Published:Updated:

கபில்தேவ், தோனி, கோலி… லார்ட்ஸை வென்ற இந்திய கேப்டன்களும், வெற்றிக் கதைகளும்!

சொந்த நாட்டில் பெரும் சாம்ராஜ்யத்தை கட்டமைப்பதைக் காட்டிலும், அந்நிய மண்ணில் தனது கொடியை ஏற்றுவதுதான், மன்னர்கள் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. போர்க்களத்தின் விதிகள், கிரிக்கெட் களத்திலும் பொருந்துபவைதான்.

இங்கிலாந்தை, இந்தியாவுக்கே வரவழைத்து, கோப்பையைக் கையகப்படுத்துவதை விடவும், அந்த வெள்ளை ஜெர்சியில், கர்ஜிக்கும் சிங்கங்களை, அவற்றின் குகையிலேயே சென்று, வேட்டையாடி வருவதுதானே, கூடுதல் கவனம் பெறும். அதுவும் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில், கிரிக்கெட்டின் மெக்காவான லார்ட்ஸில் வைத்து, அந்தச் சம்பவத்தை இந்தியா அரங்கேற்றியதுதான் சரித்திர நிகழ்வு.

இங்கிலாந்தை லார்ட்ஸில் வைத்தே தோற்கடித்திருக்கும் கோலி தலைமையிலான அணியின் வெற்றியை நாம் கொண்டாடும் அதேநேரம் இதேபோன்று ஏற்கெனவே இரண்டு சம்பவங்களை செய்திருக்கும் கேப்டன்களின் கதையையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

அந்த ஞாபகங்களை, நமது மூளையின், நினைவடுக்குப் பெட்டகங்களில் இருந்து வெளிகொணர்ந்து, நமது விழிகள் முன் சற்று ஓட்டிப் பார்க்கலாம்!

1986 - கபில் தேவ்!

ஒருநாள் உலகக் கோப்பையின் நடப்புச் சாம்பியன்கள்தான், மிரட்டும் மேற்கிந்தியத் தீவையே வீழ்த்தியவர்கள்தான் என்றாலும், டெஸ்ட் போட்டிகளில், இந்தியாவின் ஃபார்ம் கேள்விக்குரியதாகவே இருந்தது. கேப்டனாக பதவியேற்று 20 போட்டிகள் ஆகியும் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி ஒன்றில் கூட வெல்லவில்லை. அதுமட்டுமல்ல இந்திய அணியே ஒட்டுமொத்தமாக கடைசியாக ஆடிய 52 போட்டிகளில், நான்கில் மட்டுமே வென்றிருந்தது. இதற்கு முக்கியக் காரணம், இந்திய பௌலர்கள். 20 விக்கெட்டுகளை வெட்டி வீழ்த்தும் வல்லமை இல்லாமல் இருந்தது இந்திய பெளலிங்.

கபில்தேவ்
கபில்தேவ்
twitter.com/ICC

இந்த நிலையில்தான், அந்த முதல் டெஸ்ட்டை, இந்தியா எதிர்கொண்டது. ஜூன் 5, 1986…

பந்தை கபில்தேவின் கையில் இருந்து வாங்கிக் களமிறங்கியது, 20 வயதே ஆன சேத்தன் ஷர்மா. பந்தை ஸ்விங் செய்ய ஜாகீர்கான், கவுன்டியில் ஆடியதைப்\போல், சேத்தனும் அவுட் ஸ்விங்கர்களை வீசுவதில், சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார். அவை எல்லாம் கைகொடுக்க, டாப் 5 வீரர்களில், 4 விக்கெட்டுகளை, அனுபவமற்ற அந்த இளைஞர் எடுக்க தள்ளாடியது இங்கிலாந்து. தட்டித் தடுமாறி, 249 ரன்களை அவர்கள் சேர்க்க, அனுபவம் மிக்க வெங்க்சர்க்கார் சதத்தால், இந்தியா 47 ரன்கள் முன்னிலை பெற்றது. லார்ட்ஸ் போர்டில், வெங்சர்க்காரின் பெயர், மூன்றாவது முறையாக எழுதப்பட்டது.

இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸை, மூன்றாவது நாள், முடியும் தருவாயில் தொடங்கியது. இந்தத் தருணம் வரை போட்டி, டிரா ஆகப் போகிறது என்றுதான், ஆல் இந்திய ரேடியோவில் கமென்ட்ரி கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்கள் கூட நினைத்திருந்தார்கள். டிராவை ஏற்கும் மனநிலைக்கு, அவர்கள் நகரத் தொடங்கினர்.

ஆனால், ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள கபில்தேவ் தயாராக இல்லை. புதிய பந்தோடு, புரவியாகக் கிளம்பி வந்தார். கிரஹாம் கூச், ராபின்சன், டேவிட் கோவர் என முதல் மூன்று வீரர்களின் விக்கெட்டுகளை கபில்தேவ் வெட்டி வீழ்த்த, 35/3 என தள்ளாடிய இங்கிலாந்தால், 180 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.

134 ரன்கள், எட்டினால், லார்ட்ஸில் காலத்துக்கும் பேசப்படும் மாபெரும் வெற்றி என்ற நிலை இந்தியாவுக்கு. கபில்தேவுக்கு கேப்டனாகவே முதல் டெஸ்ட் வெற்றி. ஆனால், இந்தியா தடுமாறியது. அதிவேகமாக இங்கிலாந்து ஐந்து விக்கெட்டுகளை எடுத்து விட, கபில்தேவுக்கு, தனது கனவு கண்கள் முன்பாகவே கருகி விடுமோ என்ற பயம் தொற்றிக் கொண்டது. ஏனெனில், அச்சாணிகள் கழன்று விட்டால், எவ்வளவு தூரம் வண்டி ஓடிவிட முடியும்?! சரிந்து வீழ்வதைத் தவிர வேறு என்ன நிகழும்?! இதை உணர்ந்ததும், அவருக்குள் இருந்த, ஆகச்சிறந்த ஆல்ரவுண்டர் வெளிப்பட்டார்.

கபில்தேவ்
கபில்தேவ்
twitter.com/ICC

சந்தித்தது பத்தே பந்துகள்தான் குவித்ததோ 23 ரன்கள். எட்மண்ட்ஸ் வீசிய ஒரே ஓவரில், 18 ரன்களைக் குவித்தார். விளைவு ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

தனது முதல் டெஸ்டை 1932-ல் லார்ட்ஸில்தான் ஆடியது இந்தியா. ஆனால், அங்கே வெற்றி பெற இந்தியாவுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டதுதான். ஆனாலும், 50 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த இந்த த்ரில் வெற்றி மிக மிக முக்கியமானது.

இந்திய வெற்றிக்கான முக்கியக் காரணம், கபில்தேவ். தோல்வியை ஏற்றுக் கொள்ளாத, அவரது அணுகுமுறையும், களத்தில் எல்லாமுமான அவரது செயல்பாடும்தான் வெற்றிக்கு வழி கோலிட்டது. இந்த உத்வேகத்தோடே 2-0 என இந்தியா தொடரைக் கைப்பற்றியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2014 - கேப்டன் தோனி

கபில்தேவ், 1986-ல் இருந்த அதே நிலையில்தான், 2014-ல் தோனியும் இருந்தார். உலக கோப்பைகளை வென்றிருந்தாலும், கிட்டத்தட்ட, 3 ஆண்டுகளுக்கு மேலாக, அந்நிய மண்ணில், ஒரு டெஸ்ட் வெற்றியைக்கூட தோனி தலைமையிலான அணியால் பெறமுடியவில்லை. துரத்தும் அந்தத் தோல்வியின் நிழலில் இருந்து வெளிவர, ஒரு அற்புத வெற்றி தேவைப்பட்டது. அது, 2014-ல் முதல் போட்டி டிராவாக, லார்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்டில் வாய்க்கப் பெற்றது. கபில்தேவின் வெற்றிக்குப் பிறகு 28 ஆண்டுகால இடைவெளிக்குப்பின் தோனி அதை சாத்தியப்படுத்தினார்.

ஜூலை 17, 2014…. இந்தியாவுக்குத் தொடக்கம் சரியில்லை. பேட்டோடு இறங்கிய முதல் நான்கு வீரர்களில் மூவர் 20-களில் ஆட்டமிழந்திருந்தனர். யாராவது ஒருவரின் பெரிய பங்களிப்பு வேண்டுமென்ற நிலையில்தான், ரஹானே இறங்கினார். ஸ்விங்காகும் பந்துகளையும், லாவகமாகச் சமாளித்து, 15 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் மூலமாக, 100 ரன்களைக் கடந்து, இந்திய ஸ்கோரை, 300-ஐ நெருங்க வைத்தார். இதில் புவனேஷ்வர் குமாரின் பங்கான, 36 ரன்களும் மிகவும் முக்கியமானது.

கேப்டன் தோனியின் படை
கேப்டன் தோனியின் படை

முதலாவது இன்னிங்ஸை எதிர்கொண்ட இங்கிலாந்துக்கு, பயத்தின் எல்லா பரிமாணத்தையும், புவனேஷ்வர் காட்டி, ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒன்று முதல் ஆறு வரை விக்கெட்டுகள் விழுந்தன. அதிலும், முதல் மூன்று விக்கெட்டுகளையும், பந்தை எட்ஜாக வைத்து, தோனியிடம் கேட்ச் கொடுக்க வைத்து, வீழ்த்தி இருந்தார் புவனேஷ்வர். 24 ரன்கள் முன்னிலையில் முடித்துக் கொண்டது இங்கிலாந்து. இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியாவிற்கு, முரளி விஜய்யின் மிகச் சிறந்த தொடக்கம்தான், முன்னுக்குத் தள்ளி, 319 ரன்கள்தான் இலக்கு, முடிந்தால் எடுங்கள் பார்க்கலாம் என, காலரை தூக்கி விட்டுக் கொள்ள வைத்தது.

முதல் இன்னிங்ஸில், புவனேஷ்வர் காட்டிய படத்தை, இரண்டாவது இன்னிங்சில், இஷாந்த் ஷர்மா காட்டினார். ஓப்பனர் குக் மற்றும் முதல் இன்னிங்சில், சதமடித்த கேரி பேலன்ஸின் விக்கெட்டுகளை மட்டுமே, ஜடேஜாவும் ஷமியும் எடுத்திருந்தனர்.

அதன்பின், பழைய பந்தில், வெறித்தனம் காட்டி இருந்தார் இஷாந்த். உணவு இடைவேளைக்கு முன்னதாக, மொயின் அலியை, இஷாந்த் வழியனுப்ப, ஐந்து விக்கெட் எடுத்தால், வெற்றி இந்தியாவுக்கு என்ற நிலை நீடித்தது. அங்கிருந்து ஆரம்பித்தது, இஷாந்த்தின் ஆதிக்கம். கடைசி 12 ஓவர்களில்தான் எல்லாமே மாறியது. மிச்சமிருந்த ஐந்து விக்கெட்டுகளை, இந்தக் கட்டத்திலேயே எடுத்துவிட, 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா. ஒரு கட்டத்தில், டிராவாகி விடும் என்ற நிலையில் இருந்த போட்டியை மாற்றிக் காட்டினார் இஷாந்த். மோதி விளையாடுவது என்றால் என்ன என்பதற்கு, செயல்முறை விளக்கம் கொடுத்தது இந்தியா. இறுதிக் கட்டங்களில் எல்லாம், இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம் என அறிவிப்பு வெளியிட வேண்டுமளவு, பதற வைத்தது. இந்தத் தொடரில், மற்ற போட்டிகளில் மோசமாக விளையாடி, இந்தியா தோற்றிருந்தாலும், இந்தச் சம்பவம், மீண்டும் ஒருமுறை பௌலர்கள் முன்னின்று வெற்றியை நோக்கி வழி நடத்தியதாக மாறியது.

2021 - கேப்டன் கோலி

கபில்தேவ், தோனி சந்தித்தது போன்ற இக்கட்டான நிலைதான், கோலிக்கும் இருந்தது. காரணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கோட்டை விட்டது கோலி & கோ. இந்தப் போட்டியின் முழுமையிலும், வினைகள், எதிர்வினைகள் என மாறி மாறி நடந்து கொண்டே இருந்து ரசிகர்களின் பார்வைக்கு விருந்தளித்தது. உலகின் ஒவ்வொரு நிகழ்வும், மற்றொன்றுடன் தொடர்புடையதுதான். ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்புக்கும், பூகம்பத்துக்கும் கூட தொடர்புள்ளது எனும் பட்டர்ஃபிளை எஃபக்ட் தியரியை எல்லாம் உண்மையாக்கி விட்டது, பும்ராவின் அந்த நோபால்களும், பவுன்சர்கள் சூழ் ஓவரும், அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும்.

கே.எல் ராகுலின் சதம், ஆண்டர்சன் 5 விக்கெட் ஹால், ரூட்டின் பிரமிக்க வைக்கும், 180 ரன்கள், லீட் எடுத்த இங்கிலாந்து, இப்படி பக்கம் பக்கமாக பேசத் தக்க விஷயங்கள் இருந்தாலும், பூகம்ப அலைகள் தொடங்கிய மையப்புள்ளி, பும்ரா - ஆண்டர்சனுக்கு இடையேயான அந்த ஒரு ஓவர்தான். ஒருங்கிணைந்து ஆடினால் வெற்றி நிச்சயம் எனும், பால பாடத்தை, அனுபவப் பாடமாக நமது வீரர்களைக் கற்றுக் கொள்ள வைத்ததும் இப்போட்டிதான்.

ENG v IND | லார்ட்ஸ் டெஸ்ட்
ENG v IND | லார்ட்ஸ் டெஸ்ட்
twitter.com/BCCI

இரண்டாவது இன்னிங்ஸில், ஓப்பனர்கள் சோபிக்காத நிலையில், புஜாரா - ரஹானேவின் தவத்திற்கு ஒப்பான அந்த இன்னிங்ஸ், தோல்வியை தவிர்ப்பதற்கான போராட்டமாக இருந்தது. கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர், இந்திய ரசிகர்கள். எனினும், புயல் ஆபத்து, முற்றிலுமாக நீங்கி விடவில்லை. பன்ட்டின் விக்கெட், அவர்களை நொறுக்கிப் போட்டு மூச்சு முட்ட வைத்தது.

கடைசி நாளில், 'முடிந்தது கதை' என முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. இக்கட்டில் இருந்து மீட்டெடுக்க எந்த சூப்பர் ஹீரோவும் வரவில்லை. உண்மையில், இப்படிப்பட்ட கடினமான சந்தர்ப்பங்கள்தான், சூப்பர் ஹீரோக்களை உருவாக்குகின்றன. அப்படிக் கிடைத்த அந்த இரு ஆதர்ச நாயகர்கள் தான் ஷமியும், பும்ராவும்.

எதிரியின் குதிரையிலேயே சவாரி செய்து, அவர்களையே நமக்கு, ஜாக்கியாக மாற்றி, வெற்றிக் கோட்டைத் தொட்டால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது, பும்ரா - ஷமியின் எதிர்பாராத எழுச்சி! இதற்குப் பின்பாக, அவர்களது அற்புதமான ஸ்பெல்கள், சிராஜின் தனி ராஜ்யம் என போட்டியில், ஐந்து நாட்களிலும், பலவித செக், செக் மேட்டுகள் என நிகழ்ந்து கொண்டே இருந்தன.

உண்மையில், பத்து ஓவர்களுக்கு உள்ளாகத்தான் உள்ளதென்ற நிலையில், மூன்று விக்கெட்டுகள் எல்லாம் சாத்தியமே இல்லை. 'பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்' என தன்னைத் தானே இந்திய ரசிகன் தேற்றிக் கொள்ளக் கூடத் தயாராகி விட்டான். ஆனால், இந்திய வீரர்கள், அப்படி ஒரு சமாதான உடன்படிக்கைக்குத் தயாராகவில்லை. ஒரு சில ஓவர்களிலேயே, மாயாஜாலம் செய்து, நம்ப முடியாததை நிகழ்த்தி, நமது ஒட்டு மொத்த செல்களையும் புல்லரிக்க வைத்து, கண்களை வேர்க்க வைத்து விட்டனர்.

ENG v IND | லார்ட்ஸ் டெஸ்ட்
ENG v IND | லார்ட்ஸ் டெஸ்ட்
twitter.com/BCCI

தனது உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இங்கிலாந்து தோற்றது என்று சொன்னாலும், இந்தியாவை வெல்ல வைத்தது, அதே உணர்வுகள்தான். இதற்கு கே.எல் ராகுல், சொன்ன கருத்தே சான்று. உணர்வுகளுக்கான வடிகால், எதுவாக இருக்கிறது என்பது எல்லாவற்றையும் முடிவு செய்யும். அது பழியைத் தீர்க்கும் வஞ்சமெனில், விளைவு நமக்கே பாதகமாகும், சரியான வகையில் வழிநடத்தினால், அதுவே வெற்றிக்கு இட்டுச் செல்லும்.

ஆகச்சிறந்த பழிவாங்குதல், ஒரு இணையற்ற வெற்றிதானே?! இதைத்தான் செய்து காட்டியது இந்திய அணி. மூன்றாவது முறையாகவும், பௌலர்களால், ஒரு வெற்றி சாத்தியமாயிற்று.

ஈகோவால் கோட்டைவிட்ட இங்கிலாந்து… வெறிபிடித்து வேட்டையாடிய கோலியின் படை… கடைசி நாளின் டாப் மொமன்ட்ஸ்!
கங்குலியின் புகழ்பெற்ற சட்டையை சுழற்றிய சம்பவம், கபில் தேவ் மற்றும் தோனி என முப்பெரும் கேப்டன்கள், லார்ட்ஸில் ஏற்கெனவே தங்களை நிருபித்து, தங்களது அடையாளத்தை லார்ட்ஸில் உருவாக்கி இருக்க, கோலியும் தனது தடத்தைப் பதித்துள்ளார்.
காலக் கண்ணாடியில், தசாப்தங்கள் என்ன நூற்றாண்டுகள் தாண்டியும், பிரதிபலிக்கப் போகும் வெற்றிகளாக இவை இருக்கப் போகின்றன.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு