரன்களைச் சேர்ப்பதற்குள்ளாகவே ஆல் அவுட் ஆனது. மங்கட் அட்டகாசமாக வீசி மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். மொத்தமாக முதல் இன்னிங்ஸில் மட்டும் 8 விக்கெட்டுகள் எடுத்து, மிகச்சாதாரணமான ஆக்ஷன் உடைய ஸ்பின்னரான மங்கட் தனது ஃப்ளைட்டட் டெலிவரிக்கள் மூலம் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். 1952-ல் டெஸ்ட் போட்டியில் இறங்கி வந்து மூன்று பேட்ஸ்மேன்கள் ஸ்டம்பிங் ஆகியிருக்கிறார்கள். இதிலிருந்தே மங்கட்டின் சுழற்பந்து வீச்சு திறனை உணர முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்கிலாந்து அணி 266 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணியின் சார்பில் முஷ்டாக் அலியும், பங்கஜ் ராயும் ஓப்பனர்களாக களமிறங்கினர். முஷ்டாக் அலி 22 ரன்களில் அவுட் ஆக, பங்கஜ் ராய் நின்று நிதானமாக ஆடினார். இன்னொரு எண்ட்டில் அமர்நாத், விஜய் ஹசாரே, மங்கட் ஆகியோர் 20-30 ரன்களில் கொஞ்ச நேரம் நின்றுவிட்டு விக்கெட் விட, பங்கஜ் ராய் மட்டும் இங்கிலாந்து பௌலிங்கை நன்றாக எதிர்கொண்டு சிறப்பாக ஆடினார். பங்கஜ் ராய் சதமடித்து 111 ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்கு பிறகு, லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை பார்த்துக் கொண்டனர். தத்து பத்கரும் பாலி உம்ரிகரும் நல்ல பார்ட்னர்ஷிப் போட்டனர். பத்கர் அரைசதம் அடித்து அவுட் ஆக, கோயம்புத்தூர் துரைக்கண்ணு கோபிநாத் எனும் தமிழக வீரரின் உதவியுடன் உம்ரிகர் சதத்தைக் கடந்தார். கோபிநாத் - உம்ரிகர் கூட்டணி 93 ரன்களை சேர்த்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 457-9 என்ற நிலையில் இருக்கும்போது கேப்டன் விஜய் ஹசாரே டிக்ளேர் செய்தார்.

வினோ மங்கட் | Vinoo Mankad
வினோ மங்கட் | Vinoo Mankad

இந்திய அணி 191 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இந்த முறை மங்கட்டுடன் குலாம் அஹமதுவும் கூட்டணி சேர்ந்து சிறப்பாக வீச இருவருமே விக்கெட் வேட்டை நடத்தினர். முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் வீழ்த்தியிருந்த மங்கட் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குலாம் அஹமதுவும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து சார்பில் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த ராபர்ட்சன் மட்டுமே இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பவே செய்திருந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 8 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

WTC21 Final இறுதிச்சுற்று – 1: தோனிக்கு நேர்மாறான அணுகுமுறை... வரலாறு படைக்குமா கோலியின் படை?!
கோயம்பத்தூர் துரைக்கண்ணு கோபிநாத் | Gopinath
கோயம்பத்தூர் துரைக்கண்ணு கோபிநாத் | Gopinath

இது சாதாரண வெற்றி அல்ல. வரலாற்றில் இந்திய அணி பதிவு செய்த முதல் வெற்றி. கிட்டத்தட்ட 20 வருடங்கள்... 25 போட்டிகள் காத்திருப்புக்குப் பிறகே இந்த வெற்றி இந்திய அணிக்கு அகப்பட்டது. சென்னை சேப்பாக்கத்தில் வைத்து இந்த வெற்றி அரங்கேறியது கூடுதல் பெருமை. பெருமிதமிக்க இந்த வெற்றி அந்தச் சமயத்தில் அவ்வளவாகக் கொண்டாடப்படவில்லை.

"இது ஒரு சாதாரண வெற்றி போன்றே இருந்தது. நாங்கள் கைகளை குலுக்கி வாழ்த்திக்கொண்டோம் அவ்வளவே. காற்றில் பறக்கவில்லை. தரையில் உருளவில்லை. ஷேம்பைன் கொண்டாட்டங்கள் இல்லை" என அந்த வெற்றி குறித்து அந்த போட்டியில் ஆடிய தமிழக வீரரான கோபிநாத் கூறியிருக்கிறார். அந்தப் போட்டியில் ஆடிய வீரர்களில் கோபிநாத் மட்டுமே இன்றுவரை உயிரோடு இருக்கிறார்.

விஜய் ஹசாரே | Vijay Hazare
விஜய் ஹசாரே | Vijay Hazare

இந்தத் தொடரில் ஆடியதற்காக இந்திய வீரர்களுக்கு 2500 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டிருக்கிறது.

இந்திய அணிக்கு முதல் வெற்றியை பெற்றுக்கொடுத்த கேப்டன் விஜய் ஹசாரே பின்னாட்களில் கேப்டன்சியின் அழுத்தம் தாங்காமல் கேப்டன் பதவியைத் துறந்து இந்திய அணியிலிருந்தும் ஓய்வு பெற்றிருக்கிறார்.

இந்திய அணியில் முதல் வெற்றி குறித்த பிண்ணனி தகவல்கள் பலவும் ஆச்சர்யத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு