Published:Updated:

``ஆஸ்திரேலியான்னா பயந்துடுவோம்னு நினைச்சியா... பொளந்துடுவேன்டா!'' - சென்சுரிகள் கடந்தும் மறக்காத சச்சினின் சென்சூரி

சச்சின்
சச்சின் ( ESPN Cricinfo )

``இந்த செஞ்சுரியே மறக்காத செஞ்சுரி அடிச்சவன்டா'' என சிலாகித்துக்கொண்டிருக்கிறது சச்சின் ரசிகர் கூட்டம். ஆமாம், இன்று சச்சின் ருத்ரதாண்டவம் ஆடிய நாள். ஆஸ்திரேலியாவை சுளுக்கெடுத்த நாள். கிரிக்கெட்டில் சச்சின் நடத்திய சூரசம்ஹார சம்பவம் அது.

''சச்சின்னா சும்மா சும்மா செஞ்சுரி அடிக்கிறவன்னு நினைச்சியா.... இந்த செஞ்சுரியே மறக்காத செஞ்சுரி அடிச்சவன்டா'' என சிலாகித்துக்கொண்டிருக்கிறது சச்சின் ரசிகர் கூட்டம். ஆமாம், இன்று சச்சின் ருத்ரதாண்டவம் ஆடிய நாள். ஆஸ்திரேலியாவை சுளுக்கெடுத்த நாள். கிரிக்கெட்டில் சச்சின் நடத்திய சூரசம்ஹார சம்பவம் அது.

ஏப்ரல் 22, 1998... சச்சினின் இந்த செஞ்சுரியை இன்னும் எத்தனை செஞ்சுரிகள் ஆனாலும் கிரிக்கெட் உலகம் மறக்காத நாள். ''கொல காண்டுல இருக்கேன்... மவேனே கொல்லாம விட மாட்டேன்'' எனச் சச்சின் களத்தில் இறங்கி ஆஸ்திரேலியாவை சம்பவம் செய்த நாள் இது. 90-களில் சச்சின் அவுட் ஆகிவிட்டால் டிவியை ஆப் செய்துவிடுவார்கள் என்ற பரவலான பேச்சு உண்டு. அது ஏன் என்று கேட்கும் 2கே கிட்ஸ் இந்த மேட்சை யூடியூபில் பார்த்தால் புரியும். இன்றைய மேட்சிலும் சரி, இதற்கு அடுத்த இரண்டு நாள்களில் நடந்த இறுதிப்போட்டியிலும் சரி அணியின் ஒட்டுமொத்த பாரத்தையும் ஒற்றை ஆளாகத் தன் தோள் மீது தூக்கி சுமந்திருப்பார் சச்சின்.

Sachin
Sachin

1998-ம் ஆண்டு ஷார்ஜாவில் கொககோலா கோப்பை போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்கேற்றன. இந்திய அணி, நியூசிலாந்தைவிட சிறந்த ரன் ரேட்டை பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், ஆஸ்திரேலியாவுடன் ஏப்ரல் 22-ம் தேதி மோதியது இந்தியா. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா மைக்கேல் பெவன் சதத்தினாலும் மார்க் வாக் அடித்த 80 ரன்களினாலும் 285 ரன்களைக் குவித்தது.

இன்று இருக்கும் இந்திய அணிபோல் இல்ல அன்றைய அணி. தோல்விகளை அதிகமாகச் சந்தித்துக்கொண்டிருந்தது. அப்போதெல்லாம் எதிரணி 250 ரன்களுக்கு மேல் சென்றாலே வயிற்றில் புளியைக் கரைக்கும்.

Sachin Tendulkar
Sachin Tendulkar

இந்தியா தோல்வியடைந்தாலும் 254 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டால் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடலாம் என்கிற நிலை. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக செளரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் இருவரும் களமிறங்கினர். முதல் 5 ஓவர்கள் பெரிதாக ரன் எடுக்க முடியவில்லை. 6-வது ஓவரை காஸ்பரோவிச் போட அதிரடி ஆட்டம் தொடங்கியது. அடுத்தடுத்து 2 ஷார்ட் பால் போட 2 பந்துகளும் மிட் விக்கெட் திசையில் சிக்ஸர்களாகப் பறந்தன. அடுத்து ஆடிய ஆட்டம் எல்லாம் வேற லெவல்.

கங்குலி 17 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் நயன் மோங்கியா சச்சினுக்கு உறுதுணையாக ஆடினார். அதைப் பயன்படுத்திய சச்சின், ஆஸியின் காஸ்ப்ரோவிச், டேமியன் ஃப்ளமிங், டாம் மூடி, ஷேன் வார்னே, ஸ்டீவ் வாக் என எல்லா பெளலர்களின் பந்துகளையும் விரட்டி விரட்டி சிக்ஸுக்குப் பறக்கவிட்டார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த சச்சின் மோங்கியா ஜோடியை டாம் மூடி பிரிக்க, விக்கெட்கள் அடுத்தடுத்து விழத் தொடங்கின.

வழக்கம்போல கேப்டன் அசாருதீன் வந்தார்... சென்றார். ஜடேஜாவும் ஒரு ரன்னில் கிளம்ப, கிரீஸுக்குள் கத்துக்குட்டி விவிஎஸ் லட்சுமணன். சச்சினும் லட்சுமணனும் ஆடிக்கொண்டிருக்க ஆட்டத்தின் நடுவே பாலைவனப் புயல் வீசியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. வழக்கமாகப் போட்டி மழை வந்து தடைபெறும். ஆனால், பாலைவனப் புயல் கிரிக்கெட்டுக்கு மிகவும் புதிது. அனைவரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். அன்று சச்சின் ஆடிய ஆட்டம்தான், இந்தியாவால் இப்படியெல்லாம் விளையாட முடியும் என்று உலகத்தையே ஆச்சர்யப்பட வைத்தது. புல், ஃபிளிக், ஆன் டிரைவ், ஆஃப் டிரைவ், ஸ்ட்ரெயிட் டிரைவ், கவர் டிரைவ், இன் அண்ட் அவுட், கட் என்று கிரிக்கெட் புத்தகத்தில் என்னென்ன ஷாட்கள் உண்டோ, அத்தனையும் அன்று சச்சினால் ஆடப்பட்டது.

Sachin - Ganguly
Sachin - Ganguly
reuters

பின்னர், புயல் ஓய்ந்து ஆட்டம் 46 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு 276 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் இந்தியா தோற்றாலும், 237 ரன்கள் எடுத்தால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம் என்று நிலை மாறியது. இந்தியா அவ்வளவு ரன்களை அடிக்காது என ஆஸ்திரேலியர்கள் நினைத்த நேரம், பாலைவனப் புயலை விஞ்சும் வகையில் புயல் வேகத்தில் ஆடினார் சச்சின். பாரபட்சம் இல்லாமல் அப்போதைய ஆஸி அணியின் புகழ்ப்பெற்ற பெளலர்களின் பந்துகளை வெளுக்க ஆரம்பித்தார்.

அசுரத்தனமாக ஆடி இந்திய அணியை 237 ரன்கள் எடுக்க வைத்து இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற வைப்பார் சச்சின். தொடர்ந்து ஆடியவர் 143 ரன்களில் இருக்கும்போது கீப்பர் கேட்ச் ஆக அம்பயர் அவுட் கொடுக்காமல் இருப்பார். ஆனால், சச்சின் அம்பயரின் முடிவுக்குக் காத்திருக்காமல் சச்சின் பெவிலியனுக்கு கிளம்பினார். ஆஸ்திரேலியா வீரர்களுக்கே ஆச்சர்யம். ஒரு நிமிடம் சச்சினைப் பார்த்து அந்தப் போட்டியில் மீதி ஆட்டத்தை சச்சின் ஆடியிருந்தால் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். ஆனால், சச்சின் அதை விரும்பவில்லை. விளையாட்டின் மீது தான் கொண்ட நேர்மையின் காரணமாக அவுட் என்று தெரிந்ததும் நடந்தார். அதனால்தான் இன்றும் கொண்டாடப்படுகிறார்.

Sachin Tendulkar
Sachin Tendulkar

சச்சின் 131 பந்துகளில் 5 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 143 ரன்கள் குவிக்க, இந்தியா 250 ரன்கள் எடுத்தது. இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது. இந்தியாவில் பல இளைஞர்களை மட்டையைத் தூக்க வைத்ததும் இந்த ஆட்டம்தான். சச்சினை வெறுப்பவர்கள்கூட இந்த ஆட்டத்தைப் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்.

விழுகின்ற போதெல்லாம் விழுந்துவிட்டோம் என்று கலங்கி ஒதுங்கிவிடும் கிரிக்கெட் உலகில் விழுவதே எழுவதற்காகத்தான் என்பதை சச்சின் நிரூபித்துக்கொண்டே இருப்பார். அதற்கு இந்த இன்னிங்ஸ் மிகச்சிறந்த உதாரணம்!

அடுத்த கட்டுரைக்கு